“நம்பிட்டேன் டா. சரி நான் நைட் கிளம்பி நாளைக்கு வரேன். உன்னைப் பத்தி உன் ஹாஸ்பிட்டல்ல விசாரிக்கிற மாதிரி வருவேன்”

“டேய் அங்க அர்ச்சனா இருப்பா டா”

“நான் உன்னைப் பத்தி விசாரிக்க போறதே அவ கிட்ட தானே?”

“அடப்பாவி, உன் ஆளைப் பாக்க நான் ஊருகாயா?”

“உன் கல்யாணமும் என் கைல தான் டா இருக்கு. அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

“சரி சரி, பாத்து வா”, என்று சொல்லிப் போனை வைத்தான்.

சொன்னது போல அன்று இரவே தந்தையிடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

காலையில் அங்கே இறங்கியவன் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து குளித்துக் கிளம்பி அந்த மருத்துவமனைக்குச் சென்றான்.

“டாக்டர் அர்ச்சனாவைப் பாக்கணும்”, என்று சொல்லி கேட்டதும் அவள் இருக்கும் இடம் தெரிவித்தார்கள்.

அவன் அங்கே செல்லும் போது அர்ச்சனா ஒரு நோயாளியை கவனித்துக் கொண்டிருந்தாள்.

இவனைக் கண்டதும் நர்ஸ் “யார் சார் நீங்க?”, என்று கேட்டாள்.

“டாக்டர் அர்ச்சனாவைப் பாக்கணும்”

“அவங்க பேசன்ட் பாத்துட்டு இருக்காங்க. நீங்க டோக்கன் போடுறீங்களா?”

“இல்லை பெர்சனலா பேசணும்”

“இருங்க கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி அவள் உள்ளே செல்ல அவன் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தான். அங்கே இருந்த பெண்கள் அனைவரும் அவனை ஒரு மார்கமாக பார்த்தார்கள்.

உள்ளே சென்ற நர்ஸ் “டாக்டர், உங்களைப் பாக்க ஒரு சார் வந்திருக்கார்”, என்றாள்.

“யாரு?”

“தெரியலை. உங்க கிட்ட பெர்சனலா பேசனுமாம்”, என்று சிஸ்டர் சொன்னதும் அவளுக்கு பிரபாகரன் ஒரு முறை பொய் சொல்லி தன்னைக் காண வந்தது நினைவு வந்தது.

“இப்ப எதுக்கு அவனை நினைக்கிறேன்”, என்று தலையில் அடித்துக் கொண்டு “இந்த பேசன்ட் போனதும் வரச் சொல்லுங்க”, என்று சொன்னாள்.

வெளியே வந்த நர்ஸ் “உள்ள இருக்குற பெசன்ட் வந்ததும் உங்களை வரச் சொன்னாங்க”, என்று சொன்னாள்.

இன்னும் சற்று நேரத்தில் அவளைக் காணப் போகிறோம் என்று பரபரப்பு வந்தது. அந்த பரபரப்பை அவளுக்கு காட்டக் கூடாது என்பதில் தான் அவனுக்கு படபடப்பு வந்தது.

அந்த பேசன்ட் வெளியே வந்ததும் “சார் நீங்க போங்க. சீக்கிரம் வந்துருங்க. நிறைய பேசன்ட் இருக்காங்க”, என்று சொல்லியே அனுப்பினாள் சிஸ்டர்.

உள்ளே வந்த பிரபாகரனைப் பார்த்து விழி விரித்தவள் அதிரிச்சியில் எழுந்து நின்று விட்டாள். அவனும் அதிர்ச்சியாக அவளைப் பார்ப்பது போல பார்த்தான். “அர்ச்சனான்னதும் வேற யாரோன்னு நினைச்சேன். கடைசில நீ தானா?”, என்று எள்ளளுடன் கேட்டான்.

அவன் எள்ளளைக் கவனிக்காதவள் “பிரபா நீங்களா? உக்காருங்க”, என்றாள்.

அவனும் அவளுக்கு எதிரே அமர்ந்து அவளைப் பார்த்தான். அவளை இறுக்கி அணைக்கும் வேகத்தைக் கட்டிப் படுத்திக் கொண்டு முகத்தை கடுகடுவென்று வைத்திருந்தான்.

அவன் கோபத்தை பார்த்தாலும் “எப்படி இருக்கீங்க பிரபா? பாத்து எவ்வளவு நாள் ஆச்சு?”, என்று கேட்டாள்.

“பாத்தா எப்படி தெரியுது?”, என்று கேட்டான் பிரபாகரன்.

“நல்லா தான் இருக்கீங்க?”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் அவன் தலை முதல் கால் வரை பயணித்ததைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

“இவ்வளவு அன்பு வச்சிருக்குறவ எதுக்கு டி விட்டுட்டு போன?”, என்று அவன் மனதில் கேள்வி எழுந்தது. அவளை முறைத்த படி அவன் இருக்க “அப்புறம் உங்க மனைவி எப்படி இருக்காங்க? குழந்தை இருக்கா?”, என்று கேட்டு அவன் பி. பியை சோதித்தாள் அவன் காதலி.

“வைப் நல்லா இருக்கா. குழந்தை இன்னும் இல்லை”, என்று அவன் சொல்ல அவள் கண்களில் ஒரு வேதனையின் சாயலை அவனால் நன்கு உணர முடிந்தது.

“நீங்க எப்படி பேங்க்ளூர்க்கு?”

“ஒரு முக்கியமான விசயமா வந்தேன்”

“முக்கியமான விஷயமா? பிஸ்னஸ் சம்பந்தமாவா? ஆனா இங்க எதுக்கு…?”

“நான் மாப்பிள்ளை பாக்க வந்தேன். அவர் இந்த ஹாஸ்பிட்டல்ல தான் வேலை பாக்குறார்”

“மாப்பிள்ளையா? யாருக்கு? அவர் பேர் என்ன?”

“மாப்பிள்ளை பேர் விக்ரம். அவரைப் பத்தி ரிசப்ஷன்ல கேட்டதுக்கு டாக்டர் அர்ச்சனா தான் விக்ரம் சாரோட பிரண்டுன்னு சொன்னாங்க. அதான் விசாரிக்க வந்தேன். ஆனா நீ தான் அந்த அர்ச்சனான்னு தெரியாது”

“ஓ.. விக்கிரம் நல்லவர் தான். கல்யாணத்துக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார். ஆமா பொண்ணு யாரு?”

“வினோதினி தான் பொண்ணு. அவளுக்கு தான் அவனை.. சாரி அவரைப் பாக்க வந்துருக்கேன்”, என்று சொல்ல அவனை அதிர்ந்து போய் பார்த்தாள். அவள் அதிர்ச்சியை வியப்பாக பார்த்தான் பிரபாகரன்.

“வினோதினிக்கா? என்ன சொல்றீங்க நீங்க? வினோதினிக்கும் உங்களுக்கும் அப்ப கல்யாணம் ஆகலையா? அப்ப நீங்க யாரைக் கல்யாணம் பண்ணுனீங்க? ஐயோ அவளுக்காக தானே நான்….”, என்று உளறிக் கொண்டே வந்தவள் சட்டென்று நிறுத்தி அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது என்பது போல அழுத்தமாக அவளைப் பார்த்தான்.

“ஆக நீ வினோதினிக்காக தான் என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்த போல?”

“அது அது… அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் வந்தா உங்க வீட்ல அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு நினைச்சிருந்தேன். அது நடக்கலைன்னதும் கொஞ்சம் ஷாக் அதான். அதை விடுங்க. நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிருக்கீங்க?”, என்று சாதாரணமாக கேட்டாள். ஆனால் அவள் உள்ளுக்குள் எரிமலையே குமுறியது.

“பொய்யாடி சொல்ற? நம்ம ரெண்டு பேருக்குள்ள வினோதினி வந்துருக்கான்னு பாதி உண்மை தெரிஞ்சிருச்சு. மீதியையும் கண்டு பிடிக்கிறேன்”, என்று எண்ணிக் கொண்டு “அது எதுக்கு இப்ப? நான் யாரைக் கல்யாணம் பண்ணிருந்தா உனக்கு என்ன? ஆமா நீ உன் லவ்வரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? இல்லை நீ என்னை ஏமாத்திட்டு போன மாதிரி அவன் உன்னை விட்டுட்டு போய்ட்டானா?”, என்று கேட்டான்.

“பிரபா”, என்று அவள் அதிர்வாக அழைக்க “என் பேரைச் சொல்லாத. அந்த உரிமை உனக்கு இல்லை. அது மாதிரி நீ எவனைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் எனக்கு ஒண்ணும் இல்லை. நான் இப்ப விக்ரம் பத்தி விசாரிக்க வந்தேன். உனக்காக பேசன்ட் வெயிட் பண்ணுறாங்க. இப்ப எதுவும் தெளிவா பேச முடியாது. அதனால நான் உன்னோட பிரீ டைம்ல வந்து பேசுறேன். எப்ப பிரியா இருப்பேன்னு இந்த நம்பருக்கு கூப்பிட்டு சொல்லு”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.

“சாயங்காலம் நாலு மணிக்கு மேல பிரி தான்”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“சரி, நான் சாயங்காலம் வரேன்”, என்று சொன்னவன் எழுந்து சென்று விட்டான். போகும் அவனையே பார்த்த படி ஒரு நொடி நின்றவள் வெளியே காத்திருக்கும் நோயாளிகளின் நினைவில் மனதை ஒருமுகப் படுத்தினாள்.

ஆனாலும் மனதுக்குள் “வினோதினியைக் கல்யாணம் பண்ணலைன்னா வேற யாரைக் கல்யாணம் பண்ணிருப்பான்? அப்படின்னா இவனை மறந்துட்டு வினோதினி எப்படி வேற கல்யாணத்துக்கு சம்மதிச்சா? இவ்வளவு நாள் அவள் மனசை எல்லாரும் சேந்து மாத்திருப்பாங்களோ?”, என்று உள்ளுக்குள் குடைந்தது.

அன்று மாலை நான்கு மணிக்கு பரபரப்பாக அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவனை மீண்டும் காணப் போகிறோம் என்று உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.

“அவன் இப்ப வேற ஒருத்தியோட புருஷன் டி. உன் மேல கொலை வெறில வேற இருக்கான்”, என்று நினைவூட்டியது மனசாட்சி.

“ஆமா தான். ஆனா ரொம்ப நாள் கழிச்சு அவனைப் பாக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்குல்ல? அதுவே போதும்”, என்று அதற்கு பதில் கொடுத்தவள் “என்ன அவனை இன்னும் காணும். மணி நாலைத் தாண்டிருச்சே? வருவானா? இல்லை வர மாட்டானா?”, என்று எண்ணினாள்.

அதற்கு மேல் அவனுக்காக காத்திருக்க முடியாமல் அவனை அழைத்து விட்டாள். அதை எடுத்தவன் அவள் என்று தெரிந்தும் “ஹலோ யாரு?”, என்று கேட்டான்.

“என் நம்பரைக் கூட மறந்துட்டானா?”, என்று மனம் சோர்ந்தாலும் “நான் அர்ச்சனா பேசுறேன். வறேன்னு சொன்னீங்க”, என்று கேட்டாள்.

“வந்துட்டு தான் இருக்கேன். அஞ்சு நிமிஷம் ஆகும்”

“சரி நான் கார்டன்ல இருக்கேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

சிறிது நேரத்தில் அவளைத் தேடி வந்தவன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான். அதைப் பார்த்து அவள் முகம் வாடியது. முன்பெல்லாம் அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்து போகும். அவன் ஒரு முறை கூட முகம் திருப்பி அவள் பார்த்தது இல்லை.

“உக்காருங்க பிரபா”, என்று சொல்ல சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

“சாப்பிட்டீங்களா?”

“அதை எல்லாம் நீ கேக்க வேண்டாம். வினோதினிக்கு தரகர் மூலமா விக்ரம் ஜாதகம் வந்துருக்கு. அவரைப் பத்தி விசாரிக்க தான் நானே கிளம்பி வந்தேன். மத்தவங்க கிட்ட கேட்டதுக்கு நல்ல மாதிரின்னு சொன்னாங்க. கூடவே உன் கிட்ட கேட்டா கூடுதல் விவரம் தெரியும்னு சொன்னாங்க. அவர் வீடு கூட இங்க தான் இருக்காமே?”, என்று கேட்டான்.

“ஆமா இங்க குவாட்ரஸ்ல தான் இருக்கார். நான் கூட்டிட்டு போகவா?”, என்று கேட்டவளுக்கு தெரியாது பிரபாகரன் மதிய உணவையே பத்மா கையில் சாப்பிட்டதும் வினோதினி பற்றிச் சொல்லி விக்ரம் திருமணத்தை உறுதி செய்ததும்.

“இப்ப வேண்டாம். முதல்ல அவரைப் பத்திச் சொல்லு”, என்றான்.

“ரொம்ப நல்லவர் பிரபா. நம்பி வினோதினியைக் கொடுக்கலாம்”

“அவரை நம்புறது இருக்கட்டும். முதல்ல நீ உண்மையைத் தான் சொல்லுறேன்னு நான் எப்படி நம்புறது?”

“நான் உங்க கிட்ட பொய்ச் சொல்லலை பிரபா”

“யாரு நீயா? என் கிட்ட ஐ லவ் யுன்னு உருகிட்டு இன்னொருத்தனை லவ் பண்ணுறேன்னு எழுதி வச்சிட்டு போனவ தானே? அது பொய் இல்லையா?”

“பிரபா”, என்று தளர்ந்து போய் அழைத்தாள்.

“என் வாயைக் கிளறாதே. என்னால நீ சொல்றது எல்லாத்தையும் நம்ப முடியாது. வேற யார் கிட்ட விக்ரம் பத்தி கேட்டா உண்மையைச் சொல்லுவாங்கன்னு சொல்லு”

“எங்க டீன் கிட்ட கேட்டா சொல்லுவாங்க”

“சரி நான் கேட்டுக்குறேன். எனக்காக உன் பொன்னான நேரத்தை ஒதுக்கினதுக்கு நன்றி. நீ போகலாம்”

“எதுக்கு பிரபா இப்படி மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுறீங்க? எனக்கு கஷ்டமா இருக்கு”

“மனசுக்குள்ள உன் மூஞ்சியைப் பேக்கணும்னு தான் தோணுது. ஆனா நான் ஏதாவது தப்பு செஞ்சா என் மனைவி கஷ்டப் படுவா. அதான் யோசிக்கிறேன். பேசாம போயிரு”

“என்னை மன்னிக்கவே மாட்டீங்களா?”

“தப்பு பண்ணா மன்னிக்கலாம். நீ செஞ்சது துரோகம். அதை மன்னிக்கிற அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லைங்க மேடம்”

“நான் செஞ்சது துரோகமாவே இருக்கட்டும். எனக்கு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லுங்க. நீங்க வினோதினியைக் கல்யாணம் பண்ணலைன்னா வேற யாரைக் கல்யாணம் பண்ணுனீங்க?”, என்று கேட்டாள்.