காதல் 3

கலவரத்தால் நிலவரம் மாறியதென்னவோ

சினம்கொண்டு நிறம் மாறியதென்னவோ

சூழ்நிலையில் சிக்குண்டு மனிதனால்

சிதிலம் அடைந்ததும் என்னவோ

கூறடா என் கண்ணனே!!!

தன் அருகில் நெருங்கி வந்தவனை தடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் ராதா. “இந்த கையை பிடிச்சதுக்காகதான அன்னைக்கு என்ன அடிச்ச” என்றபடி கையை பற்றியவன் “இந்த கன்னத்துல” என அவளின் கரம் கொண்டு அவன் கன்னத்தை தடவ ராதாவின் உடல் முழுவதும் நடுங்கியது. கோபம் சில நேரங்களில் வார்த்தையை அளித்துவிடும். அதே கோபம் சில நேரங்களில் வாழ்க்கையை அழித்துவிடும். அன்று ராதாவின் கோபம் கண்ணனிடம் வார்த்தைகளை அளித்தது. அதே கோபம் இன்று கண்ணனிடம் ராதாவின் வாழ்க்கையை அழிக்க காத்திருக்கிறது.

ராதா தன் வாழ்வில் பெரிதாக பிரச்சனை என கண்டிராதவள். தாய் தந்தையின் அரவணைப்பில் பிரச்சனைகளின் அருகில்கூட வந்திராமல் இருந்தவள் இன்று பிரச்சனை என சந்திக்கும்போது அதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் சிக்கிக்கொண்டாலும் தன் பெண்மைக்கு ஆபத்து என அறியும்போது தன்னையும் அறியாமல் அவள் உடலில் நடுக்கம் பரவியது.

அதை கண்டு கொண்ட கோகுல் “ரிலாக்ஸ் ஸ்வீட்டி… நீ என்ன அடிச்சதுக்காக உன்கிட்ட மொரட்டுத்தனமா நடந்துக்கமாட்டேன்” என நக்கல் குரலில் கூற தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தன் உணர்வுகளை அடக்கியவள் அமைதியாகவே இருந்துவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆக்கிரமிப்பவனை ஏதும் செய்ய இயலாமல் கல்லாய் சமைந்துவிட்டாள் பெண்ணவள்.

“தேங்க்ஸ் டூ மேக் எ வொண்டர்புல் டே ஸ்வீட்டி” என்றவனை நிமிர்ந்துகூட பார்க்காமல் இருந்தவளை பார்த்து “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு டார்லிங். உன் பையன்… சாரி சாரி.. உன் அக்கா பையன் ரொம்ப சேபா இருக்கான். அவனுக்கு ஆபரேசன் பண்ணாமலே சரியாகிட்டான்” எனவும் புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்க

“புரியும். போய் பாரு” என்றுவிட்டு “ஒரு நிமிஷம்” என்றவன் தன் பர்சில் இருந்த பணத்தை எடுத்து அவள் கையில் திணிக்க அந்த பணத்தையே வெறித்துப் பார்த்தவள் எதுவுமே பேசாமல் கையிலிருந்த பணத்தை கீழே போட்டுவிட்டு எதிரில் நின்றவனை நிமிர்ந்து பார்க்க அவ்வளவு நேரம் இருந்த கட்டுப்பாடு உடைந்து கண்களில் நீர்நிறைந்தது.

இவன் முன்னால அழக்கூடாது என நினைத்தவள் வேகமாக வெளியேறி சென்றுவிட… அவள் சென்ற சிறிது நேரத்தில் ஒரு கார் வேகமாக வந்து அந்த வீட்டின்முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் முகம் ரௌத்திரத்தில் ஜொலிக்க உள்ளே நுழைந்தார். உள்ளே வந்தவர் கண்டது ஹால் சோபாவில் காலைநீட்டி படுத்திருந்த கோகுலைத்தான். அவனை கண்டதும் மேலும் கோபம்வர “டேய்… எங்கடா அந்த பொண்ணு” என்றார் ஆத்திரமாக…

அவரது குரலை கேட்டு எழுந்து அமர்ந்தவன் “எந்த பொண்ணு” என்றான் வெகுநிதானமாக…

“ஆங்… எந்த பொண்ணா.. நீ இப்ப ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்தியே அந்த பொண்ணு” என மேலும் கோபத்துடன் கேட்க…

“ஓ… அவளா.. அவ போய்ட்டா” என அலட்சியமாக சொன்னவன் “அண்ட் பை தி வே அவளாதான் இங்க வந்தா நான் ஒன்னும் அவ வாழ்க்கைய கெடுக்கல” என்றான் எகத்தாளமாக.

“அவளாவா வந்தாளா.. நீ தானடா அவள கார்னர்பண்ணி வரவழச்ச” என்றார் கோபம் குறையாமல்… “இதுவரைக்கும் நீ சுத்துனது எல்லாமே உன்ன மாதிரியே தறுதலையா திருஞ்சதுங்ககூடதான். அதுனாலதான் நீ என்பேச்ச கேக்கமாட்டேன்னு இந்த வீட்லவந்து தனியா தங்கினப்பகூட நான் அமைதியா இருந்துட்டேன். எப்ப நீ உன் எல்லையமீறி குடும்ப பொண்ணுங்கள அவங்க இஷ்டமில்லாத அப்பவும் கார்னர்பண்ணி உன்தேவதான் முக்கியம்ன்னு நடந்தியோ இனிமேல் என்னால பொறுமையா இருக்க முடியாது. கிளம்பு” எனவும்

அவரை யோசனையாக பார்த்தவன் “எங்க?” என்றான் ரத்தின சுருக்கமாக.

“அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்” என்றார் அவர் உறுதியாக.

“நீங்க கல்யாணம்பண்ணி வச்சாலும் நான் இப்புடிதான் இருப்பேன். ஓ.கேன்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்றான் கோகுல் அலட்சியமாக.

அவன் கூறியதை கேட்டவர் வெகுண்டு “அப்ப அந்த பொண்ணு நெலம?” என

“சும்மா சொன்னதவே சொல்லாதீங்க. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாம் தெரியும். எவனாவது இளிச்சவாயன பாத்து கல்யாணம்பண்ணி செட்டில் ஆகிடுவா. நீங்க ஏன் கவலைபடுறீங்க” என்றான்.

“உன் அக்கா தங்கச்சியா இருந்தாலும் அப்படிதான் பண்ணியிருப்பாங்களா?” என கேலிகுரலில் கேட்க…

“அப்பா” என கத்தினான் கோகுல்.

“என்ன அப்பான்னு கூப்பிடாதேன்னு சொல்லியிருக்கேன்ல” என அவனுக்கு மேல் குரலை உயர்த்தி கத்தியவர் “உன் வீட்டு பொண்ணுன்னா மட்டும் ஆத்திரம் வருதில்ல” என்றார் அவனை பெற்றவர் அவனை மிஞ்சிய கோபத்துடன்.

“என் வீட்டு பொண்ணுங்களுக்கு ஏன் அந்த நெலம வரப்போகுது. நான் ஒன்னும் அவ வாழ்க்கைய கெடுக்கல. நீங்க வேணா பாருங்க நான் சொன்னது மாதிரியே அவ எவனையாவது கல்யாணம்பண்ணி செட்டில் ஆயிடுவா” என்றான் ஏளனமாக.

அவனது கோணல் நியாயத்தில் ஆத்திரம்வர “ஒருநாள் இதுக்கெல்லாம் நீ வருத்தப்படுவ. அப்ப நீ செஞ்ச தப்ப சரிசெய்ய முடியாத நிலைக்கு போயிறக்கூடாதுன்னு கடவுள வேண்டிக்க” என்றவர் திரும்பி பார்க்காமல் செல்ல… அவனது தந்தை அந்த வீட்டைவிட்டு வெளியேறும்வரை பொறுமையாக இருந்துவிட்டு “லிங்கம்” என கத்தினான் கோகுல்.

அவன் அழைத்த லிங்கம் வந்தவுடன் “நீங்கதான அப்பாகிட்ட சொன்னது” என கோபமாக கேட்க அமைதியாக நின்ற லிங்கத்தை பார்த்து “இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுங்கள கூட்டிட்டு வந்துருக்கீங்க ஆனா இதமட்டும் அவர்கிட்ட சொல்லனும்ன்னு என்ன அவசியம்”

“இதுவரைக்கும் நான் கூட்டிட்டு வந்துவிட்ட அத்தன பொண்ணுங்கள பத்தியும் நான் பெரியவர்கிட்ட சொல்லிட்டேன் தம்பி. ஆனா இந்த பொண்ணுக்காக அவரே நேர்ல ஏன் வந்தார்ன்னு தெரியாது” என லிங்கம் அமைதியாக கூற…

“அப்ப உங்ககிட்ட நான் சொல்ற வேலையெல்லாம் அவர்கிட்ட சொல்லிடுவீங்க அப்புடிதான”

“ஆமா தம்பி”

“போங்க” என அவரை அனுப்பியவன் யோசனையில் ஆழ்ந்தான்.

செந்தாமரைக் கண்ணன் – சிவகாமி இருவரின் சீமந்த புத்திரன் கோகுல். அவனது அக்கா லலிதா. திருமணம் முடிந்து ஒரு பெண்குழந்தை உண்டு. கோகுலிற்கு சிறு வயதிலிருந்தே அதிக நண்பர்கள். ஒரு வயதிற்கு மேல் அது ஆண் பெண் பேதமின்றி மாறிவிட அந்த வயதிற்கே உண்டான ஆசையில் தவறான பாதையில் சென்றுவிட்டான். அதை அறிந்து அவனது தந்தை எவ்;வளவு எடுத்துக்கூறியும் கேட்காததால் திருமண ஏற்பாடு செய்தனர். திருமணமும் வேண்டாம் என உறுதியாக இருந்தவனை எதுவும் செய்யமுடியாமல் போனது. தினம் ஒரு போர்க்களம் அவர்கள் வீட்டில் உருவாக ஒருநாள் சண்டையின் போது கண்ணன் தன் மகனிடம் “இப்புடியே கண்ட பொண்ணுங்களோட சுத்துறதா இருந்தா இனிமே என்ன அப்பான்னு கூப்புடாத” என்றுவிட

“சரி” என்றுவிட்டான். அதன்பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியேறி வேறு வீட்டிற்கு வந்துவிட இருவரும் இரண்டு வருடங்களாக பேசிக்கொள்ளவில்லை. தாயிடம் மட்டும் தந்தை வீட்டில் இல்லாத சமயங்களில் சென்று பார்த்து அலவலாவிவிட்டு வருவான். அது தெரிந்தாலும் வெளியில் தெரியாதது போல காட்டிக்கொள்வார் அவனது தந்தை. தன் தந்தை தன்னைப்பற்றி தெரிந்துகொள்வார் எனத் தெரியும். ஆனால் தன் வீட்டிலேயே அதற்கு ஆள் வைத்திருப்பார் என்பதைத்தான் உணராமல் விட்டுவிட்டான். இன்று லிங்கத்தின் மூலம் அதையும் கண்டுகொண்டான்.

இன்று ராதாவிற்காக அவர் வந்து பேசியது பிடிக்காவிட்டாலும் அவன் தந்தை அவனிடம் அவனை தேடிவந்து பேசியதில் மகிழ்ச்சியே அடைந்தான். சிறிது நேரத்தில் இந்த எண்ணங்களை எல்லாம் தூரப்போட்டவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிப் ஏற்பாடு செய்து கிளம்பிவிட்டான். இந்த ஆறு மாதத்தில் கோகுல் கூறியது போலவே தன் நண்பர்களுக்கு பார்ட்டி ட்ரிப் இரண்டையும் கட்செய்துவிட்டான். அவனும் கொடுப்பதில்லை அவர்களையும் கொடுக்கவிடுவதில்லை. இன்று அவன் எண்ணம் ஈடேறிவிட தன் நண்பர்களை அழைத்து தன் வீட்டிலேயே ராதா வரும்முன் பார்ட்டி கொடுத்தவன் ட்ரிப்பிற்கும் ஏற்பாடு செய்து கிளம்பிவிட்டான்.

அதன் பிறகு கோகுல் ராதாவை பற்றி பெரிதாக நினைக்கவுமில்லை அவளைப் பற்றி யோசிக்கவும் இல்லை. தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டமாக நாட்களை கழித்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல பார்ட்டி, பப், மது, மாது என அனைத்தையும் தன் வாழ்வின் இயல்பு போல அனுபவித்துக் கொண்டிருந்தான்.

மூன்று மாதங்களுக்கு பிறகு…

என்றும் போல அன்றும் இரவு முழுவதும் பார்ட்டியில் இருந்துவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு வந்து படுத்தவனின் மொபைல் சிறிது நேரத்திலேயே விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க எடுத்துப் பார்த்தவன் தன் தந்தையின் நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்க ‘இவர் ஏன் இந்த நேரத்துல கூப்பிடுறாரு?’ என்ற யோசனையுடன் அட்டெண்ட் செய்து காதில் வைக்க…

“உடனே சிட்டி ஹாஸ்பிடலுக்கு வா” என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார் அவனது தந்தை.

“ஹலோ… ஹலோ” என கத்தியவன் ‘ச்சே… ஏன்? எதுக்குன்னு எதுவுமே சொல்லாம வச்சுட்டாரு’ என மனதில் நொந்தவன் அரக்கப் பறக்க கிளம்பி மருத்துவமனையை அடைந்தான்.

அவன் அந்த மருத்துவமனையை வந்து சேர அரைமணி நேரமானது. ஆனால் அந்த அரைமணி நேரத்தில் என்னென்னவோ தோன்றி மறைய எப்போதடா மருத்துவமனை சென்றடைவோம் என்ற நிலமையானது கோகுலிற்கு.

மருத்துவமனைக்கு சென்று அவன் தந்தைக்கு அழைக்க அவர் அழைப்பை ஏற்றதும் “எங்க இருக்க?” என்றுதான் கேட்டார்.

“ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன்” எனவும்

“மார்ச்சுவரிக்கு வா”

“ஏன்…? என்னாச்சு?” என கோகுல் பதற…

“வா” என அழைப்பைத் துண்டித்தார் கண்ணன்.

இவன் வேகமாக மருத்துவமனையின் பின்புறமிருந்த பிணவறைக்கு செல்ல அங்கே அவன் கண்ட காட்சியில் உதிரம் உறைய அப்படியே நின்றுவிட்டான். அவனது அக்கா கற்சிலை போல அமர்ந்திருக்க அவனது தாய் சிவகாமி மார்பில் அடித்து அழுது கதறியபடி இருந்தார். யாரோ தன் தோளை தொடுவதைப் போல உணர்ந்தவன் திரும்பி பார்க்க அவனது தந்தை செந்தாமரைக் கண்ணன் நின்றிருந்தார்.

“என்னாச்சு?” என பயத்துடன் கோகுல் கேட்க

“வா” என அழைத்துச் சென்றவர் கண்களும் கலங்கிதான் இருந்தது. அவர் கூறியது இதுதான் ‘லலிதாவின் கணவனும் அவளது ஒருவயது நிரம்பியிராத மகளும் காரில் செல்லும்போது ஆக்சிடெண்ட்டாகி அதே இடத்தில் இறந்துவிட்டனர்’ அதன்பிறகு அவர் என்ன கூறினார் என்பதை அவன் கேட்கவில்லை. திக்பிரமை பிடித்தவன் போல நின்றிருந்தான்.

‘எப்படி நடந்தது? இன்னும் ஒரு வாரத்தில் பிறந்தநாள் கொண்டாடப் போகும் தன் அக்கா மகளுக்காக என்னென்ன பரிசு வாங்கி வைத்திருக்கிறான். கண்ணில் பட்டதெல்லாம் வாங்கி குவித்து வைத்துள்ளானே. அப்படி இருக்க எப்படி நடந்தது?’ மரணமும் மகப்பேறும் மகேசன் கையில் என்பதை மறந்து மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தான் அவன்.

“கோகுல்” என அழைத்த தன் தந்தையை மிரண்ட பார்வை பார்த்தான் கோகுல்.

“போய் அக்காகிட்டயும் அம்மாகிட்டயும் பேசு” என அனுப்பி வைக்க… என்ன பேசுவதென்று தெரியாமல் போய் தன் தமக்கையின் அருகில் அமைதியாக நின்றிருந்தான் அவன்.

சிறிது நேரத்தில் பாடியை வாங்கியவர்கள் நேராக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துவிடலாம் என முடிவுசெய்து இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். தன் மாமனையும் மருமகளையும் தகனம் செய்தபிறகு தந்தையுடன் சேர்ந்து வீட்டிற்கு வந்தவனுக்கு மனம் கலங்கியது. லலிதாவின் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இந்த வீட்டைவிட்டு கிளம்பியவன் இன்றுதான் தந்தை வீட்டில் இருக்கும்போது வருகிறான்.

லலிதாவும் சிவகாமியும் அழுது கொண்டிருக்க சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர். தன் கணவனை கண்டதும் சிவகாமி “என்னங்க… நாம யாருக்கு என்னங்க பாவம் பண்ணுனோம். யார் செஞ்ச பாவமோ என் மக தலையில வந்து விடிஞ்சிருச்சே” என கதற…

“அதான் நாம பண்ணாததுக்கும் சேத்து உன் பையன் பண்றானே பாவத்த” என குற்றம்சாட்டும் பார்வையுடன் கூற…

“அப்பா” என்றான் கோகுல் அதட்டலுடன்

“என்ன அப்புடி கூப்புடாதடா” என்றார் அவனது தந்தை செந்தாமரைக் கண்ணன்.

“இப்ப நான் என்ன செஞ்சேன்னு என்ன இப்புடி பேசுறீங்க? நடந்ததுக்கும் எனக்கும் என்னப்பா சம்பந்தம்?” என ஆற்றாமையுடன் கேட்க

“நீ பண்ணின பாவம்தான்டா என் பொண்ண இப்புடி உட்கார வச்சுடுச்சு” என திட்டிக் கொண்டிருந்தவர் யாரோ வருவதைக் கண்டு அமைதியாகிவிட கோகுல் வேகமாக எழுந்து அவனது அறைக்கு சென்றுவிட்டான்.

வந்தவர் லலிதாவின் மாமியார் மரகதம். வந்தவர் லலிதாவை அழைக்க சிவகாமியோ என் மகள் என்னுடனே இருக்கட்டும் என்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து கீழே இறங்கி வந்த கோகுல் தன் தமக்கையிடம் சென்று “அக்கா” என அழைக்க… அவனை நிமிர்ந்து பார்த்தவர் முகம் முழுதும் வேதனையுடன் கண்களில் நீர் நிறைய எழுந்து சென்றுவிட அந்த கண்களும் முகத்தில் அப்பியிருந்த வேதனையும் தான் செய்த தவறை அவனுக்கு உணர்த்தியது.

அந்த முகமும் கண்களில் தெரிந்த வேதனையும் அவனுக்கு இதற்கு முன்பே எங்கோ பார்த்ததுபோல் தோன்ற எங்கே? என யோசித்தவனின் கண்களில் மின்னலாக தோன்றி மறைந்தது ராதாவின் முகம். அவள் கடைசியாக அவனை பார்த்த பார்வை இதே போல வேதனையுடனும் கண்களில் நீருடனும் தானே அவள் கடைசியாக என்னை பார்த்தாள். அவளுக்காக தானே இரண்டு வருடம் பேசாமல் இருந்த என் தந்தை என்னை தேடி வந்து பேசினார் எனத் தோன்ற அடுத்த நொடியே கிளம்பிவிட்டான் ராதையின் வீடு நோக்கி.

நேராக அவளது வீட்டிற்கு சென்றவன் அழைப்பு மணியை அழுத்த அவளது தாயார்தான் கதவை திறந்தார். அவரிடம் “நா… நான்.. ராதாவ..” என இவன் தடுமாறிக்கொண்டே இழுக்க…

“ராதாவா…? அவ செத்து மூனு மாதமாச்சேப்பா. நீ யாரு?” என கேட்க அதிர்ச்சியில் உறைந்து நின்றான் கோகுல்.

தொடரும்…