தாமரை துணியாலான நீண்ட தோள் பை ஒன்றைப் போட்டுக் கொண்டு விஜய் அமர்ந்திருந்த அவனது கடையை நோக்கி வந்துக் கொண்டிருந்ததை தான் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தான்.
விஜயலெட்சுமி முதல் நாளே ஊருக்கு கிளம்பி விட்டாள். ஆனால் அவள் இன்று பேருந்தில் ஊருக்கு கிளம்புவதற்கு முன் அவளிடம் இருக்கும் தனது நோட்டுப் புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி கல்லூரிக்கு வந்து இறங்கினாள்.ஆதவன் விட்டுச் சென்றதும் இதோ கடை அருகே வந்து பூமாலைகள் தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் வந்து நின்றுக் கொண்டாள்.
தாமரையைக் கண்டதும் அந்தப் பெண்மணி , மாற்றுத்திறனாளியான அவரது கணவரையும் எழுப்பி அருகில் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்றார். விஜய் அவளை தானே கவனித்துக் கொண்டே இருந்தான்.. வீட்டில் பொய் சொல்லிவிட்டு வந்த குற்றவுணர்வு , விஜய் இன்று கிளம்பி விடுவானே என்ற ஏக்கம் ஒரு புறம் என தவித்தவளுக்கு , அவனைப் பார்த்ததும் கண்ணீர் வர ஆரம்பிக்க .. பூமாலை ஒன்றை இறுகப் பற்றியதில் அந்த பூ உதிர ஆரம்பித்தது.
பள்ளிக்கூட பாடம் ஏதும் ..எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும் ..மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு ..படித்தாலே உனக்கு..
விஜய் எழுந்து அருகில் வரவும்.பூவிலிருந்து கையை எடுத்து விட்டு வழியும் கண்ணீரை துடைக்க ஆரம்பித்தாள். அருகில் வந்தவன் பூக்கூடையில் இருந்த மல்லிகைச் சரத்தை எடுத்துக் கொடுக்க , உடனேயே வாங்கிக் கொண்டவள் தலையிலும் வைத்துக் கொண்டாள். தாமரை எப்போதுமே பேச மாட்டாள் , இப்போது விஜயும் பேசாமலே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மெளனத்தை விட சிறந்த மொழி உண்டா என்ன… இருவரது மனங்களும் உரையாடிக் கொண்டுதான் இருந்தது. நேரம் செல்வதை உணர்ந்து ,தான் கொண்டு வந்த பையிலிருந்து இரண்டு மூன்று சிறு சிறு பித்தளை டப்பாக்களை எடுத்து மேசை மீது வைத்தவள் , கையில் மடக்கி வைத்திருந்த ஒரு காகித பொட்டலத்தை முழுதாகப் பிரித்து, தலையைக் குனிந்துக் கொண்டே அவன் புறம் நீட்டினாள்.
மீனாட்சி ஆதவன் ஊருக்குச் செல்லும் போதெல்லாம் செய்த பலகாரங்களை தான் விஜயிற்கு செய்து எடுத்து வந்திருந்தாள். வீட்டில் குழந்தைப் பெற்றவளுக்காக விதவிதமாக சமைத்துக் கொடுத்திருக்க, இவை சமைக்கும் போது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. எடுத்துக் கொள்ளும் போதும் அடிக்கடி விடுதி தோழிகளுக்கு இப்படி டப்பா டப்பாவாக எடுத்துச் சென்ற வழக்கம் இருந்ததால் விஜயிற்காக சமைத்து தைரியமாக எடுத்து வந்திருந்தாள்.
கைகளைக் கட்டி தான் இத்தனை நேரம் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கரத்தில் பிரிக்கப்பட்ட காகிதத்தில், சிறிதளவு குங்குமம் இருக்க… அதில் பெரிதாக ” காத்திருப்பேன்” என்ற வார்த்தை தாமரையின் கையெழுத்தில் மின்னியது.
முதன் முறை தனக்காக எழுதியிருக்கிறாள் .. நினைத்துக் கொண்டே முதலில் அதை வாங்கப் போனவன், என்ன நினைத்தானோ, குங்குமத்தை விரலில் எடுத்தவன் , அதனை தாமரையின் நெற்றியில் வைத்து விட்டான்.
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…
குனிந்திருந்த நெற்றியில் அவனது விரல் பட்டதும் திகைத்து நிமிர்ந்தவளிடம் , ” கிளம்புறதுக்கு முன்னால உனக்கு எதாவது தரணும்னு ஆசைப்பட்டேன். அது பூவும் பொட்டு மா இருக்கும்னு நான் நினைக்கல… உனக்கு அழகாயிருக்கு…. ” என்றதும் வெட்கப் புன்னகையோடு அவனைப் பார்க்க..
” என் மேல உள்ள நம்பிக்கைல காலேஜ் லீவு நேரம் கூட என்னையப் பார்க்க வந்த உனக்கு இதே நம்பிக்கைய காலம் முழுசும் கொடுப்பேன். எனக்காக நீ காத்துட்டு இருக்கிறங்கிற நினைப்பே நான் செய்யப் போற எல்லாத்துலயும் எனக்கு வெற்றியைத் தரும். அதுபோல நீயும் நல்லாப் படி.. நீ டாக்டர் ங்கிற பட்டம் வாங்கினதும் உங்கண்ணன்கிட்ட உன் கைய எனக்குப் பிடிச்சுத் தர கேட்க ஓடோடி வருவேன் சரியா…” என்றதும் தலையாட்டியவளை ,
” பத்திரமா கிளம்பு… ஃபிளைட்ல கிளம்பலாம்தான்.. ஆனா எனக்கு உன்னோட வந்த இரயில் பயண நியாபகங்கள் திரும்ப வேணும்னு தோணுச்சு.. இன்னைக்கு தனிமைல.. எதிர்காலத்துல உன்னோட சேர்ந்து பயணிப்பேன்ற நம்பிக்கைல… ” என்றதும், அன்றைய பிரயாண இரவும் எதிர்கால கனவுகளும் இனிமையாக தாமரையினுள்ளும் வந்துப் போனது.
“ஆதவ் வருவான் தானே…” என்றதும், “ஆம்” எனத் தலையாட்டியவள் நடக்க ஆரம்பிக்க , கூடவே நடந்து வந்து கல்லூரிக்குள் விட்டு செல்லும் போது , அவன் கரத்தை நீட்டினான். மருத்துவமனைக்கு வந்த மக்கள் நெரிசலில் அவர்களை யாரும் கவனிக்கப் போவதில்லைதான்.. மிக அருகில் நிற்கும் தாமரையின் கரத்தை விஜயே பிடித்துக் கொள்ளலாம் தான்.. ஆனால் தாமரையின் அனுமதியில்லாமல் கரம் தொட விரும்பாத காரணத்தால் கையை மட்டும் நீட்டினான்.
ஒரு நொடி அவன் விழிகளைப் பார்த்தவளுக்கு அந்த கண்களின் ஏக்கம் தாக்கத்தைக் கொடுத்தது. ஊருக்குச் செல்பவனை ஏக்கத்தோடு அனுப்ப விரும்பாதவள் , தனது நனி விரல்கள் மட்டும் அவன் கரத்தில் படுமாறு வைக்க , புன்னகையோடு அதை மட்டும் இறுக பற்றி விடுவித்துக் கொண்டவன் , அவளை கட்டியணைக்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, “நான் வருகிறேன்” என்றவாறு கூட்டத்தினுள் சென்று மறைந்து விட்டான்.
சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ..
கண்ணீர் பொலபொலவென வர, அவன் தொட்ட விரல் நுனிகளைப் பார்த்தவாறே, ஆதவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.ஆதவனும் வந்தவன் தங்கையை வீட்டில் கொண்டு வந்து விட , அவனிருந்த யோசனையில் முதலில் அமைதியாக வரும் தங்கையை கவனிக்கவில்லை.இறங்கும் பொழுதுதான் , “என்னம்மா உடம்பு எதும் சரியில்லயா…” என்றான். அண்ணன் தன்னை கவனிக்கிறான் என்பதை உணர்ந்தவள் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தவள், உள்ளே வந்து அண்ணன் மகனைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள்.
வீட்டிற்கு அடிக்கடி வருவதே மனைவியையும் மகனையும் ஒரு பார்வையாவது பார்த்து விட்டுச் செல்லத்தான் என்பதால் அவனும் தாமரை உள்ளே சென்றதும் தில்லை இருந்த அறைக்குள் வந்தான். மகனைக் கொஞ்சும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தவள் கண்கள் இப்போது கணவனைக் காண ஆரம்பித்துவிட்டது. கூடவே ,
“மாமா தலையை நல்லா பிடிச்சுக்கோங்க… மாமா இங்க கொடுங்க… ” என ஏகப்பட்ட மாமாக்களை வாய் நிறைய அள்ளி வீசுவதோடு ,குழந்தை பிறந்த நாளில் இருந்து அவனையேப் பார்வையால் இழுக்கும் அவன் மனைவியை கண்டவன் ,
“என் பொண்டாட்டிக்கு என்னைய உசுப்பேத்திப் பாக்கலனா நாள் ஓடாது.. ஆதவா ..மாமா மாமாங்கிறாளே.. நீ எவ்வளவு நாளைக்கு பார்த்தும் பார்க்காத மாதிரி வேஷம் போட போறியோ..” என நொந்து கொண்டவன் கிளம்பும்போது மகனிடம் கூறுவது போல் ,
” விஜய் மாமா ஊருக்குப் போறாங்கல்ல …அதனால அப்பா அவங்கள நைட் வழியனுப்ப ஸ்டேஷன் போறேன்.. நான் திரும்பி வரநேரமாகிடும் …நீங்க தூங்குங்க.. நாளைக்கு காலைல வந்து உங்களப் பார்க்குறேன்..” என்றவன் தங்கை கையில் குழந்தையைக் கொடுக்கும் போது ,
தில்லை , ஏதோ நியாபகம் வந்தவளாக , “மாமா… நில்லுங்க நில்லுங்க..” என்றாள். அண்ணன் தங்கை இருவரும் திடுக்கிட்டு திரும்பி அவளைப் பார்க்க… ஒரு காகித உறையை எடுத்து,
“ஆனந்தண்ணா கொடுத்த கிஃப்ட் பாக்ஸ்ல இருந்தது.. ” எனக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்த ஆதவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சர்யமாக தான் இருந்தது. புரியாது விழித்த தாமரையிடம்,
“ஏதோ சொத்து … என்னனா அது ரொம்ப பெரிய தொகை..உங்கண்ணாக்கூட வாங்கியிருப்பாங்க போல… இப்ப அது முழுசா நம்ம குடும்ப வாரிசுக்குத்தான்னு எழுதிக் கொடுத்துருக்காங்க டி..” என ஆச்சரியமாகக் கூற… விஜயை நினைத்து பெருமையாக இருந்தது தாமரைக்கு .உன்னை என் மனைவியாக தான் நினைக்கிறேன்.. என்ற போது இருந்த அதே நெகிழ்வு இப்போதும் உண்டானது. நண்பனின் மகனுக்கு செய்வான் என்பது வேறு.. ஆனால் இது தன்னைக் கொண்டு என்பது தெளிவாக இருக்க… குழந்தையை புன்னகையோடு தொட்டிலில் போட்டு ஆட்ட ஆரம்பித்து விட்டாள்.
ஆதவன் மனைவியிடம் தலையசைத்து விட்டுக் கிளம்பியவன் மாலையில் இரயில் நிலையத்திற்கு வரும் போது தேவாவும் விஜயோடு நின்றிருந்தான். தேவா விஜயிடம் ,
“சகல மருமகன் பெயர் சூட்டு விழாவுக்கு எப்படியாவது வரப்பாரு… நான் தொழில்ல இறங்கினப் பிறகு , அப்பா நினைக்கிறதுக்கும் ஒரு படி மேலயே தங்கச்சி கல்யாணத்தை ஊரேப் பாக்குற அளவுக்கு சிறப்பா செய்யணும்னு நினைச்சுருந்தேன். அது முடியல .. அந்த ஆசையெல்லாம் பெயர் வைக்கிற விழாவுக்கு நிறைவேத்தலாம்னு இருக்கேன். முன்னமே பத்திரிக்கை என் சார்புலயும் வரும்… வரப்பாரு… ரொம்ப எதிர்பார்ப்பேன்.”
“முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்றேன்… அப்படி முடியலனா தேவராஜன் கல்யாணத்துக்கு வந்து இறங்கிடுறேன்.” என்ற விஜய் … “ஆமா காதல் பாடல்களா கேட்க தோணுச்சே… எப்படிப் போகுது காதல் வாழ்க்கை… ” எனக் கேட்டான்.தேவராஜன் சத்தமாக சிரித்தவன் ,
“சகல இன்னும் பாட்டு மட்டும் தான் கேட்டுட்டு இருக்கேன்… எப்ப காதல் சொல்லி எப்ப கல்யாணம் ஆகப் போகுதோ தெரியல… ஆனா இப்போதைக்கு கல்யாணம் இல்ல… ஆமா நீ எப்படி… நீயும் தானே காதல் பாட்டா கேட்டுட்டு இருந்த ..” என்றதும் இப்போது விஜயினிடத்தில் விரிந்த புன்னகை ,
“தேவா எனக்கு கல்யாணமே ஆகிருச்சு.. நேரம் வரும் போது உனக்கு மட்டுமில்ல ஊருக்கே தெரிவிச்சுடுவேன்.” என்றதும் அதிர்ந்து விழித்த தேவராஜன்,
“என்ன சகல சொல்ற.. பொண்ணு யாரு..” என்றவன் சுற்றி சுற்றி யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்தான். அவனது செய்கையில் மீண்டும் சிரித்த விஜய்..
“அதான் சொல்றேனே நேரம் வரும் போது சொல்றேன்னு.. எப்ப எங்க மனசு ரெண்டும் ஒன்னா சேர்ந்ததோ அப்பவே கல்யாணம் ஆனது போல தானே.. அதோட என் மனைவி என் கூட இங்க தான் இருக்கா…” என தன் இதயத்தை தொட்டுக் காட்ட .. புன்னகைத்த தேவராஜன் , கைகளை கூப்பி ,
“போதும் சாமி … போதும் தெய்வீக காதல் தான்.. “எனக் கேலி செய்துப் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஆதவன் வந்தது. வந்தவன் , “என்னப்பா அப்படி சிரிப்பு ரெண்டு பேருக்கும்..” என புன்னகையுடன் கேட்க… விஜயும் தேவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். இருவர் மனதிலும் தாமரையே இருந்ததால் ஆதவனிடம் விளையாட்டாகக் கூட தங்கள் காதலைச் செல்ல முடியாதவர்களாயினர்.
விஜய் தான் , “அது பேச்சிலர்ஸ் மேட்டர்ஸ் .. நீ இந்த லிஸ்ட்ல இல்ல ஆதவ்.” என சிரித்தான்.”என்னையும் பேச்சிலர் லிஸ்ட்லயே சேர்த்துக்கங்க டா..” என கத்த வேண்டும் போல் இருந்தது ஆதவனுக்கு. தினமும் காதல் பார்வை பார்க்கும் மனைவியின் மீது மோகம் வந்து உள்ளத்தையும் உடலையும் இம்சை செய்கிறதே.. அவர்கள் கேலியில் புன்னகையை மட்டும் கொடுத்தவன் விஜயிடம் பரிசுப் பொருள் பற்றிக் கேட்டான்.
“ஆதவ்… அம்மா தவறினப் பிறகு எனக்கு யாருமே இல்லங்கிறது போல இருந்தது. ஆனா எப்போ உங்க வீட்டுக்கு வந்தேனோ அப்ப இருந்து எனக்கும் சொந்தம்பந்தம் இருக்கிறாங்கன்ற ஃபீல் கொடுத்து இருக்க… தில்லை சிஸ்டர் தேவா மட்டுமில்ல நானும் உன் குழந்தைக்கு தாய்மாமா தான்னு சொன்னாங்க.. ஒரு தாய் மாமனா இது ரொம்ப சின்ன சீர் தான்டா.. என்னால குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவுக்கோ, பிறந்த நாள் விழாவுக்கோ உடனே உடனே வர முடியுமா தெரியாது. அதுதான்டா இந்த கிஃப்ட் ” என வெளியே சொன்னாலும் மனதுள் ,
” இது அத்தை மாமாவா எங்களோட பரிசு…” என தாமரையை மனதில் கொண்டு சொல்லிக் கொண்டான்.பின் ,
” சுகர் ஃபேக்டரில லாரி ஓட்டுற பாலாஜிகிட்ட கார் எடுத்துக்க சொல்லிட்டேன். புல்லட் மட்டும் நீ அப்ப அப்ப எடுத்து பயன்படுத்திக்க ஆதவ் , நான் வரும் போது அது மட்டும் போதும்… நான் இங்க இருக்கும் பட்சத்தில உனக்கு தொல்லையே தர மாட்டேன் டா… நான் இல்லாத … ” என்றதும் ஆதவன் தேவா இருவருமே … “விஜய் ” என அவன் பேச்சை நிறுத்தப் பார்க்க…
“அதாவது இங்க இல்லாத பட்சத்துல என்னைச் சேர்ந்த எல்லாத்துக்கும் நீ தான் டா… பொறுப்பு… பார்த்துக்குவல ஆதவ் ” என்ற விஜயின் கைகளைப் பொதிந்துக் கொண்டான் ஆதவன். நண்பன் எப்படியும் அவனது தங்கையை தனக்கு திருமணம் செய்துக்கொடுப்பான் என்ற நம்பிக்கையில் இரயில் ஏறிக் கிளம்பினான் விஜய்.ஆதவனும் நண்பனுக்கு கொடுத்த வாக்கினை தன் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினான் என்பதே உண்மை.