தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டு அவள் கூந்தலில் முகம் புதைத்தான். இரவு நேரம், பேச்சற்ற மௌனம், நிலவின் ஒளி என அழகாக இருந்தது அந்த தருணம். அந்த நிலையை கலைக்க இருவருக்குமே மனதில்லை.

இந்த அமைதியையும் நிம்மதியையும் எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கி விட முடியுமா என்ன? அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்? அந்த அணைப்பு இருந்தது ஐந்து நிமிடமா அரைமணி நேரமா என்று கூட தெரிய வில்லை இருவருக்கும்.

அவளிடம் இருந்து வந்த சந்தனமும் மஞ்சளும் கலந்து வந்த வாசனையும் அவள் சூடி இருந்த மல்லிகையின் வாசனையையும் அவனது நாசியைத் தீண்ட அவன் கிறங்கிப் போனான்.

அவளது வாசனையும் அவள் மேனியின் மென்மையும் அவன் ஒரு ஆண்மகன் என்று அவனுக்கே உணர்த்த அவன் அணைப்பின் வேகம் கொஞ்சம் கூடியது. அவன் கைகளின் இறுக்கத்தில் தன்னுணர்வுக்கு வந்தவள் வெட்கம் மற்றும் தயக்கத்துடன் அவனிடம் இருந்து விலக முயன்றாள்.

முயல மட்டுமே அவளால் முடிந்தது. ஆனால் அவன் அவளை விட மறுக்க “பிரபா”, என்று மயக்கத்துடன் அழைத்தாள்.

அந்த நேரத்தில் அவள் குரலில் இருந்த போதையில் அவனின் கிறக்கம் இன்னும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

வேகமாக அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் அடுத்த நொடி அவள் இதழ்களைச் சிறை செய்திருந்தான். இதை எதிர்பார்க்காதவளுக்கு கை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.

அவன் நெருக்கத்தில் நிலை குலைந்து போனாள். சிறிது நேரம் கழித்து விலகியவன் “சாரி உன் பெர்மிசன் இல்லாம….”, என்று உளறினான். இதற்கு அவள் என்ன சொல்வாளாம்? “எத்தனை நாள் இப்படி பெர்மிசன் கேட்டுட்டே இருக்கப் போறீங்க?”, என்று கேட்டவள் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

சிறு சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவன் “இன்னைக்கு ரொம்ப அழகா இருந்தியா? ரொம்ப தேடிட்டே இருந்தது. அதான் அத்தைக் கிட்ட சொல்லி வரச் சொன்னேன். ஆனா வந்தது நல்லதா போச்சு. எல்லாம் கிடைச்சிருச்சு”, என்று சொல்ல அவன் கையை கிள்ளி வைத்தாள்.

“ஆ வலிக்குது டி. சரி நேரம் ஆச்சு. நீ கிளம்பு”, என்று அவன் சொல்ல “அதுக்குள்ள போகனுமா?”, என்று கேட்டாள் அவள்.

“நான் கேட்டதும் உன்னை அனுப்பி வச்சாங்கல்ல டி? அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்ல?”

“அம்மா உங்க கூட பேசிட்டு தான் வரச் சொன்னாங்க”

“அவங்க சொல்லுவாங்க டி. ஆனா நீ வர வரைக்கும் அவங்களுக்கு தூக்கம் இருக்காது. நீ போ”, என்று சொல்ல அவனை பெருமையாக பார்த்த படி அங்கிருந்து சென்றாள்.

அடுத்து வந்த நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சென்றது. வினோதினி, சீதா, மீனாட்சி, அர்ச்சனா நால்வரும் அமர்ந்து கதை பேசுவார்கள். வினோதினியுடன் அமர்ந்து ஏதாவது ஒரு படம் பார்ப்பாள். அர்ச்சனாவைப் பொறுத்த வரைக்கும் வினோதினி ஒரு குழந்தை போன்றவள். வெகுளியாக இருப்பாள். அதுவே அவள் மீது அதிக அன்பை அவள் வைக்க காரணமாக இருந்தது. மாலையானதும் ஒரு அழகு நிலையப் பெண் வந்து அவளுக்கு பேஷியல் பண்ணி விடுவாள். கொஞ்சம் போர் அடித்தது தான். ஆனால் பெரியதாக தெரிய வில்லை.

பிரபாகரனை பார்ப்பது தான் அவளுக்கு கஷ்டமாகிப் போனது. அவனை எப்போதாவது தான் அவளால் பார்க்க முடிந்தது. ஆனால் கிடைக்கும் நேரத்தில் அவள் அருகே வந்து அமர்ந்து கொள்வான். யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டான்.

எப்போதாவது சேர்ந்து உணவு உண்ணும் போது அவள் அருகே அமர்ந்து யாருக்கும் தெரியாமல் அவள் கையைப் பற்றிக் கொள்வான். எங்கே இருந்தாலும் பார்வையாலே அவளை வெட்கப் பட வைத்தான். சில நேரம் அவளை நெருங்கி வந்து வேண்டும் என்றே அவளை இடித்து விட்டுச் செல்வான்.

அவனது பேச்சை விட அவனது மௌனப் பார்வை அவளை அதிகம் பாதித்தது என்று சொல்லலாம். விழுங்கி விடுவதைப் போல பார்ப்பதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. ஆனால் மற்ற நேரம் எல்லாம் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருந்தான். அவன் வேலைப் பளு அவளுக்கு தெரியும் தான். இருந்தாலும் அவன் ஓய்வில்லாமல் இருப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

நடக்க விருப்பது அவனுடைய திருமணம் தானா என்ற எண்ணம் கூட இல்லாமல் அங்கே இங்கே அலைந்து அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான்.

அவனது உறவினர்கள் அனைவரும் ஒன்றாக கூடியதால் வீடே சந்தோசக் கொண்டாட்டத்தில் இருக்க எங்கேயும் அவளால் பிரபாகரனைப் பார்க்க முடிய வில்லை.

தந்தைக்கு வேலை வைக்க கூடாது என்று அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். அவனது தம்பி அகிலன் அஞ்சலியை சைட் அடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்க வேணுவோ என்னமோ அவன் தான் மாப்பிள்ளை என்பது போல ஒரு வேலையும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் உணவு முதற்கொண்டு அலங்காரம் வரை எல்லா வேலைகளையும் பிரபாகரன் தான் செய்து கொண்டிருந்தான். அவன் வேலைகள் புரிந்தாலும் அவனைக் காண முடியாததால் ஏக்கத்துடன் இருந்தாள் அர்ச்சனா.

அவள் மனச் சோர்வுக்கு அது மட்டும் காரணம் அல்ல. அவனுடைய ஓய்வின்மையும் தான். “எதுக்கு இவன் இப்படி எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யனும்? இப்படி சரியா தூங்காம அங்க இங்க அலைஞ்சிட்டு இருந்தா உடம்பு என்ன ஆகும்?”, என்று கவலை கொண்டது அவள் மனது.

மனது கேட்காமல் “இப்படி இருந்தா எப்படி பிரபா? உடம்பு என்ன ஆகும்? பொறுப்பை யார்க் கிட்டயாவது கொடுத்துட்டு ரெஸ்ட் எடுங்க”, என்று ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.

“எனக்கு இந்த வேலை எல்லாம் கஷ்டமா தெரியலை டி? எல்லா வேலைகளுக்கும் பின்னாடி நம்ம கல்யாணம் நடக்க போகுதுங்குற பூரிப்பு தான் தெரியுது? இப்ப கஷ்டப் பட்டா உன்னோட அருகாமை எனக்கு பெரிய பெரிய கிஃப்டா தெரியும் டி”, என்று பதிலுக்கு அனுப்பி வைத்தான்.

“உடம்பு என்ன ஆகும்?”, என்று கவலையாக கேட்டாள்.

“நான் என்ன வேர்க்க விருவிருக்க வேலையா பாக்குறேன்? பகல் நேரத்துல ஆபீஸ் போக வேண்டியது இருக்கு. நைட் நேரத்துல தானே மத்த வேலை பாக்க முடியுது. என்னால உன் கூட இருக்க முடியலைன்னு தான் கஷ்டமா இருக்கு. அது மட்டும் இல்லை. நான் வீட்ல இருந்தேன்னு வை, எல்லாரோட கண்ணும் நம்ம ரெண்டு பேர் மேல தான் இருக்கும்”, என்று சொல்லி சமாளித்தான்.

அன்று இரவு வீட்டுக்கு வந்ததும் பிரபா கண்களில் விழுந்தாள் அர்ச்சனா. வினோதினியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகே அமர்ந்திருந்த சீதாவும் மீனாட்சியும் பூ கட்டிக் கொண்டிருந்தனர். ஒரு கூட்டம் டி‌வி பார்த்துக் கொண்டிருந்தனர். ஆண்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பிரபாவின் கண்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு இறுதியாக தன்னவளிடம் நிலைத்தது. எந்த ஒப்பனையும் இல்லாமலே அவ்வளவு அழகாக இருந்தாள் அர்ச்சனா.

ஆகாய வண்ண புடவையில் தோளின் இரு புறமும் மல்லிகைச் சரத்தை வழிய விட்டு அவ்வளவு அழகாக இருந்தாள். “ஒவ்வொரு நாளும் அழகாய்ட்டே போற டி? இல்லை என்னோட கண்ணு தான் உன்னைப் பாத்து மயங்கி தொலைக்குதான்னு தெரியலை”, என்று எண்ணிக் கொண்டான்.

அவளும் அவனைப் பார்த்து விட்டாள். அவனைக் கண்டதும் அவள் கண்கள் மின்னியது. அவனுடைய அழகும், உயரமும், கம்பீரமும், ஆண்மை கலந்த நிமிர்வும் அவள் ரசிக்கும் படி இருந்தது. சுற்றி ஆட்கள் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் அவளைக் கண்டு புன்னகைத்தான். அவனுடைய ரகசிய சிரிப்பை அவளுடைய இதய அறையில் பத்திரப் படுத்திக் கொண்டாள்.

சுற்றி ஆட்கள் இருந்தாலும் அவள் கண்கள் அவனையே ரசிக்க “தலையை திருப்பு டி”, என்று அவள் மூளை எச்சரிக்கை செய்தது. ஆனாலும் அவளால் அவனிடம் இருந்து பார்வையைத் திருப்ப முடிய வில்லை. அவள் கண்கள் அப்படியே அவன் மேல் நிலை பெற்று விட இருவரின் பார்வையும் பின்னிப் பிணைந்தன.

அதற்கு மேல் அவளை விட்டு விலகி இருக்க முடியாமல் அவளை நோக்கி சென்றான். ஐயோ கிட்ட வரானே என்று எண்ணி திகைத்தவள் சுற்றி பார்வையை ஓட்டினாள். உறவினர்கள் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் சாதாரணமாக பேசினாலே அனைவரின் பார்வையும் அவர்கள் மீது விழும் என்று தெரியும். அதனால் “இரு வினோ வரேன்”, என்று முணுமுணுத்து விட்டு மெதுவாக மாடி ஏறினாள். மொட்டை மாடியில் சென்று நின்றவள் அவன் வருவானா என்று மாடிப் படியை எட்டிப் பார்த்தாள். சீதா மற்றும் மீனாட்சியிடம் ஒரு நொடி நின்று பேசியவன் தன்னுடைய தந்தையிடம் ஒரு தகவலைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“என்ன இவனை இன்னும் காணும்? ஒரு வேளை வர மாட்டானோ? இப்ப நாம மாடிக்கு வந்ததைக் கூட அவனை அவாய்ட் பண்ணிட்டு வந்த மாதிரி நினைச்சிக்குவானோ?”, என்று கவலையும் அவளுக்கு வந்தது.

அவனைக் கண்டதும் அவள் கண்களில் எழுந்த மின்னலையும் அவள் கண்கள் சுற்றி சுழன்று அனைவரையும் கவனித்து பின் அவள் மாடி ஏறுவதையும் கவனித்தவனுக்கு அவள் அவனுடன் பேசும் ஆசையில் தான் தனிமையைத் தேடிச் செல்கிறாள் என்று புரிந்தது தான். ஆனால் உடனே அவள் பின்னால் போனால் மற்றவர்கள் தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் காலம் தாழ்த்தினான். பின் யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவனுடைய அறைக்குச் செல்வதைப் போல மொட்டை மாடிக்குச் சென்றான்.

வருவானா வர மாட்டானா என்ற சிந்தனையில் அவள் நிற்கும் போது அவளுக்கு எதிரே வந்து நின்று அவளுக்கு திகைப்பைக் கொடுத்தான். அவனைக் கண்டதும் அவள் கண்கள் வெட்கத்தில் நிலம் பார்த்தன.

அவள் நாடியைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் “நான் வருவேன்னு தெரிஞ்சு தானே இங்க வந்த?”, என்று கேட்டான்.

“யாரு சொன்னா அப்படின்னு? நான் சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன்”, என்று புன்னகையுடன் சொன்னாள் அர்ச்சனா.

“அப்படியா? நம்பிட்டேன் டி. என்னைப் பாத்ததும் உன் கண்ணுல வந்த ஆசையைப் பாத்தேன். என் கிட்ட பேச தான் நீ மாடிக்கு வந்த”

“அதெல்லாம் இல்லை. நீங்க அப்படி நினைச்சா நான் என்ன சொல்றது? நான் காத்து வாங்க தான் வந்தேன்”, என்றாள்.

காதல் தொடரும்….