அலை 22 ( 2 )

                அவர்களது உறவினர் என்பதால் மருத்துவர் வாசலுக்கே வந்து பரிசோதித்து பிரசவ வலி என்பதை உறுதி செய்தவர் , பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். உறவினர் என்பதோடு தாமரை மருத்துவ மாணவி என்பதால் அவளும் கூடவே நின்றுக் கொண்டாள்.

“செல்வி வலிக்குது டி… ” என மெதுவாக சொல்ல ஆரம்பித்தவளுக்கு ஆறுதல் கூறிப் பிடித்துக் கொண்ட தாமரைக்கும் அழுகை வந்தது. ஒரு கட்டத்தில் வலி அதிகமெடுக்க ஒரு கட்டத்தில் தில்லை பிதற்ற ஆரம்பித்து விட்டாள். அரைமணி நேரத்தில் ஆதவனும் வந்து விட , தில்லையின் சத்தம் பிரசவ வார்டையும் தாண்டிக் கேட்க , பொறுக்க முடியாமல் ஆதவனும் உள்ளே சென்றான். அவன் வருகையில் ,

“செல்வி… எனக்கு ஏதாவது ஆகிருச்சுனா நீ தான் டி பிள்ளையப் பார்த்துக்கணும்… உங்க அண்ணன்லாம் வேற பொண்டாட்டி கட்டிட்டுப் போய்டுவாங்க … பார்த்துக்குவல்ல… “தாமரையோ அழுதுக் கொண்டே …

“உனக்கு ஒன்னும் ஆகாது .. நல்லா ‘புஷ்’ பண்ணு பாப்பா ஒரு பத்து நிமிஷத்துல பிறந்துடும்…” எனும் போதே , ஆதவன் அருகில் வந்தவன் , அவள் கூந்தல் ஒதுக்கி முகம் துடைத்து சமாதானம் செய்ய … தில்லையோ ,

“மாமா… பயப்படாதீங்க…நான் அத்தைய நல்லபடியா பெத்துக் குடுத்துடுவேன்… நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க… இப்படி உளற ஆரம்பிக்க … தாமரையும் சில செவிலியர்களும் அவர்களுக்கு தனிமைக் கொடுத்து வெளியே வந்தனர்.

தில்லையின் பேச்சுக்கெல்லாம் , “சரி… சரி ” என்றிருந்தவனுக்கு அவளின் வலியைத் தான் வாங்க மாட்டோமா என்றிருக்க … பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தவன் ,” என்கிட்ட இப்படியெல்லாம் வாயக் கொடுக்காதனு சொல்லிருக்கேன்ல… இரு உன்னைய…” என்றவன் பிதற்றிக் கொண்டிருந்ததில்லையின் உதட்டோடு உதடு சேர்த்து விட்டான்.

தில்லையின் சத்தம் அடங்கியிருக்க பயந்துப் போன தாமரை கதவைத் திறக்க … அங்கு ஆதவனின் பின்னந்தலை மட்டுமே தெரியவும் , என்ன நடக்கிறது என யூகித்தவள் நாணம் மிக கதவை மீண்டும் சாத்தினாள். அதே நேரம் விஜயும் பதட்டத்துடன் கதவருகே வந்திருக்க , ‘ நில் ‘ என்பது போல் தன் வலக்கரத்தால் அவனைத் தடுத்தவளின் சிவந்த முகமே உள்ளே என்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக விஜயிற்கும் காட்டிக் கொடுக்க , ஓரமாக சென்று நின்றுக் கொண்டான்.

“இதுக்கு மேல வாய்க் கொடுப்ப..” என தில்லையின் தாடையைப் பற்றியவன், “எதையும் யோசிக்காம குழந்தைய நல்லபடியா பெத்துட்டு வா.. வேற பொண்டாட்டி வருவாளாமே… எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் டி என் பொண்டாட்டி … ” என்றவன் , திகைத்து விழித்துக் கொண்டிருந்தவளின் கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு விட்டு வெளியே வந்து தலை கவிழ்த்து ஓர் ஓரமாக அமர்ந்துக் கொண்டான். விஜய் அவனது தோள் சேர்த்து அணைத்து விடுவித்தவன் , அவனும் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான்.

ஆதவன் வெளியே வந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் கத்த ஆரம்பித்தவள் அரை மணி நேரத்தில் அவர்களது மகனைப் பெற்றெடுத்தாள். தாமரை கையில் தான் காயத்திரிக் கொடுத்தார். “செல்வி உன் மருமகனப் பார்த்தியா … இப்படித்தான் உங்கண்ணனும் இருந்தான்…” என்றவர் தில்லையிடம்,

“தில்லை உன் பையனப் பாரு.. இதுக்குப் போய் இவ்வளவு ஆர்பாட்டம் … ” என்றதும்… சோர்வுடன் , “பையனா .. ” எனக் கேட்டவாறு உறங்கி விட்டாள். காயத்ரி வெளியே வந்தவர் அருணாச்சலத்திடம் ,

“அண்ணா உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான்..ஆதவா வாழ்த்துக்கள் பா…” என்று விட.. அருணாச்சலம் மீசையை முறுக்கிக் கொண்டே … “எனக்குத் தெரியும் மா ,நம்ம குடும்பத்துக்கு முதல்ல ஆண் வாரிசுதான்.” என பெருமைப்பட்டுக் கொண்டார்

மருமகனை கையில் ஏந்திக் கொண்டு வெளியே வந்த தாமரையும் பேச வார்த்தைகளற்ற மகிழ்ச்சியில் அண்ணனிடம் குழந்தையைக் காட்டினாள்.விஜயும் பார்த்து மகிழ்ந்தவன் நண்பனுக்கு வாழ்த்து தெரிவிக்க … அருணாச்சலம் ,

“தம்பி .. எங்க வாரிசு நல்லபடியா பிறக்க நீங்களும் ஒரு காரணம்… அந்த நன்றிய நாங்க எப்பவும் மறக்க மாட்டோம்… ” என நெகிழ்ந்துப் போய் கூறினார். தந்தை விஜயைப் பாராட்டியது தாமரையினுள் மகிழ்ச்சி அலையைக் கொடுக்க, தனது நன்றியை நிமிர்ந்து அவனைப் பார்த்து புன்னகையில் காட்டினாள்..விஜயிற்கு அந்த புன்னகைப் போதுமே…

ஆதவனுக்கு குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்த்த நேரத்திலிருந்து, அவன் குற்றவுணர்வகளெல்லாம் முற்றிலும் காணாமல் போன உணர்வு. தங்கையிடமிருந்து மகனை வாங்கி பொக்கிஷமாக கைகளில் ஏந்திப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தில்லையை அறைக்கு மாற்றிய இரண்டு மணி நேரத்தில் தேவகி வீட்டில் அனைவரும் வந்து விட்டனர். பேரனைக் கண்ட மகிழ்ச்சி இருந்தாலும் தில்லையின் பிரசவ நேரத்தில் தான் அருகில் இல்லாதது வருத்தத்தைக் கொடுத்து புலம்ப வைத்தது.

“ராஜா என் பேரன் அவன் தாய் மாமன் சாயலையும் கொண்டுட்டு வந்துருக்கான்.” என சிலாகித்துக் கொண்டிருந்தார். விஜய் உட்பட யாருமே வீட்டிற்குப் போகவில்லை. இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்து குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.

அதிகாலை நான்கு மணி அளவில் கண் விழித்த தில்லை , தன்னைச் சுற்றிலும் அமர்ந்திருந்த உறவினர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டவள் விழிகளில், அவளையே பார்த்தவாறு அருகில் அமர்ந்திருந்த ஆதவனைக் கண்டதும் புன்னகை விரிய துவங்க , அருகில் எழுந்து வந்து அவள் கையை எடுத்து தனது கரங்களுக்குள் பொதிந்து கொண்டவன் , ‘தேங்க்ஸ் … ” என்று விட்டு “சாரி” என்றும் கூற… விழிகளைச் சுருக்கிய தில்லை,” இந்த மாமா அடிக்கடி சாரி, பூரிங்கிறார்.. அதுதான் ஒன்னும் புரியல… ” என யோசிக்கும் போதே குழந்தை சிணுங்க… தாமரை தேவகி என அரை தூக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் விழித்துக் கொண்டனர்.

தில்லை விழித்தது அறிந்த அவர்கள் தங்களது மகிழ்ச்சியை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள , தில்லையோ , “செல்வி.. அத்தை திரும்ப பொறக்கலனு வருத்தப்படுறியாடி … ” என்றதும் , தாமரை ,

” அடி லூசு… அடுத்த தடவை பொண்ணப் பெத்துக்குடு … இதுக்குப் போய் ஃபீலாவியா … இங்க பார்.. எங்கண்ணன் நெத்தி … உன் கண்ணு.. விரல் எல்லாம்…” என குழந்தையின் அழகை வர்ணித்து மகிழ்ந்துக் கொண்டிருந்த தாமரையைக் கண்டு தில்லையின் மனம் மகிழ்ந்துக் கொண்டிருந்த அதே வேலையில் , ” அடுத்து பொண்ணுப் பெத்துக் கொடுக்கச் சொல்றா.. நான் பாட்டுக்கு பெரிய பெரிய சபதமெல்லாம் எடுத்து வச்சுருக்கேனே.. மாமா ” என்றவளது கண்கள் ஆதவனைத் தேடியது.

சுகப்பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட தில்லையை தேவகி அங்கிருந்தே கவனித்துக் கொள்ள ,

“என்னம்மா உன் வீடு … உன் வாசல் எல்லாம் போட்டுட்டு வந்துட்ட… ” எனக் கிண்டல் செய்ய …” என் பேரன விட எனக்கு என்னடி முக்கியம்… அதோட இது எங்கம்மா வீடு ஆமா… ” என முறுக்கிக் கொண்டார்.தாமரைக்கு முதல்வருட படிப்பு முடிய இருப்பதால் , அவளுக்கு விடுமுறை இல்லாமல் கல்லூரிக்கு சென்றே ஆக வேண்டிய சூழல்.காலையும் மாலையும் குழந்தையோடு நேரம் செலவிட்டு விட்டுத்தான் படிப்பு, உறக்கம் என இருந்தாள்.

கீழே இருந்த அறையில் தான் தேவகி மகளை வைத்துக் கவனித்துக் கொண்டிருந்தார்.ஆதவனும் காலை மற்றும் இரவு வேளைகளில் குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டுத்தான் அவனது நாட்கள் துவங்கவோ முடியவோ செய்தது. அந்த நேரங்களில் தில்லையிடம் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நகர்ந்து விடுவான்.

இந்நிலையில் தான் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என வீட்டினுள் பேச்சுக்கள் ஓட, ஒவ்வொருவரும் ஒரு பெயரைக் கூற , தில்லையோ அத்தை தானே பெயர் வைக்க வேண்டும் , எனவே தாமரைக் கூறுவது தான் என்று விட்டாள். 

தேவகியும் தில்லையின் திருமண விருந்தை பேரனின் பெயர் சூட்டு விழாவில் நிறைவேற்றிக் கொள்ள விரும்பியவர் தாமரையிடம் ,

” யம்மா மருமவளே உனக்கு என்ன பெயர் வைக்கணுமோ அதை பெயர் வைக்கிற அன்றைக்கு சொல்லு… என் பேரனுக்கு ஊரே திரண்டு தாய்மாமன் சீர் எடுத்துட்டு வந்து, கிடா வெட்டி விருந்து போடணும்… எப்படியும் மூணு மாசமாகும்…” என்று விட்டார்.

.

மீனாட்சிக்கு திவசம் செய்து விட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்த மூன்று மாத இடைவெளி தேவைப்பட்டது. அதுவரையில் அவரவர் விருப்பபடி குழந்தைக்கு செல்லப் பெயர் ஒன்றை வைத்து அழைத்துக் கொண்டனர்.இப்படியே  ஒரு மாதமும் முடியப் போக , விஜய் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. அந்தச் சமயம் மருத்துவக் கல்லூரியில் தொடர் விடுமுறை வேறு விடப்பட்டிருக்க , அவன் கிளம்பும் சமயத்தில் அருகிலிருந்து வழியனுப்ப விரும்பினாள் தாமரை. ஆனால் எல்லாம் சாத்தியமாகுமா என்ன…

காவியம் போன்ற காதல்

பூமியை வென்று ஆளூம்

காலங்கள் போனபோதும்

வானத்தைப்போல வாழும்

இது மாறாது மறையாது

அன்பே..

கிளம்ப இருக்கும் இரு நாட்களுக்கு முன் வீட்டிற்கு பரிசுப் பெட்டி ஒன்றோடு குழந்தையைக் காண வந்தவன் , வீட்டிலிருந்த அனைவரிடமும் கூறிக் கொண்டு விடைப் பெற , தில்லையின் பின் அமர்ந்திருந்த தாமரைக்கு கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. அதை மறைத்தவாறே அம்ர்ந்திருக்க , தில்லை விஜயிடம் ,

“அண்ணா சின்னக்குட்டி நல்லபடியா பிறக்க காரணமா இருந்த நீங்க இவன் பெயர் சூட்டும் விழாவுக்கு வரணும்னு ஆசைப்படுறேன். முடியுங்களா.. நீங்களும் ஒரு தாய்மாமன் தான்.. நீங்க சீர் செய்ய வரமாட்டீங்களா…” எனவும் ,

“ஆதவ் சொன்னான் மா.. வாய்ப்பு இருக்கா தெரியாது… ” எனும் போதே தாமரை மெதுவாக தில்லையின் பின்னிருந்து எட்டிப் பார்க்கவும் , அந்த கண்களின் வேண்டுதல் கேட்கப்படாமல் போகுமா என்ன.. உடனேயே

“நிச்சியம் வரப் பார்க்கிறேன்.. இன்னும் ரெண்டு மாசமிருக்கில்ல… ஆதவ் தேதி முடிவானதும் சொல்லுடா.. கண்டிப்பா பெர்மிஷன் கேட்டுட்டு அன்னைக்கு வந்துருவேன்” என நண்பனிடமும் விளக்கம் கொடுத்தவன். தான் கிளம்பப் போகும் ரெயிலின் பெயர் நேரம் , அனைத்தையும் சாதாரணமாக அனைவருக்கும் தெரிவிப்பது போல் தாமரைக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தான். கூடவே ,

“கிளம்பறன்னைக்கு மதியம் உனக்கு ஃபோன் பண்ணுறேன்… உனக்கு டைம் இருந்தா சாயந்திரம் ஸ்டேஷன் வா…” என்றதும் ஆதவன் ,

“அது எப்படிடா நான் வராம நீ வண்டி ஏறிடுவியா…” என்றவன் தோழனிடம் அதற்கு மேலும் தொழில்கள் குறித்துப் பேசிவிட்டு அனுப்பினான். இதோ விஜய் இன்று இரவு இரயில் ஏற இருக்கிறான். நேற்று முதல் கல்லூரி விடுமுறை துவங்கி இருக்க… இன்று மதியம் அவன் அண்ணனுக்கு தொலைப்பேசியில் அழைப்பேன் என்றதே… அவளை எதிர்பார்த்தாக தான் இருக்கும் என அறிந்திருந்தவள் , அவன் வந்து சென்ற நாள் முதல் யோசித்து முடிவெடுத்து ,இதோ இன்று காலை கிளம்பியும் விட்டாள்.

கண்ணே என் கண்மணியே

என் கையில் வந்த பூந்தோட்டமே

பொண்ணே என் பொன் மணியே

தெனம் பொங்கி வரும் நீரோட்டமே….