தேவகி எவ்வளவு செல்லிப் பார்த்தும் தில்லை பிரசவத்திற்கு கூட அங்கு வர மாட்டேனென்று விட்டாள்.ஆதவன் அருகிலிருக்க , “மாமா நீங்க என்னைய கவனிச்சிக்க மாட்டீங்களா..” என்றதும் ஆதவன் மனதுள் ,
” உன்னைய தானே கவனிச்சுட்டே இருக்கேன்…” என மனதுள்ளும் வெளியே , “அத்தை. திலோ விருப்பம் எதுவோ.. அதன்படியே செய்யலாம்..” என்று விட்டான்.
“ஒவ்வொரு பிள்ளைகளும் ஏழாமாசமே வளையல் போட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டு பிள்ளை பிறந்தும் அஞ்சாவது மாசம் தான் புருஷன் வீட்டுக்குப் போகுதுக… அங்க அக்கம் பக்கத்துல உள்ளவக… பொண்ண கட்டிக்குடுத்துட்டேன்னு சொல்ற.. ஆனா எங்க கண்ணுல காட்ட மாட்டிக் கிறாகனு குறை படிக்கிறாங்க..” என தன் ஆதங்கத்தை தொட்ட …
“ம்மா அவங்க சந்தோஷத்துக்காக என்னால வாழ முடியாது… முடிஞ்சா .. குழந்தைய தூக்கிட்டு அங்க வந்து எல்லாருக்கும் சொல்லிக்கலாம்..” என்று விட தேவகியும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. மறுநாள் ஆதவன் தங்கையை கல்லூரி வாசலில் எப்போதும் இறக்கி விடும் இடத்தில் இறக்கி விட்டு , அவள் வளாகத்தின் உள்ளே செல்வது வரைப் பார்த்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். அவன் கிளம்பிய ஐந்து நிமிடத்தில் தாமரை வெளியே வந்தவள் முகத்தில் அவ்வளவு பதற்றம்.
இதையெல்லாம் எதிரில் இருந்த டீக்கடையில் நின்று கவனித்துக் கொண்டு தானே இருந்தான் விஜய். அவளின் குணம் அறிந்திருந்தவனுக்கு அவள் வருவாளோ என்ற சந்தேகம் தான். ஆனால் வெளியே வந்தது வானமே வசப்பட்டது போல் இருக்கவும் அவள் நடந்த புறம் துள்ளிக் கொண்டு வந்து , “ஹாய்…” என்றான்.
கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரையெல்லாம்
காலடி தேடி நின்றேன்…
திடிரென்று தன் அருகே வந்து நின்றவனைக் கண்டு முகத்தில் புன்னகையும் நிம்மதியும் வர… அதனை அப்படியே பிரதிபலித்தவளுக்கு பதில் புன்னகையைக் கொடுத்துக் கூடவே நடந்து வந்தான். இரண்டு நிமிட நடையில் அந்த எஸ்.டி.டி பூத் வந்து விட்டது. பேருந்தில் கடந்து செல்கையில் பார்த்திருந்த ஒன்று தான் .. ஆனால் இன்று புதுப் பொலிவோடு பார்ப்பதற்கு வேறு மாதிரி.. ஏன் பெயரே வேறாகி இருந்தது.
அந்த பெயரில் மனம் சென்றுக் கொண்டிருக்க… முன்புறம் அன்றுப் பார்த்த பூக்கார அம்மா .. பூ மற்றும் பூமாலைகள் விற்பனை செய்துக்கொண்டிருந்தார். கடையின் முன் நாளிதழ்கள் , மாதாந்திர வார பத்திரிக்கைகளை ஒரு முதியவர் விற்றுக் கொண்டிருந்தார்.தாமரையைக் கண்டதும் , “இந்தா சாமி தலையில வச்சுக்க ” என மதுரை மல்லிகைச்சரத்தைக் கொடுத்தார்.விஜயைப் பார்க்க , அவன் வாங்கிக் கொள் ‘என்பது போல சைகை செய்ய , ஆசையாக வாங்கித் தலையில் சூடிக் கொண்டாள்.
குரல் கேட்ட முதியவரும் , “ஆனந்தய்யா நீங்களா…” என்றவர் எழப் பார்க்க , அவரை அமரச் சொன்னவன் , தாமரையை கண்ணாடி தடுப்பாலான தொலைப்பேசி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். உள்ளிருப்பவர்கள் வெளியே தெரியாதவாறு இருக்கும் கறுப்பு கண்ணாடி தடுப்பு அது. அந்த சிறிய இடத்தில் விஜயோடு தனிமையில் … ஆனால் வெளியேப் பார்த்தால் எல்லோருமே பக்கத்தில் தான் இருந்தார்கள்.
புது அனுபவம் , அவனை நிமிர்ந்துப் பார்க்கவிடவில்லை. மெளனத்தைக் கலைத்தவாறு விஜயின் குரல் வந்தது.
“இனி இது நம்ம கடை தான்.. அவங்களுக்கு இப்ப இந்த கடையும் , நாமளும் தான் ஆதரவு… தினமும் பஸ் ஸ்டான்ட் வந்ததுல பழகினது. இனி இங்க அவங்க.. ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க.. உன்னைய ஏன் வரச் சொன்னேன்னா…” என்றவன் , கடையில் பில் வெளிவரும் இயந்திரத்தின் அருகே இருந்த ஒரு டப்பாவைக் காண்பித்து ,
” உங்கண்ணனுக்கு வீட்டுக்கு லெட்டர் வரப்போ , உனக்கு இங்க வரும் … வீட்டுக்கு ஆதவனுக்கு நைட் ஃபோன் பண்ணினா… மறுநாள் நீ இங்க வர்ற இந்த நேரத்துல உனக்கு கால் பண்ணுவேன்.” இப்போது தாமரையின் கண்கள் கலவரத்தைக் காட்ட … அதை எதிர்கொள்ள முடியாதவன், பெருமூச்சுடன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே ..
“ஆதவ் கிட்ட கூட இன்னும் சொல்லல.. உன்கிட்ட சொல்லிட்டுத்தான் அவன் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்…” என்றவன் , சிறிது இடைவெளி விட்டு…
” என் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகுது.. எஸ்… நான் டிஃபென்ஸ்ல டெக்னிகல் என்ஜினியரிங் போஸ்ட்டுக்கு செலக்ட் ஆகிட்டேன்… அநேகமா அடுத்த மாசம் டிரைனிங்கிளம்ப வேண்டியிருக்கும் ..அப்ப உன்னைப் பார்க்க பேச எப்படியும் ஒரு வருஷம் ஆகிடும் … அந்தச் சமயங்கள்ல உன்னைய தொடர்பு கொள்ள எனக்கு இதுதான் வழியா தெரிஞ்சது.. ” எனும் போதே தேம்பல் ஒலியோடு தாமரை தன் துப்பட்டாக் கொண்டு கண்களை துடைக்க ஆரம்பித்து விட்டாள்.
வேகமாக திரும்பி அவளை நெருங்கி நின்றவன் தொட முயன்ற கைகளை கட்டுப்படுத்தி ,
“ப்ளீஸ்டா .. அழாத… உனக்கு நான் டிஃபென்ஸ்ல சேர்றது பிடிக்கலனா அதுக்கும் ஆப்ஷன் வச்சுருக்கேன். உன் அண்ணனோட பார்ட்னரா இருந்து இங்கேயே பிஸ்னஸ் பண்ணட்டுமா…” என்றவனுக்கு, ” வேண்டாம்..” என வேகமாக தலையாசத்தவள் நிமிர்ந்து பார்க்க.. அருகில் மிக மிக அருகில் இருவர் முகமும்…விழிகள் நான்கும் பின்னிக் கொண்ட உணர்வு…
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும்
மன ஆசைகள் அணை மீறும்
அணை மீறும் போது காவல் ஏது…
விஜயின் கைகள் இரண்டும் அவள் கன்னம் தாங்க தயாராகி மேலேழும்ப.. சாலையில் சென்ற பேருந்தின் ஹாரன் ஒலி இருவரையும் பின்னால் நகர வைத்து விட்டது. அங்கிருந்த சுவர் கடிகாரத்தைப் பார்த்தவள் , கண்ணாடித் தடுப்பை விட்டு வெளியே வந்து பூக்காரம்மாவிடம் , ” நான் இங்க வர்றப்போ எல்லாம் ஆயிரம் மல்லி கொடுங்கம்மா.. எனக்கு இப்ப கிளாஸ்க்கு நேரமாச்சு… ” என மறைமுகமாக அவன் இராணுவத்தில் பணியாற்ற சம்மதம் தெரிவித்து விட்டுக் கிளம்ப…
“கடைக்கு சொந்தக்காரியே நீ தானம்மா… உனக்கு இல்லாமலா… ” என்றவரிடம் புன்னகையுடன் விடைபெற்றவள் நடக்க ஆரம்பிக்க … கூடவே விஜயும் நடந்து வந்தவன் , கல்லூரி வாசலில் நின்றவாறு..
” இராணுவ வீரனின் மனைவி தைரியமா இருக்க வேண்டாமா… அதுவும் பல உயிர்களை காப்பாத்தப் போற மருத்துவர்…பி.ஸ்டிராங் ” என்றவன்,
“உன்னைய என் மனைவியா எப்பவோ நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.. அது நிஜமாகிற காலமும் வரும் ” என்றவன் கட்டை விரல் உயர்த்திக் காண்பித்து பின் பக்கமாகவே நடந்து சென்றவன் , அவனது பைக் நின்ற இடத்தில் இருந்த தலைக்கவசத்தை அணிந்துக் கிளம்பி விட்டான்.
அதுவரையும் நின்று நன்கு திரும்பி விஜயை விழிகளில் சிறைப்பிடித்து விட்டுத்தான் உள்ளே சென்றாள். என்ன தான் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் முடியாமல், . வகுப்பறைக்குள் வந்ததும் தலையை டேபிளில் கவிழ்த்து வைத்து அழ ஆரம்பித்து விட்டாள். அருகில் இருந்த விஜயலெட்சுமி ,
“என்னடி இப்படி குலுங்கி குலுங்கி அழுகிற…உங்க வீட்ல சின்னதம்பி குஷ்பு தோத்துப் போற அளவுக்கு கவனிச்சுக்குவாங்கணு சொல்லுவ.. அப்ப வீட்ல பிரச்சினையில்ல… படிப்புல நீ கெட்டி தான் … அப்ப ” என யோசிப்பது போல் கேட்டவளிடம், மனதில் இருக்கும் பாரத்தை யாரிடமாவது கொட்டலாம் போல இருக்கவும் தன்னையறியாமல் , ‘ விஜய் விஜய்…” என்ற தேம்பல் கேட்டது. விஜயலெட்சுமியோ, அவளை தான் அழைக்கிறாள் என நினைத்துக் கொண்டு ,
“அம்மா நியாபகமா…” என்றதும் அமைதியாக ஆரம்பித்தவளின் மனதை மாற்றும் பொருட்டு,
” ஆமா நீயும் மத்தவங்களப் போல என்னைய விஜய் விஜய்னு சொல்ல ஆரம்பிச்சுட்டியா. செந்தூரப் பாண்டினு ஒரு படம் வந்துருக்கே இப்ப , அதுல சின்ன சின்ன சேதி சொல்லினு ஒரு பாட்டு வந்துருக்கு .அந்த ஹீரோ பெயர் விஜயாம் டி.. பார்க்க யங்கா ஸ்மார்ட் டா .. நேத்து வரை பிரசாந்த் பிரசாந்த் னு சொன்ன கீதாவும் ரோஷினியும் இப்ப விஜய் விஜய்னு சொல்லுதுங்க.. நீயும் இப்ப அந்த லிஸ்டல சேர்ந்துட்டியா..” என்றதும் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவளிடம் ,
” அதுல மழைல ஒரு பாட்டு டி… அதை இதுங்க கேசட்ல சீனியருங்க கூட சேர்ந்து ரகசியமா பார்க்குதுங்க.. அது எப்படினா காதக் கொடேன்.. அந்த ஹீரோயின் வெறும் சட்டை மட்டும் போட்….” என்ற விஜயலெட்சுமியின் வாயை மூடி வைத்து , “ஷ்.. கிளாஸ் ஆரம்பிக்க போகுது…” என்று புன்னகைத்த தாமரை பாடங்களை கவனிக்க ஆரம்பித்தாள்.
விஜயலெட்சுமியும் தில்லை போல் படங்களை அதிகம் பார்த்து தாமரையுடன் உரையாடுவாள். கூடவே என்ன கவலை என்றாலும் ஏதாவது பேசி மறக்கடித்து விடுவாள்… இன்றும் அப்படியே …
வளைகாப்பு முடிந்து ஒரு பதினைந்து நாள் சென்று இருக்கும் , ஒரு விடுமுறை தினத்தன்று மாலையில் விஜய் ஆதவன் வீட்டுக்கு வந்திருந்தான். ஆதவனும் அவன் தந்தையும் பக்கத்திலிருக்கும் அவர்களது கரும்புத் தோட்டத்திற்கு சென்றிருந்தார்கள். வீட்டில் தில்லையும் தாமரையும் தோட்டத்தில் அமர்ந்திருக்க , தில்லை மகிழ்ச்சியுடன் மெல்ல எழுந்து வந்து அவனை வரவேற்க , அவள் பின்னாலயே வந்த தாமரையின் நெஞ்சம் படபடவென அடித்தது. அன்று கடையில் பார்த்தது அதன் பின் இன்று தான் பார்க்கிறாள். அவன் தில்லையிடம் பேசும் போது அவனைப் பார்ப்பதும் , அவன் கண்கள் தன்னைப் பார்க்கும் போது நிலம் நோக்குவதுமாக இருந்தாள்.
ஆண்கள் வரும் வரை தோட்டத்திலேயே அமர்வதாகச் சொன்னவன் தில்லையிடம் தனக்கு இராணுவப் பணிக் கிடைத்திருப்பதைக் கூறி அவளிடம் வாழ்த்துப் பெற்றவன் , இன்னும் ஒரே மாதத்தில் சென்னைக்கு கிளம்ப இருப்பதாகவும் கூறியவன் ,
“எனக்குனு இப்ப நீங்க எல்லாரும் தானே சிஸ்டர் இருக்கீங்க… அதான் என் பிஸ்னஸ் எல்லாம் ஆதவன் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றவன் அதன் விவரங்கள் சிலவற்றையும் தில்லையிடம் கூறிக் கொண்டிருந்தான்.. கூடவே தாமரையைப் பார்த்தும்.
“அண்ணா உங்களுக்கு நாங்க எல்லோரும் இருக்கிறோம்.. நீங்க நாட்டையே காக்கிற எவ்வளவு பெரிய பொறுப்ப எடுக்கப் போறீங்க.. இது சின்ன பொறுப்பு …உங்க ஃபிரண்ட் எல்லாம் பார்த்துப்பாங்க..” எனும் போதே இடுப்பில் சுளீர் சுளீர் என வலி விட்டு விட்டு வர … முகத்தை சுருக்கி …
“அண்ணா நீங்க உட்காருங்க.. இதோ வாறேன்..” எனும் போதே மீண்டும் வலி எடுக்க அருகில் இருந்த தோழியைப் பிடித்தவள், ” கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குது டி…” என்றவளால் வீட்டினுள் கூட நடக்க முடியவில்லை. மறுபடியும் வெளியே அமர்ந்திருந்த இருக்கைலையே அமர… விஜய் தாமரை இருவருக்குமே பதற்றம் தொற்றியது.
விஜய், “சிஸ்டர் என்ன செய்யுது , வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்…” என அழைத்தான்.” ட் யு டேட் இன்னும்… இன்னும் பத்து நாள் இருக்கே…” எனத் தடுமாறியவளிடம் ,தாமரை, “அப்படியெல்லாம் இல்லடி… வா ஹாஸ்பிட்டல் போகலாம்… நான் செண்பாக்காட்ட சொல்லிட்டு வாறேன்..” என உள்ளே செல்லும் போதே இவர்களின் சத்தத்தில் செண்பாவும் பாக்கியாவும் வந்தார்கள். மணி பின்னால் தான் இருக்கிறான் என அழைக்கப் போன செண்பாவைத் தடுத்து வெளியில் நிற்பாட்டியிருந்த தனது வண்டியில் ஏறச் சொன்னான் விஜய்.
செண்பா வருகிறவர்களுக்கு தகவல் தர இருந்துக் கொள்ள ,தாமரையும் பாக்யாவும் ஆளுக்கொருபுறம் தில்லையை பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.