“அவளுக்கு எவ்வளவு வன்மம் பாத்தியா டா? என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்தப் பாத்திருக்கா”, என்று வேதனையாக சொன்னார் சொக்கலிங்கம்.
“பொசஸ்ஸிவ்ல இதெல்லாம் நடக்குறது தான் சொக்கு. இனிமே கவனமா இருக்கணும்னு தான் உன் கிட்ட சொல்றேன். அப்புறம் பிரச்சனை உன் வீட்ல மட்டும் இல்லை. என் வீட்லயும் தான். என் மருமகன் தான் மஞ்சு கிட்ட சொல்லி யசோதா நம்பர் கொடுத்தது..”
“என்ன டா சொல்ற?”
“என்னத்தை சொல்லச் சொல்ற? இதையெல்லாம் கண்டு பிடிச்சது பிரபா தான். நம்ம பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப் பட்டா எவ்வளவு எதிர்ப்பு கிளம்புது பாரு? கல்யாணம் வரைக்கும் பொறுமையா இரு பிரபான்னு சொல்லிட்டு வந்தேன். உன் கிட்டயும் அதை தான் சொல்றேன். பிரபா அர்ச்சனா கல்யாணம் முடியுற வரைக்கும் நீயும் இதை தெரிஞ்ச மாதிரி கட்டிக்காத டா”
“சரி டா. என் பொண்ணு கல்யாணத்துக்கு மஞ்சுவையையும் அஞ்சலியையும் வர விட மாட்டேன். அவங்க கண்ணு பட்டா கூட அர்ச்சனா நல்லா இருக்க மாட்டா”
“இங்க தான் தப்பு பண்ணுற? அவங்க கல்யாணத்துக்கு வரணும். அவங்க நம்ம கூடவே இருந்தா தான் அவங்க என்ன பண்ணுறாங்கன்னு வாட்ச் பண்ண முடியும்? அவங்களை தனியே விட்டா அவங்க என்ன பிளான் பண்ணுறாங்களோன்னு பயப்படனும்”
“சரி டா. நான் எதுவும் காட்டிக்கலை. என்னோட சின்ன தப்பு எந்த அளவுக்கு பின் விளைவுகளை கொண்டு வருது பாத்தியா? சபலத்துக்கு பின்னாடி போறவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்”
“சரி விடு. நீ உன் வேலையைப் பார். நான் கிளம்புறேன். வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுறேன்”, என்று சொல்லி கிளம்பிச் சென்றார்.
அவர் சென்றதும் சொக்கலிங்கத்துக்கு மஞ்சு மேல் கோபமாக வந்தது. ஆனால் அர்ச்சனா திருமணம் வரைக்கும் அமைதியாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
மதியம் ஒரு மணிக்கு தன்னுடைய போனை எடுத்த பிரபாகரன் அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் அர்ச்சனாவை அழைத்து விட்டான்.
அர்ச்சனா வேலையாக இருந்ததால் அவன் அழைப்பை எடுக்க வில்லை. போன் சைலெண்டில் இருக்கிறது என்று தெரியாமல் “என்ன போனை எடுக்கலை? ஒரு வேளை பிரியா இல்லையோ? இல்லைன்னா என் நம்பர்ன்னு தெரிஞ்சு தான் எடுக்கலையா?”, என்ற குழப்பம் வந்தது. அதற்கு பின் அவனுக்கு வேலையே ஓட வில்லை.
வேறு யாராவது அவனுடைய போனை எடுக்க வில்லை என்றால் அவங்க பிரியாக ஆனப் பிறகு திருப்பிக் கூப்பிடுவாங்க என்று எண்ணி அதை கண்டு கொள்ளாமல் விடுவது போல இன்று அவனால் அப்படி விட முடிய வில்லை.
மறுபடி அவளை அழைக்க வேண்டும் போல தான் இருந்தது. ஆனால் தவறாக நினைத்துக் கொள்வாளோ என்று எண்ணி பேசாமல் இருந்தான்.
காயத்ரி மதிய உணவு உண்ண அழைக்க வந்த போது அர்ச்சனா போனை மறந்து சாப்பிடச் சென்று விட்டாள். ஹாஸ்பிட்டல் கேண்டீனில் அரட்டை களை கட்டியது.
அதுவும் காயத்ரி அர்ச்சனாவின் திருமண விஷயம் பற்றிச் சொல்லி விட வெங்கட், விமலா, கோகுல் அனைவரும் அவளை ஓட்டித் தள்ளி விட்டார்கள்.
அனைவரும் ஒன்று போல டிரீட் என்று கேட்க அவரிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று சொல்லி அப்போதைக்கு தப்பித்தாள் அர்ச்சனா.
சாப்பிட்டு முடித்த பிறகு அறைக்குள் வந்தவள் மீனாட்சிக்கு அழைக்கலாம் என்று எண்ணி போனை எடுத்தாள். அதில் ஒரு மிஸ்டு கால் கிடக்க இது யாரா இருக்கும் என்று எண்ணி அந்த எண்ணுக்கு அழைத்தாள்.
அர்ச்சனாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் ஒரு பரபரப்பு பிரபாகரனுக்குள் தொற்றிக் கொண்டது.
அதை எடுத்துக் காதில் வைத்தவன் அமைதியாக இருக்க “ஹலோ இந்த நம்பர்ல இருந்து கால் வந்துருக்கு. யார் நீங்க?”, என்று அவளது தேனினும் இனிய குரல் அவன் காதில் விழுந்தது.
அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து அமைதியாக இருந்தான்.
“ஹலோ, லைன்ல இருக்கீங்களா? யார் நீங்க?”, என்று மீண்டும் கேட்டாள் அர்ச்சனா.
அவள் குரல் கேட்டதும் அவன் உடலில் இது வரை இருந்த சோர்வு கூட அவனை விட்டுச் சென்று விட்டது.
“ஹலோ யார் சார் நீங்க? அமைதியா இருக்கீங்க? எதுக்கு எனக்கு கால் பண்ணுனீங்க?”, என்று அவள் குரலில் கோபம் கூட “ஏன் நான் உனக்கு கால் பண்ணக் கூடாதா?”, என்று மென்மையாக கேட்டான் பிரபாகரன்.
அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டவளின் உதடுகள் தன்னால் மலர்ந்தது. உடனே அவளால் எதுவுமே பேச முடிய வில்லை. அவள் அமைதியாக இருக்க “என்ன பதிலே காணும்? நான் கால் பண்ணலாம் தானே?”, என்று கேட்டான்.
“ம்ம்”, என்று முணுமுணுத்தாள்.
“நான் யாருனு தெரிஞ்சிருச்சா?”
“ம்ம்”
“என்ன ம்ம்ன்னு மட்டும் சொல்ற? வேற எதுவும் பேச மாட்டியா அர்ச்சனா?”
“டக்குன்னு பேச முடியலை?”
“ஏன் நான் உன் வாயை பொத்தினேனா? நான் இங்க இருக்கேன். நீ அங்க இருக்க? அப்புறம் ஏன் பேச முடியலை?”, என்று அவன் வம்பிழுக்கும் நோக்குடன் கேட்க “எப்படி பேசுகிறான் பார்?”, என்று எண்ணி உதடு கடித்தாள். அவன் அருகே இருந்து வாயைப் பொத்தினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வந்ததில் அவளுக்கு சிறு வெட்கமும் வந்தது.
“அப்படி நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாக்குறியா? நானும் இப்ப தான் அப்படி யோசிச்சேன்”, என்று அவன் சொல்ல “பிளீஸ்”, என்று முணுமுணுத்தாள்.
“கொஞ்சம் ஓவரா பேசிட்டேனோ? எனக்கே தெரியுது? ஆனா உன் கிட்ட தான் நான் இப்படி எல்லாம் பேசுறேன். உனக்கு புரியுதா?”, என்று கேட்டான்.
“ம்ம்”
“நான் கால் பண்ணுவேன்னு எதிர் பாத்தியா?”
“நேத்து எதிர் பாத்தேன்”, என்று சொன்னவள் படக்கென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள். சிறு சிரிப்புடன் “எனக்கும் நேத்து உன் கிட்ட பேசணும்னு தோணுச்சு. ஆனா உன் நம்பர் இன்னைக்கு தான் கிடைச்சது”, என்றான்.
“என்ன அமைதியா இருக்க? நானே பேசிட்டு இருக்கேன். ஏதாவது பேசேன் அர்ச்சனா?”
“சாப்பிட்டீங்களா?”
“இல்லை. நீ?”
“இப்ப தான் சாப்பிட்டேன்”, என்று சொன்னவளுக்கு அடுத்து என்ன பேச என்று தெரிய வில்லை. அவளுக்கு பேச நிறைய இருக்கிறது தான். ஆனால் தயக்கம் என்ற ஒன்று அவளை பேச விட வில்லை.
அவனுக்கோ அவளைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. இப்படி முகம் பார்க்காமல் உரையாடுவதை விட அவளை நேரில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.,
“அர்ச்சனா”, என்று அழைத்தான்.
“ம்ம்”
“மீட் பண்ணலாமா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்க திகைத்துப் போனாள். அவன் பதிலுக்காக காத்திருப்பது புரிய “இப்பவா? வேலை இருக்கே?”, என்று தயக்கத்துடன் கேட்டாள். அவள் குரலில் மறுப்பில்லாததே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
“அப்படின்னா நாளைக்கு மீட் பண்ணலாமா? எங்கயாவது வெளிய போகலாமா?”
“நாளைக்கா? நாளைக்கு லீவ் இல்லையே?”
“ஒரே ஒரு நாள் லீவ் போடேன்”, என்று அவன் கெஞ்ச அவனை கெஞ்ச வைப்பது அவளுக்கே ஒரு மாதிரி தான் இருந்தது.
“நாளைக்கு ஒரு பதினொரு மணி வரைக்கும் வொர்க் இருக்கு. அப்பாயின்மெண்ட் கொடுத்துருக்கேன். அதுக்கு அப்புறம் பாக்கலாமா?”
“ஹிம் சரி, நான் ஹாஸ்பிட்டல் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்”
“ஹிம் சரி”
“சரி அர்ச்சனா. இப்ப வைக்கவா? உனக்கு வேலை இருக்கும்?”
“ஆமா, கொஞ்சம் வேலை இருக்கு. நீங்களும் போய்ச் சாப்பிடுங்க”, என்று சொல்லி போனை வைத்தாள்.
அன்று இரவு ஏழு மணிக்கு ஒரு பேசன்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அப்போது அவளைக் காண வந்தான் பிரபாகரன். அந்த பேசன்ட்டை உள்ளே அனுப்பி விட்டு வெளியே வந்த சிஸ்டர் மேரி அங்கே வந்து நின்ற பிரபாகரனைப் பார்த்து “ஹலோ யார் சார் நீங்க? இங்க என்ன பண்ணுறீங்க?”, என்று கேட்டாள்.
“சரி இருங்க. நான் மேடம் கிட்ட கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி உள்ளே சென்றாள்.
“என்ன மேரி?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
“மேடம், ஒரு ஆள் உங்களைப் பாக்கணும்னு அடம் பிடிக்கிறாங்க. அதுவும் ஆண்மைக் குறைவுன்னு சொல்றாங்க? அவங்க மனைவி வேற கூட வரலை”
“அவருக்கு பாக்கணும்னா டாக்டர் சுதாகர் கிட்ட அனுப்புங்க“
“சுதாகர் சார் இன்னைக்கு லீவ்”
“இப்படி தனியா ஆண்களுக்கு நான் பாக்குறது இல்லையே? அவங்க வைப் வந்தா அப்ப இவங்களுக்கு மெடிஸின் எழுதிக் கொடுக்கலாம். அவர் தனியான்னா எப்படி பாக்க முடியும்? என் கிட்ட அவர் சகஜமா எப்படி பிரச்சனையை சொல்வார்?”
“சரி இவங்க போன அப்புறம் அவரை உள்ளே அனுப்புங்க. நான் நாளைக்கு சுதாகர் சாரை மீட் பண்ண எழுதிக் கொடுக்குறேன்”, என்று சொல்ல “சரிங்க மேடம்”, என்று சொல்லிச் சென்றவள் ஏற்கனவே இருந்த பேசன்ட் போனதும் “உள்ள வாங்க சார்”, என்று சொல்லி அவனை உள்ளே அழைத்து வந்தாள்.