“என்னால நம்பவே முடியலை. வேணுவா இப்படி? பாக்க அமைதியா எவ்வளவு நல்ல பையனா இருந்தான்? இப்ப என்ன வீட்டுக்குள்ள கலகத்தை உண்டாக்குறான். தெரியாம வர்ஷினியைக் கொடுத்துட்டோமோ? உன் கல்யாணத்துல பிரச்சனை பண்ணுறதுல அவனுக்கு என்ன லாபம்?”
“தெரியாது பா. நேத்து அம்மாவுக்கு கால் வரும் போது அவன் முகத்துல அப்படி ஒரு சந்தோசத்தைப் பாத்தேன். அம்மா வந்து கல்யாணம் வேண்டாம்னு கோபமா பேசினதும் அவன் முகத்துல அப்படி ஒரு நிம்மதி. அதைப் பாத்து எனக்கு சந்தேகம் வந்துச்சு. அதான் மூர்த்தி கிட்ட சொல்லி கால் ஹிஸ்டரி எடுக்கச் சொன்னேன்”
“என்னால இதை நம்பவே முடியலை. இப்ப என்ன பண்ண பிரபா? வீட்ல சொல்லுவோமா?”
“எனக்கு தெரியலை பா. ஆனா வீட்ல சொன்னா சீதா அத்தை மனசு பாதிக்கப் படும். ஆனா இவனை என்ன செய்யன்னு நீங்க தான் சொல்லணும். நேத்து நைட் நல்லா இருந்த அம்மா முகம் இப்ப சரியில்லை. அதுக்கும் இவன் தான் காரணமா இருக்கும்”
“ஆமா ஆமா, உன் அம்மா நைட் நல்லா தான் பேசிட்டு இருந்தா? அர்ச்சனாவுக்கு சேலை எடுக்குறதைப் பத்தி எல்லாம் பேசினா. வேணு தான் காலைல சீக்கிரம் எழுந்து டீ குடிப்பான். இன்னைக்கு உன் அம்மா அவனுக்கு டீ கொடுக்கும் போது ஏதாவது சொல்லிருப்பான்”
“ம்ம். அவன் இது மட்டும் செய்யலை பா. கம்பெனில அவன் பண்ணுற எதுவுமே சரி இல்லை. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை. நான் புராடக்சன் பாப்பேனா? இல்லை இவன் என்ன பிரச்சனை கிளப்புவான்னு யோசிக்கவான்னு தெரியலை”
“இப்ப நான் நம்புறேன் பிரபா. எனக்காக கொஞ்சம் பொறுமையா இரு. உன் கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் அவனுக்கு ஒரு முடிவு பண்ணுவோம். அவனை நம்பி நம்ம வர்ஷினி இருக்கா. அதான் யோசிக்கிறேன். இப்ப ஏதாவது செஞ்சா அது உன் கல்யாணத்தை பாதிக்கும்”
“சரிப்பா, எதுக்கும் எச்சரிக்கையா இருக்கணும்னு தான் சொன்னேன்”
“சரி பிரபா. அப்புறம் இந்த ரிப்போர்ட்டை பைல் பண்ணி வை. பின்னாடி பேசும் போது தேவைப்படும். அவன் இல்லவே இல்லைன்னு சொல்லக் கூட சான்ஸ் இருக்கு. அவன் மேல மூர்த்தி கிட்ட சொல்லி கண்ணு வைக்கச் சொல்லு. அவன் நோக்கம் என்னன்னு தெரியலை. அதனால பெரிய சிக்கலை இழுத்து வைக்கிறதுக்கு முன்னாடி நாம கவனமா இருக்கணும்”, என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டார்.
போகும் முன் மகனைப் பார்த்தவர் “சாரி பிரபா”, என்றார்.
“நீங்க ஏன் பா சாரி கேக்குறீங்க?”
“இப்ப உனக்கு கல்யாணம் பேசிருக்கோம். இது நீ சந்தோஷமா கனவுகளோட இருக்க வேண்டிய தருணம். ஆனா நான் உன்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேன். உங்க அம்மா கிட்ட அன்னைக்கே விஷயத்தைச் சொல்லி சரி கட்டிட்டு அவங்க வீட்டுக்கு போயிருக்கணும்”
“அது என்னமோ வாஸ்தவம் தான். இப்படி புது துரோகி கிளம்புவான்னு நாம நினைக்கலையே? அவனை பாக்குற விதத்துல பாத்துக்கலாம். வர்ஷினி வாழ்க்கைக்காக பொறுமையா இருக்கணும். பாப்போம். எந்த அளவுக்கு போறான்னு. நடந்த பிரச்சனைல அதிகம் பாதிக்கப் பட்டது அர்ச்சனா தான். அவ பாவம். நேத்து அவளையும் ரொம்ப டென்ஷன் பண்ணியாச்சு. நீ அவ கிட்ட பேசுனியா?”
“எப்படி பேசவாம்? நீங்க உங்க மருமக நம்பர் கொடுக்கவா செஞ்சீங்க?”, என்று அவன் சிறு சிரிப்புடன் கேட்க “ஹா ஹா நம்பர் வேணும்னு நேரடியா கேக்க வேண்டியது தானே டா? நேத்தே சொக்கு அனுப்பி வச்சான். நான் தான் மறந்துட்டேன். இந்தா இதுல இருக்கு பாரு. நோட் பண்ணிக்கோ”, என்று சொல்லி தன்னுடைய போனை நீட்டினார்.
அதை வாங்கி தன்னவளின் எண்ணை ஸ்டோர் பண்ணி வைத்தான். அதில் மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் எண்ணும் இருக்க அதையும் பதிந்து கொண்டான்.
“பாத்து பேசு டா. என் மருமக பயந்துறப் போறா”, என்று சிரிப்புடன் சொன்னார் சக்கரவர்த்தி.
“யாரு அவளா? நேத்து பேசினதைப் பாத்தீங்க தானே? நான் தான் சம்மதம் சொல்ல மாட்டாளோன்னு பயந்துட்டேன். அம்மா கிட்ட இருக்குற அதே கம்பீரம் அவ கிட்டயும் இருக்கு”
“ஹா ஹா சிங்க பெண் டா என் மருமக. உன் அம்மாவும் தான். ரெண்டு சிங்கமும் சேந்து உன்னை ஒரு வழி பண்ணப் போகுதோன்னு தான் என்னோட கவலை. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் நினைவு வச்சிக்கோ பிரபா. எந்த சூழ்நிலையிலயும் நீ அவளை விட்டுக் கொடுத்துறாத. நீ அர்ச்சனா பக்கம் பேசினா உன் அம்மா முகத்தை தூக்குவா. அவளை பாத்துக்க நான் இருக்கேன். ஆனா நீ உன் அம்மா பக்கம் பேசினா அர்ச்சனா தனியா ஆகிருவா. உனக்கு புரியுதா?”
“புரியுது பா”
“அர்ச்சனா தான் உனக்கு நூறு சதவீதம் பொருத்தமா இருப்பா. அதான் நானும் பிடிவாதமா இருந்தேன். சரி நீ பேசு. அவ பிரியா இருப்பாளான்னு பாத்துக்கோ. நான் வரேன்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அவர் சென்றதும் மணியைப் பார்த்த பிரபாகரன் இப்போது அவள் வேலையில் இருப்பாள் என்பதால் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
அதே நேரம் அர்ச்சனா காயத்ரியிடம் முந்தைய நாள் நிகழ்வுகளை விளக்கிக் கொண்டிருந்தாள்.
“பொண்ணு பாக்க வந்தப்பவே இவ்வளவு பிரச்சனையா டி?”, என்று கவலையுடன் கேட்டாள் காயத்ரி. அவளுக்கு அவளுடைய கணவன் அவளைப் பெண் பார்க்க வந்த போது நிகழ்ந்த பார்வை பரிமாற்றங்களும் வெட்கப் புன்னகையும் நினைவில் வந்தது. அதனால் தோழிக்காக கவலை கொண்டாள்.
“ஆமா காயு. எனக்கே எரிச்சலா போய்ருச்சு. கல்யாணமே வேண்டாம், எல்லாரும் வெளிய போங்கன்னு சொல்லிட்டேன். ஆனா அவர் தான் கண்வின்ஸ் பண்ணி…..”, என்று அர்ச்சனா சொல்லிக் கொண்டே வர “அவர் பேசினதுல நீ மயங்கிட்டேன்னு சொல்லு”, என்று சொன்னாள் காயத்ரி.
“பேச்சில மட்டும் இல்லை. ஆளைப் பாத்தும் கொஞ்சம் மயங்கிட்டேன் தான்”, என்று சிரிப்புடன் சொன்னாள் அர்ச்சனா.
“பாரு டா, உன் அவர் ரொம்ப அழகோ. சரி எங்க கிட்ட எல்லாம் மாப்பிள்ளை போட்டோ காட்ட மாட்டியா?”
“அவங்க போட்டோ என் மொபைல்ல இல்லை டி. அம்மா போன்ல இருக்கு? ஆனா எப்படிக் கேக்கன்னு கேக்கலை?”
“போட்டோ இல்லைன்னா என்ன? நேர்ல வரச் சொல்லி இண்ட்ரோ கொடு. நம்ம கேங்க்க்கு ஒரு பேச்சிலர் பார்ட்டி கொடு. அப்ப அவரையும் வரச் சொல்லு”
“அவர் நம்பர் என் கிட்ட இல்லை“
“ஆமால்ல? சரி உன் நம்பரையாவது அவர் கிட்ட கொடுத்துருக்கலாம்ல?”
“அது தோணலை டி. அவரும் கேக்கலை. ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்னு நினைச்சிட்டாரோ என்னவோ? சரி சரி பிரேக் முடிஞ்சிருச்சு வா”, என்று சொல்லி எழுந்து கொண்டாள்.
“உனக்கு அவர் கூட பேசணும்னு ஆசை இல்லையா டி?”
“அது இல்லாம இருக்குமா காயு? ஆனா அவர் எப்படின்னு தெரியலை. என்னை ரொம்ப பிடிச்ச மாதிரி தான் பேசினார். இருந்தாலும் புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் வேணும்ல? பாத்தா கொஞ்ச நேரத்துல எனக்கும் பிடிச்சது தான். நைட் எல்லாம் எனக்கும் அவர் கூட பேசணும், அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்கணும்னு ஆசையா தான் இருந்தது. பாப்போம். என்ன தான் நடக்குதுன்னு”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். தோழி வாழ்க்கை சரியாக அமைய வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டாள் காயத்ரி.
மகனிடம் பேசி விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சக்கரவர்த்தி நேராக சொக்கலிங்கத்தை தான் காணச் சென்றார்.
அவரைக் கண்டதும் “வா டா சாக்கு. சாரி சாரி சம்பந்தி. நாம இப்ப சம்பந்தி ஆகிட்டோம்ல? முன்னாடி மாதிரி கூப்பிட முடியாது”, என்று வரவேற்றார் சொக்கலிங்கம்.
“நாம பழைய பிரண்ட்ஸ் தான் டா. எப்பவும் போலவே கூப்பிடு”
“சரி முதல் முறையா ஆபீஸ் வந்துருக்க. வா ஆபீஸ் சுத்திக் காட்டுறேன்”, என்று சொல்லி கூட்டிச் சென்றவர் காபி வரச் சொல்லி அவரைக் குடிக்க வைத்து மரியாதையுடன் நடத்தினார்.
பின் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தான் விஷயத்தைச் சொல்ல தயங்கினார்.
“என்ன டா ஏதோ சொல்ல வர? ஆனா தயங்குற மாதிரி இருக்கு?”, என்று கேட்டார் சொக்கலிங்கம்.
“ஆமா சொக்கு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் வந்தேன். ஆனா எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை”
“என்ன டா? ஏதாவது பிரச்சனையா? தங்கச்சி எதுவும் சொல்லுச்சா? இந்த கல்யாணம் நடக்கும் தானே?”, என்று கலக்கத்துடன் கேட்டார் சொக்கலிங்கம். மகளின் எதிர்காலத்தை எண்ணி பயம் வந்தது.
“சே சே அப்படி எல்லாம் இல்லை டா. இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும். அர்ச்சனா தான் எங்க வீட்டு மருமக. யசோதா வாய் சவாடல் அடிப்பா. ஆனா முதுகுக்கு பின்னாடி எந்த வேலையும் பாக்க மாட்டா. விருப்போ வெறுப்போ முகத்துல காட்டிருவா. ஆனா…”
“ஆமா டா. மஞ்சுவுக்கு மீனாட்சியைப் பத்தி பேசினாலே ஆகாது. ஆனா மீனாட்சி அப்படி இல்லை. மஞ்சுவைப் பத்தி ஒரு வார்த்தை பேசினதும் இல்லை, கேட்டுக்கிட்டதும் இல்லை. என்ன பண்ண சாக்கடைல விழுந்துட்டேன். எழுந்து வர முடியாது. அதை தங்கச்சிக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை”
“உன் குடும்ப விஷயத்தை யசோதா கிட்ட மறைக்கணும்னு நாங்க நினைக்கலை டா. பொறுமையா சொல்லணும்னு தான் நினைச்சோம்”
“புரியுது டா. நீயே சொல்லிருந்தா தங்கச்சி இந்த அளவுக்கு கோபப் பட்டுருக்காது. ஆனா யாரோ போன் பண்ணி சொல்லிக் கொடுத்துட்டாங்க. அது யாரா இருக்கும்?”
“அது உனக்கும் தெரிஞ்சவங்க தான்”
“எனக்கு தெரிஞ்சவங்களா? எனக்கு தெரிஞ்சவங்க எதுக்கு யசோதா தங்கச்சி கிட்ட பேசணும்?”, என்று கேள்விக் கேட்டுக் கொண்டே வந்தவர் ஒரு நொடி நிதானித்து “அப்படின்னா நீ சொல்ல வரது….?”, என்று கேட்டார்.
“ஆமா சொக்கு. யசோதாவுக்கு கால் பண்ணி பேசினது மஞ்சு தான்”, என்று சொன்னதும் அதிர்ந்து போனார்.
“மஞ்சுவா?”, என்று கேட்டதும் “ஆமா டா”, என்றார் சக்கரவர்த்தி.