அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் எழுந்து அலுவலகம் கிளம்பி கீழே வந்தான் பிரபாகரன். சாப்பிட அமர்ந்தவன் யசோதா முகத்தில் இருந்த கோபத்தில் புருவத்தை உயர்த்தினான்.

“நேத்து அவ்வளவு தூரம் பேசின பிறகு நல்லா தானே இருந்தாங்க. இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணி “அம்மா என்ன ஆச்சு? உங்க முகமே சரியில்லை?”, என்று கேட்டான்.

அவனுக்கு தெரிய வில்லை. இரவு லேசாக தெளிந்திருந்த யசோதாவை காலையில் எழுந்ததும் வேணு குழப்பி விட்டான் என்று. ஆம் யசோதாவிடம் பேசுவது போல பேசி “இப்படி ஒரு குடும்பத்தில் பெண்ணை எடுத்தால் உங்கள் இளைய மகன் திருமணம் எப்படி நடக்கும்? உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரும் உங்க மூத்த மருமகளோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே? உங்க மூத்த மருமக எந்த பொண்டாட்டி மகன்னு கேக்க மாட்டாங்களா?”, என்று சொல்லி யசோதாவை குழப்பினான்.

சாப்பிட அமர்ந்த பிரபாகரன் யசோதாவிடம் இருந்து பதில் வராததால் “என்ன ஆச்சு மா? சொல்லுங்க”, என்று கேட்டான்.

“என்ன பிரபா?”

“இல்லை, உங்க முகமே சரியில்லையே? நைட் நல்ல தானே இருந்தீங்க? என்னன்னு சொல்லுங்க”

“நான் சொல்லி என்ன ஆகப் போகுது பிரபா? என் பேச்சை இந்த வீட்ல யார் தான் கேப்பா?”

“ஏன் மா இப்படி பேசுறீங்க? நாங்க எல்லாரும் உங்க பேச்சுக் கேட்டு தானே வளந்தோம்?”

“அப்படின்னா இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் சொன்னா நீ நிறுத்திருவியா? உங்க அப்பா நிறுத்திருவாரா?”

“ஆக நான் நைட் சொன்ன எதுவும் உங்க தலைல ஏறலைல்ல? இதுக்கு மேல உங்க பிடிவாதத்துக்கு என்னால தீனி போட முடியாது மா. எவ்வளவோ உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செஞ்சேன். ஆனா நீங்க… சரி இனி நான் எதுவும் பேசப் போறது இல்லை. ஆனா ஒண்ணு மட்டும் நினைவு வச்சிக்கோங்க. அர்ச்சனா என்னோட மனைவி”

“இன்னும் கல்யாணம் ஆகலை பிரபா”

“ஆகக் கூடாதுன்னு மனசுல வேண்டுறீங்க போல?”

“அப்படி செஞ்சா என்ன தப்பு பிரபா?”

“வாறே வா. இதுவல்லவோ நல்ல தாயோட வேலை?”

“ஏன் நான் நல்ல அம்மா இல்லையா பிரபா?”

“நல்ல அம்மா தான். ஆனா இப்ப இல்லைன்னு நிரூபிச்சிட்டீங்க? மகன் சந்தோஷமா இருக்க கூடாதுன்னு நினைக்கிற அம்மா நீங்களா தான் இருக்கும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேண்டிக்கோங்க. ஆனா உங்க வேண்டுதல் ஒரு நாளும் நிறைவேறாது. அர்ச்சனா தான் என்னோட மனைவி. அதை மாத்த யாராலயும் முடியாது”, என்று சொன்னவன் அலுவலகம் கிளம்பினான்.

“சாப்பிட்டு போ பிரபா”

“எனக்கு வேண்டாம், பசி இல்லை”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

“ஆசையா சாப்பிட உக்காந்தவனை பட்டினியா துரத்தி விட்டுட்டல்ல?”, என்று கேட்ட படி அங்கே வந்தார் சக்கரவர்த்தி..

“இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். உங்களுக்கு ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா? என் மகனையும் என்னையும் எதிரா மாத்திட்டீங்களே?”

“நான் மாத்தலை யசோதா. நீ தான் உன் மகனுக்கு எதிரா நிக்குற? நைட் நல்லா தானே இருந்த? அதுக்குள்ள உனக்கு என்ன ஆச்சு?”

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை”

“அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது. இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு எல்லாருக்கும் டிரஸ் எடுக்க கிளம்புறோம். எல்லாரையும் கிளப்பி விடு. நான் கல்யாணத்தை கிராண்டா பண்ண ஐடியா யோசிக்கணும். வரேன்”

“சாப்பிட்டு போங்க”

“என் மகன் சாப்பிடாம போறான்? எனக்கு என்ன சாப்பாடு வேண்டி கிடக்கு? நீயே கொட்டிக்கோ”, என்று சொல்லிச் சென்றார்.

அப்போது அங்கே வந்த சீதா “யசோ எனக்கு உன் மனசு புரியுது. ஆனா இந்த உலகத்துல எல்லாத்தையும் விட உனக்கு முக்கியமானது உன் மகனோட சந்தோஷம். நம்ம பிரபாவுக்காக நீ உயிரைக் கொடுக்கச் சொன்னா கொடுப்ப தானே?”, என்று கேட்டாள்.

“கண்டிப்பா கொடுப்பேன் அண்ணி”

“அப்படி உறுதியா இருக்குறவ நம்ம பிரபாவுக்காக அந்த பொண்ணை மருமகளா ஏத்துகிட்டா என்ன? கண்டதையும் யோசிச்சு நம்ம பையன் நிம்மதியைக் கெடுத்துறாத”, என்று சொல்லிச் சென்றாள்.

சீதா சொன்ன விஷயங்கள் புரிந்தாலும் “நீங்க பிரபா சந்தோசத்தைப் பத்தி மட்டும் யோசிக்கிறீங்க அண்ணி. நான் இந்த சொஸைட்டில அவனோட மரியாதைக்காவும் யோசிக்கிறேன். நாளைக்கு ஏதாவது ஒரு பிஸ்னஸ் மீட்டிங்ல என் மகனை யாராவது தப்பா சொல்லிட்டா அதை என்னால தாங்க முடியுமா? இப்ப நான் நினைக்கிறது உங்க எல்லாருக்கும் தப்பா தெரியலாம். ஆனா அந்த பொண்ணு கூட கல்யாணம் முடிஞ்சா அவன் வாழ்க்கையே தப்பா போயிரும். அதுக்காவே இந்த கல்யாணம் நடக்க கூடாது”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

அலுவலகம் சென்ற பிரபாகரன் மூர்த்தியை அழைத்தான். மூர்த்திக்கு பதில் வேணு வந்து நின்றான்.

“நீ மூர்த்தியா? நான் மூர்த்தியை தானே கூப்பிட்டேன்?”, என்று எரிச்சலுடன் கேட்டான் பிரபாகரன்.

“இல்லை மச்சான், மூர்த்தி நம்ம குடவுன் வரைக்கும் போயிருக்கான்”

“அங்க எதுக்கு? மூர்த்திக்கு அங்க என்ன வேலை?”

“நான் தான் போகச் சொன்னேன்”

“குடவுனுக்கா? அங்க எதுக்கு போகச் சொன்ன?”

“லோட் இறங்குது. அதான் செக் பண்ண அனுப்பினேன்”

“அது உன்னோட வேலை. அதுக்கு அவனை அனுப்புவியா? உடனே இங்க இருந்து போய் அவனை வரச் சொல்லு”, என்று சொல்ல “சரி மச்சான்”, என்று சொல்லி விட்டுச் சென்ற வேணுகோபால் மனதில் கோபம் சூழ்ந்தது.

வேறு வழியில்லாமல் அவன் சென்று மூர்த்தியை அனுப்பினான். “சார்”, என்ற படி உள்ளே வந்தான் மூர்த்தி.

“என்ன மூர்த்தி இது? நீங்க என்னோட பெர்ச்னல் மேனேஜர். நீங்க அங்க போய் உக்காந்துட்டா இங்க நம்ம வேலையை யார் பாக்குறது?”

“சாரி சார், வேணு சார் தான் என்னை அங்க போகணும்னு சொன்னார். வேணு சார் உங்க மச்சினன் வேற. அதான் அவர் பேச்சைக் கேக்க வேண்டியதா போச்சு”

“இனி அவர் சொன்னா நீங்க கேக்க கூடாது. என் கிட்ட கேட்டுட்டு நீங்க செஞ்சா போதும்? வேணு சொன்னா என் கிட்ட பேசிக்க சொல்லிருங்க”

“சரி சார். சொல்லிட்டீங்கல்ல? நான் பாத்துக்குறேன்”

“அப்புறம், அந்த நம்பர் கால் ஹிஸ்டரி கேட்டுருந்தேனே? எதுவும் தகவல் வந்துச்சா?”

“காலைலே அந்த சார் கிட்ட சொல்லிட்டேன் சார். ஆபீஸ் போயிட்டு பாத்து சொல்றேன்னு சொன்னாங்க”

“சரி, அவர் சொன்னதும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. இப்ப நீங்க உங்க வேலையைப் பாருங்க”, என்று சொல்ல “சரி சார்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னுடைய மெயிலுக்கு வந்த அந்த கால் ஹிஸ்டரியை பிரபாகரனுக்கு பார்வர்ட் செய்து விட்டு அதை ஒரு காப்பி பிரிண்ட்அவுட் எடுத்துக் கொண்டு பிரபாகரன் அறைக்குச் சென்றான்.

“சார்”

“வாங்க மூர்த்தி”

“நீங்க கேட்ட ரிப்போர்ட் சார்”, என்று அவன் நீட்டியதும் அதை வாங்கிப் பார்த்தவனுக்கு குழப்பம் நீங்கி எரிச்சல் வந்தது.

“நீங்க போங்க மூர்த்தி”, என்று அனுப்பியவன் உடனே தந்தைக்கு அழைத்தான்.

போனை எடுத்த சக்கரவர்த்தி “சொல்லு பிரபா”, என்றார்.

“எங்க இருக்கீங்க பா?”

“உன் கல்யாண விஷயமா ஒரு ஆளைப் பாத்துட்டு வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன்”

“நீங்க அப்படியே ஆபீஸ் வாங்க. கொஞ்சம் பேசணும். வீட்ல பேச முடியாது”

“சரிப்பா வரேன்”, என்று சொல்லி போனை வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த சக்கரவர்த்தி “என்ன பிரபா?”, என்று கேட்டார்.

“நான் இப்ப சொல்லப் போறது பெரிய விஷயமா சின்ன விசயமான்னு தெரியாது. ஆனா நீங்களும் இதை தெரிஞ்சிக்கணும்னு சொல்றேன்”

“என்னப்பா?”

“நேத்து பொண்ணு பாக்கப் போயிருந்தப்ப அம்மாவுக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொன்னது யார் தெரியுமா?”

“தெரியாது பிரபா. கேட்டதுக்கு அது முக்கியம் இல்லைன்னு சொல்லிட்டா”

“இப்ப அது யாருனு தெரிஞ்சிருச்சு பா”

“யார் பிரபா?”

“சொக்கலிங்கம் மாமாவோட இரண்டாவது மனைவி”

“என்ன சொல்ற நீ?’

“ஆமா அவங்க தான். இதை நீங்க மாமா கிட்ட சொல்றதுனாலும் சொல்லுங்க. வேண்டாம்னாலும் விடுங்க”

“கண்டிப்பா சொல்லனும் பிரபா. அவனுக்கு தெரிஞ்சா தான் அவன் உசாரா இருப்பான். இந்த கல்யாணத்தைக் கெடுக்கணும்னு அவங்க நினைச்சது அவனுக்கு கண்டிப்பா தெரியணும். நான் சொல்ல தான் போறேன்”

“சரிப்பா. நான் இப்ப சொல்ல வந்தது இன்னொரு முக்கியமான விஷயம்”

“என்ன?”

“மாமாவோட ரெண்டாவது பொண்டாட்டிக்கு கால் பண்ணி அம்மா கிட்ட அப்படி பேசச் சொன்னது வேணு”

“என்ன?”

“ஆமா பா. அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு தெரியாது. ஆனா வேணு தான் அவங்களுக்கு கால் பண்ணி பேசிருக்கான். அவங்களுக்கு அம்மா நம்பரையும் கொடுத்துருக்கான். இதோ அவன் பேசினதுக்கான ஆதாரம்”, என்று சொல்லி அந்த பேப்பரை நீட்டினான்.