அத்தியாயம்

உன்னை நெருங்கி வர

முயல்கிறேன் உந்தன்

நினைவுகளை சுமந்து கொண்டு!!!

“இருந்தாலும் என்ன? உங்க கோபம் என்னன்னு சொல்லுங்க”, என்று கேட்டான் பிரபாகரன்.

“அவ குடும்பம்….?”, என்று இழுத்தாள் யசோதா.

“சொக்கலிங்கம் மாமா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா மா? இந்த உலகத்துல அது சகஜம் தானே?”

“அதை தப்புன்னு சொல்லலை”

“அப்புறம் எது உங்க கண்ணை உறுத்துது?”

“அவர் அர்ச்சனா அம்மாவை வேண்டாம்னு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார். அது இயல்பு. ரெண்டு பேருக்கும் பிடிக்கலை விலகிட்டாங்க. ஆனா இந்த அம்மா என்ன பண்ணிருக்கணும்? டைவர்ஸ் கொடுத்துருக்கணும்ல?”

“ஓ இது தான் உங்க கோபமா? புருஷன் பொண்டாட்டிக்கு இடைல பிடிக்கலை விலகிட்டாங்க. ஆனா அர்ச்சனா அம்மா டைவர்ஸ் கொடுக்காதது அவங்க பொண்ணுக்காக”

“ஏன்? ஒரு சிங்கிள் லேடியால ஒரு பொண்ணை வளக்க முடியாதா? என்னோட ஃபிரண்ட் விசாலாட்சி அவ மகளுக்கு சின்ன வயசா இருக்கும் போதே அவ புருஷன் கூட விவாகரத்து வாங்கி பிரிஞ்சிட்டா. அவ பொண்ணு ரதியை அவ தான் வளர்த்தா. அதே மாதிரி இந்த மீனாட்சியும் பண்ணிருக்க வேண்டியது தானே? உன் பிரண்ட் ரதி மாதிரி அர்ச்சனாவும் வளந்திருப்பா”

“விசாலம் அத்தைக்கு அவங்க புருசனைப் பிடிக்கலை பிரிஞ்சிட்டாங்க தான். அவங்களோட பிறந்த வீட்டு சப்போர்ட்னால அவங்க பொண்ணு ரதியை நல்ல முறையா வளத்தாங்க. இதையெல்லாம் நான் இல்லைங்கலை. ஆனா ரதியோட நிலைமை உங்களுக்கு தெரியுமா மா? அவ என் கூட தான் படிச்சா. ஸ்கூல் படிக்கும் போது காலேஜ் படிக்கும் போது அவ பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்”

“என்ன கஷ்டம்? சும்மா இல்லாததை எல்லாம் சொல்லாத பிரபா. ரதி இப்ப பாரீன்ல ஷெட்டில் ஆகிட்டா”

“அவ கஷ்டம் உங்களுக்கு தெரியாது மா. ஸ்கூல்க்கு ஏதாவது புது மிஸ் வந்தா, இல்லை எங்களுக்கு பர்ஸ்ட் டே ஸ்கூல் அன்னைக்கு, இல்லைன்னா காலேஜ்ல சேரும் போது ஒவ்வொருத்தரும் அவங்களைப் பத்தி சொல்லணும். ரதி ஒவ்வொரு வருஷமும் அந்த நாள் வரும் போது அப்படி துடிச்சு போவா. எழுந்து நின்னு எல்லாரும் அவங்க அம்மா அப்பா பத்தி சொல்லும் போது அவ மட்டும் எங்க அம்மா அப்பா பிரிஞ்சிட்டாங்கன்னு சொல்லுவா. எல்லாரும் அவளை பாவமா பாப்பாங்க. அன்னைக்கு முழுக்க அவ அழுதுட்டே தான் இருப்பா. அது உங்களுக்கு தெரியுமா? இல்லை விசாலம் ஆண்ட்டிக்கு தான் தெரியுமா? அப்புறம் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சது கூட காதல்னால தான். அது எங்க கூட படிச்ச சிவா அவளைப் புரிஞ்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான். அவன் வீட்லயும் எதிர்ப்பு வந்தது. ஆனா சிவா ரதி தான் வேணும்னு கல்யாணம் பண்ணி பாரினுக்கு கூட்டிட்டு போய்ட்டான். ஆனா இத்தனை வருஷம் ரதி பட்ட கஷ்டத்தை அர்ச்சனா படக் கூடாதுன்னு தான் மீனாட்சி ஆண்ட்டி டைவர்ஸ் தரலை”

“பிரபா”

“ஆமா மா, மகளுக்காக மட்டும் தான் அவங்க டைவர்ஸ் தரலை. சரி இன்னொரு விஷயம் சொல்லுங்க. இப்ப அர்ச்சனா அம்மா அப்பா டைவர்ஸ் வாங்கிருந்தாங்கன்னா இந்த கல்யாணத்துக்கு நீங்க சம்மதிப்பீங்களா?”

“அது…”

“எனக்கு தெரியும் மா. அப்பவும் நீங்க யோசிக்க தான் செய்வீங்க. நான் இப்ப சொல்ல வந்தது அதைப் பத்தி இல்லை. அர்ச்சனா அம்மா அப்பா டைவர்ஸ் வாங்கிருந்தா என்ன வாங்கலைன்னா என்ன? எனக்கு அர்ச்சனாவை பிடிச்சிருக்கு. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அது போதாதா?”

“மத்தவங்க எல்லாம் ஏதாவது பேசுவாங்க பிரபா”

“அடுத்தவங்களைப் பத்தி என்ன மா நமக்கு கவலை? உங்களுக்கு உங்க மகன் சந்தோஷம் முக்கியம் இல்லையா?”

“முக்கியம் தான்”

“அப்புறம் என்ன? சந்தோஷமா இந்த கல்யாணத்தை பண்ணி வைங்க மா. உங்களைக் கஷ்டப் படுத்திட்டு என்னால எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?”

“சரிப்பா, உனக்காக நான் இதுக்கு சம்மதிக்கிறேன் போதுமா?”, என்று சிரித்தாள்.

“இது தான் என் அம்மா. இந்த சிரிப்பு எப்பவும் உங்க கிட்ட இருக்கணும் மா”

“சரிப்பா”

“சரி கேக்கணும்னு நினைச்சேன். நானும் அப்பாவும் மறைச்ச விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று போட்டு வாங்கினான்.

“அது… யாரோ ஒரு ராங் நம்பர் சொன்னாங்க பா”, என்று அந்த பேச்சை முடித்துக் கொண்டாள். மஞ்சுளாவைக் காட்டிக் கொடுக்க யசோதாவுக்கு மனதில்லை.

“சரி மா, வாங்க சாப்பிடலாம்”

“சரி பா, நீ டைனிங் டேபிள்ல உக்காரு. உன் அப்பாவும் சாப்பிடலை. நான் அவரைக் கூட்டிட்டு வரேன்”

“சரி மா. அப்புறம் உங்க ஃபோன் கொடுங்க. ஒரு கால் பண்ணிட்டு தரேன். மூர்த்தி கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“இந்தா பிரபா”, என்று சொல்லி விட்டுச் சென்றதும் யசோதாவின் போனில் இருந்த மஞ்சுளாவின் எண்ணைக் குறித்துக் கொண்டான்.

பின் மூர்த்தியை அழைத்தான். அவன் எடுத்ததும் “ஹலோ மூர்த்தி, வீட்டுக்கு போய்ட்டீங்களா?”, என்று கேட்டான்.

“இப்ப தான் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன் சார். லோட் ஏத்துற வேலை இருந்தது. நீங்களும் இல்லை, வேணு சாரும் இல்லை. அதான் நான் நின்னேன். இந்நேரம் கால் பண்ணிருக்கீங்க? எதுவும் வேலை இருக்கா சார்?”

“ஒரு சின்ன வேலை தான்”

“சொல்லுங்க சார்”

“ரெண்டு நம்பரோட கால் ஹிஸ்டரி வேணும்”

“நம்ம எஸ்.ஐ சார் கிட்ட கேட்டா எடுத்து கொடுத்துருவாங்க. அவர் தான் நம்ம கம்பெனிக்காக என்ன ஹெல்ப்னாலும் கேக்க சொல்லிருக்கார்”

“அவரோட பொண்ணை நீங்க ஒரு ஆக்ஸிடெண்ட்ல இருந்து காப்பாத்துனீங்கல்ல? அவர் தானே?”

“ஆமா சார்”

“நல்லதா போச்சு. அப்படின்னா நாளைக்கு கேட்டு சொல்லுங்க. நான் நம்பர் சொல்றேன், நோட் பண்ணிக்கொங்க”, என்று சொல்லி மஞ்சு மற்றும் வேணுகோபால் எண்களைக் கொடுத்தான்.

”சார் இதுல ஒண்ணு வேணு சார் நம்பர்”

“ஆமா, அவன் நம்பர் தான்”

“ஓகே சார், எத்தனை மாச ஹிஸ்டரி வேணும்?”

“ரெண்டு நாள் ஹிஸ்டரி போதும். முக்கியமா வேணு நம்பர்ல இருந்து அந்த நம்பருக்கு கால் போயிருக்கான்னு பாக்கணும். ஒரு நிமிஷம் நான் இன்னொரு நம்பரும் தரேன். அந்த நம்பருக்கு வேணு நம்பர்ல இருந்து கால் போயிருக்கான்னு பாக்கணும்”, என்று சொல்லி சொக்கலிங்கம் வீட்டு எண்ணையும் கொடுத்தான்.

“கண்டிப்பா சார். இப்ப எஸ்.ஐ சாரை தொல்லை பண்ண முடியாது. நான் மார்னிங் கேக்குறேன்”

“ஓகே மூர்த்தி, பாத்து வீட்டுக்கு போங்க”, என்று சொல்லி போனை வைத்தான்.

வண்டியை எடுத்த மூர்த்தி “இந்த வேணு சார் என்ன குழுப்பம் பண்ணி வச்சார்ன்னு தெரியலையே? அந்த ஆள் ஆபீஸ் வந்ததுல இருந்து பிரபா சாருக்கு பிரச்சனை தான். அதுக்கு முன்னாடி ஆபீஸ் நிம்மதியா நடந்துச்சு”, என்று எண்ணிக் கொண்டான்.

மூர்த்தியிடம் விஷயத்தை சொன்ன பிரபாகரன் அன்னையின் போனைக் கொடுத்து விட்டு அவர்களுடன் சாப்பிட அமர்ந்தான். யசோதா முகம் அதிக சந்தோசத்தைக் காட்ட வில்லை என்றாலும் சாதாரணமாக இருப்பதே அப்பா மற்றும் மகனுக்கு போதுமானதாக இருந்தது.

அப்பா மற்றும் மகன் இருவரும் உறங்கச் சென்றதும் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் யசோதா. அப்போது தண்ணீர் குடிக்க வந்த வேணு “என்ன? அத்தை முகம் கொஞ்சம் நல்லா இருக்கு. இது சரியில்லையே?”, என்று எண்ணிக் கொண்டான்.

அறைக்குள் சென்று படுத்த பிரபாகரனுக்கு அர்ச்சனா நினைவு வந்தது. அவளுடைய எண் இருந்தால் பேசியிருக்கலாமே என்று தோன்றியது.

ஆனால் இன்று நடந்த பல கசப்பான சம்பவங்களினால் அவளுடன் நடந்த திருமண பேச்சு வார்த்தை முழு சந்தோஷத்தை தராதது போல இருந்தது.

அவளைப் பற்றிய நினைவுடன் எழுந்து வந்து பால்கனியில் நின்றிருந்தான். வானில் பவனி வரும் நிலவு கூட அவளைத் தான் அவனுக்கு நினைவு படுத்தியது.

அன்று இரவு படுக்கையில் விழுந்த அர்ச்சனாவுக்கும் அவன் நினைவு வந்தது. ஏனோ தூக்கம் அவளை அண்ட வில்லை. இத்தனை நாள் உணராத தவிப்பை இன்று உணர்ந்தாள். கூடவே அவன் தைரியத்தையும் அவன் கம்பீரத்தையும் அவள் மனது நினைவு கூர்ந்து ரசித்தது. அவளுடைய இந்த புதிய உலகத்தில் அவனே கதாநாயகனாக இருந்தான். அவனைச் சுற்றியே அவளது நினைவுகள் பின்னப் பட்டது.

அன்னைக்காக அவள் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாலும் இந்த நிமிடம் அவள் மனம் அவனை விரும்பியது மட்டும் நிஜம். அன்னையே என்றாலும் வரப் போகும் மனைவிக்காக நியாயமாக பேசினானே? இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டுமாம்? மகளின் விருப்பம் பற்றி தெரிய அவளிடம் பேச அறைக்குள் வந்த மீனாட்சி மகளின் முகம் கனவில் மிதப்பதைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமலே திரும்பி நடந்தாள்.

அன்னை வந்தது கூட தெரியாமல் கனவில் இருந்தாள் அர்ச்சனா. இனி அவனை எப்போது பார்ப்பது என்ற எண்ணம் அவளை அறியாமலே வந்தது.

அப்போது காயத்ரி அவளை அழைத்தாள். அதை எடுத்த அர்ச்சனா “சொல்லு காயு”, என்றாள்.

“நான் என்ன சொல்ல? கல்யாணப் பொண்ணு நீ தான் சொல்லணும். பொண்ணு பாக்க வந்தவங்க என்ன சொன்னாங்க?”

“அது ஒரு பெரிய கதை டி. நாளைக்கு பொறுமையா சொல்றேன்”

“சரி ஓகே ஆச்சா இல்லையா? அதை மட்டும் சொல்லு”

“ஓகே ஆச்சு, கல்யாணத் தேதி பிக்ஸ் பண்ணிருக்காங்க”, என்று சொல்லி விவரத்தைச் சொன்னாள்.

“வாவ் சூப்பர் டி. ஆனா ரொம்ப கேப் இருக்குல்ல? சரி மாப்பிள்ளை எப்படி இருந்தார். உனக்கு பிடிச்சிருக்கா?”

“ஒரு மாப்பிள்ளை எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தார்?”

“பாரு டா. உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா அச்சு?”

“ரொம்ப பிடிச்சிருக்கு”

“நம்பர் வாங்கினியா?”

“இல்லை டி”

“அவரும் வாங்கலையா? தனியா பேசலையா?”

“பேசினோம். ஆனா வாங்கலை. அவங்களும் கேக்கலை. தனியா பேசின விஷயமே வேற. நாளைக்கு சொல்றேன்”

“சரி டி, நாளைக்கு பாப்போம். வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்தாள் காயத்ரி.