அலை 21 ( 1 )

                      தங்கையுடன் சென்ற செண்பாவும் பாக்யமும் திரும்பி வருவதைப் பார்த்த ஆதவன் , “செண்பாக்கா மச்சான் இன்னைக்கு வேலைக்கு வரலயா…” என அவள் கணவனைக் கேட்டான். செண்பாவோ தன்கணவனும் மைத்துனனும் காலையிலயே டிராக்டர் எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்று விட்டதாகக் கூற,

“இன்னும் ரெண்டு பேரும் பஸ்ல தான் போறாங்களா.. இந்த உடம்போட கஷ்டமாச்சே.. ” சிந்தனைகளோடு அமர்ந்திருந்தவனை அருணாச்சலம் அழைக்கவும் , ஆதவன் தில்லையைப் பார்க்க… அவள் கண்கள் கணவனைத் தானே படம் பிடித்துக் கொண்டிருந்தது. வார்த்தைகளாலல்லாமல் ‘வருகிறேன்’ என்பது போல் தலையசைக்க… தில்லையின் தலையும் ‘சரி’ என்பது போல் அசைந்தது.

ஆதவன் தான் வண்டியோட்டினான்… அவனது சிந்தனையெல்லாம் , தங்கைக்கு அவர்கள் ஊரிலிருந்து கல்லூரி மிக அருகில் வந்து விடும். அதனால் பேருந்தில் செல்வது சிரமமல்ல… ஆனால் தில்லைப் படிக்கும் கல்லூரியோ அதிக தொலைவில் இருக்கும்.. அவளது அம்மா வீட்டிலிருந்து மிகவும் அருகில் .. என்ன செய்யலாம் .. இங்கிருந்து தானே கொண்டு போய் விடுவது சிரமம் …மதுரை நகருக்குள்ளும் அவர்களுக்கு வீடு உண்டு அங்கிருந்து கல்லூரிகள் இரு பெண்களுக்கும் பக்கம் என்றாலும் ஆண்கள் தொழிலைப் பார்ப்பது சிரமம்… ‘இப்படி சிந்தனைகள் சென்றுக் கொண்டிருக்க , அருணாச்சலம் ,தேவகி தாமரைக்கும் தேவராஜனுக்குமான திருமணம் குறித்துக் கூறியதை மகனிடம் விளக்க,

ஆதவனோ, தில்லை அன்று இரவு, தாமரைக்காக தான் இந்த திருமணம் என்று கூறியதை நினைவில் கொண்டு வந்து புன்னகைத்தவாறு ,

“அப்பா,அத்தை அம்மாவோட ஆசையை நிறைவேத்தனும்னு இப்பவே கல்யாணம் பண்ண அவசரப்படுறாங்க .. நாம பாப்பா படிச்சு முடிக்கிற வரை இதைப் பற்றிப் பேசவே வேண்டாம்… அப்புறம் பார்த்துக்கலாம்..தில்லை இப்ப சிரமப்படுறதப் பார்க்கிறோம்ல.”

தில்லை என்ன தான் ஒன்றும் இல்லாததுப் போல் காட்டிக் கொண்டாலும், தந்தையாகப் போகும் செய்தி மகிழ்ச்சியையேக் கொடுத்தாலும், அவள் தங்கை வயதுடைய பெண் என்ற எண்ணம் மனதில் பதிந்து, அவனது குற்றவுணர்ச்சி அகலாமல் இருந்த காரணம் கொண்டு தந்தையிடம் அவ்வாறுக் கூறிக் கொண்டு இருந்தான்.

“நீ சொல்றதும் சரிதான்… ஆனா தேவகி சொன்னது போல பிரசவத்துக்கு மருமகள அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய்ட்டாங்கனா… பாப்பா தனியா இருக்கும் … நம்ம தொழிலுக்கு ஒரே இடத்துல இருக்கவும் முடியாது. அம்மா சொன்னது போல பாப்பாவ தேவகி மருமகளாக்கிட்டா அவ பார்த்துப்பா… நாம கவலையில்லாம வேலைகளைப் பார்க்கலாம்… ஆனா மருமக குழந்தை உண்டானதும் காலேஜ் போய் படிக்கலனு சொல்லிருச்சு..” என்ற வார்த்தையில் ஆதவனின் கட்டுப்பாட்டில் வண்டி செல்ல தடுமாறவும் ஓரமாக நிறுத்தி விட்டான்… அருணாச்சலம் ,

“என்னப்பா… சரியா தூக்கம் இல்லனா இப்படித்தான் …. ஆஃபிஸ் வந்துட்டு அரைமணி நேரத்துல கிளம்பிடுங்க.. நல்லா ஓய்வு எடுத்துட்டு ரெண்டு நாளுக்கப்புறம் நீங்க வாங்க… ” என்றவர் அதற்கு மேல் பேசாமல் வந்தார்.

அலுவலகம் வந்தவனுக்கு வேலையே ஓடவில்லை விஜய் அவனிடம் அலுவலகம் சம்பந்தமாக எதைப் பேசினாலும் கவனமின்றி இருந்ததை உணர்ந்தவன் , அவன் கிளம்பும் நேரம் ,

“என்ன ஆதவ் .. ரெஸ்ட் லெஸ்ஸா இருக்க… ” என நண்பனின் முகத்தைப் பார்த்துக் கேட்கவும் , இத்தனை நேரம் மனதில் அடைத்து வைத்திருந்ததைக் கொட்டியே விட்டான்.

“விஜய் … நீ என்னையப் புரிஞ்சுக்குவலடா … அம்மா..அம்மா… போய்ட்டாங்கனு தெரிஞ்சதும் எனக்கு சிந்தனையே ஓடல… அப்பா ஒரு பக்கம், தங்கச்சி ஒரு பக்கம்… என் படிப்பு ..அப்பா தனியா எப்படி சமாளிப்பார் அப்படினு … கொஞ்சம் இறுக்கமா இருந்தேன்… ஆனா திலோ … ஐ மீன் என் மனைவி அந்த நேரத்துல ஒரு பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருந்தா…” என்றவன் நண்பன் முகம் காண இயலாது வேறுபுறம் திரும்பிக் கொள்ள.. அவனைப் புரிந்து…

“உன் மைன்ட்ல இப்படி ஒரு தாட் ஓடுதா.. தப்பு ஆதவ்.. சந்தோஷமான செய்தி கிடைச்சுருக்கு அதை மனசுல ஏத்தாம..இதுல என்ன இருக்கு … நீ இந்த மாதிரி நினைக்கிறதே தப்பு ..நீ அப்பா ஆகப்போறத உனக்கு தெரிவிக்க எவ்வளவு ஆவலா காத்துட்டு இருந்துருப்பாங்க…  அவங்க கிடைக்க நீயும், நீ கிடைக்க அவங்களும் கொடுத்து வச்சுருக்கணும்… இப்ப பார் ஆன்ட்டி திரும்ப வரப் போறாங்க.. இது எவ்வளவு பெரிய விஷயம்…” என ஆறுதலளிக்க ..

” ஆனா அவ படிக்க வேண்டிய வயசுல… நான் தப்பு பண்ணிட்டேனோனு இருக்கு விஜய்…” என்றவனிடம்,

“அவங்க கரஸ்ல ஆர்ட்ஸ் படிக்கிறதா தேவா சொன்னான். அவங்களுக்கு எது கம்ஃபர்டோ அதையே படிக்கட்டும்… உனக்குத் தெரியும்ல அப்பா அம்மா லவ் மேரேஜ்ங்கிறதால ரொம்ப நாளா தனியா தான் இருந்தாங்கனு… எங்கம்மாவோட டெலிவரி டைம்ல  என் அப்பாவுக்கு ஹிமாச்சல்ல தொடர்பே இல்லாதஏதோ ஒரு மலைல வேலையாம் … குழந்தை பிறந்து என்ன குழந்தைக்கிறத முதல்ல அப்பாகிட்ட சொல்லணும்னு காத்திருந்து, நான் மூணு மாச குழந்தையா இருந்தப்ப என் அப்பா வந்து என்னையப் பார்த்த பிறகு தான் ,என் அப்பா வீட்டுக்கும் அம்மா வீட்டுக்கும் சொன்னதா சொல்லுவாங்க..

 சிஸ்டர் நிலைமையும் அப்படி தானே இருந்து இருக்கும் … உன் தங்கை சொன்னாங்களே ஸ்வீட் சர்பிரைஸ் னு..” என்றவனுக்கு அதைச் சொல்லும் போது தாமரையின் முகத்தை ரசித்தவனாகிற்றே..அதே ரசனை அவள் நினைவில் இப்போதும் தோன்ற..

 இந்த நியூஸ் கேட்டதும் உன்னைய சந்தோஷ மனநிலைல பார்க்க விரும்பி இருப்பாங்க.. நீ இப்படி ஒரு ஃபீல்ல இருக்கிறத நினைச்சா  அவங்க வருத்தப்பட மாட்டாங்களா..

நீ இல்லாத ஆறு மாசமும் அவங்க உன் வீட்ல அப்பா , தங்கைனு மட்டுமில்லாம உன் குழந்தையையும் கவனமா பார்த்துட்டு இருக்காங்க.. அதை நினைச்சு நீ பெருமைப்படணும் , சந்தோஷப்படணும்.. அவங்கள சந்தோஷமா அவங்க மனநிலைலையே இருக்க விடு ஆதவ் .. நான் நேத்து கவனிச்சுட்டுத்தான் இருந்தேன்… அவங்க உன் மேல அவ்வளவு லவ் வச்சுருக்கிறாங்க.. நீ நினைக்கிறது போல அவங்களும் நினைச்சிருந்தா அது அவங்களுக்கும் மனக்கஷ்டம் அதோட  இது போல தேவையில்லாதத யோசிக்கவே கூடாது ஆதவ், எல்லோருமே புது வரவ நினைத்து சந்தோஷப்பட்டுட்டு இருக்கும் போது சிஸ்டர் கிட்ட இது போல பேசி  அவங்கள ஹர்ட் பண்ணிடாதே .. அப்புறம் நாம ரொம்ப அன்பு வச்சுருந்தவங்க அதுவும் நம்ம அம்மா நமக்கு குழந்தையா பிறக்கப் போறது வரம் ஆதவ்” என்றான்.

விஜய் தில்லையை பார்த்த நாள் முதல் தாமரை மீது காட்டும் அக்கறையும் பாசமும் அவன் அறிந்து வைத்திருந்தான். யாரிடமும் பேசாமல் அமைதியாக வந்துப் போகும் தாமரையைப் பார்த்துக் கொள்ளவே பேருந்தில் அவர்கள் ஊரிலிருந்து கூட வரும் படிக்க மற்றும் வேலைக்குப் போகும் பெண்களை தாமரைக்கு அறிமுகப்படுத்தி அவளைச் சூழ்ந்து ஊரில் வந்து இறங்கும் வரை பெண்கள் உடன் இருக்கும்படி பார்த்துக் கொண்ட பாங்கு விஜயிற்கு தில்லையின் மீது மரியாதையும் பாசமும் அதிகமாக காரணமாகியது.

நேற்றுக் கூட தாமரையைப் பார்க்கும் போதெல்லாம் தில்லை தன் உடல்நிலையைக் கூட மறந்து தாமரைக்கு சேவை செய்ததையும் பார்த்துக் கொண்டிருந்ததால் தான்  ஆதவனிடம் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான்.

விஜய் கூறியதும் நூறு சதவீத உண்மை என்பதை நேற்றைய ஐந்து நிமிடமே கிடைத்த தில்லையின் அணைப்பு உறுதி செய்ய.. தன்னைத் தெளிவுப் படுத்திக் கொண்டவன் , தனக்கு குற்றவுணர்ச்சி தேவையில்லை என்பதை உணர்த்திய நண்பனிடம் நன்றிக் கூறி இயல்புக்கு வந்த ஆதவன்,

“கொஞ்சம் என் குற்றவுணர்ச்சி குறைஞ்சது போல இருக்கு … நீ சொல்றது சரிதான் .. அந்த வரம் உனக்கும் கிடைக்க வேண்டாமா விஜய் … நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ …” என புன்னகைக்க , நல்ல , விரிந்த சிரிப்பைக் கொடுத்த விஜய் தாமரையின் நினைவில் ,

“யா… ஷ்யர் … என்னைய அம்மா மாதிரி பார்த்துக்கிற மனைவி, அம்மாவே என் குழந்தையா வரணும்ங்கிற ஆசை எனக்கும் இருக்கு… ஆனா நாலஞ்சு வருஷம் காத்திருக்கனுமே.. ” என கற்பனையில் தாமரையோடான வாழ்க்கையை நினைத்து புன்னகையோடு அவள் படிப்பை முடிக்கும் தருணத்தை வைத்துச் சொன்னவன் , இயல்புக்கு வந்து…

“எக்ஸாம் எழுதியிருக்கேன்… கண்டிப்பா இந்தியன் ஆர்மில சேர்ந்துடுவேன்னு நம்பறேன்… அப்ப எப்படியும் டிரைனிங், போஸ்டிங்.. எல்லாம் முடிச்சு யோசிக்கணும்” என்றவனைப் புரிந்துக் கொண்டவனிடம் மறுபடி அலுவலக விவரங்களைக் கூறி ..

“ஆதவ் இனி நீ பார்த்துக்குவ தானே… எப்படியும் செலக்ட் ஆகிருவேன்ற நம்பிக்கை இருக்கு.. ட்ரைனிங் போக வேண்டி இருந்தா… என்னோட எல்லா சொத்துக்களையும் உன் பொறுப்புல விட்டுட்டுப் போகலாம்னு இருக்கிறேன்… அதற்கான வேலைகளைப் பார்க்கணும்” என்றவனுக்கு நம்பிக்கைக் கொடுத்தான் ஆதவன்.

மனம் சிறிது நிம்மதியடைந்ததால் மதியம் வரை இருந்து விட்டு வீட்டிற்கு வந்த ஆதவன் மனைவியைத் தேடிச் சென்றான். அவனறையில் இருக்கிறாளா எனப் பார்க்க அங்குதான் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் புன்னகை முகமாக …

“என்ன மாமா இப்போவே வந்துட்டீங்க… வாங்க சாப்பிடலாம்..” என அழைத்துக் கொண்டே மெல்ல எழுந்தாள். அவளை அமருமாறு சைகையில் சொன்னவன் எதிரே வந்து கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க…

“ஹீரோ தான்… என் ஹீரோ..” என மனதுள் சொல்லிக் கொண்டவள் அவனைப் பார்வையில் படம் பிடித்துக் கொண்டு இருக்க…

“ஏன் காலேஜ் போய் படிக்கல… உனக்கு ரொம்ப பிடிச்ச படிப்பு … ஏன் நிறுத்திட்ட … ” என்றவனுக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக் கொண்டே எழுந்தவளிடம் ,

“நான் தானே காரணம்…” என ஆதவன் முகத்தை வேறு புறம் திருப்ப.. அவன் தாடையைப் பிடித்து தன் புறம் திருப்பியவள்,

“என்ன மாமா… ஷேவ் பண்ணலயா.. சொரசொரப்பா இருக்கு …” என்றவளைப் பார்த்துக் கொண்டே , ” சரியாதான் சொல்லியிருக்கேன்…” என்றவனிடம் , புன்னகைத்துக் கொண்டே …

“ஆமா… நீங்க தான் காரணம்.. ஆனா நீங்க மட்டும் காரணம் கிடையாது.. இதை ஏன் இப்படி சீரியஸா கேட்கறீங்க…இப்ப அதை விட வேற கோர்ஸ் பிடிச்சுப் போச்சு…அதனால அதைப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்.. பாப்பா நல்லவிதமா பிறக்கணும்னா நாம ஹாப்பியா இருக்கணும்… இப்படி ‘உர்ருனு ‘இருக்கக் கூடாது மாமா…” எனச் சிணுங்கியவளை வாரிக் கொள்ள வேண்டும் போல் கைகள் பரபரத்தது. 

அதை உடனே அடக்கிக் கொண்டு , சிறிது புன்னகைத்தவனை மேலும் எதுவும் பேசவிடாமல், “வாங்க மாமா சாப்பிடலாம்… பாப்பாவுக்கும் ரொம்ப பசிக்குதாம்… ” என வயிற்றைத் தொட்டுக் காட்ட ,

“நீ இன்னும் சாப்பிடலயா.. வா.. போகலாம்…” என அவள் கைகளைப் பிடிக்க … கைகளை உருவிக் கொண்டவள் , நான் கைப்பிடிய பிடிச்சுட்டே இறங்கிடுவேன் …” என்றது போல் மெல்ல படியிறங்கினாள்.

“தாமரைக்காக தான் எனக்குப் பிடிச்சத படிக்கலனு எப்படி மாமா சொல்ல முடியும் … ஆனா நீங்களும் காரணம்ங்கிறது உண்மை தானே… சதா உங்க நினைப்பிலேயே இருக்கிறேனே… நான் உங்களத் தொட்டாலே உடம்பெல்லாம் நடுங்குது.. இதுல நீங்க என்னையத் தொட்டா… அச்சச்சோ வேண்டாவே வேண்டாம்… நான் பாட்டுக்கு உங்க பின்னாலயே சுத்த ஆரம்பிச்சுட்டா .. அம்மா கவனிச்சு தாமரைய அண்ணனுக்கு உடனே கட்டிக் கொடுனு வந்து நின்றும் … பார்த்துடி பார்த்து ” தனக்குள் பேசிக் கொண்டே கீழே இறங்கினாள்.

ஆதவன் திகைத்துப் போய் விழித்தான்… அவளாகத் தொடுகிறாள் , கணவன் என்ற சலுகையோடு பேசுகிறாள். ஆனால் நானாக தொட்டால் கரத்தை விடுவித்துக் கொள்கிறாளே … ” என்று யோசித்து நின்றவனை, கீழிருந்துப் பார்த்து புன்னகையோடு சாப்பிட அழைத்ததோடு உடனிருந்து பரிமாறியவள்,

“மாமா நீங்களும் டயர்டா இருப்பீங்க.. நம்ம பாப்பாவும் டயர்ட் ஆகிருச்சு… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் சரியா…” என்றவள் மெல்ல நடந்து ஆதவனறையில் இருந்த கட்டிலில் அவனுக்கு முதுகுக்காட்டி படுத்துக் கொண்டவளது மகவு இங்கும் அங்கும் அசைய.. அவன் கைகளை எடுத்து வைக்கும் ஆசை நிறையவே வந்தது. கூடவே வேண்டாம் என்ற உணர்வும் கண்ணில் நீரைக் கொடுக்க ,அவனறியாது மறைத்தவள் , சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.ஆதவனும் அவளைப் பார்த்துக் கொண்டே சிறிது இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான்.

தானாக சென்று எந்த விளக்கமும் கொடுத்து அவளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவன். அவள் விருப்பம் போல் இருந்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்ததும் தான் உறக்கமே வந்தது.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

.