காலை நன்கு விடிந்தபின்னும் அவள் அப்படியே அமர்ந்து தலையை கால் முட்டியில் புதைத்திருக்க, விசாலம் மருமகளுக்காக காத்திருந்தவர் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்திருந்தார். திருமகள் அமர்ந்திருந்த நிலையே இரவு நடந்ததை எடுத்து கூறிட, “நாச்சியா..” என்று வேகமாக அழைத்துக் கொண்டே அவளை நெருங்கியவர் “என்னம்மா.. ஏண்டி இப்படி இருக்க. என் கண்ணு என்னடி ஆச்சு.. ” என்று பதட்டத்துடன் வினவ, அவரின் குரல் கொடுத்த ஆறுதலில் அவரை கட்டியணைத்து கதற தொடங்கினாள் திருமகள் நாச்சியார்.
பிறந்தது முதல் அவளைப் பார்க்கிறாரே, அவருக்கா திருமகளைத் தெரியாது. பெரிதாக எதற்கும் அவள் அழுது பார்த்தே இராதவர் அவர். இப்போது அவள் இப்படி கலங்கி நிற்கும் அளவுக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று நெஞ்சு கிடந்து அடித்துக் கொள்ள,
“அம்மாடி இங்கே பாருடா.. என்ன ஆச்சும்மா.. அத்தைகிட்ட சொல்லுடா.. என் தங்கம் இல்ல, அழக்கூடாதும்மா..” என்று அவள் முகம் நிமிர்த்தியவர் அவள் முகத்தின் வீக்கம் கண்டு பதறிப் போனார்.
“வாசு உன்னை அடிச்சானா..” என்று கோபம் கொண்டவராக அவர் வினவ, அவருக்கு பதில் கூறாமல் அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள் நாச்சியார்.
“அழாதடி..” என்று தானும் கலங்கியவராக அவர் திருவை தேற்ற முற்பட, வாசலில் “நாச்சி..” என்ற அழைப்புடன் வந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“ஆத்தி…” என்று அவர் நெஞ்சைப் பிடித்துக்கொள்ள, திருவும் கலங்கித்தான் நின்றாள். தன்னைக் கண்டால் நிச்சயம் கோபம் கொள்வான் என்று தம்பியைப் புரிந்தவளாக அவள் வேகமாக கண்களைத் துடைக்க, “முகமே வீங்கிப் போயிருக்குடி…” என்றார் விசாலம்.
அவர் முகம் பார்க்கவே பாவமாக இருக்க, “முகம் கழுவிட்டு வரேன்த்தை..” என்று திக்கிய குரலில் கூறியவள் வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இதற்குள் ரகுவரன் வீட்டிற்குள் வந்து நின்றிருக்க, “வா ரகு..” என்று அவனை அழைத்துக்கொண்டே அறையில் இருந்து வெளியே வந்தார் விசாலம்.
“உட்காருப்பா.. டீ எடுத்துட்டு வரேன் இரு..” என்றவர் அவன் மறுத்ததைக் காதில் வாங்காமல் வேகமாக சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
ரகுவரன் அவரை அலுப்புடன் பார்த்துக்கொண்டே தமக்கைக்காக காத்து நிற்க, பத்து நிமிடங்கள் கழிந்தபின்பே வெளியில் வந்தாள் திருமகள். அவள் செய்த பிரயத்தனங்கள் அனைத்தும் வீணாகியிருக்க, அவளைப் பார்த்த நிமிடமே “நாச்சி..” என்று அதிர்ந்த குரலுடன் எழுந்து நின்றுவிட்டான் ரகுவரன்.
தமக்கையை நெருங்கியவன் அவள் கன்னத்தை விரலால் தொட, “ஸ்ஸ்..ஆ..” என்று வழியில் லேசாக முனகிவிட்டாள் திரு. சட்டென அவள் கன்னத்திலிருந்த கையை விலக்கியவன் அவளை கடுமையாக முறைக்க, எதுவும் கூறாமல் தலை குனிந்து நின்றாள் திரு.
அடுத்த நொடி “அத்தை….” என்று வீடே அதிரும் அளவுக்கு ரகுவரன் சத்தமிட, அவன் சத்தத்தில் கையிலிருந்த பால் பாத்திரத்தை நழுவ விட்டவராக ஓடி வந்தார் விசாலம்.
ரகுவரன் “என்ன நடக்குது இந்த வீட்ல.. இவளை இப்படி அடிக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா.. யார் அடிச்சது இவளை.. நீங்களா, உங்க மகனா..’
“என்ன மனுஷங்க நீங்க. ஊர்முன்னாடி பெருசா பேசிட்டு வீட்டுக்குள்ள இப்படி அடிச்சு கொடுமைப்படுத்துவீங்களா..” என்று அவன் பேசும்போதே, “ரகு..” என்று திரு அதட்ட,
“வாயை மூடுக்கா..” என்று அவளுக்கு மேலாக அதட்டினான் சிறியவன்.
மனதே ஆறவில்லை அவனுக்கு. தமக்கை அதட்டியதில் இன்னுமே கோபம்தான். “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.. கேட்க ஆளில்லை என்று நினைத்து விட்டார்களா..” என்று ஆத்திரமான ஆத்திரம் அவனுக்கு.
“யார் அடிச்சது உன்னை.” என்று மீண்டும் அவன் திருவிடம் கத்த, “ஐயா.. ரகு.. அவளுக்கும் வாசுக்கும் ஏதோ சின்ன சண்டைய்யா.. நான் அவனை என்னன்னு கேட்கிறேன் சாமி.. நீ கோபப்படாதடா.” என்று அவர் தம்பி மகனை சமாளிக்கப் பார்க்க,
“சின்ன சண்டையா..” என்று கொதித்துக் கொண்டு வந்தது ரகுவரனுக்கு. “சின்ன சண்டைக்கே இப்படி வாயெல்லாம் வீங்குற அளவுக்கு அடிச்சு வச்சிருக்கார் உங்க பிள்ளை. இன்னும் பெரிய சண்டை வந்தா, அவளை கொலை பண்ணுவாரா..” என்று சிறியவன் கேள்வி கேட்க, விசாலத்தால் பதில் கொடுக்க முடியவில்லை.
“இதெல்லாம் எப்பவுமே சரியா வராது அத்தை.. இந்த பைத்தியக்காரிக்கு நான் சொன்னதெல்லாம் மண்டையில ஏறவே இல்ல. அதனால் தான் இப்போ அனுபவிக்கிறா.. இனி இந்த வேலையெல்லாம் வேண்டாம். நீ கிளம்பு என்னோட.” என்று ஒரே பிடியாய் நின்றான் அவன்.
விசாலம் பதறியவராக “ரகு என்னடா பண்ற நீ.. நான் பேசிக்கறேன் அவனை.. நீ கிளம்பு..” என்று அவனை கிளப்ப பார்க்க,
“என்ன பேசுவீங்க நீங்க.. உங்க மகன் அடிக்கும்போது எங்கே போயிருந்திங்க.. உங்களை நம்பி எல்லாம் என் அக்காவை என்னால விட முடியாது. வழியை விடுங்க.” என்று அதட்டலாக கூறியவன் திருவின் மறுப்பைக் கண்டுகொள்ளாமல் அவள் கையைப் பிடித்து இழுத்தபடி வாசலுக்கு வர, நிலைவாசலில் சாய்ந்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
ரகுவரன் அவனை முறைப்புடன் பார்த்தவன் அவனைக் கண்டுகொள்ளாமல் கடக்க நினைத்து அடியெடுத்து வைக்க, அவன் நெஞ்சில் கையை வைத்து தடுத்து நிறுத்தினான் வாசுதேவகிருஷ்ணன்.
ரகுவரன் ஆத்திரத்துடன் அவனை ஏறிட, வெகு சுலபமாக அவனை உள்ளே நகர்த்தியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். கூடவே, அவன் பிடியில் இருந்த தன் மனைவியின் கரத்தையும் அவன் உறுத்து விழிக்க, இன்னும் அழுத்தமாக அவள் கையைப் பற்றினான் அவள் சகோதரன்.
அதில் கோபம் கொண்டவன் “எங்கே கிளம்பிட்ட..” என்றான் மனைவியிடம்.
அவன் பேசியதே ரகுவுக்கு அதிசயமாக இருந்தாலும், இது வியக்கும் நேரமில்லை என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் “அவளை நான் கூட்டிட்டு போறேன்.. அவ இனி இங்கே இருக்கமாட்டா.” என்றான்.
“உன்கிட்ட இவ சொன்னாளா.. இங்கே இருக்கமாட்டேன்னு..” என்று அழுத்தமாக வாசுதேவன் கேட்டு நிற்க
“அவ ஏன் இங்கே இருக்கணும்.. இப்படி நீங்க அடிச்சே அவளை கொன்னு போடவா.. வழியை விடுங்க.”
“வழியை விட்டா.. இஇஇந்த வ்வ்வீட்டை விட்டு வெளியே ப்போய்டுவியா நீ..” என்று அவனுக்கும் மேலான அழுத்தமும் ஆத்திரமும் கொண்டவனாக கேட்டு நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
விசாலம் “கண்ணா..” என்று முன்னே வர, ஒரே பார்வையில் அவரை நிற்க செய்தவன் ரகுவரனின் பிடியில் இருந்த தன் மனைவியின் கையைப் பிடித்து ஒரே உதறலில் விடுவித்து விட்டான். அவளை இழுத்து தன்னருகில் நிறுத்தியவன் “என் பொண்டாட்டி இவ.. எஎங்கேயும் வரமாட்டா.. நீ க்க்கிளம்பு..” என
“என் அக்காவை இங்கே விட்டுட்டு நான் போக மாட்டேன். உங்களை எல்லாம் நம்பி அவளை விட முடியாது.” என்றான் ரகு.
“உன் முடிவை நான் க்க்கேட்டேனா.. உன்னை வ்வ்வெளியே ப்போடான்னு சொன்னேன்..” என்று அதட்டினான் வாசுதேவன்.
விசாலம் “கண்ணா என்ன பேசற நீ.. என் தம்பி மகன் அவன். அவனை வெளியே போக சொல்லுவியா நீ..” என்று மகனை கண்டிக்க,
“தம்பி மகனா வந்தா அந்த வேலையை மட்டும் பார்க்க சொல்லு. என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக இவன் யாரு..”
“அவளோட தம்பீடா அவன்.. அவனை இப்படி பேசுவியா நீ.. சின்ன பிள்ளைடா அவன்..”
“அவ என்னோட பொண்டாட்டி அவ்ளோதான். எப்போ அவ கழுத்துல தாலி கட்டினேனோ அப்பவே எல்லா உறவும் முடிஞ்சு போச்சு. இவன் இனி அவ விஷயத்துல தலையிடக்கூடாது..”
“அதை சொல்ல நீ யாருய்யா.. உன்னை கட்டிக்கிட்டா என் அக்கா இல்லன்னு ஆகிடுமா.. எங்களை பழிவாங்கவே தாலி கட்டினியா நீ..” என மரியாதைக்குறைவாய் ரகுவரன் பேச, அவனை அடிக்க கையை உயர்த்தியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திரு அதுவரைப் பொறுமை காத்தவள் ஒரு நொடியும் தாமதிக்காமல் பட்டென தம்பிக்கு முன்னே வந்து நின்றுவிட்டாள் இப்போது. வாசுதேவனை ரத்தமாக சிவந்து போன விழிகளுடன் அவள் ஏறிட, “உஉள்ளே ப்போடி..” என்று அதட்டினான் வாசுதேவன்.
திரு அசையாமல் நிற்க, வாசுதேவன் வலிக்கும்படி அவள் கையில் இறுக்கம் கூட்டிட, “அவன் மேல இங்கே யாரும் கையை வைக்கக்கூடாது அத்தை.. அவனை அடிக்கிற உரிமை இங்கே யாருக்கும் கிடையாது. “என்று அழுத்தம்திருத்தமாக விசாலத்திடம் அவள் எச்சரிக்கை செய்ய,
அதில் இன்னும் ஆத்திரம் கனன்றது வாசுதேவனுக்கு. தரதரவென்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவன் தங்கள் அறையின் உள்ளே அவளை தள்ளிவிட்டு கதவையும் தாழிட, “இவர் என்ன நினைச்சுட்டு இருக்கார் மனசுல.. அவளை ஏன் இந்த பாடுபடுத்திட்டு இருக்கீங்க..” என்று தன்னையும் மீறி கலங்கிய குரலில் கேட்டுவிட்டான் ரகுவரன்.
விசாலம் “வாசுக்கண்ணா.. இது தப்புடா.. என்ன செய்யுற நீ..” என்று மகனை அடக்க முற்பட, சட்டமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டவன் “உன் த்த்தம்பி மகனை க்க்கிளம்ப ச்சொல்லு.. என் ப்ப்ப்பொண்டாட்டிக்கு ப்புருஷன் இஇஇஇருக்கேன்.. எங்களை ந்நாங்க ப்ப்ப்ப்பார்த்துப்போம்..” என்றான் அழுத்தமாக.
ரகுவரன் அவனிடம் பேச விருப்பமற்றவனாக விசாலத்திடம் “அந்த முரளி நல்லவனோ கெட்டவனோ எனக்கு தெரியாது.. ஆனா, அவனைக் கட்டியிருந்தால் கூட, இப்படி அவளை சித்ரவதை பண்ணியிருக்கமாட்டான்.. நீங்க அவளை காப்பாத்துறதா நினைச்சு அவளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து இருக்கீங்க அத்தை.. ரொம்ப நன்றி..”
“உங்க மகன் பட்ட அவமானத்துக்கு அழகா பழிதீர்த்துட்டு இருக்கார்.. ஆனா, உங்களை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத நிலையில இருக்கேன் நான்.. தயவு செஞ்சு அவளை உயிரோடவாச்சும் விட்டு வைக்க சொல்லுங்க..” என்று கண்களில் கண்ணீருடன் பேசியவன் தன்னையே வெறுத்தவனாக தொய்ந்து நடந்தான்.
இங்கே உள்ளே இருந்தவளுக்கு அவன் குரல் அத்தனை வலியைக் கொடுக்க, “ரகு..” என்று கதவைப் படபடவென அவள் தட்ட, விசாலம் யோசிக்காமல் கதவைத் திறந்துவிட அதற்குள் வேகமாக வாயிலைக் கடந்து சென்றிருந்தான் ரகுவரன்.
திரு செல்லும் அவனைக் கண்டு கண்ணீர் விட, அவள் கண்ணீரை காண முடியாதவனாக எழுந்து தன்னறைக்குச் சென்றுவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.