“இந்த விஷயம் ரொம்ப நாள் மறைக்க முடியாது தான் பிரபா. ஆனா எல்லாம் முடிவு பண்ணிட்டா உன் அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா. அவ கிட்ட பொறுமையா சொல்லிக்கலாம். உனக்கு ஓகே தானே?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“எனக்கு சம்மதம் பா. மேற்கொண்டு பேசுங்க”, என்று அவன் சொல்ல அவரும் சந்தோஷமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.
சொக்கலிங்கத்துக்கு உடனே தகவல் சொல்லி எப்போது பெண் பார்க்க வரவேண்டும் என்று கேட்டார். அவரும் மீனாட்சியிடம் கேட்டு நாளைக்கே வரச் சொல்லவே எல்லாம் நல்ல படியாக தான் போனது.
ஆனால் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வேணுகோபாலோ தனக்குள் சிரித்துக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
சொக்கலிங்கம் நேரில் வந்து மீனாட்சிக்கு தகவல் சொல்லி விட்டு பிரபாகரன் போட்டோவைக் காண்பித்து அவர்கள் பெண் பார்க்க வரப் போவதையும் சொல்லி விட்டுச் சென்றார். மகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லக் காத்திருந்தாள் மீனாட்சி.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் “அர்ச்சனா”, என்று சந்தோஷமாக வரவேற்றாள் மீனாட்சி.
“அம்மா, என்ன உன் முகம் ரொம்ப சந்தோஷமா இருக்கு? என்ன விஷயம்?”
“நாளைக்கு வேலைக்கு போகனுமா?”
“ஆமா மா, போகணும். ஏன் கேக்குற?”
“அப்படின்னா நாளைக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருவியா?”
“எதுக்கு மா? கோவிலுக்கு போகனுமா?”
“இல்லை அர்ச்சனா, உன்னை நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க. உன் அப்பா இப்ப தான் வந்து சொல்லிட்டு போனார். மாப்பிள்ளை பேர் பிரபாகரன். அப்பாவோட பிரண்டோட பையனாம். எம்.பி.ஏ படிச்சிட்டு அவங்க அப்பா பிஸ்னசைப் பாத்துருக்காராம். மாப்பிள்ளை ரொம்ப அழகா இருக்கார். போட்டோ பாக்குறியா?”
“அதெல்லாம் வேண்டாம் மா. எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்”, என்று அர்ச்சனா சொன்னதும் மீனாட்சி முகத்தில் இருந்த சந்தோஷம் எல்லாம் அப்படியே மறைந்தது.
“என்ன சொல்ற நீ?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
“கல்யாணம்னு ஒண்ணு பண்ணி நீ ஏமாந்தது போதாதா மா? உன்னைப் பாத்தே எனக்கு காதல் மேலயும் கல்யாணத்து மேலயும் நம்பிக்கை இல்லை மா. அந்த ஆள் கிட்ட யாரையும் வர வேண்டாம்னு சொல்லிரு”
“அப்படிச் சொல்லக் கூடாது அர்ச்சனா. என் விஷயம் வேற. எனக்கும் உன் அப்பாவுக்கும் இடைல இருந்தது காதலே கிடையாது. அவருக்கு என் மேல காதல் இருந்திருந்தா என்னைத் தவிர இன்னொருத்த்தி பக்கம் அவர் பார்வை போயிருக்காது. அவர் மேல எனக்கு காதல் இருந்திருந்தா அவர் செஞ்ச தப்பை அந்த காதல் மன்னிக்க வச்சிருக்கும். நாங்க ரெண்டு பேரும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்துருக்கோம். ஒத்து வரலை பிரிஞ்சிட்டோம். உன் அப்பா மாதிரியே எல்லாரும் இருக்க மாட்டாங்க டா”
“அந்த நம்பிக்கையை நீ கொடுப்பியா மா? இல்லை உன் புருஷன் கொடுப்பாரா? உன் புருஷன் இப்படி எல்லாம் கிடையாதுன்னு நம்பி தானே நீயும் அவரை கல்யாணம் பண்ணிருப்ப? ஆனா நடந்தது என்ன? ஆம்பளைங்க எல்லாரும் பச்சோந்தி மா”
“ஓஹோ அப்படின்னா உன் கூட படிச்சானே நவநீதன், அவன் கெட்டவனா அர்ச்சனா? இப்ப உன் கூட வேலை பாக்குறாங்களே உன்னோட நண்பர்கள் ராஜேஷ், ஜேம்ஸ், அசோக், வெங்கட் எல்லாரும் கெட்டவங்களா?”
“அதே நம்பிக்கையை மூலதனமா வச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதி அர்ச்சனா. இந்த உலகமே அந்த வார்த்தைல தான் இயங்கிக்கிட்டு இருக்கு. உன்னை ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுத்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் டி”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.
“அம்மா பிளீஸ் அழாதே. இப்ப என்ன நான் சீக்கிரம் வரணும்? கல்யாணம் பண்ணனும்? அதானே? நான் கண்டிப்பா உனக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன். உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் மா”, என்று சொன்னாள் அர்ச்சனா.
“உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் அர்ச்சனா. கண்டிப்பா இந்த பையன் உன்னை நல்லா வச்சுக்குவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
“இந்த நம்பிக்கையை தானே நீ அப்பா மேல வச்ச?”, என்று அவள் கேட்டதும் மீனாட்சி கலங்கிய கண்களுடன் மகளை ஏறிட்டாள். அன்னையின் முகத்தில் இருந்த கலக்கத்தைக் கண்டவள் தன்னையே நொந்து கொண்டு “சாரி மா. சரி நாளைக்கு எத்தனை மணிக்கு வரணும்? அவங்க எப்ப வருவாங்க? உன் புருஷன் வருவாரா இல்லையா?”, என்று கேள்விகளைக் கேட்டு மீனாட்சியின் மனதை மாற்றி விட்டாள்.
ஆனால் அன்று இரவு அறைக்குள் வந்து படுத்ததும் அர்ச்சனா மனம் வெகுவாக கலங்கிப் போனது. இது வரை ஆண்களை நட்பு என்ற வட்டத்துக்குள் நிறுத்தி தான் பழகுவாள். ஆனால் இப்போது ஒருவன் அந்த வட்டத்தை தாண்டி அவளை நெருங்க வேண்டிய சூழ்நிலை.
அப்படிப் பட்ட ஒருவன் நல்லவனா இருப்பானா? அப்பாவைப் போல இருப்பானா? என்று பல கேள்விகள் அவளுக்குள் எழுந்து அவள் நிம்மதியைக் கெடுத்தது.
அடுத்த நாள் அன்னைக்காக முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாலும் உள்ளுக்குள் கலக்கத்துடன் தான் வேலைக்கு கிளம்பினாள். அவளது முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று கண்டு கொண்டாள் அவளது தோழி காயத்ரி.
“அப்படி எல்லாம் நடக்காது அச்சு. என்னோட ஹஸ்பண்ட் இல்லையா? அப்படி நல்லவங்களும் இருக்காங்க தானே?”
“ஹிம், புரியுது. இருந்தாலும் பயமா இருக்கு காயு… அவன் கெட்டவனா இருந்தா நான் என் வாழ்க்கையை எப்படியோ பாத்துப்பேன். ஆனா அம்மா தாங்க மாட்டாங்க”
“உனக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும். சரி மாப்பிள்ளை போட்டோ பாத்தியா?”
“அம்மா காட்ட வந்தாங்க. நான் நேர்லே பாத்துக்குறேன்னு வந்துட்டேன்”
“மாப்பிள்ளையைப் பாத்த உடனே அவன் நல்லவனா கெட்டவனான்னு நம்ம உள் மனசு சொல்லும்ல? அவரைப் பாத்ததும் உன் மனசு என்ன சொல்லுதோ அதைச் செய். டென்ஷன் ஆகாத அச்சு. எல்லாம் நல்ல படியா நடக்கும். ரிலாக்சா இரு”, என்று சமாதானப் படுத்தினாள் காயத்ரி.
அன்று முழுவதுமே அர்ச்சனாவுக்கு மனது சரியே இல்லை. அன்னைக்காக அவள் திருமணம் செய்ய தயாராகி விட்டாள் தான். ஆனாலும் பயமாக தான் இருந்தது.
அன்னைக்காக அவள் திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமணம் தோல்வி அடைந்தால் மீனாட்சியால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று கேள்வி மட்டுமே அவளை உருத்திக் கொண்டே இருந்தது.
தன்னுடைய வாழ்க்கை மாதிரி மகளின் வாழ்க்கையும் கெட்டு விட்டது என்று எண்ணி கலங்கி விட மாட்டாளா? கூடவே மாப்பிள்ளையைப் பற்றிய சிறு ஆர்வமும் அவளுக்குள் எழுந்தது. திருமணம் என்றதும் இயல்பாக பெண்ணுக்கு எழுமே ஒரு உணர்வு. அது அவளுக்கும் எழுந்தது. மாப்பிள்ளையைப் பற்றிய ஒரு கற்பனை உருவம் அவள் மனக் கண்ணில் வந்தது.
“எப்படி இருப்பான்? அம்மா காட்டும் போதே போட்டோ பாத்துருக்கணுமோ? பெரிய மீசை வச்சிக்கிட்டு குண்டா இருப்பானா? இல்லை ஒல்லியா மீசை இல்லாம இருப்பானா? பிஸ்னஸ் பண்ணுறானாமே? என்ன பிஸ்னஸ் பண்ணுறான்? என்னை கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்குப் போக விடுவானா? இவ்வளவு யோசிக்கிறேன் முதல்ல அவனுக்கு என்னைப் பிடிக்குமா? என்று அவள் கற்பனை தறிகெட்டு ஓடியது.
என்ன தான் ஆண்களைப் பற்றிய பயம் இருந்தாலும் அவள் ஆண்களை வெறுக்கும் ரகம் இல்லையே? அதனால் இயல்பாக ஒரு எதிர்பார்ப்பு உணர்வு அவளுக்குள் எழுந்தது.
அர்ச்சனா வீட்டுக்கு வரும் போது மாலை ஐந்து மணி ஆகி இருந்தது. மீனாட்சி அவளைக் கண்டு நிம்மதி கொண்டாள். அன்னையின் முகத்தில் இருந்த நிம்மதிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று தோன்றியது அவளுக்கு.
“நீ வர லேட்டா ஆகிருமோன்னு பயந்துட்டே இருந்தேன் பாப்பா. அவங்க வீட்ல இருந்து ஆறு மணிக்கு தான் வருவாங்க. உன் அப்பா அஞ்சறைக்கு வந்துறேன்னு சொல்லிருக்கார். நீ போய்க் குளிச்சிட்டு வா. அம்மா உனக்கு சேலை எடுத்து வைக்கிறேன்”
“சரி மா”, என்று சொல்லி குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வந்ததும் “இந்த பட்டு சேலையைக் கட்டுறியா டா?”, என்று கேட்டாள் மீனாட்சி.
“அம்மா இப்ப என்ன கல்யாணமா நடக்க போகுது? பொண்ணு பாக்க தானே வராங்க? சாதாரண சேலை போதும்”, என்று சொல்லி ஒரு ஷிஃபான் புடவையைக் கட்ட ஆரம்பித்தாள்.
“இந்த நகை எல்லாம் போட்டுக்கோ டா”
“இந்த நகை எல்லாம் போட்டா தான் நான் அழகா மா?”, என்று சிணுங்களுடன் கேட்க “சே சே, என் பொண்ணு எப்படி இருந்தாலும் அழகு தான்”, என்றாள் மீனாட்சி.
“அந்த இயற்கையான அழகை அவங்களும் பாக்க வேண்டாமா? ஆனாலும் உன் மன அமைதிக்காக இந்த நெக்லஸ் மட்டும் போட்டுக்குறேன்”, என்று சொல்லி அணிந்து கொண்டாள்.
பிரிட்ஜில் இருந்த மல்லிகைப் பூவை எடுத்து அவள் தலையில் சூடி விட்டாள். இப்போது மகளைப் பார்க்கும் போது திருப்தியாக இருந்தது அந்த தாய்க்கு.
அதே நேரம் பிரபாகரன் வீட்டில் அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். பிரபாகரனுக்கோ உள்ளுக்குள் பல எதிர்பார்ப்புகள் எழுந்தது. அவளுக்கு தன்னைப் பிடிக்குமா என்ற சிறு ஆர்வம் கூட வந்தது.