நண்பனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவனை வரவேற்க சென்னைக்குச் செல்வதாகக் கூற ,தேவராஜனும் தங்களது காரிலேயே சென்று விடலாம் எனக் கூறி தேவாவையும் அழைத்துக் கொண்டான். இருவரும் கிளம்புகையில் தான் தேவராஜனிடம் அன்று தான் விசாரிப்பது போல் தில்லையையும் , தாமரையையும் எப்படிப் படிக்கிறார்கள் என விசாரித்தான் விஜய்.
தில்லை ஏன் கல்லூரிக்கு செல்லவில்லை என்பது இப்போது வரை விஜயிற்குத் தெரியாது. அலுவலகப் பணிகளைப் பார்ப்பவன் குடும்ப விவகாரங்கள் எதிலும் தானாக தலையிடவில்லை. விஜயாக ஃபோன் செய்தால் மட்டுமே பேசுபவன் .. தொழில் விவகாரங்களை மட்டும் பகிர்ந்துக் கொள்வான். இப்போது நீண்ட தூர பயணம் என்பதால் சாதாரண உரையாடலாக இந்தக் கேள்வி இருந்தது .
அன்று பாதுகாப்புக்காக ஆதவன் வீட்டுப்புறம் சென்றதுதான் அதன் பிறகு அவன் அங்கு சென்றதே இல்லை. தேவாவும் “ம்… நல்லா படிக்கிறாங்க… ” என பொதுவாக சொல்லி விட்டு வண்டியை செலுத்த ஆரம்பித்து விட்டான்.தங்கை அவள் கணவனிடம் கூட பகிராமல் இருக்கையில் தானாக யாரிடமும் பகிர இயலாது இருந்தான் தேவா. சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதவனிடம் தங்கையைக் குறித்துப் பேசாமல் .தனது படிப்பு, தொழில் என மற்ற விவரங்கள் எல்லாம் பகிர்ந்துக் கொண்டே வந்தான்.
அவனைப் பொறுத்தவரை விஜய் அந்நியனே.. ஆதவனின் நண்பனாக இருந்த போதும் குடும்ப விவகாரங்களை பகிர யோசித்தவன் , தொழில் சம்பந்தமான பேச்சுக்களை மட்டுமே பேசினான் என்பதால் விஜயும் அதில் இணைந்து கொண்டான்.
மதுரையை நெருங்கும் சமயம் விஜய் அங்கேயே இறங்கி அவனிருப்பிடத்துக்குச் செல்வதாக கூறியும் ஆதவன் அவனுடன் வருமாறு பணித்துவிட்டான். இப்போது தேவாவிற்கு தர்மசங்கடமாக இருந்தது. தங்கையைப் பார்த்ததும் ஆதவன் எவ்வாறு உணருவான் என்பது யோசனையில் இருக்க.. விஜய் கூட வரும் போது தான் தில்லை தாய்மை அடைந்திருப்பதைக் குறித்து தான் தெரிவிக்காமல் இருப்பது குற்றவுணர்வாகப்பட்டது .ஆனால் அனைத்தையும் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும் என்ற மனநிலையில் காரைச் செலுத்த, அவனது தடுமாற்றம் கண்டு விஜய் வண்டியை இயக்கினான்.
மாலை நெருங்குகையில் இதோ வீட்டின் முன் வந்து வண்டியும் நின்று விட்டது. தேவாவின் பெற்றோர் , தாமரை, அருணாச்சலம் மற்றும் அங்குள்ள உறவினர்கள் , பண்ணையாட்கள் என அனைவரும் குழுமி இருந்தனர்.தாமரை கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருக்க , வண்டியிலிருந்து இறங்கிய அண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் அருகில் வந்தாள். கூடவே விஜயும் இறங்க , தாமரையின் முகமலர்ச்சிக்கு கேட்கவா வேண்டும்.
“பாப்பா… செல்வி மா…” என அழைத்து அவளை தோள் சாய்த்துக் கொண்டவன் விழிகள் மனைவியைத் தேடாமல் இல்லை. வீட்டு முன்பே சிலர் அவனை நலம் விசாரித்து விட்டு நகர்ந்து விட , ஒரு சிலர் மட்டுமே கூடவே வீட்டினுள்ளும் வந்தனர். தில்லையை அவன் கண்கள் தேடுவதை அனைவருமே உணர்ந்தனர். பெற்றவர்களாக சொக்கலிங்கத்திற்கும் தேவகிக்கும் அது அளவில்லா ஆனந்தத்தைக் கொடுக்க ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
வந்திருந்த உறவினர்களும் உடனே கிளம்பி விட , விஜயும் கிளம்புவதற்காக எழுந்தான். ஆதவனோ , ” விஜய் இங்க ரிஃப்ரெஷ் ஆகி சாப்பிட்டுட்டு கிளம்பு… தேவா..” என மைத்துனனை அழைக்க , அவனும் ,எழும் போது,
“அண்ணா நீங்க வந்ததுலருந்து யாரைத் தேடுறீங்கனு தெரியுது.. இருங்க உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்பிரைஸ்…” என்றவள் கீழே இருந்த அறைக்குச் சென்றவள் தோழியை தோள் பிடித்து அழைத்து வந்தாள்.ஆதவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து அவனது கண்களிலும் உடல் மொழியிலும் அதிர்ச்சியை அப்படியே காட்டி நின்றான். விஜயும் அதே அதிர்ச்சியை பிரதிபலிக்க , தாமரை அவர்கள் இருவரது உணர்வுகளையுமே புரிந்துக் கொண்டவள்,
“அண்ணா ஸ்வீட் சர்ப்ரைஸ் எப்படி இருக்கு , நானே தான் என் ஹஸ்பன்ட் கிட்ட சொல்லுவேன்னு சொல்லிட்டா … அவ சொல்லாம நாங்க எப்படி… ” என்ற தாமரையின் கண்கள் நொடியே என்றாலும் விஜயிடத்திலும் பதிலைச் சொல்ல , அதைப் புரிந்துக் கொண்டவன் புன்னகையுடன், தில்லையைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்த நண்பனை அணைத்து கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தவன் ,
“நிஜமாவே ஸ்வீட் சர்பிரைஸ்… “தில்லையிடம் , ” சிஸ்டர் ரொம்ப சந்தோஷம் ஆதவ் அம்மா திரும்ப வரப் போறாங்க.. அவனுக்கு இதைவிடப் பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கும்…” என்றவனிடம், தில்லை முகமலர்ச்சியுடன் கணவனைப் பார்த்துக் கொண்டே ,
“தேங்க்ஸ் அண்ணா.. தாமரையும் அதே தான் சொன்னா..” என்றவள் ஆதவனின் விழிகளை சந்திக்க இயலாது குனிந்துக் கொண்டாள். அதே நேரம் தாமரையின் முகமும் மலர அதை ரசித்தவாறு விஜய் தேவாவைப் பார்த்து விட்டு ,
“அரை மணி நேரத்துல கிளம்பறேன்…” என்ற விஜயை முன்பு தங்கியிருந்த அதே விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றான் தேவராஜன். அறைக்குள் நுழைந்ததுமே ,
“சகல சாரி… பாப்பா ஆதவனுக்கு அவ தான் சொல்லுவேன்னு சொன்னதால என்னால உன்கிட்டயும் சொல்ல முடியல… ” என்ற தேவாவின் தோள் தட்டிய விஜய் ,
” அவங்க சொன்னதும் சரிதானே… ஆனா இங்கயிருந்து காலேஜ் போறது ரொம்ப கஷ்டமே…” என்ற விஜயிடம் ,விவரம் கூறினான் தேவா.விஜயும் படித்தால் சரிதான் என்று அதற்கு மேல் கேட்கவில்லை.
அங்கு ஆதவன் நின்ற நிலையைக் கண்ட தேவகி தான் அவனருகில் வந்தவர் , ” ஐயா,பாப்பாதான் புருஷன் கிட்ட, தான்தான் சொல்லுவேன்னுருச்சு… எல்லா பொண்ணுங்களுக்கும் அந்த ஆசை தானே… இப்ப இந்த ரெண்டு மாசமா தான் வெளியவே தெரிஞ்சது.. நாங்க சொல்லலைனு தப்பா எடுத்துக்கிடாதீக..” என்றவர் அருணாச்சலத்திடம் ,
“அண்ணே நீங்களே மருமவனுக்கு எடுத்துச் சொல்லுங்க… ” என்றவர் சமையலறைக்குள் நுழைந்து விட்டார்.
தில்லை மாடியேறப் போக , தாமரை அவளை பிடித்துக் கொண்டே மேலேறிச் சென்று ஆதவனறையில் விட்டு ,
“திலோ நான் போய் சமையலப் பார்க்கிறேன், நீ அண்ணன்கிட்ட பேசிட்டு இரு … ஆமா அண்ணன் வர்ற வரை பேசிட்டே இருந்த இப்ப பேச்சையேக் காணோம்… உனக்குமேலேடி எங்கண்ணன் உன்னையத் தவிர வேற எங்கேயும் பார்வையேப் போகல… ” என்றவள் அவள் வயிற்றில் கை வைத்து , “அப்பா வந்துட்டாங்க செல்லம்.. இனி அப்பாவையும் உதைச்சு விளையாடுங்க.. உம்மா..” என்றவள் வயிற்றைத் தொட்டு முத்தமிட்டு அவளை அறையில் விட்டு விட்டு கீழே வருகையில் விஜயைக் கண்கள் தேடியது. அவன் அருகில் இருக்கிறான் என்பதே மனதுக்குள் மழைச்சாரலாக இன்பம் பொங்கி வழிய… உற்சாகமாக ஆதவனுக்கு , விஜயிற்கு என சமைக்க ஆரம்பித்தாள்.
அதற்குள் அருணாச்சலமும் மகனிடம் சொல்லாததற்கான காரணங்களை விளக்கியவர் மகனை அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.
ஆதவனால் தில்லையை நேரில் பார்த்த நொடியிலிருந்து இயல்பாக இருக்கவே முடியவில்லை. தன்னை வரவேற்க கூட வரவில்லை… அந்தளவு தன் மீது வருத்தத்தில் இருக்கிறாளோ என்று தான் நினைத்தது.கூட்டத்தில் எங்கும் நிற்கிறாளோ, தான்தான் கவனிக்கவில்லையோ என்று தான் அவனது கண்கள் அலை பாய்ந்ததும். தில்லைக்கு தன் மீது கோபம் வருத்தம் என இருந்தாலும் தனக்கு அவள் மீது அளவுக்கடந்த அன்பு தானே இருக்கிறது. அவளையும் ஆசையுடன் ஆவலுடன் காணத் துடித்தான்.
தங்கை அழைத்து வந்து நிற்பாட்டியதும் அவளது தோற்றமாற்றம் அதிர்ச்சியை அதிகமாகவேக் கொடுத்தது. ஒரு ஆண் மகனாக தான் தந்தையாகப் போவதை நினைத்து எவ்வளவு கர்வமாக உணர வேண்டும். ஆனால் ஆதவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. அதைக் காட்டிலும் தாய் மரணப் படுக்கையில் இருக்கையில் திருமணம் செய்து அவர் மறைந்து பதினைந்து நாளில் மனைவியுடன் கூடியிருக்கிறான்.
அதனைப் பெருத்த அவமானமாக உணர்ந்தான்.இத்தனை நாட்களாக தனக்கும் தில்லைக்கும் மட்டும் தெரிந்த ஒன்று இன்று ஊர் உலகிற்கே தெரிந்துவிட்டது. இது போன்ற மன உளைச்சலில் அவன் அமர்ந்திருக்க , உறவுகள் எல்லாம் அவன் நன்மைக்காக கூறவில்லை , அவன் மனைவியின் விருப்பத்திற்காக கூறவில்லை என்பது போல அவனை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தந்தை பேசி முடித்ததும் தளர்ந்த நடையோடுதான் அவனறைக்குச் சென்றான்.
அங்கு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கணவனின் வரவிற்காக தில்லைக் காத்திருந்தாள். இந்தச் சில நாட்களாக ஆதவனின் வரவிற்காக எத்தனை ஆவலுடன் காத்திருந்தாள் என்பது அவள் மட்டுமே உணர்ந்தது. அந்தப் பரபரப்பு மனதோடு உடலிலும் ஒரு வித சிலிர்ப்பைத் தர அவன் வரும் போது வாசலில் நிற்க தயக்கத்தைக் கொடுத்து தாமரையிடம் ,தான் உள்ளேயே இருப்பதாகக் கூறி விட்டாள்.
அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தவனை மிக அருகில் கண்டதும் மகிழ்ச்சியில் உடல் படபடவென நடுங்க ஆரம்பித்து கண்ணீர் வர ஆரம்பித்தது. அவனது வருகைக்காகவும் , அவனது அருகாமைக்காகவும் ஏங்கிய உள்ளமும் உடலும் அவனது அணைப்பு கிடைக்காதா என ஏக்கத்தைக் கொடுக்க பார்த்தது பார்த்தபடி நின்றவனை இடுப்போடு கட்டிக் கொண்டு அவனது நெஞ்சில் சாய்ந்தவளது கண்ணீர் ஆதவனது சட்டையை நனைக்க ஆரம்பித்தது.
தில்லை தன் மீது கோபத்திலிருப்பாள், வெறுப்பிலிருப்பாள், அவளை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையிலயே ஊருக்கு வந்தவனுக்கு , அவளது ஆறு மாத வயிறு மேலும் குற்றவுணர்வை அதிகமாக்கி இருக்க இந்த அணைப்பு அவன் எதிர்பாராதது… கூடவே அவள் கட்டிப்பிடித்த வேகத்தில் அவன் உடலில் இருந்து தன் உடலில் ஏதோ உரசிச் சென்ற உணர்வும் .. அதைப் புரிந்து மனைவியைத் தானும் அணைக்கப் போகயில் அவளது கண்ணீரை உணர்ந்தவன் , பதற்றத்துடன் அவள் தோள் பிடித்து நிமிர்த்த முயன்றுக் கொண்டே,
,”என்ன. என்ன திலோ .. என்ன செய்யுது… ஏன் அழுகிற..அத்தையக் கூப்பிடட்டுமா.. வயிறு ஏதும் வலிக்குதா..” என்றவனிடம் “இல்லை …” என்பதாக அவனை விடாமல் அவனது நெஞ்சிலேயே தலையசைத்தவள் மனதினுள் ,
” உங்களப் பார்த்ததும் கட்டிப் பிடிக்கணும் முத்தம் கொடுக்கணும்னு எனக்கு இருக்கு.. அத எப்படி நான் சொல்றது. நீங்களாப் புரிஞ்சுக்க வேண்டாமா.. என் மக்கு மாமாவே… நானா கட்டிப்பிடிச்சா.. என்ன திலோ செய்யுதாமா..” என நினைத்தவளுக்கு புன்னகையும் தோன்ற,
கட்டி அணைச்சா
முத்தம் பதிச்சா
நோய் முழுக்க தீர்ந்து விடும்…
“மாமா இப்ப நம்ம பாப்பா ஃபீல் பண்ணீங்களா..” என நெஞ்சில் சாய்ந்த வண்ணமே அவளது உதடுகள் உரசக் கேட்கும்போதே, அவர்களது குழந்தை மறுபடியும் உருண்டு தன் இருப்பை உணர்த்த… அந்த உணர்வை வெளிப்படுத்தும் முன்னரே தேவா கதவைத் தட்டி அழைத்துக் கொண்டிருந்தான்.
பிரிய மனமேயில்லாமல் சட்டென பிரிந்தவள் , “இதோ வாறேண்ணா..” என்றவாறு நிமிர்ந்துப் பாராமல் அவனை விட்டு நகர்ந்து வெளியே செல்லு முன்னே, ” சாரி…” என்றான் ஆதவன். தில்லை கதவைத் திறக்காமல்அப்படியே நின்றவள், இப்போது நிமிர்ந்து,
“ஏன் மாமா.. ஃபோன்லயும் சாரி சொன்னீங்க இப்பவும் சொல்றீங்க.. ” என்றவுடன் ஆதவன் என்னக் கூறுவது எனத் தெரியாமல் விழிக்க , தேவா மீண்டும் அழைக்கவும் திறந்தவளின் பின் நின்ற ஆதவனிடம்,
“மச்சான் விஜய் வெய்ட் பண்றாப்ல… நானும் கிளம்பணும் இன்னைக்கு கோயம்புத்தூர் வரை போற வேலையிருக்கு அதான். சொல்லிட்டு கிளம்பலாம்னு” என தொல்லை தந்து விட்டோமோ எனத் தயக்கத்துடன் நின்றவனிடம் தில்லை ,
“அண்ணா மாமா ரெடியாகிட்டு வரட்டும் அதுக்குள்ள என்ன அவசரம், வா சாப்பிடலாம், செல்வி அவங்க அண்ணனுக்காக நிறைய சமைக்கிறதா சொன்னா … ” என்றவள் ஆதவனிடம் ஓர் மயக்கும் புன்னகையை வீசி விட்டு தேவராஜனோடு மெல்லப் படியிறங்கினாள்.
ஆதவன் அந்த புன்னகையில் மயங்கி கீழே விழாமல் இருந்தது அதிசயமே…” எதுக்கு மன்னிப்பா… ஃபோன்ல பேசுறதேக் கிடையாது… அப்படியே பேசக் கொடுத்தா வேண்டா வெறுப்பா வாங்கிப் பேசுறது… இப்ப … ” , என அவளின் செய்கைகள் மகிழ்ச்சியைத் தந்ததோடு ,குழந்தையின் அசைவையும் உணர்ந்தவனுக்கு , மீண்டும் உணர மாட்டோமா என்றிருக்க … புன்னகையோடு தலையைக் குலுக்கிக் கொண்ட ஆதவன்,
அவளது வார்த்தைக்கு வார்த்தை ” மாமா” என்ற அழைப்புக் கொடுத்த உற்சாகத்தில் வேகமாக குளித்து முடித்து ஆதவனது வருகைக்காக உணவு மேசையில் காத்திருந்த விஜயின் அருகில் மனைவியைப் பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்தான்.