தான் அவளுக்கு செய்த துரோகம் நெஞ்சை அறுக்கும். விளைவு மஞ்சுளாவிடம் மீனாட்சிக்கு செய்த துரோகத்தைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். அதுவே மஞ்சுளாவுக்கு மீனாட்சி மேல் வன்மம் ஏறக் காரணமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து அவளுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அஞ்சலி என்று சொக்கலிங்கம் தான் பெயர் வைத்தார்.
ஒரு நாள் குழந்தையை தூக்கிக் கொண்டு மீனாட்சி வீட்டுக்கு வந்த மஞ்சு மீனாட்சியிடம் “அதான் புருஷன் வேண்டாம்னு போய்ட்டல்ல? இன்னும் என்ன உன் அழகைக் காட்டி அவரை கைக்குள்ள வச்சிருக்க? மானம் ரோஷம் உள்ள பொம்பளையா இருந்தா ஒரெடியா விலகிப் போக வேண்டியது தானே?”, என்று கேட்டாள். அதற்கு மீனாட்சி எதுவுமே பேச வில்லை. அவளிடம் பேசுவது கூட பாவம் என்பது போல அசையாமல் நின்றிருந்தாள்.
“என்ன திமிர் இவளுக்கு?”, என்று கொதித்துப் போன மஞ்சு “இந்தா இந்த டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்தைப் போடு. உங்களுக்கு டைவர்ஸ் கிடைச்சா தான் என்னால புது ரேஷன் கார்டுக்கு கூட அப்ளை பண்ண முடியும்”, என்று சொல்லி ஒரு பேப்பரை மீனாட்சி கைகளில் திணித்தாள்.
அடுத்த நொடி அந்த டைவர்ஸ் பேப்பரை அப்படியே கிழித்து தூரப் போட்ட மீனாட்சி ஒரு வார்த்தை கூட பேசாமல் வீட்டுக்குள் சென்று விட்டாள். அவளுடைய உதாசீனம் இப்போது வரை மஞ்சுளாவுக்கு மறக்க வில்லை. மீனாட்சி மீது வன்மம் வன்மம் வன்மம் மட்டுமே. அவள் வாழ்க்கையை பறித்திருக்கிறோம் என்ற குற்ற உணர்வு எதுவுமே மஞ்சுளாவுக்கு கிடையாது.
மஞ்சுளா வந்து மீனாட்சியிடம் பேசியது சொக்கலிங்கத்துக்கு தெரியாது. ஆனாலும் மஞ்சுளா எவ்வளவோ முறை கணவருக்கு விவாகரத்து வாங்கி அவர்களை அவர் வாழ்க்கையில் இருந்து ஒரெடியாக விலக்க முயன்றிருக்கிறாள். ஆனால் அது இப்போது வரை நடக்கவே இல்லை. மீனாட்சி கடைசி வரை சொக்கலிங்கத்துக்கு விவாகரத்து தரவே இல்லை.
சொக்கலிங்கத்தின் சொத்துக்களுக்கு நாமினியாக, பாஸ்போர்ட்டில் அவரது மனைவியாக, இப்போது வரை மீனாட்சி பெயர் தான் இருக்கிறது. அதை சொக்கலிங்கம் மாற்றவே இல்லை. அதை தாங்க முடியாமல் மஞ்சுளா ஒவ்வொரு நாளும் கொதித்துக் கொண்டு தான் இருந்தாள்.
காதலித்த கணவனை விட்டுக் கொடுத்து விட்டு ஒவ்வொரு நாளும் தனிமையில் மீனாட்சி எந்த அளவுக்கு வேதனைப் படுகிறாளோ அதே போல தான் மஞ்சுளாவும். இருக்கும் அனைத்துக்கும் முழுமையாக உரிமை கொண்டாட முடியாமல் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறாள். இது தான் அவளுக்கான தண்டனையோ என்னவோ?
மஞ்சுளாவுக்கும் அவளுடைய மகள் அஞ்சலிக்கும் தனியே புதிய சொத்துக்கள் வாங்கி இருந்தாலும் பழைய சொத்துகளுக்கும் பூர்வீக சொத்துக்களுக்கும் சொந்தக்காரி அர்ச்சனா தான்.
அர்ச்சனாவை பள்ளியில் சேர்த்தது சொக்கலிங்கம் தான். பெற்றோரை பள்ளிக்கு வரச் சொன்னால் சொக்கலிங்கத்துக்கு ஒரே ஒரு போன் பண்ணுவாள் மீனாட்சி. அடுத்த நொடி அவர் வந்து விடுவார். அவரைப் போக விடாமல் மஞ்சுளா எவ்வளவோ நாடகம் ஆடினாலும் சொக்கலிங்கம் அசைய மாட்டார். அவருடைய குற்ற உணர்வு கொண்ட மனம் மீனாட்சி பக்கமே நிற்கும்.
சொக்கலிங்கம் பட்டம் போல. அந்த பட்டம் மஞ்சுளா கையில் இருந்தாலும் அதன் நூல் மீனாட்சியிடம் இருப்பது போலவே தான் மஞ்சுளாவுக்கு தோன்றும். தன்னால் தான் அவரை மாற்ற முடிய வில்லை. மகளின் அன்பை வைத்து மாற்றலாம் என்று எண்ணி அஞ்சலியை அவருடனே நேரம் செலவழிக்க விடுவாள் மஞ்சுளா.
அஞ்சலி மீது அன்பு வைத்திருந்தாலும் அவளைக் கொஞ்சும் போதெல்லாம் சொக்கலிங்கத்துக்கு அர்ச்சனா நினைவு தான் வரும். அர்ச்ச்சனாவுக்கு நினைவு தெரியும் நாள் வரை அவளும் அப்பா அப்பா என்று தான் இருப்பாள். அவர் அங்கிருந்து கிளம்பும் போது அழுது அடம் பிடிப்பாள். தன்னுடனே இருக்க வேண்டும் என்று சொல்வாள்.
ஆனால் விவரம் தெரிந்து அப்பாவின் துரோகம் தெரிந்து தந்தையிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தாள். தாயுடன் ஒட்டிக் கொண்டாள். மகளின் விலகல் கூட அவருக்கு தண்டனையாக தான் இருந்தது. ஆனால் அவளுமே இந்த சமூகத்தில் தந்தைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் “அம்மா நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங், உன் புருசனை வந்துறச் சொல்லு”, என்று தந்தையிடம் சொல்லச் சொல்லுவாள்.
அவளைப் பொறுத்த வரைக்கும் அப்பா என்பவர் பேப்பர் போடுபவர் போல, சிலிண்டர் போடுபவர் போல ஒரு ஆள் அவ்வளவு தான். ஆனால் தாயை நினைத்து சில நேரம் கண்ணீர் விடுவாள். அதனால் எப்போதும் மீனாட்சியைக் கஷ்டப் படுத்தவே மாட்டாள். மீனாட்சிக்கு காச்சல் வந்தால் கூட துடித்துப் போவாள். அதனால் முடிந்த அளவுக்கு அன்னைக்கு ஒத்தாசையாக இருப்பாள். அன்னைக்கு சிறு காயத்தைக் கூட கொடுத்து விடக் கூடாது என்று அவ்வளவு உறுதி அவளுக்கு உண்டு.
அர்ச்சனா இப்படி என்றால் அஞ்சலி வேறு மாதிரி. அஞ்சலிக்கு உண்மை எல்லாம் தெரிந்து அம்மா அப்பா மீது கோபம் வருவதற்கு பதில் மீனாட்சி மற்றும் அர்ச்சனா மீது தான் கோபம் வந்தது. அப்படி தான் அவள் மனதில் மஞ்சுளா விஷத்தை விதைத்திருந்தாள்.
அர்ச்சனா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அர்ச்சனாவைத் தேடி அவளது பள்ளிக்கே வந்து விட்டாள் அஞ்சலி.
அவள் யாரென்று தெரியாமல் அர்ச்சனா அவளைக் கடந்து செல்ல முயல அவள் முன் கை நீட்டித் தடுத்தவள் “நீயெல்லாம் என்ன ஜென்மம் டி? நீயும் உன் அம்மாவும் பொம்பளைங்களா? சி. எங்க அப்பா தான் உங்க அம்மாவை வேண்டாம்னு சொல்லி தானே எங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணினார்? அப்புறம் ஏன் இன்னும் அவரை பிடிச்சு வச்சு அட்டை மாதிரி ரத்தம் உரியுறீங்க? டைவர்ஸ் கொடுத்துட்டு போய்த் தொலைய வேண்டியது தானே?”, என்று கேட்டாள்.
“நாங்க ஏன் போகணும்? இல்லை எங்க அம்மா தான் ஏன் போகணும்? நாங்க என்ன தப்பு செஞ்சோம்? காதலிச்சு தன்னோட குடும்பத்தையே உதறிட்டு எங்க அப்பாவை முறைப்படி முதல் முறையா கல்யாணம் பண்ணினவங்க எங்க அம்மா. அவங்களுக்கு முறையா பிறந்தவ நான். எங்களுக்கு இல்லாத உரிமை உனக்கு வந்துருச்சோ? நீ உருவான பிறகு வேற வழி இல்லாம ரெண்டாந்தாரமா உள்ள வந்தவங்க தான் உங்க அம்மா. அதை மறந்துராத. நீ எங்க அப்பா கூட இருக்குறது கூட எங்க அம்மா உங்களுக்கு போட்ட பிச்சை. என்னைக்கும் அவர் எனக்கு அப்பா தான். அதை யாராலயும் மாத்த முடியாது. போ இங்க இருந்து. இன்னொரு தடவை என் கிட்ட இப்படி வந்து பேசின எங்க அப்பா கிட்ட சொல்ல வேண்டியது இருக்கும். அப்புறம் என்ன நடக்கும்னு நீயே யோசிச்சிக்கோ. நீ வந்து பேசினது தெரிஞ்சா அப்பா அப்புறம் உங்க வீட்ல இருக்க மாட்டாங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள் அர்ச்சனா.
கோபத்தில் மூக்கு விடைக்க தோற்று விட்ட அவமானத்தில் வீட்டுக்கு வந்த மகளை இன்னும் ஏற்றி விட்டாள் மஞ்சுளா. இருவர் மனதிலும் அர்ச்சனா மற்றும் மீனாட்சி மீது வஞ்சமும் கோபமும் இருந்தாலும் அதற்கு பின் வெளியே காட்டாமல் இருந்தார்கள். ஏதாவது சொன்னால் நிச்சயம் சொக்கலிங்கம் தட்டிக் கேட்பார் என்பதால் அடக்கி வாசித்தார்கள்.
இது தான் அர்ச்சனாவின் குடும்பம். எவ்வளவு தான் பணம் சொத்து இருந்தாலும் இவர்கள் வீட்டில் யார் மனதிலும் நிம்மதி என்பது துளி கூட இல்லை.
இப்போது அர்ச்சனா ஒரு டாக்டர். அதுவும் கைனக்காலஜிஸ்ட். சென்னையில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவக் கல்லூரியில் சேர்த்து அவளை மருத்துவராக்கியது சொக்கலிங்கம் தான். அதே போல அவளை பாரினுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைத்ததும் அவர் தான்.
அஞ்சலிக்கும் அர்ச்சனாவை போல போட்டி போட்டு மருத்துவருக்கு படிக்க ஆசை தான். ஆனால் மஞ்சுளா தான் “இங்க பாரு அஞ்சலி, நீ இன்ஜினியரிங் படிச்சு எம்.பி.ஏ படி. அப்ப தான் உங்க அப்பாவோட கம்பெனியை நீ எடுத்து நடத்த முடியும். அப்படியாவது இந்த நிர்வாகம் நம்ம கைக்கு வரணும்”, என்று சொல்லிக் கொடுத்தாள் மஞ்சுளா. அது போல அஞ்சலி இன்ஜினியரிங் படித்தாள்.
சொக்கலிங்கத்தைப் பொறுத்த வரைக்கும் இரண்டு மனைவிகள் மீதும் இரண்டு மகள் மீதும் ஒரே மாதிரியான அன்பை தான் வைத்திருந்தார். ஒரு மகள் டாக்டர், ஒரு மகள் இன்ஜினியர் என்று அவருக்கு பெரிமிதமே.
அர்ச்சனா சென்னையில் அமைந்திருந்த ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கைராசியான டாக்டர் என்று பெயரும் வாங்க ஆரம்பித்தாள். அதே போல எம்.பி.ஏ படித்து முடித்த அஞ்சலி தினம் தினம் தந்தையிடம் “என்னையும் ஆபீஸ் கூட்டிட்டு போங்க பா. இனி நான் எல்லாம் பாத்துக்குறேன்”, என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் சொக்கலிங்கமோ “நீ சின்ன பொண்ணு அஞ்சலி. சட்டுன்னு என்னோட பிஸ்னஸ் சாம்ராஜியத்தை உன் கிட்ட என்னால தூக்கிக் கொடுக்க முடியாது. முதல்ல வேற ஒரு நல்ல கம்பெனில வேலைக்கு போ. நான் வேலை வாங்கித் தரேன்’, என்றார்.