நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.

அன்று, காலையில் காயத்ரி சீக்கிரமாக தோட்டத்திற்கு போக வேண்டும் என சொல்லி கிளம்பி கீழே வந்தாள். நேற்றே சொல்லி இருந்தாள்.. இன்று வெற்றிலை பறிக்க போகிறோம் என. 

கௌசல்யா மகளிடம் “காயூ, மாப்பிள்ளை போன் செய்தார்.. நீ எதோ கோவமாக இருக்கியாம்.. பேசி ஒருவாரம் ஆகுதுன்னு சொன்னார்.. ஏன் டா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மாப்பிள்ளை தூரமாக இருக்கார்.. என்ன ஏதுன்னு.. பேசினால் தானே புரியும். பேசு டா” என்றார் தன்மையாக மகளிடம்.

காயத்ரி திரு திருவென விழித்தாள். நான் பேசுவதே இல்லையே.. இதில் சண்டை கோவம் வேறு.. எப்படி சொல்லியிருக்காங்க.. என தோன்ற. அன்னையிடம் தலையை உருட்டிவிட்டு கிளம்பினாள் பெண்.

காயத்ரிக்கு, தோட்டத்தில் வேலைகள் சரியாக இருந்தது அந்த ஒருவாரமும். வீட்டில் சரியாக தன் இருப்பை காட்டாமல்.. வந்தோமா உண்டோமா என தப்பித்து தனதறைக்கு சென்றாள் பெண்.

அடுத்தவாரம், காயத்ரிக்கு பார்த்திக்கும் ஆதித்யாவின்  அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் ஆனது. 

எதோ மூட்டுவலி முன்பே இருந்திருக்கும் போல.. இந்தமுறை மாடிபடியில் ஏறும் போது கால் மடங்கி அப்படியே சரிந்துவிட்டாராம். அதனால் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என தகவல் வர.. உடனே கௌசல்யா மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார்.

மாலையில், கார்த்திக்கு அழைத்து.. காயத்ரியை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி சொல்லினார் கௌசல்யா.

காயத்ரிக்கு, மறுக்க முடியவில்லை. அண்ணனோடு கிளம்பி மருத்துவமனை சென்றாள். தயக்கம் என்றாலும்.. அவரின் உடல்நலமில்லா நிலை.. காயத்ரியை பேச வைக்க இயல்பாக விசாரித்தாள்.

ஆதித்யாவின் தந்தை விவரம் சொன்னார் “முன்னாடியே சொன்னாங்க ம்மா.. இப்போ, ஆபரேஷன் பண்ணா நல்லதுன்னு சொல்றாங்க. என்ன அதிகமா ஸ்டையின் பண்ணிக்க கூடாது. உங்க கல்யாணம் வேற இருக்குல்ல, அதான் யோசிக்கிறா” என்றார்.

காயத்ரிக்கு இதற்கென்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை.

கௌசல்யா மகளுக்கும் சேர்த்து பேசினார் “அதுதான் இன்னும் நாள் இருக்கே அண்ணா.. நீங்க ஆபரேஷன் செய்துக்காங்க. நாங்க எல்லாம் இங்கேதானே இருக்கோம். கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்தால், கல்யாண நாள் வரும்போது சரியாகிடுமில்ல” என்றார்.

ஆதித்யாவின் அன்னை காயத்ரியின் முகத்தையே பார்த்தார். வரபோகிறவள் ஏதேனும் அக்கறையாக சொல்லுவாளோ என. ஆனால், காயத்ரியால் அந்த அக்கறையை கொடுக்க முடியவில்லை. அமைதியாக துடைத்து வைத்த முகத்தோடு பெரியவர்கள் நால்வரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

கௌசல்யா “சொல்லு காயூ, உங்க மாமியார் கிட்ட” என்றார்.

காயத்ரி,  தன் வருங்கால அத்தையை பார்த்து புன்னகைத்தாள். ஏதும் பேசவில்லை.

இப்போது, காயத்ரியின்  வருங்கால மாமனார் “காயத்ரி, இந்தாம்மா.. ஆதி லையனில் இருக்கான்.. நீ வந்திருக்கேன்னு சொன்னதும் சந்தோஷம் அவனுக்கு, ரெண்டு வார்த்தை பேசி சொல்லு.. அவன் சந்தோஷ படுவான்” என சொல்லி போனை கையில் கொடுக்க.. அனிச்சையாய் வாங்கிக் கொண்டு.. அந்தபக்கம் சென்றாள் பெண்.

ஆதித்யா “ஹாய் பார்பி.. அம்மாவை பார்க்க வந்துட்ட. ஆனால், என்கிட்டே பேசமாட்ட” என்றான் அமைதியான குரலில். 

‘அய்..யோ…ஓ…’ என கத்த வேண்டும் போல இருந்தது. அமைதியாக “ம்.. இல்ல” என்றாள்.

ஆதித்யா “ஓகே. ஆப்ரேஷன் செய்யலாம்ன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற. நம்ம வெட்டிங்க்கு நாள் இருக்குல்ல. இப்போ செய்துகிட்டா  ரெஸ்ட்டில் இருக்கலாம். ம்.. நீ என்ன சொல்ற” என்றான்.

காயத்ரி “ம்.. சரிதான்” என்றாள்.

ஆதி “நீ வந்து பார்த்துக்கோ.. எனக்கு கொஞ்சம் ரெலிஃப்பாக இருக்கும் ம்.. ஒன்னும் கஷ்ட்டமில்லையே” என குரல் உரிமை கொண்டாடியது. அவ்வளவுதான் பெண்வளின் விரல்கள்.. அழைப்பை துண்டித்துவிட்டது. அப்படியே அங்கேயே நின்று.. போவோர்  வருவோரை வெறித்தாள் பெண். என்னமோ மனம் தாங்க முடியாத கனத்தை சுமந்தது.. கண்கள் கண்ணீரை கூட கொடுக்கவில்லை.. அமைதியாக அப்படியே வெறித்தாள்.

சற்று நேரத்தில் எல்லோரும் விடைபெற்று கிளம்பினர்.

காயத்ரி வீடு வந்தாள்.. உண்ணவில்லை. அன்னை கொடுத்த பால் மட்டும் அருந்திவிட்டு தனதறைக்கு சென்றுவிட்டாள்.

காயத்ரி காலையில் கிளம்பி நேரமாக தோட்டத்திற்கு சென்றுவிட்டாள். வீட்டில் கௌசல்யா “எங்கடி போற, இன்னிக்கு என்ன.. ஹாஸ்ப்பிட்டல் போகனும்.” என பேசிக் கொண்டே இருக்க, காயத்ரி “நீ கார் எடுத்துக்கோ அம்மா.. நான் டாக்ஸி புக் செய்துட்டேன்..” என்றவள் நிற்காமல் கிளம்பிவிட்டாள்.

அன்னைக்கு, என்னமோ பெண் சரியில்லை என தோன்றியது. கௌசல்யா, சம்பந்தி வீட்டை விட்டு கொடுக்க முடியாமல்.. சமையல் முடித்து.. ஒருமுறை சென்று பார்த்து வந்தார்.

சக்திவேல் நேற்று செல்லவில்லை. எனவே, இன்று மாலையில் பெண்ணோடு சென்று வரலாம் என காயத்ரிக்காக காத்திருந்தார்.

காயத்ரி இன்னும் வரவில்லை.

காயத்ரி, காலையில் தோட்டம் வந்துவிட்டாள். அங்கே இருந்தால்.. ஏதாவது சொல்லுவார்கள் என எண்ணி.. இங்கே வந்தாள். சரியாக ஆதித்யாவின் அழைப்பு வந்தது அவளுக்கு. காயத்ரிக்கு, கோவமாக வந்தது தன்மேல்.. பரணிமேல்.. இந்த அம்மாமேல்.. ஏன், விடாமல் ஒலிக்கும் இந்த போனின் மேல் என எல்லோர் மேலும் கோவமாக வந்தது.

மதியம், வேலை செய்பவர்கள்  சமைத்த உணவை உண்டாள். எந்த வேலையும் பார்க்கவில்லை.. அமைதியாக ஒவ்வொரு கொடிக்கும் நடுவில் நின்று நின்று எதையோ தேடினாள். அவளால் பாரத்தை தாங்க முடியவில்லை.. கண்மூடினால், அவன் முகம். இப்படி ஆதி அழைக்கும் போதெல்லாம் பரணியின் மேல்தான் கோவம் வருகிறது.. அன்று, கடையில் பேசியது வேறு காதில் கேட்க்க.. பரணி நினைவுதான். பரணியின் பார்வை ஸ்பரிசம்தான் அவளின் மனதுள் முதல்  மழை. மீண்டும் அன்று கடையில்.. அவனின் கண்களில் தேடல் கண்ட பெண்ணவளின் மனம்.. மீண்டும் தனக்குள்.. அவனின் பார்வையை ஸ்பரிச மழையாய் எதிர்பார்த்தாள். இப்போதும் மழை வரும் அறிகுறிதான்.. அதுவும் பரணி மழை வரும் அறிகுறிதானே அன்றி.. வேறு மேகம் ஏதும் அவளுள் வரவே இல்லை. என்ன செய்வது என தெரியவில்லை. அவளிடம் எந்த ஆதாரமும் இல்லை.. ஆதாரம் காதலுக்கு தேவையில்லைதான். ஆனால், இது காதல் தானா என ஆதாரம் வேண்டி இருந்தது அவளுக்கு. அந்த நிலையில் அவளை வைத்திருந்தான் பரணி. ம்.. அவன்மேல் கோவம்தான். ஆனாலும், அவன்மேல் மட்டும்தான் காதல்.

“யாரடா யாரடா..

நீ என்னுள் யாரடா..

பேரலை போல நீ..

பாய்கிறாய் பாரடா..”

ஆதியும் இடைவெளி விட்டு விட்டு காயத்ரியை அழைக்க. காயத்ரி, நான்குமணிக்கு மேல்.. என்ன செய்வது என தெரியாமல்.. டாக்ஸி புக் செய்தாள் பஸ்ஸ்டான்ட்க்கு. கார் வரவே லேட் ஆனது. ஆறு மணிக்கு மேல் பஸ் ஸ்டான்ட் சென்று இறங்கிக் கொண்டாள்.. எங்கே செல்லுவது என தெரியவில்லை. யாரின் முகத்தை பார்க்கவும் பிடிக்கவில்லை. அதுவும் பரணியின் முகத்தை பார்க்கவே மாட்டேன். ஆனாலும் அவன் முகத்தை பார்க்க மட்டுமேதான் ஆசை அவளுக்கு. அது அவனாக வந்து.. ஆமாம், நான் விரும்புகிறேன் என சொன்னால் மட்டுமே பார்க்க ஆசை. அதுவரை.. எனக்கு அந்த முகத்தை பார்க்க பிடிக்கலை.. பார்க்கவும் மாட்டேன் என ஒரு வீம்பு வந்தது பெண்ணுள். என்ன செய்வது என தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றாள்.

சிறிது நேரத்தில் கண்டெக்டர் ஒருவர் “எங்க மா போகனும்” என்றார்.

அதில் நினைவு வர பெற்றவள்.. அந்த பஸ் போர்ட் பார்த்தாள் ஈரோடு என இருந்தது. கையை காட்டி ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

கார்த்திக் அண்ணாவிற்கு “அண்ணா சாரி. எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் போறேன். என்னை கூப்பிடாதே” என அனுப்பிவிட்டு. போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாள் பெண்.