கார்த்திக் காரில் அமர்ந்திருந்த பரணியை உள்ளே அழைத்து வந்தான் வலுகட்டாயமாக. பரணி “அக்காவை கூப்பிடுங்க கிளம்புகிறேன் நேரம் ஆகிவிட்டது” என்றான்.
விடவில்லை கார்த்திக் “வா பரணி.. எவ்வளோ நாளாட்சி வா..” என காரில் கதவை திறந்தான். அதற்குமேல், உள்ளே செல்லாமல் எப்படி இருக்க முடியும். உள்ளே வந்தான் பரணி.
முன்பே.. தெரிந்தவர்கள் என்றால் கூட அளவாகதான் சிரிப்பான்.. இப்போது அதுவும் இல்லை, அதுவும் இங்கே.. காயத்ரியை பார்க்க போகிறோம் எனும் போது இறுக.. மனதோடு சேர்த்து உதடுகளையும் மூடிக் கொண்டான்.
பரணியை எல்லோரும் வரவேற்றனர் சக்திவேல் “வா ப்பா, சாப்பிடலாம்” என்றார்.
கௌசல்யா “வா பரணி ரொம்ப நாளாச்சு உன்னை பார்த்து.. எப்படி இருக்க.. இளைச்சி போயிட்ட.. வேலை அதிகமோ” என்றார்.
பரணி “அஹ.. இல்ல அத்தை நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றான்.
கார்த்திக் “வா சாப்பிடலாம், உனக்காகத்தான் வைட்டிங்” என முன்னே நடந்தான்.
பரணி பின்னோடு செல்ல வேண்டி இருந்தது.
அங்கே காயத்ரி தந்தைக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். பரணியின் கண்ணில் அவள் விழ.. பார்க்க கூடாது குனி கீழே குனி என மூளை சொன்னாலும், கண்கள் அதன் பேச்சை கேட்க மறுத்து.. அவளையே இமைக்காமல் பார்த்து அமர்ந்தான். கார்த்திக்கும் பரணியும் அருகருகே அமர்ந்தனர்.
பரணி இப்போது.. சக்திவேலை பார்த்து சிரித்து வைத்தான்.
காயத்ரிதான் பரிமாறினாள்.. பரணியின் இடது பக்கமாக வந்து நின்று.. சப்பாத்தி.. அதற்கு தொட்டுக்கொள்ள.. என காயத்ரி கை நீட்டி.. அவனின் முகம் பார்க்காமல் இயந்திரமாக பரிமாற.. இருவரும் இப்போதுதான் அரண்டு போனான்.. காதல் என்பது என்ன செய்யும் என.. உணர்ந்தனர் இருவரும். தகித்து தவித்து போயினர். இவளை மறந்திடுவேன்.. என அவனும்.. கடந்திடுவேன் என அவளும்.. இருந்த நிலையில்.. இந்த அருகாமை இருவரையும் தகித்தது.
காயத்ரியின் கைகள் லேசாக நடுங்குவது.. பரணியின் கண்களுக்கு தெரிந்தது. எதோ பாதுஷா போல ஒரு ஸ்வீட் எடுத்து வைக்கிறாள்.. விரல்கள் நான்ங்கும் மைக்ரோ செகண்ட் விட்டு விட்டு.. நடுங்குகிறது. அதை பார்த்தவன் மனதும் நடுங்குகிறது. நடுங்கும் அவன் மனதை.. அருகில் இருந்து ஈர்க்கிறது அவளின் ப்ரத்தேயக வாசம். அவன் நாசியை இம்சையாய் தாக்க.. உதடுகளை மூடி.. சுவாசிப்பை நிறுத்திக் கொள்ளுகிறான் ‘வேண்டாம்.. இது எனக்கானது அல்ல..’ என சொல்லிக் கொள்ளுகிறான். சுவாசம் தப்பியதில்.. சட்டென இருமல் வந்தது பரணிக்கு.. காயத்ரி அலட்டாமல்.. தன்போல தண்ணீர் எடுத்து கொடுத்தாள் அவனிடம்.
அஹ.. பரணி இப்போதும் விரல்கள் படமால அந்த தண்ணீர் குவளையை வாங்கிக் கொண்டான். காயத்ரி சற்று தள்ளி நின்றுக் கொண்டாள். அழகான லாங் ஸ்கர்ட்.. ஒரு சல்வாரின் டாப் அணிந்துக் கொண்டிருந்தாள்.. முன்போல.. அவளின் முகத்தில் கள்ளமில்லா பாவம் இல்லை. கல்லான பாவம்தான் வந்திருந்தது.. பரணிக்கு அதை தாங்கவே முடியவில்லை.. ‘நான்தான் காரணம் அவளின் குறும்புகளை பறித்துக் கொண்டேன்.. சந்தோஷமாக இருந்தவளை.. இப்படி அமைதியாக்கிவிட்டேன்’ என எண்ணிக் கொண்டே வைத்த உணவுகளை விழுங்கினான்.
கார்த்திக் “காயத்ரிக்கு அடுத்த வாரம் சிம்பிள்லாக நிச்சயம் பரணி. மாப்பிள்ளை US ல இருக்கார். அவரால், நிச்சயத்துக்கு வரமுடியாது.. அதனால், சிம்பிளாக நெருங்கிய உறவுகளோடு மட்டும் நடத்த போறோம். கல்யாணம்.. அவருக்கு எப்போ டிக்கெட் கிடைக்கும்ன்னு பார்க்கணும்.. மண்டபம் பார்க்கணும்.. ம்.. என்ன பண்றதுன்னு தெரியலை” என அவ்வபோது பரணியை ஆராய்ந்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தான்.
பரணிக்கு, பதில் பேசவோ.. உணவை மெல்லவோ கூட சக்தியில்லாதவனாக அமர்ந்திருந்தான்.
இப்போது காயத்ரி “சப்பாத்தி ஒன்னு” என்றாள்.
பரணி நிமிர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு வேண்டாம் என்றான்.
இப்போது சாரதா பிஸ்தா கீர் என இரு குவளைகளை கொண்டு வந்து பரணியின் அருகே ஒன்றும், கார்த்தியின் அருகே ஒன்றும் வைத்தவள் “காயத்ரி செய்தது.. இப்போவெல்லாம் சூப்பரா சமைக்கிறா.. ம்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என கார்த்திக்கும் பரணிக்கு பொதுவாக சொன்னாள்.
பரணி திக்கி திறனறி உண்டுவிட்டு எழுந்தான். ‘இந்த கீர் குடிக்கும் அளவுக்கு எல்லாம் என்னிடம் மனதில்லை’ என எழுந்துக் கொண்டான். கைகழுவ எழுந்துக் கொண்டான்.. அப்படியே “அக்கா, டைம் ஆச்சு” என்றவன். நேராக முன்பக்கம் சென்றுவிட்டான்.
ஆனால், அந்த இரவு இருவரையும் சுட்டது. தங்களை தாங்களே இவ்வளவு தேடுவோமா என கண்டுகொண்டனர். காதலின் நெருக்கத்தைவிட நேசத்தின் வலிக்கு எப்போதும் அழுத்தமும்.. வன்மையும் அதிகம். இருவரின் பொறுப்பான மனதுதான் இங்கே காயம் கண்டு போனது. நேசம் கொண்டவர்களின் வாசம்.. இப்போதுவரை.. இவரின் சுவாத்திலும் கலந்திருந்தது போல.. காயத்ரி அமைதியாக எதையோ ஏற்க முயன்று.. கண்ணில் நீர் கசிய தோற்றுக் கொண்டிருந்தாள். பரணியோ.. முதல்முறையாக இனியன் பிறந்தநாள் விழாவில் எடுத்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தான்.
“பறக்காத பறவைக்கெல்லாம்…
பறவையென்று பெயரில்லை..
திறக்காத மனதில் எல்லாம்
களவு போக வழியில்லை..
தனிமையில் கால்கள்
எதைத் தேடி போகிறதோ..
திரி தூண்டிபோன..
விரல் தேடி அலைகிறதோ..”
நாட்கள் வேகமாகவே கடந்தது.
காயத்ரி இப்போதெல்லாம்.. குழந்தைகளை கொஞ்சுவதே இல்லை.. எதோ தோட்டத்தில்தான் தன் உயிர் இருப்பது போல.. அடிக்கடி தோட்டம் சென்றுவிடுகிறாள். வீட்டில் எல்லோரும் ‘நிச்சயம் தேதி குறிச்சாச்சு.. இன்னும் என்ன.. இப்போவெல்லாம் முகமே சரியாக இல்ல.. கருத்து போச்சு.. உடம்பை கவனி காயூ’ என எல்லோரும் சொல்லிவிட்டனர்.
ஆனால், காது கொடுத்து கேட்பதேயில்லை அவள். ஏதும் காதிலேயே விழாதது போல “வெத்தலை.. தழைய ஆரம்பிச்சாச்சு.. இயற்கை பூச்சிக் கொல்லி வைக்கனும் இன்னிக்கு.” என ஏதேனும் காரணம் சொல்லி கிளம்பிவிடுவாள்.
என்னமோ சிரித்து பேசி.. கலாட்டாக்கள் இல்லை அவளிடம்.. முன்பு எல்லோரிடமும் உரிமையாக பேசுபவள்.. இப்போது எல்லோரையும் தள்ளி வைத்தாள்.. பார்வையால்.. பேச்சால்.. என எல்லாவற்றாலும் தன் வீட்டு மனிதர்களை தள்ளி வைத்தாள் காயத்ரி.
கெளசல்யாவிற்கு லேசாக பயம் சூழ தொடங்கியது. ஆனால், கணவரிடம் இதை சொல்லும் தைரியம் இல்லையே. எனவே, பெண்ணின் எல்லா செயல்களுக்கும் ஒத்து போனார்.. “அவளை பற்றி தெரியாதா.. தோட்டம்ன்னா உயிரு.. கல்யாணம் வேற ஆகபோகுது.. போயிட்டு வரட்டுமே. இங்க இருக்கும் வரைதானே.” என சப்போர்ட் செய்ய தொடங்கினர்.. அவளின் ஒட்டாதன்மையை மறைக்கும் வண்ணம்.
காயத்ரியின் நிச்சய விழா இன்று. அதிகம் யாரையும் அழைக்கவில்லை.
இரு வீட்டு பெரியவர்கள்.. மற்றும் முக்கியமான உறவுகள்.. பொதுநபர்கள் நால்வர்.. என அழைத்து நல்ல நாளில் பெண் பார்த்து.. பூ வைத்து ஒப்பு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். எளிமையான விழாவாக, காயத்ரியின் வீட்டிலேயே இன்று நடந்தது.
பரணி, விழாவிற்கு வந்து.. அன்னை தந்தையை இறக்கிவிட்டு கிளம்பிவிட்டான். கார்த்திக் துளசி.. சக்திவேல் என எல்லோரும் கேட்டனர் ‘எங்கே பரணி’ என.
தணிகாசலம் “வேலையிருக்குன்னு கிளம்பிட்டான்.. வருவான். நைட் சாப்பிட வர சொல்லியிருக்கோம்.. லேட் ஆகும்” என்றார் தன்மையாக.
விழா இனிதாக தொடங்கியது. மாப்பிள்ளை பளீச்சென தயாராகி அமர்ந்திருந்தான்.. வீடியோ காலில். காயத்ரி அரைத்த மஞ்சள் நிறத்தில் பட்டு கட்டி.. தோதான அணிமணிகள் அணிந்து.. தேவலோக தேவதையென துளசியோடு.. படியில் இறங்கினாள்.
துளசி “சிரி காயூ.. பயமா.. ஏன் இப்படி இருக்க..” என சொல்லிக் கொண்டே அவளை அழைத்து வந்து முன் நிறுத்தினாள்.
காயத்ரிக்கு, பரணி என்றவனின் வாடிய முகமே நினைவில் வந்தது. இப்போது.. தன் அண்ணியை திரும்பி பார்த்தாள் முறைப்பாக. துளசி வாயை மூடிக் கொண்டாள்.
காயத்ரி அலட்டாமல் எல்லோருக்கும் பொதுவாக நமஸ்காரம் செய்தாள்.. பெரியவர்கள் சொன்னதை எல்லாம் செய்தாள் ப்வ்யமாக. காரணமே இல்லாமல் சந்தோஷமாக இருப்பவளுக்கு.. இன்று ஆயிரம் காரணங்கள் இருந்தும்.. துளி புன்னகைக்க இல்லை. ‘எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்.. சிடுமூஞ்சி.. நான் நல்லாதான் இருப்பேன், சரியாகிடுவேன்..’ என சமாதானம் சொல்லிக கொண்டே.. அந்த வீடியோ காலில் “ஹாய் ஆதித்தியா” என்றாள் பெண்.
பரணி அலுவலகத்தில் அப்படியே தனது இருக்கையில் அமர்ந்திருந்தான். ஊழியர்கள் எல்லோரும் வேலை முடித்து சென்றுவிட்டிருந்தனர். நேரம் மணி ஒன்பது. எதையோ எங்கோ தொலைத்த நிலை அவனுடையது. தெரிந்தே தொலைத்தவன் எப்படி துக்கம் கொண்டாடலாம். அதற்கு உரிமை இல்லையே அவனுக்கு. எந்த உரிமையும் இல்லாமல்.. இங்கே தேவதை கோலம் கொண்டிருந்தவளை.. கண்மூடிக் கொண்டே.. நினைத்துக் கொண்டிருந்தான் ‘ம்.. சந்தோஷமாக இரு’ என சொல்லிக் கொண்டே.