அழகு 39

  இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது ‘பாஸ்’ என்ற கதறலோடு மகவைப் பெற்ற ராதிகா ஆழ் மயக்கத்திற்கு சென்று , அன்று தாயிடம் சொன்னது போலவே கொச்சின் விமான நிலையம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தவனை, ஜானகி தன் பேரனைக் கையில் வைத்துக் கொண்டு  கட்டிக் கொண்டு அழுகவும் , மகனைக் கையில் வாங்கிக் கொண்டு ,

“ம்மா… ர.. ர …. ரதி ” என வார்த்தைகள் தந்தியெடுக்க கேட்டவனைப் பார்த்த ரமேஷ் ,

“மச்சான் ….. தங்கச்சிக்கு ஒன்னுமில்லடா …. ஆனா .. ஆனா ரொம்ப நேரமா கண்ணு முழிக்கல ….. மயக்கத்தில இருக்கா” எனத் தடுமாற , மனைவியைச் சென்றுப் பார்த்தவனுக்கு பேச்சே வரவில்லை , பல இயந்திரங்களுக்கு நடுவில் கையிலும் முகத்திலும் பல்வேறு கருவிகள் மாட்டப்பட்டிருக்க கண்களை மூடி உறங்குவது போல் இருந்தவள் அருகில் சென்றவன் , தொண்டை கரகரக்க….

“ஹேய் கேகே … என்ன ரொம்ப நேரமா தூங்குறியாம் … எழுந்திரி… நான் வந்து எவ்வளவு நேரமாகுது , வெளியூர் போய்ட்டு வந்தா வழக்கமா தர்ற ஸ்வீட் கூட தராம..… ” என்றுப் பேசியவனால் அதற்கு மேல் அழுகையை அடக்கமுடியவில்லை.

ஒரு நர்ஸ் மட்டுமே அந்த வார்டில் இருக்க … அவர் என்ன செய்வது என்றுத் தெரியாமல் விழிக்க , வெளியே வந்து மருத்துவரிடம் தகவல் அளித்தார்.

அந்த மருத்துவமனைக்கு அவர்கள் குடும்பத்தாரால் வழி வழியாக நிறைய உதவிகள் செய்யப்ட்டிருப்பதோடு அவர்களது நிறுவன பங்குகளும் பெற்றிருந்ததால், தான் சொன்னதும் அவன் வரும் வரை அவளுக்கு மருத்துவம் செய்துக் கொண்டிருந்த அத்தனை மருத்துவர்களும் அங்கு வந்து விட்டனர்.

அவனை அவர்கள் தனியாக அழைத்துச் சென்று , இரத்த அழுத்தம் அதிகமானதால் …. உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தால் … அளவுக்கதிகமான இரத்தப் போக்கால் …. PPH அது இது என ஆங்கிலத்திலும் புரியாத என்ன என்னவோ மருத்துவ வார்த்தைகளைக் கூறி இதனால் தான் என்றாலும் …. கடுமையான மன அழுத்தமே முக்கியக் காரணம் ….அதிலும் அவனது கார் ஆக்ஸிடென்ட் என்ற வார்த்தையைக் கேட்டுத்தான் அவள் இப்படி ஒரு நிலைக்கு ஆளானது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள். சிலருக்கு மனச்சிதைவு நோயில் கொண்டு விடும் … சிலர் இப்படி நிலைக்குச் செல்வார்கள் என்று விட்டார்கள்.

அதிலும் அவள் கடைசியாக அரவிந்தின் கார் விபத்துக்குள்ளானதைக் கேட்டதும் அவள் கூறிய வார்த்தைகளை அரவிந்திடம் சொன்னவர்கள் .. ராதிகா அரவிந்திற்கு என்னவோ ஆகி விட்டது என்றக் காரணத்தினால் மன அதிர்ச்சிக்கு ஆளாகி அவள் தன் உணர்வுகளை இழந்து விட்டாள் என்றனர்.

அரவிந்த் அப்படியே உறைந்து விட்டான் … அவன் அம்மா … மாமன் மனைவி அதாவது ராதிகாவின் தாய் இருவருமே இப்படிப்பட்ட ஒரு சூழலில் தானே தன் நினைவை இழந்தார்கள்….. அது ராதிகாவையும் விட்டு வைக்கவில்லயா….

இந்த நிலை ஆறு மணி நேரமாகவோ , ஆறு நாட்களாகவோ அல்லது ஆறு மாதங்களோ சொல்ல இயலாது என்று விட்டனர். தங்களால் ஆன முயற்சிகளை செய்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தனர். அரவிந்தை யாராலுமே சமாளிக்க முடியவில்லை … அந்த அளவிற்கு மனம் உடைந்துப் போனான்.

மருத்துவர்கள் அவன் நன்றாக இருப்பதையும் உயிருடன் அவளருகில் இருப்பதையும் அவளருகில் அமர்ந்து அவள் உணரும்படிச் செய்யுங்கள் என்றார். குடும்பமே ஓய்ந்து போய் இருந்து விட்டார்கள். குழந்தைக்கு நர்ஸ்களின் உதவியோடு தாய்ப்பால் புகட்டப்பட்டது. மகனின் ஸ்பரிசம் அவளை மீட்டுக் கொண்டு வராதா என்று ஏங்கினார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த ஒரு வாரமும் அரவிந்த் ராதிகாவை விட்டு நகரவில்லை .அன்று அவளை பரிசோதித்த மருத்துவக் குழு … எப்போது விழிப்பாள் என்றுச் சொல்ல முடியாது என்று விட்டனர்.

” கே கே எந்திரிச்சு வா…. இங்க பார் உன் பாஸ் சின்ன கீறல்க் கூட இல்லாம முழுசா உன் முன்னால நிக்கிறேன் ….. ஸ்ரீயை பார்த்தியா , பசியமர்த்தினா போதுமா … எந்திரிச்சு வாடா ….இந்த ஏசி ரூம் உனக்கு குளிரல ….. வா….போ.… போர்வை போர்த்தி விடுறேன்.” என்று   அவள் ஊசிகளில்லாத இடக்கையை பிடித்துக் கொண்டு விழிகளில் நீர் திரள  அமர்ந்திருந்தான்.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இதற்கு பெயர் போன மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து மருத்துவம் பார்த்தும் ராதிகா எழவே இல்லை .அவளது நீண்ட கூந்தல் பராமரிக்க செவிலியர்கள் சிரமப்பட அதனை சிறியதாக வெட்டி விட அனுமதித்த அரவிந்துக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. தினமும் அவளைப் படுக்கைப் புண் வராது பராமரிக்கும் செவிலியர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காது தானே ராதிகாவை குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டான்.

மூன்று மாதம் இருக்கும் தந்தையின் முகமும் தாயின் முகமும் அறிந்துக் கொண்ட குழந்தை தந்தையிடமே இருந்தது. அவனை வைத்துக் கொண்டு உள்ளேயே இருப்பது கூடாது என்பதால் வெளியே குழந்தையை அழைத்துக் கொண்டு வரும் போது தான் , ரமேஷ் அனைத்துப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு செய்வது மனதை உறுத்த , பகலில் சிறிது நேரம் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான் .

ஜானகி தான் மகனையும் தேற்றி பேரப்பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டார். ஒரு நாள் எழுந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் அவளருகில் அமர்ந்து தினமும் பேசிக் கொண்டு இருந்தான் அரவிந்த்.

“உங்கம்மாவ சொன்ன ….இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க… ம்…. ஸ்ரீயை தவிக்க விட்டு நான் தான் பெரிசுனு தானஇப்படி இருக்க ….இனி உங்கம்மாவ திட்டு அப்புறம் பாரு…. காதல் பிடிக்காதாம்…. காதல்னா என்னனு தெரியாதாம்…. போடா ….இதுக்குப் பேர் காதல் இல்லாம என்னது ….. நானெல்லாம் என்ன லவ் பண்ணேன். இப்படி தான் உன் காதல நிரூபிக்கணுமா …. தூங்குறத பாரு….. எந்திரிச்சு வா … வந்து எனக்கு தூங்கணும் பாட்டுப் பாடுங்கனு சொல்லிப் பாரு உனக்கு இருக்கு ….இனி உனக்கு பாட்டு பாட மாட்டேன் ….”

இப்படி எதற்குமே எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் உறங்கியவளை எந்த வகையில் எழுப்ப என்று உலகம் முழுவதும் சல்லடைப் போட்டுத் தேடி மருத்துவக்குழுவை இந்தியா அழைத்து வந்தவன். அவளைக் கேட்பவர்களிடம் படிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறாள் என்பதாக அறிவித்துவிட்டான். மீடியாக்காரர்கள் காதுகளுக்கு செல்லாமல் எப்படி செய்ய முடியுமோ எல்லாவற்றையும் ரமேஷ் பார்த்துக் கொண்டான்.

அங்கு பணிபுரியும் ஒரு கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் அரவிந்தின் நிலையைக் கண்டு அவனிடம் ,

“சார் நான் இங்க வேலை செய்றேன் தான். இந்த மாதிரி உங்க கிட்ட சொல்றதும் தப்புதான். ஆனா உங்களப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு … மனைவி மேல இவ்வளவு அன்பையும் காதலையும் வச்சுருக்கிற ஒருத்தர நேர்ல பார்க்கிறேன்னுக் கூட சொல்லலாம். அதுதான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே … இதனால என் வேலைப் போனால் கூட பரவாயில்லைனு சொல்றேன் சார்….” என நிறுத்த ,

“சிஸ்டர் … நீங்க சொல்லப் போற விஷயத்துனால என் ரதி திரும்ப எழுந்து வருவான்னா … என் உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கேன்…. சொல்லுங்க சிஸ்டர்.”

அவனது பதிலில் நெகிழ்ந்த அவர் , “சார் நான் கேரளாங்கிறதுக்காக அப்படிச் சொல்லல ….. ஆனா இது சாத்தியம்ங்கிறதுக்காக சொல்றேன் … அது… அது கேரள ஆயுர்வேத மருத்துவத்துல நிறைய வியாதிகளை குணமாக்ககூடிய சக்தி இருக்கு .அதுவும் இப்படி அதிர்ச்சியில ஆழ்நிலை மயக்கத்துக்கு போனவங்கள தொன்னுத்தொன்பது சதவீதம் மீட்கலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு…. நீங்க முடிஞ்சா ட்ரை பண்ணுங்க என்றவர் அவருக்குத் தெரிந்த ஓர் இடத்தையும் சொல்லிவிட்டு சென்றார்.

ராதிகாவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்ததால் இவனிடம் பேசிய செவிலியரை எந்த விதத்திலும் சேர்க்காது மருத்துவர்களிடம் பேசி , ஆயுர்வேத மருத்துவத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தெளிவுப்படுத்தி அவனுக்கு திருப்த்தியான பிறகே திருவனந்தபுரத்திலிருந்து சிறிது தள்ளி இருந்த தீவு போன்ற ஒரு அழகிய கிராமத்தில் இயங்கும் மிகப் பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.

அது கடலை ஒட்டிய , தென்னை மரங்களும் , பசுமையும் சூழ்ந்த ஒரு பகுதி ,அங்கு சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. குடும்பத்தினர் எல்லோரும் தங்க அனுமதி இல்லாததால் அரவிந்த் அந்தப் பகுதியிலயே ஒரு வீட்டை உடனடியாக வாங்க ஏற்பாடு செய்து , அங்கு ஜானகியையும் மகனையும் மட்டும் அழைத்துச் சென்றான். குழந்தையையும் அதிகமாகக் கூட்டிக் கொண்டு வர இயலாது என்பதால் சிறிது சிறிதாக ராதிகாவிடமிருந்து பாலைச் சேகரித்து புட்டியில் தர, முதலில் தாயின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்த குழந்தை பின் சிப்பருக்கு பழகி விட்டது.

அன்றோடு அங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆனது .ஆம் நான்கு மாதங்களாக ஆங்கில மருத்துவ சிகிச்சைப் பெற்றவளை இங்கு அழைத்து வந்து இரு மாதங்களானது . சிறிது சிறிதாக அவளது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் அவன் அங்கேயே இருந்தான்.

அவளது சிகிச்சை நேரம் போக மனைவியின் அருகிலேயே தான் இருந்தான் அரவிந்த்.ரமேஷ் சிவா போன்றவர்கள் அவனின் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு  அவனை இயன்ற அளவு அதிக தொந்திரவுக்கு ஆளாக்கவில்லை.

ஆறு மாத மகனை சிறிது நேரம் அவளருகில் விட்டு விளையாட , குழந்தையின் ஸ்பரிசம் உணர்ந்தாளோ என்னவோ கை விரல்களை அசைக்க ஆரம்பித்தாள். இதைக் கண்டு மகிழ்ந்தவன் , தினமும் குழந்தையை அருகில் விட , அது ஒரு குளிர் காலம் என்பதாலும் மழையும் பெய்யவும் , குழந்தைக்கு உடல் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. ஜானகியை அழைத்து வராததாலும் மழையில் குடிலில் இருந்து அழும் குழந்தையை வெளியேக் கொண்டு வர இயலாமல் , மழைவிடுவதற்காக காத்திருந்தவன் , குழந்தையை தோளில் போட்டு ‘பூவிலே மேடை ‘எனப் பாட ஆரம்பித்தான்.

இருள் பரவிக் கொண்டிருந்த நேரம் , மழையும் பெய்ததால் மகனை எப்படி வெளியே அழைத்துச் செல்வது என்று யோசித்தவன் மனைவியை , அவளது கண்களை கவனிக்காது விட்டு விட்டான்.  குழந்தையின் அழுகுரலோ , கணவனின் குரலோ .. அல்லது அந்தப் பாடலோ ஏதோ ஒன்று அவளது காதுகள் வழியாக மூளையைச் சென்றடைய கண்களின் ஓரம் கண்ணீர் வழிய ஆரம்பித்தது , கைகளும் கால்களும் சென்று குழந்தையைத் தூக்கச் சொல்கிறது. ஆனால் முடியவில்லை.

மழை சிறிது விடவும் ராதிகாவைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணிடம் சொல்லிவிட்டு அவன் குழந்தையை அழைத்துச் சென்று விட்டான். ஒரு வழியாக மழையில் வீடு வந்து சேர , அங்கு ஜானகியும் குளிரில் நடுங்கிக் கொண்டு இருக்கவும் ,அரவிந்துக்கு மனம் மிகவும் நொந்துவிட்டது.

அவரையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைச் செல்ல , குழந்தைக்கும் ஜானகிக்கும் காய்ச்சல் அதிகமாகி அங்கேயே அட்மிட் செய்யச் சொல்லிவிட்டார்கள்.