இப்போது அழுத்தமானவனின் குரல்.. “இங்க கொடுங்க.. நான் செய்கிறேன்” என அந்த அமைதியில்.. சிதறும் கண்ணாடியின் ஒலியோடு.. வெண்பனிகட்டி தொண்டையில் இறங்குவது போல சில்லென்றும்.. பெண்ணவளை திடுக்கிடவும் குளிர்விக்கவும்  செய்தபடி  காயத்ரியின் காதில் விழுந்தது.

காயத்ரி, திடுக்கிட்டு.. நிமிர்ந்தாள். எதிரில் பரணி.. அந்த பொருட்களை ஆராய்ந்தபடியே, எதோ ஒரு பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு.. நின்றான் அவள் எதிரில். அவளை பார்க்கவில்லை.. அந்த பொருட்களை ஆராய்ந்தபடி நின்றான் இயல்பாய்.

அமர்ந்திருந்த காயத்ரிக்குதான் இப்போது சர்ப்ரைஸ் ஆனது.. என்னது பரணியா! என ஒரு அதிர்வு.. சில்லென்ற அதிர்வுதான்.. நிமிர்ந்து பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.. கண்கள் இமைக்க மறந்தது.

பரணி “ம்.. கொடுங்க, அவன் வந்திடுவான்..” என நின்றபடியே காகிதங்களை கத்தரிகோல் கொண்டு வெட்டி.. அந்த அளவுகளை சரிபார்த்து மடக்கி என வேலையை தொடங்கினான் இயல்பாய்.

பரணி மாமாவா இது.. என்ன அதிசியம்.. என பெண்ணவளின் எண்ணத்தில் அவன் நுழையும் சமயம்.. பரணி “எங்க டேப்.. செல்லோ டேப் எங்க” என்றான் வேலையில் கவனமாக.

காயத்ரிக்கு, மாயவலை அறுந்தது.. ஏதும் பதில் சொல்லாமல்.. செல்லோ டேப் எடுத்து சின்ன அளவில் வெட்டி.. டேபிள் மீது வைக்க.. வைக்க.. பரணி எடுத்து.. கடகடவென பேக் செய்தான் பொருட்களை.

மொத்தம் எட்டு பரிசு பொருட்கள்.. சாக்லேட் தொடங்கி.. ஓரிக்ராமி பேப்பர்.. ரோபோ பொம்மை போன்ற கார்.. கலரிங் பிருஷ்ஷஸ்.. சீட்ஸ் பென்சில்.. போகிமேன் என ஏதேதோ.. பொருட்கள். சிறிதும் பெரிதுமான பேக்கிங்கில் அழகாக பரணி பேக் செய்து கொடுத்தான்.

பரணி எல்லாம் முடித்து.. ஒன்றுமே பேசாமல் செல்ல எத்தனிக்க.

காயத்ரி அவசமாக “தேங்க்ஸ்..” என்றாள் எழுந்து நின்று, அவனுக்குதான் மரியாதை முக்கியமே.. அதுவும் இன்று கேட்க்காமல் உதவி இருக்கவும், எழுந்து நின்றாள்.. குழந்தையாக இல்லாமல், குமரியாக எழுந்து நின்று சொன்னாள்..

செல்லுவதற்கு எத்தனித்த பரணியின் கால்கள் ஒரு நொடி ‘மாமா’ என முடிப்பதற்காக நின்றது போல.. ஒரு சின்ன தேக்கம் வந்துவிட்டிருந்தது அவனின் நடையில். அஹ.. சின்ன ஏமாற்றம் அவனுக்கு. அவள் ‘மாமா’ என சொல்லவில்லை எனவும்.. திரும்பி பார்த்தான் காயத்ரியை ‘புன்னகைத்தானா’ என தெரியாத அளவில்.. தலையசைத்து சென்றுவிட்டான், உள்ளே.

காயத்ரிக்கு, பரணியின் பார்வை.. நொடிகளுக்கும் குறைவான பார்வை என்னமோ தாக்கியது.. ‘ஏன் தேங்க்ஸ் தானே சொன்னேன்..’ என சாதரணமாக கடக்க எண்ணினாள்.. ஆனால், எதுக்கு திரும்பி என்னை பார்த்தாங்க’ என கேள்வியாக எழுந்தது. யாரோ அவளை அழைக்கும் சப்தம் கேட்க்க.. அவசமாக எல்லா பொருட்களையும் கட்டபையில் எடுத்துக் கொண்டு.. ஹாலுக்கு வந்தாள் காயத்ரி.

கார்த்திக் கேக் எடுத்து வைத்து.. எல்லாம் தயார் செய்திருந்தான்.

இனியன் நடுவில் நிற்க.. உமேஷ் அருகில் நிற்க.. சாரதா இருவருக்கும் அருகில் நிற்க.. எல்லோரும் ஹாப்பி பர்த்டே என பாட தொடங்க.. உமேஷ் எல்லோரையும் வேடிக்கை பார்க்க.. இனியன் அழகாக.. கேக் கட் செய்தான்.

பரணி புகைப்படம் எடுக்க தொடங்கினான்.

இனியன் எல்லோருக்கும் கேக் கொடுக்க.. அனைவரும் அவர்களின் பரிசுகளை கொடுத்தனர்.

இனியன்.. ‘அஹ..’ என விழிவிரித்து எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டான். 

எல்லோரும் உமேஷ்ஷுக்கும் பரிசுகளை கொடுத்தனர்.

காயத்ரி, இனியனுக்கு ஏழு பரிசுகளை கொடுத்தாள்.. இனியன் “அத்தை எல்லாம் எனக்கா.. செவென்’னும் எனக்கா” என கேட்டுக் கொண்டே குதித்துக் கொண்டே எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டான்.

பரணி எல்லாவற்றையும் வீடியோ எடுத்தான்.

உமேஷ் வந்து அருகில் நின்றது, அத்தை தனக்கு ஏதும் கொடுக்கவில்லை என. காயத்ரி உமேஷ்க்கும் ஒரு பரிசை கொடுத்தாள்.. உமேஷ், தன் அண்ணனை போல குத்தித்துக் கொண்டு வாங்கிக் கொண்டான். 

இப்போது இருவரிடமும் காயத்ரி “அத்தைக்கு முத்தா..” என்றாள் கன்னத்தை காட்டி. அச்சோ.. இருவரும் மாறி மாறி கன்னம் மூக்கு நெற்றி.. என காயத்ரியை போட்டி போட்டுக் கொண்டு.. முத்தமழையில் நனைய வைத்தனர்.

இரவு உணவு நடந்தது. பரணி தன் குடும்பத்தோடு விடைபெற்று கிளம்பினான்.

சாரதா, இங்கேயே தங்கிக் கொண்டாள்.

பரணி, இரவில் தன்னையே நொந்துக் கொண்டான்.. பெண்ணு பார்த்தாச்சு உனக்கு அல்மோஸ்ட் பிக்ஸ் ஆகிடுச்சி.. நீ எப்போதும் போல இரு.. என தனக்குதானே சொல்லிக் கொண்டான். மனதை அவனால், கட்டுபடுத்த முடிந்தது. ம்.. அவள்தான் எதிரில் இல்லையே.. எனவே, மீண்டும் தைரியமாக முடிவு எடுத்துக் கொண்டான். அமைதியாக உறங்க தொடங்கினான்.

ஒருவாரம் சென்று.. பரணியின் பெண்பார்க்கும் படலம்.

இந்த ஒருவாரமும் பரணிக்கு யோசனைதான். முடிவெடுத்துக் கொண்டான்தான்.. என்னென்னமோ. ஆனால், நடைமுறையில் காலையில் எழுந்ததும்.. கைகள்.. பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பார்க்க விழைகிறது. ஆனாலும் பார்க்கவில்லை அவன். தனக்கு தானே கட்டுபாடோடு இருக்கிறான். ஆனாலும், காயூவை பற்றி ஏதேனும் ஒரு நிகழ்வு நினைவு வந்துவிடுகிறது. அதை தடுக்க இன்னும் பழகவில்லை அவன்.

ஆனால், வீட்டில் தினமும் தனக்கு வந்த வரன் பற்றி பேச்சு எழ.. பரணி கொஞ்சம் தன்னையே கடிந்துக் கொண்டான்.. அவளை தவிர்க்க காரணமும் கண்டு கொண்டான்.. ‘இது சரி வராது.. அவங்க அண்ணன் சரியாக இல்லாததால்.. என் அக்கா வாழ்வே போச்சு.. திரும்பவும் எப்படி.. அவர்கள் குடும்பத்தில் பெண்ணை கொடு என அப்பா கேட்ப்பார்.. எனக்குதான் வெட்கம் இல்லையா.. அவர்கள் வீட்டில் பெண் எடுக்க.. அந்த அளவுக்கா நான் வீழ்ந்துவிட்டேன் அவளிடம். என் அக்காவின் இந்த நிலைக்கு காரணம் அவளின் அண்ணந்தானே.. அவனை மாதிரிதான் இவளுக்கும் பொறுப்பில்லை..’ என முகம் கசங்க.. மனமும் கசங்க.. எண்ணி அவளை ஒதுக்கி வைத்துக் கொண்டான். அந்த குறையையும் முழுதாக அவள் மேல் சுமத்த மனதில்லை எனவே, ‘இல்ல.. இல்ல அப்படி இல்ல.. எனக்கு அவள் செட்டாக மாட்டாள்.. குழந்தை கூட எல்லாம் என்னால் குடும்பம் நடத்த முடியாது.. ம்..’ என பழைய காரணத்தை சொல்லிக் கொண்டு.. முடிவெடுத்து பெண் பார்க்க தயாரானான், பரணீஷ்வரன்.

பரணியின் குடும்பம்.. பரணியின் பெரியப்பா குடும்பம்.. மட்டும் சென்றனர். பரணி ‘என்  மனதில் எந்த தடுமாற்றமும் இல்லை..’ என சொல்லிக் கொண்டுதான் கிளம்பினான். பெண்ணின் புகைப்படத்தில் பார்க்கவில்லை.. நேரிலேயே பார்த்துக்கிறேன் என்றான். அவர்களுக்கு ஒரே பெண்.. எனவே, வருங்காலத்தில் தொழிலில் இவன் எடுத்து செய்ய வேண்டி இருக்கும். அதுதான் ஒரே விருப்பம் பெண் வீட்டாருக்கு. பரணிக்கு, பெரிதாக மறுப்பு ஏதுமில்லை. எனவே, காயத்ரியை நினைக்காமல் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே சென்றான் பெண் பார்க்க.

பெண் நன்றாக இருந்தாள்.. பெண் தனியே பேசவேண்டும் என்றாள். பரணி சென்று பேசி வந்தான். நன்றாக பேசினாள் பெண்.. படிப்பு என்ன.. உங்க கம்பெனி என்ன என விசாரித்தாள். 

பரணிக்கு, எதோ இன்டெர்வீவ் நடப்புது போல்தான் பரணிக்கு தோன்றியது. பரணி தானாக எந்த கேள்வியும் கேட்கவில்லை.. ஏன் நன்றாக நிமிர்ந்து கூட அவளை பார்க்கவில்லை. ஹாலில் எல்லோரின் எதிரிலும் வந்து நின்ற போது பார்த்ததோடு சரி.. அப்போதும் அவஸ்வரமாக ‘காயத்ரியை விட கொஞ்சம் குண்டா இருக்காங்க’ என தோன்றியது. மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான். ஏதும் பேச தோன்றவில்லை இப்போது. அமைதியாக அந்த பெண்  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி வந்துவிட்டான்.

பெரியவர்களுக்கு எல்லாம் சம்மதம். பரணி, பெண்ணிடம் பேசி முடித்து வெளியே வரவும் “ஒரு போன் செய்யனும் பேசிட்டு வரேன்” என வெளியே போனவன்.. திரும்ப உள்ளே வரவேயில்லை.

பெரியவர்கள் இதோ வந்திடுவான்.. அதோ வந்திடுவான் என பேசிக் கொண்டே இருந்தனர், பரணியை காணோம். தணிகாசலம் பரணிக்கு போனில் அழைக்க.. “அப்பா, வொர்க் ஷாப்பில் கூப்பிட்டாங்க வந்துட்டேன்.. சாரி.. சொல்ல மறுந்துட்டேன்” என்றான் மன்னிப்பு கோரும் குரலில்.

தணிகாசலத்திற்கு சங்கடமாக போனது.. மகனுக்கு பெரிதாக நாட்டமில்லை என இதிலேயே புரிந்தது “கலந்து பேசி சொல்லுகிறோம்” என எழுந்துக் கொண்டார்.

வீடு வந்து சேர்ந்தனர். 

சாரதா தம்பிக்கு அழைத்து பேசினாள் உடனே.. “என்ன டா.. பாதியில் வந்துட்டியாம்..” என்றாள்.

பரணி “அக்கா, அது.. அவங்க.. என்னை கியேஸ்டின் பன்றாங்க. ம்… எனக்கு செட் ஆகும்ன்னு தோணலை அக்கா.” என்றான்.

சாரதா “என்ன கேட்டாள் அப்படி” என்றாள்.

பரணி “ம்.. என்ன உங்க கம்பெனி நேம்ன்னு கேட்க்கிறாள்.. இது கூட தெரியாமலா பார்க்க வர சொன்னாங்க.. கொஞ்சம் ஆர்டர் பண்ற பீல் வருது” என்றான்.. வசதியாக இவன் பெண்ணின் புகைப்படத்தை கூட பார்க்கமாட்டேன் என்றது மறந்து.. அந்த பெண்ணை சொல்லிக் கொண்டிருந்தான்.

சாரதா “டேய் இவ்வளோ நோட் பண்ணுவியா நீ” என்றாள் அதிர்ச்சியாக.

பரணி ஏதும் பேசவில்லை சிரித்துக் கொண்டான். என்னமோ ரெலிப் வந்தது அவனுள்.