அலை 11 (1)

                 ஆதவன் வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் தனது பொருட்களை வைத்து விட்டு தேவராஜன் கூறியது போல் மொட்டை மாடியில் உறங்க தேவாவோடு வந்தான் விஜய்.ஆதவன் அவர்களிடம் பேசிவிட்டு அவனறைக்குச் செல்வதை வீட்டிற்குள் இருந்து இரண்டாம் தளம் வரும் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் நின்று கவனித்த தேவராஜன் அந்த கம்பிக் கதவினை மூடாமல் விஜயிடம் வந்து நின்றான்.

“விஜய் உனக்கு … பழக்கமிருக்கா”  சைகை மொழியில் சிகரெட் பிடிப்பது போல் செய்துக் காட்டி கேட்க . . .

“சாரி . . . தேவா… எனக்கு இல்ல… நீங்க எடுத்துக்கோங்க எனக்கு பிரச்சினையில்லை..” என்றவனிடம் ,

” என்ன தான் மாமா பையன்னாலும் இப்ப தங்கச்சி மாப்பிள்ளை.. அதுதான் யோசிச்சேன்… அதோட இங்க நின்னு தம் அடிக்கிறதுக்கும் கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு. நான் கொஞ்சம் தள்ளி டீக்கடை வரைப் போய்ட்டு வாரேன்.. ” என்றவன் ,

“பாய் தலைகாணி எல்லாம் இங்க இருக்கு.. நீங்க படுங்க… நான் வந்துடுறேன்…” என்றவன் வெளிப் படிக்கட்டுகள் வழியே சென்று விட்டான். விஜயும் தனக்கு விரித்துக் கொண்டவன் திறந்துக் கிடந்த உட்படிக்கட்டுகளின் கதவைத் தாழிட சென்றான்.

அதே நேரம் தில்லையை ஒரு வழியாக பேசி சமாளித்து ஆதவன் அறைக்கு அனுப்பிய தாமரைக்கு தனிமை தாயின் நினைவைத் தூண்ட கண்களில் நீர் தேங்கியது. அது தேம்பலாக ஆரம்பிக்க அப்போது தான் உறக்கத்திற்கு சென்ற ஆவுடையம்மாளை அந்த சத்தம் புரண்டு படுக்க செய்யவும், வாயை கைகளால் மூடிக் கொண்டவள் தேவகியையும் ஆவுடையம்மாளையும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் வேகமாக அறையை விட்டு வந்தவள் அழுதவாறே மாடிப்படிகளில் ஏறினாள்.

இவ்வாறு தாமரை அழுதுக் கொண்டே வேகமாக ஏறி வந்து அவளது அறைக்குள் செல்லுகையில் தான் விஜயும் மாடிக் கதவை தாழிட வந்தவன் தாமரையை கவனித்து விட்டான். ஆனால் தாமரை கவனிக்கவில்லை. மனதிற்கினியவளின் கண்ணீர் அவனை வெகுவாக தாக்க அவளுக்கு ஆறுதலளிக்க முடியாமல் தவித்தவன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தது ஒரு நொடி தான்.. அடுத்த விநாடி வேப்பமரம் கண்ணில் பட அவ்விடம் நோக்கிச் சென்றவன் தாமரையின் அறை ஜன்னலுக்கு நேர்  மேலே நின்றுக் கொண்டான்.

அறையினுள் வந்த தாமரையோ கட்டிலில் அமர்ந்து சிறிது சத்தம் வந்தவாறே அழ ஆரம்பித்து விட்டாள். தாயின் நினைவோடு , சகோதரனும் நாளைக் காலைச் சென்று விடுவான் என்பதும் மனதில் தோன்றி யாரும் தனக்கு இப்போது இல்லையோ என்பது போல் வேதனையைக் கொடுக்க ,

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவே மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

என பாடலின் வரிகள் இசையாக அவளது ஜன்னலின் வழி காற்றில் வர , முதலில் இசையும் வரிகளும் மனதை வருடி ஆறுதல் தர …

விழியில் விழும் துளி

என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே..

 சட்டென அது எங்கிருந்து இந்நேரத்தில் எனத் தோன்றியதோடு தனக்காக மட்டுமே போடப்படுவது போல் ஓர் உணர்வு. அந்த உணர்வுக் கொடுத்த உந்துதலில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஜன்னல் அருகே வந்தாள். அது மேலேயும் கீழேயுமாக நான்காக திறக்கக் கூடிய கதவு.. முதலில் மேலே மட்டும் திறந்திருக்க இப்போது கீழ்புறமும் திறந்து அந்த ஜன்னலில் அமர்ந்துக் கொண்டாள்.

விஜயும் இதனைத் தானே எதிர்பார்த்தது.. தோட்டத்து விளக்கொளி தரையில் ஜன்னலின் நிழலைக் கொடுத்திருக்க அதில் பாதிக்கதவு திறந்திருந்ததைப் பார்த்தவன் தான் தனது கையடக்க டேப் ரிக்கார்டரில் இடுப்பில் கட்டும் பெல்ட் மூலமாக அதனை இணைத்து ஜன்னல் அருகே கொண்டு வந்து அந்தப் பாடலை ஒலிக்கச் செய்திருந்தான். இப்போது அவள் அங்கு அமர்வது உறுதியானதும் அது முடிந்ததும் அடுத்தப் பாடலாக 

,நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்… 

இப்படி அவளுக்கு ஆறுதல் தரும் பாடல்களாக ஒலிக்க… அதில் லயித்து மனதை திடப்படுத்திக் கொண்டிருந்தவள் ,

” இப்படி எனக்காகவே போடுற பாட்டு மாதிரி இருக்கு.. யார்.. யாராக இருக்கும்…” என ஜன்னல் கம்பிகளில் முகம் அழுத்தி அங்கும் இங்கும் பார்க்க… அவளறைக்கு நேர் மேலாக இருந்து நிழலாக ஓர் ஆணின் உருவம் தரையில் தெரிய .. ‘ யார்’ என அவள் யோசிக்கும் முன்னமே, டேப் ரிக்கார்டர் அவள் முன் வந்து நின்றது. அதைப் பார்த்ததுமே அது விஜய் தான் என்பது புரிபட , இப்போது நிம்மதியான தலைசாயல் அந்த ஜன்னல் கம்பிகளில்…அதையும் உணர்ந்தவனின் மனதில் ஒரு திருப்தி பரவியது.அதோடு பாடலின் இறுதியில் விஜயின் குரல்…

” நான் இன்னைக்கு உன் கிட்ட பேசினது எதுவும் நீ கவனிச்சியா தெரியாது. அதை திரும்ப இப்ப என்னால சொல்லவும் முடியாது. உன்னைய இப்படி சோர்ந்து போன நிலையில பார்க்க முடியாம என் மனசுல உள்ளத பேசிட்டேன். இப்ப ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.. உனக்கு அப்பா , அண்ணன் , அண்ணி.. அவங்க குடும்பம்னு உன்னையச் சுற்றி நிறைய சொந்த பந்தங்கள்.. ஆனா எனக்கு இப்ப நீ மட்டும் தான்ற எண்ணம் … அதாவது எனக்காக நீ மட்டும் தான்… ப்ளீஸ் அழாத… உன் அழுகை எனக்கு ரொம்ப வலியக் கொடுக்குது.” என்றவன் சிறிது இடைவெளி விட்டு ,

“உனக்கு சிக்கிரமே காலேஜ் ஆரம்பிச்சுடும் … நல்லா படிச்சு முடிச்சு டாக்டரா நீ வரணும்.. தைரியமா உலகத்த எதிர்கொள்ள வேண்டாமா.. மனசுல உள்ளத வெளியக் கொண்டு வந்துரு… அப்படிக் கொண்டு வராம தான் இந்த பத்து நாளும் நீயும் கஷ்டபட்டு.. நானும்… “பேச்சு நின்று ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.. அது அவளுக்கான அவனது வலியை நன்கு வெளிப்படுத்தியது.பின் மீண்டும் ,

“அப்புறம் அன்னைக்கு வீடியோ கேமராவும் எடுத்துட்டு வந்திருந்தேன்… உங்கம்மாவோட குரல் பதிவு மட்டுமில்ல நிழல் பதிவும் என் கிட்ட இருக்கு.. எப்போலாம் அவங்கள பார்க்க ஆசைப்படுறியோ அப்போலாம் நீ அவங்களப் பார்க்கலாம்.” என்றதும் அமர்ந்திருப்பவள் எழுவது தெரிந்தது.

“இப்படி உன் அனுமதியில்லாம உன்னைய நிறைய ஃபோட்டோவும் வீடியோவும் எடுத்தது தப்புதான்.. இப்படி உன்கிட்ட பேசுறதும் தப்புதான்.. ஆனாலும் உன்னைய யாரோவா எனக்கு நினைக்கத் தோணல. அது ஏனென்ற காரணம் உனக்கு புரியும்ன்ற நம்பிக்கை இருக்கு. உனக்கு என்னையப் புரிஞ்சுக்க விரும்பினா நாளைக் காலை நான் கிளம்புறப்போ உன்னைய பச்சை உடையில பார்க்க விரும்புறேன்.. இல்லை புரிஞ்சுக்க விரும்பலனு… இப்படி பேசுறது கூட பிடிக்கலனு  நினைச்சா வேற நிற உடையில வா.. அதன் பிறகு நான் உன் கண்கள்ல படவே மாட்டேன்.”

தாமரைக்கு அந்த ஒலிப்பதிவு கேட்க கேட்க கண்களில் நீரை வர வைத்ததோடு இன்று அவன் கைப் பிடித்திருந்தது மட்டுமே நினைவில் இருந்தது. வேறு என்ன சொன்னான் என்பதில் நினைவில் வராமல் கைகளைத் தலையில் கொடுத்து அமர்ந்தாள். அதுவும் விஜயிற்கு நிழலாகத் தெரிய… 

“அப்போ உனக்குத் தெரியல.. ” என மனதினுள் சொல்லிக் கொண்டவனுக்கு சிறிது வருத்தமே. அந்தக் குரலோ ,  ஒரு பெருமூச்சுடன்..

” கீழே இன்றைக்கு சுவற்றில் மாட்டின உங்க அம்மா ஃபோட்டோ பின்னாடி அந்த கேஸட்ஸ் இருக்கும் எடுத்துக்கோ..” என்றவனது பேச்சு நின்றதோடு அவனது நிழலும் பின்னால் சென்று மறைவது தெரிய .. எழுந்து அறையைத் திறந்துக் கொண்டு கீழே சென்றாள். விஜயும் மாடிப்படி வாசல் கதவருகே நின்றுக் கொண்டு தாமரை படியிறங்குவதையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆனால் அவள் கவனிக்கவில்லை … வேகமாக கீழே இறங்கி ஓடியவள் அவன் சொன்னது போல் அந்த படம் வைக்கப்பட்டு இருந்த மேடையின் பின்னால் கைவிட்டு , நாளிதழால் சுற்றப்பட்டு இருந்த ஒரு அட்டை பெட்டியை எடுத்தவளுக்கு அதனை உடனேப் போட்டுப் பார்க்கும் ஆசையும் வந்தது. 

ஆனால் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியை அந்நேரத்தில் இயக்குவது முடியாத காரியம் என்பதை உணர்ந்தவள் , மறுநாள் ஆதவன் அறையில் இருக்கக் கூடிய தொலைக்காட்சியில் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றுத் தோன்ற மீனாட்சியின் உருவப்படத்தைப் பார்த்துக் கொண்டே தேக்கு மரத்தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

விஜய் பேசியது வேறு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அவனைப் பார்த்த நாள் முதல் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாற்றங்களை அவளாலும் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அது சரியா தவறா என்றும் தெரியவில்லை. 

“அம்மா நீங்களும் பக்கத்துல இல்ல… அண்ணனும் கிளம்பிடுவாங்க.. இப்ப இப்ப… அவங்களும் .. “விஜயும் போய் விடுவானோ என்ற பயமும்… இது நல்லதா.. இல்லயா… என் பதிலில் தான் எல்லாம் அடங்கியிருக்கா..” என்ற பதற்றமும் தோன்ற அழுகை அதிகமாக வந்தது.

மாடியில் நின்று தாமரை திரும்பி அறைக்குச் செல்வதைப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த விஜயாலும் அவளைப் பார்க்க முடியவில்லை. அதற்குள் தேவராஜன் வெளிப்புற படியேறி வருவதை உணர்ந்த விஜய் இப்படி நிற்பது சரியல்ல என்பதை உணர்ந்து விரித்திருந்த பாயில் சென்றுப் படுத்துக் கொண்டு காதினில்  இயர் ஃபோன்களை மாட்டிக் கொண்டு, முழங்கையால் கண்களை மூடிக்கொண்டுப் படுத்திருந்தான்.

தேவராஜன் மாடிக்கு வந்தவன் , “மணி இப்பவே பனிரெண்டாகப் போகுது.. நாம ரெண்டு ரெண்டரைக்கெல்லாம் எழுந்தா தான் சரியா இருக்கும்.. போக்குவரத்து கம்மிங்கிறதால சீக்கிரம் போயிரலாம் … ” என்றவாறே விஜயின் அருகில் வர , அவனது வாக்மேனிலிருந்து வயர்கள் காதுக்கு செல்வதைப் பார்த்தான். உடனே அவனைத் தொட , கைகளை எடுத்து விட்டு எழுந்தமர்ந்த விஜயிடம்,

“இந்த மாடல் புதுசா … நான் ஹெட்செட் தான் வச்சுருக்கேன்.. ” என கேட்க… விஜயும்,

“ஆமா. சோனி கம்பனி புதுசா விட்டுருக்காங்க… ” என அந்த இயர் ஃபோனை தன் டி ஷர்டில் துடைத்து விட்டுக் கொடுத்தான். அதனை வாங்கி காதில் மாட்டிப் பார்த்தவன் , சிறிது நேரம் கண்கள் மூடி ரசித்து விட்டு ,

” இந்த மாடல் ரொம்ப நல்லா இருக்கு விஜய் .. ஆதவ் வரும் போது வெளிநாட்டுல இருந்து வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்” என்றவனிடம் , விஜய் ,

” இது மெட்ராஸ்ல வாங்கினது தான்.. பிடிச்சுருந்தா வச்சுக்கோ தேவா…” என்றான். தேவாவும் புன்னகைத்து ,

“உன் பாட்டு கலக்ஷன்ஸ் கூட அருமையா இருக்கு… பரவாயில்ல இப்ப நீ மெட்ராஸ் போய்ட்டு வரும் போது இது போல ஒன்னு.. இல்ல இல்ல ரெண்டு வாங்கிட்டு வரீயா… எனக்கும் பாப்பாவுக்கும் ..” என்றதும் விஜய் ,

” நான் வேற வாங்கிக்கிறேன். இது புதுசு தான் இதை நீயே வச்சுக்கோ தேவா … ” என்றான்.எது வாங்கினாலும் தங்கைக்கு ஒன்று என்ற பழக்கத்தில் தேவா தில்லையைக் குறிப்பிட , விஜயிற்கோ…’பாப்பா’ என்ற அழைப்பு தாமரையை நியாபகப்படுத்தியது. தேவாவோ..” வேறு புதியதே வாங்கிக் கொள்கிறேன்” என்றவன், தனது டீ ஷர்டின் பை பகுதியைத் தொட்டுப் பார்த்து விட்டு வீட்டினுள் செல்லும் படிக்கட்டுகளில் இறங்கினான். அவனது செய்கையே பணம் தேடுவதை உணர்த்த , விஜய்

“தேவா பணம் என்கிட்ட இருக்கு வந்து வாங்கிக்கிறேன்…” என சொல்லும் போதே , ” உன்கிட்ட இல்லனு சொன்னேனா.. என் திருப்திக்கு மேன்… அப்பதான் எனக்கு உன் கிட்டயும் உனக்கு என் கிட்டயும் இன்னும் வேற எதுவும்  கேட்கவோ கொடுக்கவோ முடியும் ” என்றவன் கீழே இறங்கி விட்டான்.

அவன் உறங்க மேலே வருகையில் உடை மாற்றி இருக்க புகைப்பிடிக்க மட்டுமே சில்லரை எடுத்துப் போயிருந்தவன் தற்போது லுங்கி அணிந்திருந்தான். அவனது பேன்ட் , கீழே அறையில் இருக்க அதில் தான் அவனது பர்ஸ் மற்றும் பணம் இருந்தது. எழுந்ததும் கிளம்பவே சரியாக இருக்கும் என்பதை உணர்ந்தவன் , விஜயிடம் உடனே பணம் எடுத்துக் கொடுக்கவே வீட்டிற்குள் வந்துக் கொண்டிருந்தான்.