நீ என்னுள் யாரடா!

9

பரணிக்கு, நாட்கள் சரியாக இருந்தது.. தன் தமக்கைக்கு வீடு பார்க்கும் வேலை சரியாக இருந்தது. எப்படியோ, தங்களின் வீடுகளிடமிருந்து தள்ளி.. தன் அலுவலகத்தின் அருகில் ஒரு அப்பார்ட்மெண்ட் பார்த்துவிட்டான் பரணி. இரு வீட்டு பெரியவர்களுக்கும் இதில் விருப்பம் இல்லை. ஆனால், சாரதா, பிடிவாதமாக நின்றாள்.. ‘என் பிள்ளைகளை நானே பார்க்கிறேன்.. உங்க கூட இருந்தால், நான் தப்பு செய்திட்டேன்னு தோணிட்டே இருக்கு, சாரி அத்தை. இங்கேதானே இருக்கேன். நீங்க கண்டிப்பா வந்து பாருங்க.. நானும் வரேன்” என சமாதனாம் செய்தாள் தன் அன்னையையும் அத்தையையும்.

ஒரு வழியாக வீடு பார்த்து.. எதோ பால்காய்ச்சி என நான்கு நாட்கள் ஆகிற்று. இனியனுக்கு பள்ளி சேர்க்க வேண்டும்.. எனவே, அங்கிருந்த பள்ளியில் பேசி இருந்தால் சாரதா. எனவே, அவனின் TC வாங்கிவர.. மற்றும் தன்னுடைய உடைமைகள் பாதி அங்கே இருக்கிறது அதையெல்லாம் எடுத்து வர என.. இதோ இப்போது பரணி சாரதா உமேஷ் என கிளம்பினர் மூவரும்.

கார்த்திக், தன் அண்ணன் கமலிடம் பேசி.. வீட்டிற்கு இரண்டு நாட்கள் வராதே என சொல்லியிருந்தான். ம்.. பரணிதான், கார்த்தியிடம் அப்படி பேச சொல்லி சொல்லியிருந்தான். என்ன செய்வது என் அக்காவுக்கும் மனசுன்னு இருக்குகே கார்த்திக்.. நீங்களே சொல்லிடுங்க.. இரெண்டே நாட்கள்தான்.. நாங்கள் வந்ததும் அவர் என்னமோ செய்துக்கட்டும்’ என சொல்லி பேச சொல்லியிருந்தான்.

ஆக, இரவு விமானம். மூவரும் நடுநிசியில் அங்கே சென்று சேர்ந்தனர். பரணிக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால், சாரதா அந்த  வீட்டை பார்த்து கண்கலங்கினாள். வீடு முற்றிலும் மாறி இருந்தது.. பிள்ளைகளின் வாக்கர்.. சின்னவனுக்கு வாங்கிய அமர்ந்து ஓட்டும் கார்.. பெரியவனின்  சைக்கிள்.. என எல்லாம் வீட்டின் முன்னே இருக்கும், இப்போது ஏதும் கண்ணில் படவில்லை. கிட்செனில் ஓவென் புதிதாக இருந்தது.. தான் வைத்திருந்த பழையது இல்லை. முன்பு தாங்கள் கணவன் மனைவியாக இருந்த போது பயன்படுத்திய அறை இப்போது வொர்க்அவுட் செய்யும் இடம் போல உருமாறி இருந்தது. ஹாலில் கமலும் தானும் எடுத்துக் கொண்ட திருமணக் கோலத்தில் இருந்த புகைப்படம் இல்லை. குழந்தைகளின் புகைபடம் இல்லை.. ஏதேதோ வண்ண பெயிண்ட்டிங்ஸ் இருந்தது. ப்ரெட்ஜ் முழுவதும் மதுபான வகைகள்.. எதோ பழங்கள். வீட்டில் ஏர் ப்ரெஷனர்.. பூஜை அறையை காணவில்லை.. அதில் முழுவதும் ஏதேதோ.. கிரீம்கள்.. பாடிஸ்ப்ரே.. என இருந்தது. மொத்தத்தில் வீடு.. தன்னுடைய வீடில்லை.. என உணர்ந்தாள். அமைதியாக மாடிக்கு சென்றாள். தன்னுடைய அறையில் எல்லா பொருட்களும் போட்டு வைத்திருந்தனர்.. பசங்களின் சைக்கிள்.. பூஜை பொருட்கள்.. என இவர்கள் சார்ந்த பொருட்கள் எல்லாம் மேலே இருந்தது. இப்போது விரக்தியாக ஒரு புன்னகை எழுந்தது சாரதாவின் முகத்தில். உரிமை கொண்டாடிய பொருட்கள் முதல்.. மனிதன் வரை.. என்னதில்லை.. என விரக்தி புன்னகை எழுந்தது.. மனசு கசந்து போனது.. சாரதாவிற்கு. கோவமோ ஆற்றாமையோ எழவில்லை. ஒரு அமைதி.. எது நடந்தால் என்ன என்ற அமைதி.. கிட்ட தட்ட அந்த வீட்டை பார்த்ததும் துறவு நிலையில் உணர்ந்தாள்.. ம்.. பிடித்ததை இழந்தால்.. துறவுதானே. அந்தநிலையில் அமைதியாக அந்த அறையை சுற்றிலும் பார்த்தாள்.

ஒதுங்க வைக்க கூட இடமில்லை. கீழே ஹாலில்தான் படுக்க வேண்டும்.. எனவே, கீழேதான் மூவரும் படுத்தனர். காலையில் எழுந்து மேலே சென்று குளித்து கிளம்பினர். உணவு சமைக்க அந்த கிட்சென் செல்ல மனமில்லை சாரதாவிற்கு.. எனவே, ஆர்டர் செய்துக் கொண்டனர்.

முதலில் பள்ளி சென்றனர். பின்னர் சாரதா, ஒரு ரெடிமேட் ஷோவ்ரூம் வைப்பதற்கு தேவையான ஹோல்செல் வியாபாரிகளை பார்த்தனர். தாங்கள் தொடங்க இருக்கும் தொழில் பற்றி சொல்லி.. சில பல தகவல்கள்.. அலைபேசி எண்கள் என வாங்கிக் கொண்டு வீடு வந்தனர். 

இரவு நேரத்தை நெருங்கியிருந்தது. உண்டுதான் வந்திருந்தனர். பரணி, குளித்து.. அப்படியே ஹாலில் படுத்துக் கொண்டான். சாரதாவிற்கு, தன் தம்பியை பார்க்க.. கஷ்ட்டமாக இருந்தது. அப்படியே விரிப்பு கூட விரிக்காமல்.. குஷன் ஒன்றை தலைக்கு வைத்து படுத்திருந்தான் பரணி.. ஏனோதானோவென இருக்கவேமாட்டான்..  எல்லா இடத்திலும் அமரமாட்டான்.. சோபா, என்றால் அமருவதற்கு மட்டும்தான், அதில் படுக்க கூடாது என இருப்பான்.. சற்று நாசூக்காக இருப்பான். இன்று இப்படி வெறும் தரையில்.. அசந்து உறங்குபவனை பார்க்க.. சாரதாவிற்கு தன் மீதுதான் கோவம் வந்தது.. எனக்குதான் வாழ தெரியவில்லை.. காலில் விழுந்தாவது.. கணவனோடு வாழ்ந்திருக்க வேண்டும் போல.. என்னோடு சேர்ந்து, பிள்ளைகள் அவரின் பெற்றோர்.. இப்படி, இவனும் கஷ்ட்டபடுகிறான்.. என எண்ணிக் கொண்டு, உமேஷ் மேலே சோபாவில் உறங்க.. கீழே சாரதா படுத்துக் கொண்டாள். உறக்கம் வரவில்லை.. எப்போதும் போல.. ‘சாரு..’ என அழைக்கும் கணவனின் குரல் இன்று அருகே கேட்பது போலானது.. தாங்கள் வாழ்ந்த.. நாட்களை நினைவூட்டியது.. இந்த இரவு.. இந்த வீடு.. சாரதாவிற்கு.

மறுநாள், சாரதா தனக்கு தேவையானவற்றை அதாவது தங்களுடைய திருமண புகைப்படம்.. சில நகைகள்.. பட்டு புடவை.. என எடுத்துக் கொண்டாள்.. மற்றது எல்லாம் பேக்கர்அன்ட் மூவர்ஸ் கொண்டு.. அம்மாவீட்டின் சீதனமாக வந்த கட்டில் கபோர்ட்.. என தங்களுடைய சாமான்கள்.. பிள்ளைகளின் வண்டிகள் என எல்லாவற்றையும் புக் செய்துவிட்டு கிளம்பினர். முன்மாலை நான்கு மணிக்கு ப்ளைட். இரவு நெருங்கும் நேரத்தில் கோவை வந்து சேர்ந்துவிட்டனர் மூவரும். 

இனியன் தன் அன்னையை பிரிந்து இரண்டு நாட்கள் தன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்தான். காயத்ரி, கல்லூரிக்கு விடுமுறை எடுத்திருந்தாள்.. துளசி, பிறந்தவீடு சென்றுவிட்டாள். எனவே, தனியாக கெளசல்யாவினால் சமாளிக்க முடியாது என.. காயூ விடுமுறை எடுத்திருந்தாள். 

இவர்கள் இருவராலும் வீடு ரெண்டுபட்டது. காயத்ரி, சத்தமாக டிவியில் சிங்சான் பார்க்க தொடங்கினாள். இனியன் வீட்டினுள்ளேயே உமேஷின் சைக்கிளை ஓட்டத் தொடங்கினான். மதியம் மஸ்ரூம் ரைஸ் வேண்டும் என இனியன் அழ.. ஆர்டர் செய்து உண்டனர் அத்தையும் மருமகனும்.

கௌசல்யா ‘என்னமோ செய்ங்க’ என மதியம் உறங்க சென்றுவிட்டார். ஹாலில் இருவரும் சோபாவில் அமர்ந்து.. வேலை செய்பவரிடம் சமோசா செய்ய சொல்லி ஆர்டர். நான்கு மணிக்கு அதுவும் வர.. அதை உண்டுவிட்டு, தோட்டத்தை ஒழுங்கு செய்கிறேன் என தோட்டத்து பக்கம் சென்றனர். 

எப்போதும் வேலையாட்கள்தான் செய்வர். இப்போதெல்லாம் காயத்ரி, லாவகமாக மண்வெட்டியால்.. மண் எடுத்து.. புதிய செடியை நடுவது.. வீட்டில் சேரும் காய்கறி குப்பையை உரமாக மாற்றுவது என ஏதேனும் வாரம் ஒருமுறை இப்படி தோட்டத்து வேலையை பார்ப்பாள்.

அதனால், இன்று இனியனோடு தோட்டத்து பக்கம் சென்றாள், காயத்ரி. தான் சிறு அளவில் நடவு செய்திருந்த.. நெல் அறுவடையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒருதரம் பார்த்து விட்டு.. அழகு செடிகள் பக்கம் வந்தாள் காயத்ரி.

அதற்குள், இனியன் தன் பலத்தை காட்ட எண்ணி.. வேலையாட்கள் இடம் மாற்றி வைத்துக் கொண்டிருந்த கள்ளி செடிகளை.. சிறு சிறு தொட்டிகளில் நடைபாதையில் அழகுக்காக வைத்திருந்தவற்றை.. தானும் சேர்ந்து தூக்கி கொண்டு ‘ஜெய் மகிஷ்மதி..’ என சொல்லிக் கொண்டே விளையாடியபடியே நடக்க. இனியனின் கால்கள் இடறியது.. அங்கே, மண் வெட்டி மூலம் மண் வெட்டிக் கொண்டிருந்த தன் அத்தையின் காலில் சரியாக அந்த தொட்டி விழுந்தது.. சின்ன தொட்டி நல்லவேளை.. காயத்ரி துடித்துவிட்டாள். உடனே, கௌசல்யா மருத்துவமனைக்கு கூட்டி சென்றுவிட்டார்.

மருத்துவர்கள் பெரிதான பாதிப்புகள் ஏதும் இல்லை.. தசை பிசகி இருக்கு.. ஒருவாரம் இந்த பான்ட்எய்டு போட வேண்டும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் காலில்.. தேவைக்கு மட்டும் ஊன்றி நடக்கனும் என சொல்லி அனுப்பினர்.

ஆக, இவர்கள் வரும் நாளில்.. காலில் கட்டோடு அமைதியாக அமர்ந்துக் கொண்டாள் காயத்ரி. இனியன் பாவமாக தன் தம்பியின் சைக்கிளில் வலம் வந்துக் கொண்டிருந்தான். வீட்டில் டிவி சத்தம் இப்போது இல்லை.. வீடே அமைதியாக இருந்தது.

கார்த்திக், அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்தான். தங்கையிடம் “வலி இருக்கா காயூ ம்மா.. வீக்கம் இருக்கா.. பார்த்தியா” என கேட்டுக் கொண்டிருந்தான்.

காயத்ரி “வலிக்குது, வேற எதுவும் இல்ல அண்ணா. அண்ணியை பார்க்க இந்த வாரம் கூட்டி போகனும் ” என்றாள் சிரித்துக் கொண்டே.. 

தலையசைத்தான் கார்த்திக். மாடியில் அவள் அறை.

கார்த்திக் இப்போது “சாப்பிட்டியா, மாடியில் விடவா உன்னை” என்றான்.

காயத்ரி “இல்ல அண்ணா, அப்பா வந்ததும் சாப்பிடுறேன்.. அப்புறம் மேலே போறேன்” என எதோ போனில் பாடங்கள் கேட்டுக் கொண்டு.. தானும் ஒரு நோட் வைத்துக் கொண்டு.. தன் தந்தையின் டேபிள் சேரில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

பரணி சாரதா உமேஷ் வந்தனர். பெரிய பெட்டி.. பரணிதான் கொண்டு வந்து சேர்க்க வேண்டி இருந்தது. 

கார்த்திக் எல்லோரும் அங்கே இருக்க.. என்ன நடந்தது என பேச்சுகள் சென்றது. சாரதா ஏதும் பெரிதாக சொல்லாமல்.. போட்டோஸ் எடுத்து வந்தோம் அத்தை.. கொஞ்சம் வெள்ளி சாமான்.. நகை இதெல்லாம் எடுத்து வந்தோம் என சொன்னாள். மற்றது எல்லாம் பார்சலில் வருது என்றாள்.