ஏதோ நினைவு வந்தவளாக திரும்பியவளிடம் “உனக்கும் போக மனசில்லயா டியர் … வா நாம இங்கயே இருந்துக்கலாம்”

“நான்… நான்… ஒன்னு சொல்லனும் … ” என்றவள் முக பாவனையில் விளையாட்டைக் கைவிட்டவன்” என்னடா சொல்லு”

“நான் அத்தைக் கிட்ட நீங்க அனுலாம் வீட்ல இல்லாதப் போ அந்த இன்சிடன்ட் சொல்லி அவங்க எல்லாம் உலகத்துல இல்ல … வருஷம் நிறைய ஆகிருச்சு , நீங்க தான் அவங்க பையன் இப்படி சொல்லி மனசுல ஏத்துக்க வச்சேன். ஆரம்பத்துல கோபப்பட்டாலும் அதுக்கப்புறம் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க….

இது என் அனுபவம் எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கவுமே எங்க மாமா அத்தை எனக்கு என் அம்மாவ பத்தி சொல்ல ஆரம்பிச்சாங்க … மற்றவங்க சொல்லி என் மனசுகாயம் ஆகிடக்கூடாதுங்கிறதுக்காக…… என் அப்பா மேல ரொம்ப நம்பிக்கைல எங்கம்மா அவரா வந்து அவங்கள மனைவினு சொல்றவரை நான் வாய் திறக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.

நான் வயித்துல இருக்கேனு தெரிவிக்க போனப்போ அந்த எஸ்டேட் சொந்தக்காரங்க யாரும் உயிரோட இல்லனு சொன்னதும் அதிர்ச்சில மயங்கி விழுந்தவங்க அதோட பேச்சை நிறுத்திட்டாங்களாம்.”

கண்களில் நீர் பொங்க சொன்னவள் , “இதுல பெரிய கொடுமை என்னத் தெரியுமா … எங்கம்மா சொன்னாத்தானே எங்கப்பாவ தெரியும். அவங்க தான் இந்த உலகத்துல உடம்ப மட்டும் வச்சிட்டு நினைவுகள் செத்துப் போய் இருந்தாங்களே….எங்க தாத்தாவும் மாமாவும் விசாரிக்கப் போன இடத்துல …….” முகம் மூடிக் கொண்டு அழுதவள் ,

“அந்த எஸ்டேட் க்கு மூணு பேர் முதலாளி அதுல யார் எங்கப்பானு தெரியலயாம்….. எவ்வளவு கேவலமான நிலை…. இது யாருக்கும் வரக்கூடாது.” என்றவளை அணைத்துப் பிடித்து ஆறுதல் படுத்தியவனிடம் ,

கண்களைத் துடைத்து விலகியவள் , ” இதெல்லாம் ஏன் சொல்றேன்னா இந்த விஷயங்கள் எல்லாம் மெதுவா யாரோ சொல்லி தெரிஞ்சிருந்தா அது என் மனசையும் உடலையும் பாதிச்சிருந்துருக்கலாம். எல்லாம் தெரிஞ்சு வளர்த்ததால்தான் என் மனசு பக்குவப்பட்டு எதையும் தாங்க முடிஞ்சது…. .

எங்கம்மாவ ரொம்ப பூப்போல வளர்த்ததாலதான் அப்படி ஆனாங்கனு , என்னைய அந்த மாதிரி இல்லாம வளர்த்தாங்களாம் .அது போல தான் அத்தைக்கும் கசப்பானதுனாலும் அதை தெரிஞ்சிக்கிட்டா மனசு கொஞ்ச கொஞ்சமா ஏத்துக்கும்  அது நல்லதுனு நினைச்சுதுதான் சொல்லி வச்சேன்…, அதே போல நான் உங்க மாமா பொண்ணு அப்படினும் ஒரு நன்மை நடக்க ஒரு பொய் சொல்லலாம்னு…… ஐ ம், சாரி”

முறுவலோடு அவளைப் பார்த்தவன் “டாக்டர்ஸ் எங்க கிட்ட சொன்னது தான் … நான் தான் குழந்தைங்க எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருக்கிறது போல …, எங்கம்மாவும் குழந்தைப் போலவே கவலையில்லாம உடல் நலத்தோட இருந்தாலே போதும்னு விட்டுட்டேன். நான் செய்ய தயங்கினத நீ செய்துட்ட இதுக்குப் போய் சாரி லாம் சொல்லுவியா ” என்றவன்,

“உன்னோட போல்ட்னெஸ் பார்த்துதான் நான் உன் பக்கம் அதிகம் சாய்ந்ததே…. இக்கட்டான நேரத்துலயும் கோழை போல அழாம எவ்வளவு அழகா ஹேண்டில் பன்னின. இப்ப என்ன எப்பப் பார்த்தாலும் அழுகுற”

“அதானே உங்க கிட்ட மட்டும் தான் இப்படி ஆகுது உங்களால நிறைய மாறிட்டேன்”

“உரிமை இருக்கிற இடத்துல தான் நம்ம உண்மையான முகம் வெளிப்படும் டியர் … அந்த உரிமைக்கு பெயர் … கா…..ai ,amour , lifde ,aejeong….” என்று சிரித்தான்.

ராதிகா “என்ன ” என்று முழிக்கவும் …

” கண்டுபிடி டியர்….”

திரும்பவும் போன் அடிக்கவும் , “இவனுக்கு கல்யாணம் ஆகுற வரை , என் பொண்டாட்டிட்ட பேச விட மாட்டான் போல … சரிடா நேரத்தோட தூங்கு , காலையில பார்க்கலாம் …. அதுக்கு முன்னாடி நாளைக்கு நைட் வரை தாங்குற மாதிரி ஒரு அடி கொடுப் பார்ப்போம் இதால ” என்று அவள் உதட்டை வருடவும் ,

அவன் கன்னத்தை கடித்தவள்” நீங்க தேங்ஸ் சொன்னதுக்கு பனிஷ்மென்ட்” என்று புன்னகைத்துக் கொண்டே கிளம்பியவளை , இழுத்து அவள் கன்னத்தைக் கடித்தவன் , “இது நீ சாரி சொன்னல்ல, அதுக்கு பனிஷ்மென்ட்… யு நோ மை டியர் வொஃய்ப்….இந்த அடிக்கிற … கடிக்கிற பனிஷ்மென்ட் ரொம்ப நல்லாருக்கு …”

“பா…ஸ் … வலிக்குது” என்று சினுங்கவும் , “வா ஒத்தடம் தரேன் வலிக்காது”

“போங்க பாஸ் ….அனுவெய்ட் பன்னுவா … குட் நைட்… அப்புறம் பாஸ் உங்களுக்கு என்னைய ரொம்ப பிடிக்கும்னு தெரியும் …. இப்படி யுனிபாஃர்ம் போட்டு தான் அத நிரூபிக்கனும்னு இல்ல … எப்பவும் போல இருங்க” என்றவள் அறையைத் திறந்துக் கொண்டு ஓடி விட்டாள்.

” என்ன யூனிஃபார்மா ….அரவிந்தா உன் பொண்டாட்டி உன்னை காமெடி பீஸாக்கிட்டுப் போய்ட்டா … ” புலம்பலுடன் அவனும் கிளம்பிவிட்டான்.

அனுவின் அறைக்கு வர அங்கு அவள் ரமேஷிடம் தான் பேசிக் கொண்டு இருந்தாள். ராதிகாவைக் கண்டதும் போனைக் கட் செய்தவள்.

“ஏன் அண்ணி டிரஸ் சேன்ஜ் பன்னிட்டு வாறேன்னு சொல்லிட்டு அரை மணி நேரம் கழிச்சு வந்துருக்க…. ஆனா அதே டிரஸ்லயே திரும்ப வந்திருக்க …ம் ” என்று குறும்புடன் கேட்ட அனன்யாவிடம் ,

” அது ….அது… இங்க வந்து மாத்திக்கலாம்னு ….”

” அப்படியா மாத்திக்க டிரஸ் எங்க அண்ணி…. ஒரு நிமிஷம் அண்ணி … உன் முகமெல்லாம் ரெட்ரோஸ் பூத்திருக்கு என்ன விஷயம்….ம் அண்ணி எதுக்கும் அண்ணன காலையில உனக்கு மேக்கப் பன்ற முன்னாலயே வரச் சொல்லு ….கன்னத்துக்கு ரூஜ் போட தேவையே இருக்காது ” என்று சிரிக்கவும்,

அவளது கேலியில் கன்னத்தில் கை வைத்து மறைத்துக் கொண்டவள், “அது…. அது … அனு தூக்கம் வருது, நாம சீக்கிரம் எழனும் வா வா வந்துப் படு” என்றவள் உடை மாற்றாமலே படுத்துக் கொண்டாள்.

கண்களை மூடினாலும் திறந்தாலும் அரவிந்துதான் தெரிந்தான். அவன் கடித்த கன்னமும் உதடும் அவனைத் தேடும் உணர்வைத் தர… நாணத்தில் முகம் சிவந்தவள் கணவனின் நினைவிலயே உறங்கினாள்.

            தாயம்மாவும் ராணியும் அதிகாலையிலயே வந்து இருவரையும் எழுப்பி தயாராக சொல்ல , அழகு நிலையப் பெண்கள் மணப்பெண்ணை தேவதையென ஜொலிக்கச் செய்தார்கள்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் இருந்த அவர்கள் இடத்திலயே பிரமாண்ட மேடை அமைத்திருந்தான் அரவிந்த். அவர்கள் வீட்டில் பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் சுப நிகழ்ச்சி , தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அத்தனை ஏற்பாட்டையும் செய்திருந்தான்.

சிவாவும் ராணியும் ரமேஷ் சார்பாக நிற்க , அரவிந்தும் ராதிகாவும் பெண் வீட்டு சடங்குகளை செய்ய , ரமேஷ், அனன்யா கழுத்தில் மங்கல நாண் பூட்டி, உற்றார் உதவினர் வாழ்த்த  தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டான்.

தங்கையின் கழுத்தில் தாலி ஏறவும் தான் , தன் மனைவியைப் பார்த்தான்.அதுவரை சடங்குகள் செய்யும்போது அருகிலயே இருந்தாலும் கடமைகள் முன்னின்றதால் தெரியவில்லை. இப்போது அவளையேப் பார்த்தவன் , “ரதி ” என்று வாயசைக்க , காலையிலிருந்து பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவர்களை வரவேற்று பொறுப்பான அண்ணனாக தன் கடமையைச் செய்துக்கொண்டிருந்த கணவனையே பார்வையால் சுற்றி வந்தவள், இப்பொழுது அவன் பார்வை தன் மீது படவும் “என்ன ” என்பதாக புருவம் உயர்த்த ,

கைகளை கட்டிக் கொண்டு நின்றவன் “ஒன்றுமில்லை” என்பதாக தலையசைத்து முத்தமிடுவது போல் உதட்டைக் குவித்தான்.

விழிகளை விரித்து ,முகம் முழுவதும் இரத்தம் பாய சிவந்து விட்ட வள், சுற்றும் முற்றும் யாரும் பார்த்து விட்டார்களோ என்று பார்க்க , அனைவர் கவனமும் மணமக்கள் மீது தான் இருந்தது எனவும் திருப்திக் கொண்டவள். ‘மணமக்களை பாருங்கள்’ என சைகை செய்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

உறவினர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைத்திருந்தான். இரவு வரவேற்புக்குத் தான் மற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் பகலில் கோவை வீட்டிலயே மணமக்களை ஓய்வெடுக்க வைத்தார்கள்.

அதுவரை ரமேஷ் மட்டுமே இருந்த அறையில் அனன்யாவையும் சேர்த்து உள்ளே அனுப்பவும் , அவளுக்கு புது வித அனுபவமாக இருந்தது. அங்கிருந்த ஜன்னல் திரையை ஒதுக்கி கீழே சிவாவின் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவள் பின் வந்து நின்று இடையோடு அணைத்துக் கொண்டான் ரமேஷ்.

“ஹேய் பப்ளி நான் வந்ததுக்கூடத் தெரியாம அப்படி என்ன  பார்க்கிற ” என்று வேண்டுமென்றே அவள் மீது சாய்ந்து கழுத்தருகே தலை வைத்து கீழேப் பார்த்தான்.

பெண்களுக்கே உண்டான கூச்சமும் , நாணமும் உடலை சிலிர்க்க செய்ய , அவன் கைகளை விலக்கி விட்டு நகர்ந்துக் கொள்ள ,

அதைக் கண்டுகொள்ளாது “க்யூட்ல….அதுவும் அந்தக் குட்டிப் பொண்ணு என்னைய சித்தப்பா சொல்லத் தெரியாம ” பப்பா .. பப்பா”னு சோ க்யூட் ….” என்று அனன்யா கைப்பிடித்துக் கொண்டவன் ,

“அதேப்போல அப்பானு என்னைய சொல்ல எங்கம்மாவயே பொண்ணா பெத்து எனக்குத் தருவியா”

அதுவரை தலை குனிந்து இருந்தவள் , அவனது விழிகளை அண்ணாந்து நோக்கினாள். அதில் தெரிந்த அன்பில் ஆசையில்  யாசிப்பில் தலை தானாக’ சரி’ என்பதாக ஆடியது.

அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டவன்” லவ் யூ பப்ளி … லவ் யூ சோ மச்” என்றவன்.

“அரவிந்த் பாவம் எல்லாத்தையும் இழுத்துப் போட்டு தனியா செய்துட்டு இருக்கான். இன்னைக்கு அவனுக்கும் வரவேற்பு … நான் போய் ஹெல்ப் பண்ணிட்டு வாறேன். அதுவரை ரெஸ்ட் எடு ஓகே …ஏன்னா நைட் நிறைய வேலை இருக்கும் அப்ப தூங்கிறாதே பப்ளி ” என்று கன்னம் தட்டி கதவருகே சென்றவன்,

திரும்ப அருகே வந்து , ” நம்ம வாழ்க்கை நம்ம வீட்ல தொடங்கணும்னு ஆசைப்பட்டேன், என் அரசிய வரவேற்க திருப்பூர்ல எல்லாம் தயாரா இருக்கு …நைட் எவ்வளவு நேரமானாலும் நாம அங்க தான் போறோம் பப்ளி… ” என்றவன் வெளி வேலைகள் கவனிக்கச் சென்று விட்டான்.

        அரவிந்த் அவனை எவ்வளவோ ஓய்வெடுக்க சொல்லியும் கேட்கவில்லை அவன்.”மாப்ள இப்ப நீ தங்கச்சி வீட்டுக்காரன் டா அதற்கான மரியாதைய நான் தரணும் …அதனால நீ போய் பாப்பாக்கூட இரு”

“நீயும் எந்தங்கச்சி புருஷன்கிறத மறந்துட்டியா … நான் என் தங்கச்சி வரவேற்பு வேலைய பார்க்கிறேன் போடா டேய் ” என்றவன் அவனும் வேலைகளில் மூழ்கிவிட்டான். உறவின் பெயரில் கடமைகளைச் செய்தாலும் ‘ நட்பு’ தான் முதன்மை பெற்றது அவர்களுக்குள் .….

கணவனின் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு இருந்த ராதிகாவை, மாலையில்  வட இந்தியப் பெண்களின்  தாவணிப் போன்ற திருமண ஆடையில் அலங்கரித்து வரவேற்பு மேடைக்கு அழைத்துச் செல்ல ராஜகம்பீரத்துடன் ஷெர்வானி ஆடை அணிந்து வந்தான் அரவிந்த்.

காரில் சென்று இறங்கியவளை கைப்பிடித்துக் கொண்ட அரவிந்த் அவள் கையில் ஒரு ரிமோட்டைத் தந்து திரையால் மூடப்பட்டு இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘ திற’ எனவும் ,

அதை அழுத்தியதும் திறந்து கொண்ட திரையில் ,

‘திரு .ராமகிருஷ்ணன் ,திருமதி கீதாஞ்சலி ராமகிருஷ்ணன் ‘ மகள் ராதிகா…. என்ற வாசகத்திற்கு மேல் படிக்க முடியவில்லை ராதிகாவால் … அந்த திரையைத் திறந்தவளுக்கு கண்ணீர் திரையாக வந்து மேலும் படிக்க இயலாமல் செய்து விட்டது.

சுவாசம் போல அருகில் இருந்து

சுகப்பட வைப்பேன்

உந்தன் உறவை எந்தன் உறவாய்

நெஞ்சில் சுமப்பேன்

 

உன் கனவுகள் நிஜமாக

என்னையே தருவேன்

உன் வாழ்வு மண்ணில் நீள

என் உயிர் தருவேன்..

                       காதல் அழகானது….