அழகு 30

  ரமேஷ் காரில் அமர்ந்து அனன்யாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் . ராதிகாவோடு வந்துக் கொண்டு இருந்தவள் அவளிடம் கையசைத்து விட்டு முன்புறம் வந்து அமர்ந்து கொண்டு  சாலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டு வரும் அனன்யா அன்று மெளனமாகவே வந்தாள்.

       இருவரும் அலுவலக வாசலில் வந்து இறங்கவும் , அரவிந்தின் பி.ஏ.வந்துக் காத்துக் கொண்டு இருந்தார். இவர்களைக் கண்டதும் அருகில் வந்தவர் ,

“எம்.டி உங்களுக்கு போன் பன்னினாரம் , ரெண்டு பேர் போனும் ஸ்விட்ச் ஆப் ல இருக்காம்”

“ஓ நான் பார்த்துக்கிறேன் ” என்றவன் கேபின் செல்ல , அனன்யா அங்கிருந்த ஊழியரிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனோடே வந்து லிப்டில் ஏறிக் கொண்டாள்.

அவள் பாரத போது அவளைப் பார்த்த ரமேஷ் , ” நான் இந்த வீட்ட விட்டு போகமாட்டேன்னு சொன்னது … வெறும் வாய் வார்த்தை தான் போல ” என எண்ணிக் கொண்டான்.

அவனோடு சென்றவள் நேராக அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று விட்டாள். எப்போதும் ‘உன் கேபின் போ’ என்று சொன்னாலும் கேட்காது , “டவுட் அத்தான், டவுட் அத்தான் ” என்று அவனறையிலிருந்து நகரமாட்டாள்.

ஆனால் அவள் இன்று அமைதியாக வந்ததும் , அவளறைக்குள் சென்றதும் கடுப்பைக் கிளப்ப அவனது அறைக்குள் சென்று தலையைப் பிடித்து அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு புரியவில்லை… ஏன் …ஏன் கல்யாணம் ஆகிட்டா நான் அத்தை பையன் இல்லையா , அவ என் தாய் மாமா மகள் இல்லையா .. குழம்பிக் கொண்டு இருந்தவன் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்கவும் , தலையிலிருந்து கையை எடுத்து விட்டு சரியாக தலைகோதிக் கொண்டவன் “எஸ் கமின் ” எனவும் ,

உள்ளே வந்த ஊழியர் “மேடம் போன் வச்சுட்டு வந்துட்டாங்களாம் வீட்லருந்து வந்துக் கொடுத்துட்டுப் போனாங்க” எனவும் அதை வாங்கிக் கொண்டவனுக்கு அரவிந்த் அனன்யாவுக்கு அனுப்பிய மாப்பிள்ளையின் போட்டோ பார்க்கும் ஆவல் வந்தது.

கேபின் உள்ளே தாழ்பாள் இட்டவன்… அடுத்தவர் போனைத் தொடுவது தவறு என்று அறிவுக்கு தெரிந்தாலும் மனது கேட்க மறுத்தது. கை நடுக்கத்துடனேயே அதை உயிர்ப்பித்தவன் கண்களில் அரவிந்த் ,ரமேஷ் இருவருக்கிடையில் அழகான பிங்க் நிற உடையில் அழகாய் சிரித்துக் கொண்டு இருந்த அனன்யா அமர்ந்திருந்த போட்டோவை முகப்பு திரையாக வைத்திருந்தாள்.

பார்க்கும் யாருக்குமே அதைக் கண்டால் புன்னகை மலரும் , ரமேஷிற்கும் புன்னகை வந்தது. வாட்சப் திறந்தவன் கைகள் நடுங்க அரவிந்தின் மெசேஜில் கை வைத்தான். ஏனோ ஏசியறையில் புழுக்கமாக இருந்தது ரமேஷிற்கு … கண்களை மூடியிருந்தவன் ஒற்றைக் கண்ணில் மொபைலைப் பார்க்க , வியர்வை ஆறாகப் பெருக ….இதயம் வேகமாக துடிக்க மூச்சு விடுவதே சிரமம் போல் அப்படியே அவனறையில் இருந்த சோஃபாவில் தலை சாய்த்து அமர்ந்து விட்டான்.

யாரையோ எதிர்பார்த்து திறந்தவனுக்கு தன் முகமே அங்கிருப்பதைக் கண்டதும் … உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் தான் அப்படி அமர்ந்திருந்தான்.

கூடவே அரவிந்த் தங்கைக்கு அனுப்பியிருந்த சொற்கள்….” எங்கள் இளவரசியின் இதயம் கவர்ந்த இளவரசன் இவனன்றி யாராக இருக்க முடியும் ” என்று சில ஸ்மைலிகளை போட்டு இருந்தான்.

அறையிலிருந்த தொலைபேசி ஒலிக்க , அதனருகே சென்று எடுத்து காதில் வைத்துக் கொண்டான். அரவிந்த் தான் அந்த எண்ணிற்கு அழைத்திருந்தான் .ரமேஷ் அமைதியாய் இருக்கவும் ,

” என்ன மாப்ள … உன் போன் ஸ்விட்ச் ஆப் , அனு இன்னும் போன் என் கைக்கு வரலங்கிறா … ஆனா இப்ப தான் அனு மெசேஜ் ஓபன் பண்ணதா காட்டுது …. காதல் வந்தா கள்ளமும் வந்துரும்கிறது சரிதான்டா. என் கெஸ் சரியாயிருந்தா இப்ப அனுமொபைல் உங்கிட்ட ஆம் ஐ கரெக்ட்…..”

“ம் … ” என்று மட்டுமே பதில் தரவும் அரவிந்த் வாய் விட்டு நகைக்க ஆரம்பித்தான்.

“மாப்ள உன் ஃபீலிங்க்ஸ் எனக்கு புரியுது … கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் கால் பன்னு… இப்ப வைக்கிறேன்” என்றவன் வைத்து விட்டான்.

மறுபடியும் அறைக்கதவு தட்டும் சப்தம் கேட்க மொபைலை அணைத்து மேசை மீது வைத்து விட்டு எழுந்து கதவைத் திறந்தவன் முன் அவனது இளவரசி ….நின்றுக் கொண்டு இருந்தாள். மனதில் இதம் பரவ, “இல்லை இல்லை மை குயின்( My Queen) ” என்று உச்சரித்துக் கொண்டவன் , அவளுக்கு வழிவிட்டு நின்றான்.

” என் மொபைல் … “என்றவள், அதை மேசை மீது இருந்து எடுத்துக் கொண்டு திரும்ப, ஒரு காலை மடக்கி கதவின் மீது வைத்து கைக் கட்டி நின்ற ரமேஷை திகைத்துப் பார்த்தாள்.

அவனருகே சென்று ” என் கேபின் போறேன்…” என்றவள் அவன் முகம் வியர்த்து வடிய , சட்டை எல்லாம் ஈரமாகி இருக்க ,

“அத் …. அத்தான் என்னாச்சு ஏன் உங்களுக்கு இப்படி வியர்க்குது ” எனவும் , “வலிக்குது” என அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே சொல்லவும் , “எங்க வலிக்குது … “என்றுப்  பதறிப்போய் கேட்டவளிடம் , இதயத்தில் கை வைத்து ” இங்க” என்றான்.

கண்ணில் பயத்தைக் காட்டியவள்,

…ஏசியை பார்க்க அது அதிகபட்ச குளிரையேக் காட்டியது … ஓடிப்போய் மின்விசிறியையும் இயக்கிவிட்டு அவனருகே ஓடி வந்து ,

” வாங்க உட்காருங்க … இது குடிங்க” என்று தண்ணீர் பாட்டிலைத் தந்தவள் கையைப் பிடித்துக் கொண்டவனிடம் …

” வாங்கத்தான் ஹாஸ்பிடல் போகலாம்” என ,

“இல்ல வேண்டாம் … எனக்கு கொஞ்சம் படுக்கணும் போல இருக்கு ..”

அந்த பெரிய சோஃபாவைக் காட்டியவள் ” வாங்க படுங்க … நான் டாக்டர வரச் சொல்றேன்” எனக் கிளம்பப் போனவளைத் தடுத்தவன் ,

“டாக்டர் வேண்டாம் … நீ வா” என்றவன் , அவளை அங்கு அழைத்துச் சென்று ஓரமாக அமரவைத்து, “எங்கம்மா இருக்கிறவரை அவங்க மடியில தான் தலை வச்சுப்படுப்பேன்… அதற்கப்புறம் …..” உதட்டைப் பிதுக்கியவன் …” எனக்கு இப்ப உன் மடியில தலை வச்சுப் படுக்கணும் போல இருக்கு…படுத்துக்கட்டா” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்க்காது மடியில் தலைவைத்து கண்களை மூடிக்கொண்டான்.

இரவெல்லாம் உறங்காமலும் , சற்று முன் வரை இருந்த அலைப்புறுதலும் உடலை சோர்வாக்கிவிட .. இத்தனை நாள் தான் தேடிய தாய் மடி கிடைத்த நிம்மதியும் அவனை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியாது, தீடிரென்று முகத்தில் தண்ணீர் பட்டது போல் இருக்கவும் , சிரமப்பட்டு இமைகளைப் பிரித்தவன் கண்களில் அனன்யா வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பது படவும், வேகமாக எழுந்தவன் ,

“ஹேய் பப்ளி , என்னாச்சு … ஏன் இப்படி அழுகுற ” என்று சொல்லிக் கொண்டே அவள் தாடைப்பிடித்து கண்ணீரைத் துடைத்துவிடவும் ,

“அத்தான் உங்களுக்கு என்னாச்சு , நெஞ்சு வலிக்குது சொன்னீங்க … இவ்வளவு ஏசி குளிர்லயும் வேர்த்துப் போயிருச்சு, வாங்க டாக்டர்கிட்டனா இல்ல தூங்குறேன்னு சொல்லிட்டு தூங்கிட்டீங்க , நான் நான் பயந்துட்டேன் தெரியுமா … அண்ணனுக்கு போன் பன்னா … அவன டிஸ்டர்ப் பன்னாத தூங்கட்டும் .. நைட் தூக்கம் இல்லாததால அப்படி இருக்கும்னு சொல்றாங்க” என்று ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்கவும்”

” பப்ளி பப்ளி….” என்று சத்தமாக சொல்லி சிரித்தவனைப் பார்த்தவள் , வேகமாக எழ முற்பட … இத்தனை நேரம் அவன் தூங்க மடி தந்திருந்த அவள் கால்கள் மரத்துப் போய் … எழ முடியாமல் சோஃபாவிலயே தொப்பென அமர்ந்தாள்.

” என்ன என்னாச்சு” என்று வந்தவனிடம் , “கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கால்கள அசைக்காம வச்சிருந்தா இப்படித்தானே ஆகும்.”

” என்ன ஒரு மணி நேரமா உன் மடியில படுத்திருந்தேனா ” என்றவன் கண்கள் சிவந்து அவள் காலருகில் மண்டியிட்டவன் , அவள் கைகளை பிடித்துக் கொண்டு,

” காலம் முழுசும் உன் மடியில படுத்து இப்படி நிம்மதியா தூங்கணும்னு ஆசைப்படுறேன்… இந்த தாயில்லாத பிள்ளைக்கு தாயா இருப்பியா…. என்னைய கல்யாணம் செய்து எனக்கு எல்லாமுமா இருப்பியா…. “

திகைத்து விழித்துக் கொண்டு இருந்தவள் கண்கள் மறுபடியும் உப்பு மழை பொழிய ,

” இருக்க மாட்டியா … ” என்றவன் வாயை கைக்கொண்டு மூடியவள் ….,

” உங்களுக்கு தாயா , மனைவியா , தோழியா , காதலியா.. ஏன் குழந்தையா மாறி உங்க கைக்குள்ள  இருக்கத்தான் ஆசைப்படுறேன்… ஆனா… ஆனா… அண்ணா” என்றவளின் கையை எடுத்து விட்டு எழுந்தவன் ,

“அப்ப உங்கண்ணன் சொல்றவனத்தான் கல்யாணம் பன்னுவ அப்படித்தானே…” என்று கோபம் போல் கேட்கவும் ,

அவன் முன்பு எழுந்தவள் கால் தடுமாறினாலும், பிடிப்புக்கு அவன் சட்டையையே இறுகப்பற்றியவள் , “நீங்க மட்டும் என்னவாம் .. காலம் பூரா உன் மடி வேணும்னு டையலாக் அடிச்சிட்டு … எங்கண்ணன்கிட்ட நீ என்ன சொன்னாலும் சரினு சொல்லல …. பெரிய இவரு … .என்னைய சொல்ல வந்துட்டாரு … “கோபமாக முகம் சிவக்க பேசியவள் அருகில் கிடந்த மொபைலை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க ,

“ஹேய் பப்ளி என்ன பாதியிலயே ஓடுற ” என்றவன் அவளை இரு கைகளில் ஏந்திக் கொண்டு அவன் இருக்கையின் முன்பிருந்த உயர மேசை மீது அமர வைத்தான்.

அவன் தூக்கியதில் திகைத்தாலும் , “இங்க பாருங்க நான் ஒன்னும் முன்ன மாதிரி குண்டு இல்ல … இன்னொரு தடவை என்னை பப்ளி சொன்னீங்க.… சொன்னீங்க .. இந்த பேப்பர்வெய்ட்டாலயே உங்க மண்டைய உடைச்சிருவேன் … அப்புறம் உங்க கல்யாணத்தண்ணிக்கு உங்க தலையில கட்டோட தான் உங்க பொண்டாட்டிக்கு தாலிக் கட்டணும்”

” அடிப்பாவி நீ இவ்வளவு டெரரா … பாவம் உன்னைக் கட்டிக்கப் போறவன்… எப்பவும் ‘ பர்ஸ்ட் எய்ட்’ கிட்டோட தான் சுத்தனும் போல… “

அவளை சிறை செய்தது போல மேசையில் கையூன்றி நின்றிருந்தவனிடம்,

“அது அவன் கவலை , இப்ப நீங்க தள்ளுங்க , நான் போகணும்” என்று முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னவளைப் பார்த்து முறுவலித்தவன் ,

“சரி … அது அவன் கவலை … என் மண்டைய உடைக்கப் போறவளை நீ பார்க்கறியா … அவ உன்னை விட பெரிய ரவுடி … அவகிட்ட போய் உங்க அண்ணன் என்னை சிக்க வச்சுட்டான். நானும் அவகிட்ட  என்ன பாடுபடப் போறேனோத்  தெரியல “