சிரித்து முடித்தவள் தன் துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்து கொண்டே “தேங்க்ஸ் பாஸ் … நானும் இப்படி சத்தமா சிரிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கல… அப்புறம் இது சிரிச்சதால வந்த கண்ணீர் …ஓகே …”

“அப்புறம் என்னக் கேட்டீங்க … நான் ஏன் சாப்பிடலனு தானே … கல்யாணம் ஆனப் பொண்ணுக்கு புருஷன் வீடு போனா என்ன என்ன செய்யனும்னு சொல்லிக் கொடுக்க எனக்கு யாருமில்ல தான். ஆனா நான் பார்த்த வரைக்கும் அத்தை மாமாவுக்கும் , ராணி அண்ணி அண்ணனுக்கும் சாப்பாடு பரிமாறி அவங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவாங்க … “நிறுத்தியவள் தலை குனிந்து கொண்டே , ” நீங்கதான சொன்னீங்க , பெரியவங்க பார்த்துவச்ச கல்யாணமா நினைச்சு இந்த வாழ்க்கைய ஆரம்பிப்போம்னு … அதான் இப்படி ஸ்டார்ட் பன்றேன் ” என்றாள்.

அவள் இந்த திருமணத்தை ஏற்க முயற்சி செய்கிறாள் என்பதே அவனுக்கு மகிழ்ச்சியைத் தர , வேகமாக சாப்பிட்டு எழுந்தான் , கூடவே எழுந்தவளிடம் ,

“வெளிய ரமேஷ் வெயிட் பன்றான்டா , அதனால பேச நேரமில்லை ….” அவள் அருகில் வந்தவன் ,

“இந்த பார்மாலிட்டீஸ்லாம் வேண்டாம் உனக்கு எப்போ பசிக்குதுனு தோணுதோ அப்போ சாப்பிடு … அப்புறம் புதுசா கல்யாணம் ஆன மனைவி கணவனுக்கு என்னலாம் செய்யலாம்னு நெட்ல பார்த்துக் கத்துக்கோ சரியா” எனவும் ,

ராதிகாவும் தலையை சரி என்பது போல் ஆட்டினாள்.

அவளின் அறியாமையை ரசித்தவன் சட்டென்று குனிந்து அவள் இதழ் மீது இதழொற்றி விட்டு திரும்பி நடந்தான்.

ராதிகாவிற்கோ உடலில் மின்சாரம் பாய்ந்த ஓர் உணர்வு , நொடிக்கூட நீடிக்காத இதழொற்றல் தான் … அப்படியே நின்று விட்டாள்.

திரும்பி வந்தவன் “ஸ்வீட்டி ‘லாக்’ ஆகிட்டியா, ரிலீஸ் பன்னி விடவா ” எனவும் தான் உணர்வு வந்தவள் , அவனைச் சுற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்து விட்டாள்.

புன்னகைத்துக் கொண்டே அவள் அருகில் வந்து ” வர்றேன் டியர் … நெட் .. மறந்துராத சரியா” என்று சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டான்.

பேச்சிலயே தன்னை பெண்ணாக உணர வைத்துக் கொண்டு இருக்கும் கணவனின் செய்கையை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டே அனன்யாவைத் தேடிச் சென்றாள்.

அங்கு அம்மாவிடம் அமர்ந்திருந்தவளிடம் “அனு அத்தை தூங்கறாங்க தானே , கொஞ்சம் பேசனும் உன் கிட்ட ” என்று தயங்கி வளிடம் ,

“ஹேய் அண்ணி , நீ எனக்கு அண்ணி அதை மறந்துட்டியா , பேசனும் வா அப்படினு உரிமையாக் கூப்பிடணும் சரியா… வா மாடில என் ரூமுக்கேப் போகலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

அறைக்கு வந்தவர்கள் வசதியாக அமர்ந்து கொண்டு , “சொல்லு உனக்கு என்னத் தெரியனும் “

அவள் கேட்ட விதத்தில் முகத்தில் முறுவல் அரும்ப” எப்படி அனு ….” என்றவளிடம்,

“நான் யாரு”

“யாரு”

“அரவிந்த் நாராயணன் தங்கச்சியாக்கும் …நீ என்ன பேச வர்றனு முதல்லயே கண்டு பிடிச்சிருவேன்ல…” என்றவளிடம் ,

” யம்மாடி … அண்ணனும் தங்கச்சியும் வாய் பேசுறதுல ஒரே மாதிரி தான் ” என்று புன்னகைத்தவளிடம் ,

“எங்கண்ணன் எனக்கு அப்பாவுக்கு சமம் அண்ணி ….” என்று சொன்னவள் , ” சரி சொல்லு என்னத் தெரியணும் உனக்கு “

” அனு… அன்னைக்கு நான் இங்க வந்தப்ப அத்தை ஏன் என்னை அஞ்சுனு சொன்னாங்கனு …. நீ சொன்ன … ஆனா அப்ப இருந்த மனநிலையில நான் நீ சொன்னத சரியா கவனிக்கல… அத்தை ஏன் இப்படி ஆனாங்கனு சொல்றியா … உங்கண்ணாகிட்ட கேட்க சங்கடமா இருக்கு.”

“இட்ஸ் ஓகே அண்ணி … எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். அம்மா வயித்துல நான் மூணு மாசமாம் அப்ப எங்க சின்ன மாமாவுக்கு அதாவது அம்மாவோட கூடப் பிறந்த அண்ணனோட காதல் மனைவிய வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாம்னு கொடைக்கானல் போனாங்களாம்.” என்றவள் அன்று நடந்த நிகழ்வுகளை எல்லாம் சொல்லி முடித்தவள்…

“மாமா கொடைக்கானல்ல இருக்கிற நம்ம எஸ்டேட் பங்களாவுக்கு போறப்ப .. அங்க ஆபிஸ்ல வேலைப் பார்த்த அத்தைக் கிட்ட பழகிருப்பாங்க போல , எங்க அம்மா தாத்தா… ரொம்ப இனம் , அந்தஸ்த்து லாம் பார்க்கிறவரு , காதல ஏத்துக்கலப் போல , அதனால மாமா எங்கம்மா கிட்ட விஷயம் சொல்லி அம்மா கையால தாலி செய்து வாங்கிட்டுப் போய் அவங்கள அங்க இருக்கிற  கோவில்ல யாருக்கும் தெரியாம தாலிக்கட்டி  அவங்கள அங்கயே விட்டுட்டு வந்துருக்கார்.

அவங்க வீட்ல இவங்களுக்கு கல்யாணம் ஆனதே தெரியாதாம். தாத்தாவ சமாதனப்படுத்தி அவங்கள கூட்டிட்டு வர , எங்கப்பா , பெரிய மாமா , அத்தை , சின்ன மாமா எல்லாரும் போறவழில கார்  மலைலருந்து உருண்டு …..”  தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தவளிடம்…”

“சாரி அனு … ப்ளீஸ் ப்ளீஸ் அழாத “

அழுகையை அடக்கிக் கொண்டே “பரவால்ல அண்ணி… மாமா அவங்கள அஞ்சுனு சொல்லி தான் அம்மா கிட்ட பேசுவாராம். அவங்க சேர்ந்து இருந்த போட்டோல அவங்கள அம்மா பார்த்திருக்காங்க..தாத்தா அதை எல்லாம் கிழிச்சுப் போட்டுட்டாரு… ஒரு வேளை அவங்க உன்னை மாதிரியே இருந்தாங்களோ என்னவோ , அம்மா அதான் உன்னை அப்படிக் கூப்பிடுறாங்க”

கேட்டுக் கொண்டு இருந்த ராதிகாவுக்கு ஏதோ சொல்ல முடியாத உணர்வுகள் உந்த … “ஓ… அத்தைக்கு அதுக்கப்புறம் நடந்தது நியாபகம் இல்லையா”

விரக்தி சிரிப்பு சிரித்த அனன்யா”அன்னைக்கு நான் வயித்துல இருந்ததாலயும் , அண்ணனுக்கும் , அத்தானுக்கும் ஸ்கூல்கிறதால தாத்தாக்கூட இருந்துருக்காங்க … தன் அன்புக்குரிய வங்க எல்லாத்தையும் ஒரே நாள்ல இழந்ததுல … அதும் அப்பான்னா அவங்களுக்கு உயிராம் …. நான் பிறக்கிற வரை உணர்ச்சியே இல்லாம இருந்தாங்களாம் , என்னை பிரசவிக்கும் போது தான் பேசிருக்காங்க … ஆனா மற்றது ஞாபகமே இல்லாம போயிருச்சாம்.

என்னையும் அம்மாவையும் கவனிச்சிக்க தாத்தா ஊர்லருந்து தாயம்மாவ கூட்டிட்டு வந்தாங்களாம்.

அம்மா மன அழுத்தம் அதிகமாகி ரொம்ப ஹார்ஷா பிகேவ் பண்ண தால தாத்தா அண்ணனையும் அத்தானையும் அம்மாவ பார்க்க அனுமதிக்காம விட்டுருக்காங்க …. ஆனா ஆனா அதுதான் ரொம்ப தப்பா போச்சு அண்ணி … அம்மா ஓரளவு நார்மலானதும் அண்ணாவப் பார்த்தப்ப வளர்ந்தப் பையனா தெரிஞ்சதும் .. அவங்க இது என் அருக்குட்டி இல்லனு அவங்கள ஏத்துக்கல… புதுசா வந்த என்னைய மட்டும் தான் தெரியும்… மாத்திரைகளும் மருந்துகளும் அவங்க உடல் நிலைய சீரா வச்சுக்க உதவுது .ஆனா அவங்க மனசு …. கடவுளுக்குத் தான் தெரியும் ….. அண்ணன் ரொம்ப பாவம் அண்ணி … எனக்குத் தெரிஞ்சு அண்ணன் முகத்துல சந்தோஷத்த இப்பதான் பார்க்கிறேன் …. எப்பவுமே முகத்துல ஒரு கடினத்த வச்சுட்டு இருக்கிற எங்கண்ணன் உன்னை காதலிச்சாருங்கறதே எனக்கு அதிசயம் ….இதுல கல்யாணமே பன்னிட்டு வந்தது, நான் நம்பவே முடியல “

தன் கணவனின் மனநிலையை நாத்தனாரின் பேச்சில் அறிந்துக் கொண்ட ராதிகாவுக்கு தற்போதைய நடவடிக்கைகள் விசித்திரமாக தெரிந்தது.

“சரியான கல்லுளி மங்கன் ….என் கிட்ட பேசுறப்பேச்சென்ன… அதுவும் நேத்து நைட்” என்று புன்னகை மலர வெக்கத்தில் தன்னையறியாமல் முகத்தை கைகளால் மூடி தலையை அசைக்கவும்,

பார்த்துக் கொண்டு இருந்த அனன்யாவுக்கு சிரிப்பு வரவும் , ” என்ன ராதிகா மேடம் ட்ரீம்க்கு போய்ட்டீங்களா.. அதான் சொன்னேனே எங்கண்ணன் இப்பதான் சந்தோஷமா இருக்காருனு … ” ராதிகா கையைப் பற்றிக் கொண்டவள்,

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி … நீ வெக்கப்படுறதுலருந்தே எங்கண்ணன நீ சந்தோஷமா வச்சிப்பங்கிற நம்பிக்கை வந்துருச்சு “

” அனு … கல்யாணம் மேல நம்பிக்கையே இல்லாம இருந்த எனக்குக் கூட உங்கண்ணன் எங்கிட்ட நடந்துக்கிற விதம் , ஒரு நம்பிக்கையைத் தருது…. அது மட்டுமல்ல நீங்க எல்லோரும் சின்னக் கேள்விக் கூடக் கேட்காம என்னைய ஏத்துக்கிட்டு இவ்வளவு அன்பா  நடந்துக்கிறீங்க ….”

“அண்ணி அது எங்க அண்ணன் மேல நாங்க வச்சிருக்கிற நம்பிக்கை … இருபத்திரெண்டு வயசுலயே பொறுப்ப எடுத்துக்கிட்டு இப்பவரைக்கும் எல்லாத்தையும் சரியா கொண்டு போறவங்க .. தன் வாழ்க்கைத் துணையையும் சரியா தான் தேர்ந்தெடுத்துருப்பாங்க அப்படிங்கிற நம்பிக்கை ….. “

புன்னகைத்த ராதிகா ” அனு விட்டா விடிய விடிய உங்கண்ணன் புகழ் பாடுவ போலிருக்கே”

“அடடா … எங்கண்ணனப் பத்திப் பேசும் போதெல்லாம் ஆர்வமா கேட்டுட்டு … இப்ப இப்படி பேசுறீயா ” என்று மகிழ்ச்சியோடு இருவரும் பேசிக் கொண்டு அன்றையப் பொழுதைக் கழித்தனர். மாலையில் அனைவரோடும் அமர்ந்து இருக்கும் போதே ராதிகாவின் போன் அடிக்க , புதிய எண்ணாக இருக்க எடுத்தவள்”ஹலோ” என்றாள்.

“ஹலோ தானா… அத்தான் …. மாமா .. இல்ல அரவிந்த்  குறைஞ்சபட்சம் என்னங்ங்ங்ககக……னாவது சொல்லுவனு எதிர்பார்த்தேன்” என்று ராகம் இழுத்து அரவிந்த் தான் அந்தப்புறம் பேசினான்.

குரலிலேயே அடையாளம் கண்டவள் …. “இந்த ….இந்த நம்பர் நீங்கனு தெரியாது”

” என்ன என் நம்பர் தெரியாதா…. என்ன செய்ய தெரிஞ்சிக்க ஆசை பட்டாதானே தேடியிருப்ப … சரிடா பரவால்ல இது என் பெர்சனல் நம்பர் , சேவ் பன்னிக்கோ , அப்புறம் இங்க உங்க பெரியப்பா வீட்டுக்குத் தான் வந்துருக்கேன். கைல சின்னக்குட்டிய தூக்கி வச்சுட்டு உன்னை வீடியோ கால்ல காட்டுறேன் சொன்னேன்.வா வீடியோ கால் க்கு… எனக்கும் உன்னைப் பார்க்கனும் போல இருக்கு.”

தயங்கி தயங்கி ” என்கிட்ட பழைய பட்டன் போன் தான் இருக்கு …”

அவள் அன்று காரில் சொன்னதை ஞாபகத்தில் கொண்டு வந்தவன், அவளுக்கு தன் எண் தெரியவில்லை என்று வருந்தியவன் , தானும் அவளைப் பற்றி ஒன்றும் தெரிந்துக் கொள்ளாததுக்குறித்து வருந்தினான்.

“ஓ.. சரி அனு போனுக்குப் போடுறேன்” என்றவன் அவளிடம் பேசி விட்டுத்தான் வைத்தான்.

சிவாவை சம்மதிக்க வைத்து திருப்பூர் அலுவலகத்தின் ஜெனரல் மேனேஜர் பதவியை அளித்தவன் .ரமேஷ் மட்டுமே இனி  அதன் எம்.டி., என்பதை அங்குள்ளவர்களுக்கு அறிவித்துவிட்டு வந்திருந்தான். ரமேஷிடம் கூடச் சொல்லாது இந்த முடிவை எடுத்தவன் அதற்கான காரணங்களை பிறகு சொல்வதாக சொல்லி விட்டான்.

அவர்கள் சிவா வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் அவனது பெரியப்பா அரவிந்த் அருகில் வந்தவர் ,

“தம்பி சில உண்மைகள் மறைக்கப்பட்டால் நல்லது…. ஆனா சில உண்மைகள் பகிரப்பட்டால் நல்லது.”

” என்ன அங்கிள் சொல்ல வாறீங்க , எனக்குப் புரியல “

” என் தங்கச்சி வீட்ல என்ன நடந்தது எது நடந்தது எதுவும் அவ சொல்லல , பிறந்த வீட்லக்கூட புகுந்த வீட்ட விட்டுக் கொடுக்காம வாழ்ந்து தெய்வமாகிட்டா… ஆனா எனக்குத் தெரிஞ்ச விஷயத்தை உங்களுக்கு சொன்னா அது நன்மைல ஒரு வேளை முடிஞ்சா எல்லோருக்கும் சந்தோஷம் தரலாம் … “

“அங்கிள் ப்ளீஸ் நேராவே சொல்லுங்க .. “

“ராதிகா அம்மா பெயர் .… கீதாஞ்சலி … அந்தப் பெயரை கீதா .. அஞ்சலி .. ஏன் அஞ்சுனுக் கூட கூப்பிடலாம்…”

அரவிந்த்யும் , ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் நின்றனர்.

            காதல் அழகானதே….