அத்தியாயம் 7

            எப்போதும் மீனாட்சியின் நினைவிலேயே இருந்த தாமரைசெல்விக்கு தன் காதுகள் கேட்ட செய்தியை நம்பவே முடியவில்லை. மீனாட்சி எப்போதும் திருமணம் திருமணம் எனப் பேசுவார்தான். ஆனால் இந்த நிலையில் பேசினால்… அம்மாவிற்கு ஏதோ மிகப் பெரிய அளவில் பாதிப்போ… அதனால் தான் இந்தப் பேச்செல்லாம் பேசுகிறாரோ..” இப்படி தான் தாமரையின் நினைவுகள் ஓடியது. ஆனால் யாருடன் யாருக்கு என்பதெல்லாம் தெரியவில்லை என்பதை விட யோசிக்க முடியவில்லை. யோசனை முழுவதும் தாயின் உடல்நிலையிலயே வந்து நின்றது.

 அவள் என்ன ஏதென்று கேட்பதற்கு முன்னமே பெரியவர்களாக கூடிப் பேசி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நாளிற்கு முந்தைய நாள் காலையில் திருமணம் செய்விப்பதாகப் பேசிக் கொண்டனர்.

ஆதவனுக்கும் தாயின் உடல்நிலைக் குறித்தான கவலையே அதிகமிருக்க அவர் அவன் வெளிநாட்டிற்கு சென்ற நேரத்திலிருந்து கேட்கும் அவனின் திருமணத்தை தற்போதே நடத்திக் கொள்ள விரும்புகிறார் என்பது புரிந்தது. அதுவும் அத்தையிடம் அவர் பேசியதிலிருந்து மீனாட்சி தனக்கு மனைவியாக வரப் போகிறவளையும் முன்பே முடிவு செய்து விட்டார் என்பதனையும் உணர்ந்தான். அது யார் என்பது போலவெல்லாம் யோசிக்கவில்லை. தங்கைக்கும் உடனே மணமுடிக்க விரும்புகிறாரே என்பது மட்டும் கவலையைக் கொடுத்தது.

மருத்துவர் கூறியதைக் கொண்டுப் பார்க்கையில் அன்னையின் ஆசைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் போல தான் தோன்றியது. ஆனால் எப்படி.. மிகவும் சோர்ந்து விட்டான் ஆதவன். 

தில்லைக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் எழும்பினாலும் தோழியை தேற்ற, “நீ எதுவும் யோசிக்காத டி… அப்படிலாம் நடக்காது” என்ற போது, மிரண்டப்பார்வைப் பார்த்த தாமரை, பதற்றத்துடன் ..

“என்ன.. என்ன.. என்ன நடக்காது தில்லை .. அம்மா.. அம்மாவுக்கு… ” எனக் கேட்டவளைப் பார்த்த தில்லைக்கு தாமரையை நினைத்து மிகுந்த கவலையாகியது.

” சுற்றி என்ன நடக்கிறது என்பதுக் கூட அறிய முடியாத நிலையில் அத்தையையே நினைத்துக் கொண்டு இருப்பவளிடம் என்ன சொல்வது.. ஐயோ கடவுளே.. ” என வருந்திய தில்லை… திருமண பேச்சுவார்த்தைகளைக் கூறாமல் மீனாட்சியைக் குறித்து மட்டும் தேற்றத் துவங்கியதோடு, இந்த திருமண ஏற்பாட்டை எப்படி நிறுத்தலாம் என்றும் யோசிக்கத் துவங்கினாள்.

இப்படியாக இளையவர்கள் நால்வரது மனங்களும் ஒவ்வொரு விதமான எண்ணங்களில் உழல ஆரம்பித்தது.

தேவராஜனுக்கு இந்த செய்தியைக் கேட்டு மகிழ்வதா வருந்துவதா என்றுக் கூடத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாது மருத்துவமனை வளாகத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் அவனது காரின் மீது சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். 

தான் விரும்பும் பெண்ணையே அவனது அன்னையும் மணமகளாக தேர்வு செய்தது மகிழ்ச்சிக்குரியது தான். ஆனால் திருமணம் செய்துக் கொள்வதற்கான நேரம் இதுவல்லவே… முதலில் மாமன் மனைவியின் உடல் நிலை … இரண்டாவது தன் தங்கை வயதுடையவள் … அதுவும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து சிறிது நாட்களில் கல்லூரியும் துவங்கிவிடக் கூடும். மனதில் அவளை தினமும் கல்லூரிக்கு அவன் அழைத்துச் செல்வது போல் நினைத்தவனுக்கு மனமெங்கும் உற்சாகம் பரவுவது போல்  தோன்ற ஒரு வித ரகசிய புன்னகையில் நின்றவனது  முன் அவனது தங்கை கோப விழிகளோடு வந்து நின்றாள்.

“அடடா என் தங்கச்சிய மறந்துட்டேனே.. ” என நினைத்தவன் முகம் அப்படியே மாறி விட்டது. தங்கையிடம்,

“பாப்பா.. நீ டென்ஷனாகாத எப்படியாவது அம்மாகிட்ட பேசி இந்த கல்யாணம் நடக்க விடாம பண்றேன்.” எனப் பதற்றமாக உரைத்தவனிடம் ,

“அண்ணா அம்மா அப்பா நாம சொல்லி கேட்கிற நிலமையில இப்ப இல்ல… அவங்க எண்ணம் எல்லாம் அத்தை மனச சாந்தப்படுத்துறதுல தான் இருக்கு. இனி நாம என்ன செய்யங்கிறத தான் யோசிக்கனும்…” என்றவள்,

“பாவம் ணா தாமரை சும்மாவே அத்தைய நினைச்சுக் கவலையில இருக்கா… அதுல இந்த கல்யாணம் விஷயம் பேசறது எல்லாம் தெரிஞ்சா ரொம்ப மனசு உடைஞ்சுடுவா.. இந்த கல்யாணம் ஏற்பாடு நடக்கிறதுக்கூட தெரியல… அதை நான் தெரியாமலேப் பார்க்கணும்.” என முதிர்ச்சியாக யோசித்தாள். தேவராஜன் கூட, “அட ஃபிரண்ட்னு வந்தா என் தங்கச்சிக் கூட பெரிய மனுஷி மாதிரி பேசுறாளே… ” வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதிலும் இந்த திருமணப் பேச்சினால் தனது படிப்பு பாதிக்கப்படும் என்பதினால் தான் கோபமாக வந்து நிற்கின்றாள் என நினைத்து அவளை சமாதானம் செய்ய விழைந்தால் அவளோ தோழிக்காக யோசிக்கிறாள் என்பதை நினைத்து தேவராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தேவாவைத் தேடி ஆதவன் வந்துக் கொண்டிருந்தான். அப்போது வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருவரையும் கண்டதும் அங்கு நின்றிருந்த வாகனங்களுக்கிடையே நுழைந்து வருகையில் தேவாவின் காரின் மறுபுறமாக அவர்களது பேச்சைக் கேட்டு அப்படியே நின்று விட்டான்.

தில்லை , ” ண்ணா…மணி பாரதி எப்படியும் வெளிநாட்டுக்கு போயிருவார்.  இப்ப அத்தைக்கு ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போனாலும்  அம்மாவுக்கு துணைக்கு இருக்கணும்னு படிக்கவே போகலணு சொல்லிருவாளோனு பயமா இருக்கு.. ரொம்ப நல்லா படிக்குறவ… டாக்டர் சீட்டும் கிடைச்சுடுச்சு.. என்ன செய்யலாம்…” என யோசித்தவளிடம் ,

“பாப்பா உன் ஃபிரண்ட் படிப்பு பத்திக் கவலைப்படுற.. உன் படிப்பு பத்தி நினைக்கலயா நீ.. “

“அதெப்படி நினைக்காம இருப்பேன்.மணி பாரதி என்னைய காலேஜூக்கு அனுப்பாமா போய்டுவாங்களா என்ன.. இல்லைனா உண்டு இல்லைனு பண்ணிர மாட்டேன். என் கவலை எல்லாம் தாமரையப் பத்திதான்..” என தன் நெற்றியை விரலால் தட்டி கொள்ள..தேவராஜனோ…

“பாப்பா பாப்பா அந்த நம்பிக்கைய அண்ணன் மேலயும் வைமா.” என மனதுள் சொல்லிக் கொண்டான். அவனுக்குத் தான் தெரியுமே தன் தங்கை தன்னை தோழிக்கு மணமகனாக ஏற்றுக்கொள்ள மாட்டாளென்று..

அது போலவே தில்லையும் , விரலால் நெற்றியைத் தட்டுவதை விட்டு …

“ஐடியா.. தாமரைய எப்படி கல்யாணப் பேச்சிலருந்து தப்பிக்க வைக்கிறதுனு கண்டு பிடிச்சிட்டேன்.. ” என்றவள் முகத்தில் மலர்ச்சியுடன் திரும்ப போனாள். உடனே தங்கையிடம் ,

” எப்படி … எப்படி பாப்பா..” எனக் கேட்ட தமையனுக்கு ..” அப்படி… அப்படி தான்.. எனக்குத் தெரியும் என் தாமரைய எப்படி டாக்டர் ஆக்கிப் பாக்கிறதுனு… ” என்றவள், எப்படி என்பதனைக் கூறாமலே ஓடி விட்டாள். தேவாவிற்கு தங்கையை நினைத்து பெருமையாகவும் அதே சமயத்தில் சிறிது வருத்தமாகவும் உணர்ந்து நகரப் போனான். அப்போதுதான் ஆதவனைப் பார்க்க… அவனோ தில்லை செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தேவராஜனுக்கு  ஆதவனைப் பார்த்து புன்னகைத் தோன்றியது. கூடவே தில்லை ஆதவனைக் குறித்து பேசியதை தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற பதற்றமும் வர ” மாப்ள.. அவ விளையாட்டா பேசறா..” என்றதும் புன்னகையுடன் அவனிடம் வந்த நோக்கம் குறித்துப் பேசினான்.

தில்லை நேராக தாயிடம் சென்றவள் , ” ம்மா நீங்க உங்க அண்ணன் மதனி பேச்சை மீறமாட்டீங்களோ…”

“ஆமாம்டி ஆமா.. நான் தான் சொன்னேனே அவுகள என் ஆயிஅப்பன் ஸ்தானத்துல வச்சுருக்கேன்னு..”

“ஓ…” என்றவள் , ” ம்மா நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்களா.. அன்னைக்கு அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டிக்கிறாங்கனு ஒரு ஜோசியர வர சொல்லி ஜாதகம் பார்க்கச் சொன்னீங்கள்ள … “

“ஆமா… அதான் இப்ப நேரம் கூடி வருதே… ” என்றார். தில்லையோ..

“அவர் இன்னொன்னும் சொன்னார் அதை மறந்துட்டீங்களா..” என்றாள். தேவகியும்..

“என்ன …என்ன சொன்னார்.. ” என ஞாபகத்திற்கு கொண்டு வர முயல.. தில்லையோ உற்சாகமாக ..

” நீங்க மறந்துட்டீங்க .. ஆனா எனக்கு நியாபகம் இருக்கு.. அன்னைக்கு அந்த ஜோசியருக்கு நான் காப்பிப் போட்டுக் கொடுத்ததுக்கு என்னையதுரத்தி துரத்தி அடிக்க வந்தீங்க மறந்துட்டீங்களா..” என்றதும் தேவகி நியாபகம் வந்தவராக…

“ஆன்…ஆமா… உன் கல்யாணப் பேச்ச எடுத்ததுக்கு அவருக்கு உப்பு போட்ட காப்பிய எடுத்து வந்தியே… ” என்றவர் மகளின் தாடையைப் பிடித்து.. 

“சாமி.. எங்கண்ணன் வீட்டுக்கு விளக்கேத்தப் போற.. அங்கேயும் போய் கோபத்துல இப்படி எல்லாம் பண்ணிராதமா…” என தாயாக மகளுக்கு அன்றைய நினைவில் ஆலோசனை வழங்க … தில்லையோ.. “ஷ் இந்த அம்மா விஷயத்துக்கே வர மாட்டிக்குதே.. ” என்பதாக தலையில் தட்டிக் கொண்டவள்,

“ம்மா… அவர் என்ன சொன்னாருனு எனக்கு கோபம் வந்து .அந்த மாதிரி பண்ணேன்னு உங்களுக்கு நியாபகம் வரலயா.. அதை முதல்ல நியாபகப்படுத்துங்க.. இல்ல நானே சொல்றேன்…” என்பதாக இடுப்பில் கை வைத்து நின்றாள்.அவரும்,

“என்ன சொன்னாரு..” எனும் போதே நியாபகம் வர .. முகத்தில் ஒரு வித கவலைப் பரவ… “அட ஆமாம் பாப்பா இப்பதான் நினைப்புக்கு வருது… ” என்றவரது அருகில் வந்ததில்லை ,

“ஹப்பா… இப்பவாது நியாபகம் வந்துச்சே… சரியா நியாபகத்துக்கு வரலனா அவர் சொன்னத சொல்றேன் கேளுங்க … அது என்னன்னா பொண்ண இன்னொரு வீட்டுக்கு அனுப்பின பிறகுதான் பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னாரு… அதாவது முதல்ல எனக்கு கல்யாணம் பண்ண சொன்னாரு.. நீங்களும் உடனே அப்படியா சாமி உடனே பண்ணிடுறேன் சாமினு சொன்னதால தான் நான் சீனிக்கு பதிலா உப்ப அள்ளிப் போட்ட தே… ” என்றவள் ,

“ஆனா இப்ப அவர் என் முன்னால நின்னா சீனிய அள்ளிக் கொட்டியிருப்பேன்…” என்ற மகளை புரியாமல் பார்த்த தேவகியிடம்,

“ஆமாம்மா… அத்தைக்கிட்ட முதல்ல எனக்குத்தான் அதாவது பொண்ணுக்குத் தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுங்க… அதற்கப்புறம் தான் பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஜாதகத்துல இருக்குனு சொல்லுங்க .. ” என்றவளின் கரத்தினைப் பிடித்த தேவகி ,

“சாமி நீ என்ன சொல்ற கல்யாணத்திற்கு சந்தோஷமா சரினு சொல்றியா…” எனக் கேட்டவரைப் பார்த்து , ” சந்தோஷமா வா..” என மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியில் ,

“ஆமாம் மா… மணி .. அச்சோ அப்படிச் சொல்லக் கூடாது இல்ல… மாமா படிக்க வெளிநாட்டுக்குப் போயிருவாரு , தாமரையும் கா…” என சொல்ல வந்த தில்லை, நாக்கைக் கடித்து ,

“தாமரையும் கல்யாணம் பண்ணி போயிருவா… அத்தை வீட்டுக்கு வந்ததும் நான் கவனிச்சுக்குவேன் லமா.. அதான்…” என்றவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார் தேவகி …