மாடி பால்கனியில் போடப்பட்டு இருந்த சிறு மேஜை மீது உணவுப் பாத்திரங்களை வைத்த ராதிகா , அங்கிருந்த இருக்கையை இழுத்து கைப்பிடிக்கான அலங்கார கம்பி தடுப்பு அருகேப் போட்டு அந்தக் கைப்பிடியில் கை வைத்து அதன் மேல் தலை வைத்து அரவிந்த் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் வீட்டுத் தோட்டத்தின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறு கூடைப்பந்து மைதானத்தில் அவன் அந்தப் பந்தை தட்டி தட்டிக் கூடையில் போடுவது அவளுக்கு சுவராஸ்மாக இருக்கவும் அவள் கண் அசையாதுப் பார்த்தாள்.
” இவங்க நல்லா உயரமா இருக்கிறதால தான் இவ்வளவு ஈலியா போடுறாங்களோ… ” என்று கணவனைக் கண்களாலயே அளந்துக் கொண்டு இருந்தவள் அப்படியே கண் அசந்து விட்டாள்.
அரவிந்தோ தன் உடல் களைக்கும் வரை விளையாடிக் கொண்டே இருந்தவன் … அப்பொழுதுதான் சுற்றுப்புறம் கவனித்தான். அவர்கள் வீட்டு செக்யூரிட்டி மட்டுமே வாசலில் இருந்த சிறு அறையில் அமர்ந்து இருந்தார். வீட்டில் எல்லோர் அறையும் இருளாக இருக்கவும் , தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மணி இரவு பனிரெண்டைத் தொட ஐந்து நிமிடமே இருந்ததைக் காட்டவும் , பந்தை வேகமாக கீழே வீசியதில் அது டப் என்று மேலும் சத்தம் எழுப்பியது.
அந்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவள் கண்களில் அரவிந்த் சட்டையைக் கழற்றிக் கொண்டே வீட்டினுள் போவது கண்ணில் பட்டது. தானும் எழுந்தவள் உணவுப் பாத்திரங்களைப் பார்க்க அது ஆறிப் போய் இருப்பது போல் தெரிந்தது.
அவள் ஒன்பது மணியளவில் அங்கு வந்த ஞாபகம் .. இப்போது நேரம் என்ன என்று உள்ளே வந்துப் பார்க்க அது நடு இரவு நேரத்தைக் காட்டவும் ,
“அச்சோ இவ்வளவு நேரமாவா விளையாடி இருக்காங்க. ” என்று நினைத்துக் கொண்டே படியிறங்கி சமையலறையில் சிறு விளக்கை மட்டும் போட்டுவிட்டு , இரண்டு தோசைகள் ஊற்றியவள், பாலையும் சூடு செய்து விளக்கை அணைத்தாள்.
இவள் சமையலறை வரும் போது அம்மா அறைக்குள் நுழைந்தவன், சரியாக இவள் விளக்கணைக்கவும் தான் வெளியே வந்து கதவை சாத்திவிட்டு அவன் அறைக்குச் சென்றான். அதனால் அவளை அவனும் , அவனை அவளும் கவனிக்கவில்லை.
அப்பொழுதுதான் அறைக்குள் சென்றவன் , வியர்த்து ஈரமாகி இருந்ததால் வரும் போதே டீ ஷர்டைக் கழற்றி ஹால் சோஃபாவில் போட்டு வந்ததால் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து , அங்கிருந்த துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறை கைப்பிடியில் கைவைக்க , அவனறைத் தட்டப்பட்டது.
இந்த நேரத்தில் கதவுத் தட்டப்படவும் , “இப்ப தானே அம்மாவ பார்த்துட்டு வந்தேன் .. தூங்கிட்டு தானே இருந்தாங்க” என்ற யோசனையோடே வேகமாகச் சென்று,
“தாயம்மா என்னாச்சு ” என்றுக் கேட்டுக் கொண்டேக் கதவைத் திறந்தவன் கண்களில் கையில் உணவுப் பாத்திரங்களோடு மனையாளைக் காணவும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விட்டான்.
“நான் … நான் தான் .. நீங்க சாப்பிட “
என்றுத் திக்கி திணறிக் கொண்டு இருந்தவள் அருகில் “ரதி.. ” என வந்தவன் , அந்த வரவேற்பறையில் சிறிய விளக்கு வெளிச்சம் மட்டும் இருக்க , மற்ற அறைகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டவன் ,
“ஒரு நிமிஷம் “என்றவன் அவள் கையிலிருந்த பாத்திரங்களை வாங்கி உள்ளே கொண்டு வைத்தவன் வேகமாக வெளியே வந்து, நின்றுக் கொண்டு இருந்தவளை இரு கைகளில் ஏந்திக் கொண்டு வந்துப் படுக்கையில் விட்டான்.
நொடியில் நடந்து விட்ட இந்த நிகழ்வில் அதிர்ச்சியில் இருந்தவள் , படுக்கையில் விட்டதும் இறங்கப் போக ,
“ப்ளீஸ்டா … ஒரு ஃபைவ் மினிட்ஸ் … கீழ கால் வைக்காத ” என்றவன் வேகமாக கதவைச் சாத்தி தாழ் இட்டவன் டிரஸ்ஸிங் டேபிள் முன்பிருந்த அவனது பர்ஸை எடுத்துக் கொண்டு வந்தான்.
அவனது செய்கையையேப் பார்த்துக் கொண்டு இருந்தவள் , அவனருகே வந்து அவளது காலுக்கருகே அமரவும் .. சட்டென்று மடக்கிக் கொண்டாள்.
” ஹேய் ஸ்வீட்டி கால் நீட்டு … “
“இல்ல …உங்க மேல பட்டுரும்”
” என் மேல படாதானு ஏங்கிட்டு இருக்கேன். இப்படிப் பேசுற … சரி நீயே கால் நீட்டல.. நானே கிட்ட வாறேன்.” என்று நகரவும் , கால்களை அவன் புறம் வைத்தாள்.
புன்னகையோடு அவள் கால்களை எடுத்து மடியில் வைத்தவன். பாதங்களின் மென்மையில் தன்னைத் தொலைக்க , அவளோ கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள்.
தன் பர்ஸ் பாக்கெட்டிலிருந்து கொலுசுகளை எடுத்தவன் , ஒவ்வொன்றாக கால்களில் அணிவித்துக் கொண்டே “நீ முதல் முதல்ல நம்ம ரூம்க்குள்ள வரும் போது இதை போட்டு விட்டுத்தான் உள்ளக் கூட்டிட்டு வரணும்னு நினைச்சேன்… அதான் உன்னைத் தரைல விடல… இதை விட விலை அதிகமானது வாங்கி போட்டுடுவேன். ஆனா எனக்கு இது விலை மதிப்பில்லாதது ஸ்வீட்டி…. நீ பக்கத்துல இல்லாதப் போ இதைக் கைல வச்சுப் பார்த்துட்டே இருப்பேன். இப்பதான் நீ என் பக்கத்துலயே இருக்கியே “
போட்டு முடித்தவன் குனிந்து அந்தப் பாதங்களில் முத்தம் பதித்து ” ஐ லவ் யூ … ஐ லவ் யூ சோ மச் மை டியர்” எனவும் , கால்களை விருட்டென்று உள்ளிழுத்தவள் , முழங்கால்களை கைகளால் இறுக கட்டி ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
இத்தனை நேரம் அவளைப் பார்த்த சந்தோஷத்தில் காதல் உலகில் உலவிக் கொண்டு இருந்தவன் , அவள் அழுகைச்சத்தம் கேட்கவும் பதறிப் போய் அருகில் அமர்ந்தவன் , “சாரி .. சாரி டா..உன்னைய இப்ப இங்க பக்கத்துலப் பக்கத்துல பார்த்ததுல என்னாலசந்தோஷத்த அடக்க முடியல. உனக்கு நான் இப்படிப் பன்னது பிடிக்கலன சாரி ….”
அவன் மேலே பேச விடாது கண்ணீரோடு நிமிர்ந்து அவன் வாயைக் கைக்கொண்டு மூடியவள்.
கேவிக் கொண்டே , ” இல்ல இல்ல இப்படி சாரி சொல்லாதிங்க … இத்தனை நாள் நானல்லாம் ஏன் பொறந்தேன் ….அப்படிங்கிற எண்ணம் தான் எனக்கு .. திடீர்னு வாழ்க்கை இப்படி மாறிப் போகும்னு நான் நினைக்கவே இல்ல … தாத்தா எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னயே போய்ட்டார்.மாமா அத்தை ….என் மேல அவ்வளவு பாசமா இருப்பாங்க …. ஆனா அவங்க கண்ல அதிகமா என் மேல பரிதாபம் தான் இருக்கும்.
அவள் பேசப் பேச மனதில் மகிழ்ச்சிப் பொங்க கைகளைக் கட்டி தலை சரித்து புன்னகையோடு ரசித்துக் கொண்டு இருந்தவன். இப்பொழுது தன் வாய் மீது இருந்த அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான்.
“இதுக்குப் பேர்தான் காதாலாங்க… “
மறுபடியும் அழ துவங்கியவள் ” ஆனா என்னால உங்க அன்ப நேசத்தை , காதலை உங்க ஒவ்வொரு செயல்லயும் உணர முடியுது…. ஆனா அதே அன்பையும் காதலயும் உங்களுக்கு நான் தரணுமில்லயா … எனக்கு அப்படி ஃபீலிங்ஸே வரலயே “
தன் கால்களை காட்டியவள் “எனக்கு இது சாதாரண ஒரு ஆபரணம் … பட் நீங்க எப்பவோ நான் போட்டுருந்ததுனு அதப் பொக்கிஷமா பாதுகாத்துட்டு வந்துருக்கீங்க … எனக்குத் தெரியும் எனக்காக மட்டும் தான் நீங்க எங்க பெரியப்பா வீட்ல உள்ளவங்கள இங்க தங்க வச்சுருப்பீங்க….என் சந்தோஷத்துக்காக மட்டும் தான் சிவாண்ணா குழந்தைங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கறீங்க.இவ்வளவு அன்புக்கு நான் தகுதியானவளா … நீங்க சொல்ற காதல் எனக்கு உங்க மேல இல்லையேங்கிற குற்றவுணர்ச்சி எனக்கு அதிகமா வருதுங்க… ஆனா உங்களப் பிடிச்சிருக்கா கேட்டா ஆமா பிடிச்சிருக்கு சொல்வேன் …. இந்தப் பிடிப்பு காதலானும் தெரியல …. காதல் வருமானும் தெரியல…. ஏன்னா எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ‘காதல்’ அப்படிங்கிற வார்த்தை மேலே வெறுப்ப வளர்த்துக்கிட்டேன்… பிரண்ட்ஸ் அது பத்தியோ சினிமால வர்ற காதல் பத்தியோ பேசினா விலகிருவேன்….”
அவனிடமிருந்து கைகளை உருவிக் கொண்டவள் .. “இப்போ நீங்க சொல்றப்போ எனக்கு என்ன சொல்லனேத் தெரியல ” என்று தலையைக் கீழேக் குனிந்து கொண்டாள்.
அவள் தாடையைப் பற்றி தன்னைப் பார்க்க வைத்தவன் “என்னையப் பிடிச்சிருக்கு சொன்னியே எனக்கு அதுபோதும்… நீ ரொம்ப போட்டுக் குழப்பாத மை டியர் … உனக்கு என் மேல எப்ப லவ் ஃபீலிங்க்ஸ் வருதோ அப்போ அது வந்துட்டுப் போகட்டும். ஆனா நான் உன்கிட்ட காதல் சொல்றத நிறுத்தப் போறது இல்ல.
சரிடா உனக்குத் தூக்கம் வரலயா டைம் பாரு அடுத்த நாளாச்சு .”
அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவளாக கட்டிலிருந்து இறங்கியவள் “அச்சச்சோ மறந்தேப் போய்ட்டேன்… நீங்க சாப்பிடாம வந்ததால சாப்பிட எடுத்துட்டு வந்தேன் … சாப்பிடுங்க” என்று அந்த டேபிளில் இருந்ததை கையில் எடுத்து வந்தாள்.
சிறு வயதில் தன் அன்னை இப்படித்தான் செய்வார் என்பதை நினைத்தவன் .. அவளிடம் “என்னைப் பாரு ரதி ” என்றான். புரியாமல் அவனைப் பார்த்தவளிடம் ” இவ்வளவு நேரம் பாஸ்கெட் பால் விளையாடியதுல வேர்த்துப் போச்சு .. ஒரு குளியல் போட்டா தான் தூக்கம் வரும் …. நான் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன். நீ போய் தூங்குடா”
அப்பொழுதுதான் அவனைக் கவனித்தாள். “சட்டையில்லாத வேர்வைப் பூத்த அவன் உடல் அவளுக்கு நாணத்தைத் தர , தலையைக் குனிந்துக் கொண்டவள் , “நீங்க குளிச்சிட்டு வாங்க நான் வெய்ட் பன்றேன்”
அவள் காத்திருப்பேன் என்றது மனதிற்கு இதத்தைத் தர , அந்த வெள்ளைப் பூந்துவாலையைக் கையில் எடுத்துக் கொண்டு ,
“அஞ்சே நிமிஷம் இதோ வந்துடுறேன்” என்றவன் குளியலறைச் சென்று விட்டான்.
அந்த அறையின் அமைப்பையும் அழகையும் ரசித்துக் கொண்டு இருந்தவள் .. அங்கிருந்த பால்கனிக்குச் சென்று அந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். கைகளைக் கட்டும்போது தான் , அவன் அணைத்து தூக்கி வரும் போது அவன் உடலின் வியர்வை ஈரம் முழுவதும் அவளது சுடிதார் டாப்ஸில் ஒட்டிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.