ராதிகாவை கைப்பிடித்து அழைத்து வந்த ஜானகி “அஞ்சு … உனக்கு மாடித் தோட்டம் பிடிச்சிருக்கா … நீ இயற்கையோடு அந்த சூழல்லயே வளர்ந்தனு, அங்க திருப்பூர் வீட்ல மாடித் தோட்டம் போட்டார்.ரமேஷும் அருவும் அங்க தான் சாப்பிட , விளையாடனு இருப்பாங்க .. இங்க வந்தும் அருக்குட்டி கேட்கிறான்னு அண்ணன் தான் இங்கயும் இப்படி போட்டு விட்டார்”
கேட்டுக் கொண்டு இருந்த அனைவருக்குமே ஜானகியின் பேச்சு நெகிழ்வைக் கொடுத்தது. அவர் அண்ணன் தங்கை மீது வைத்த பாசத்திற்கு குறைவில்லாது தன் காதலியான மனைவி மீதும் அளவு கடந்த நேசம் வைத்திருந்தார் என்பதை தான் அவர்கள் அவரது பேச்சில் இருந்து உணர்ந்தனர்.
குழந்தைகளை அரவிந்தும் ரமேஷும் பார்த்துக் கொள்வதாக சொல்லி கையில் வைத்துக் கொள்ள , அனைவருக்கும் உணவு பரிமாறி விட்டு ராதிகாவும் அனன்யாவும் சாப்பிடுவதாக இருந்தனர்.
சிவாவும் ராணியும் சாப்பிட்டு முடித்தவர்கள் குழந்தைகளை தாங்கள் பார்த்துக் கொள்வதாக வாங்கிக் கொண்டு சென்றனர். சிவாவின் அப்பாவும் கீழே சென்று விட்டார்.
அரவிந்தும் ரமேஷும் சாப்பிட அமர , ராதிகாவும் அனன்யாவும் அமர்ந்தனர்.பாதி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே
” அஞ்சு , நானும் பத்மா அண்ணியும் ரமேஷுக்கும் .. அருவுக்கும் ஊட்டுறதுக்குள்ள ஒரு வழியாகிடுவோம். ரமேஷாவது அண்ணிய சாப்பிட விடுவான் .. இந்த அருக்குட்டி எப்பவும் எங்கிட்ட ஒரு வாய் வாங்குவான் .. “அவர் சொல்ல சொல்ல தன் தாய் தந்தையரின் ஞாபகத்தில் ரமேஷால் சாப்பிட முடியவில்லை.
அவனது முகம் பார்த்த அனன்யாவிற்கோ மிகுந்த வருத்தமாகிற்று. சாப்பிடாமல் உணவை அவன் அளந்து கொண்டு இருக்க ,அரவிந்திற்கும் பழைய ஞாபகத்தில் , ஜானகி அருகில் சென்றவன்” ம்மா நான் தான் உங்க அருக்குட்டி… எனக்கும் ஒரு வாய் தாங்கம்மா “
முகத்தில் யோசனையைக் கொண்டு வந்த ஜானகி, “நீ என் அருக்குட்டி இல்ல … நீ அரவிந்த் .. அவன் ஊட்டியில படிச்சுட்டு இருக்கான் “
“இல்ல மா நான் தான் அது .. நல்லா பாருங்க”
அவனது பேச்சை ஏற்றுக் கொள்ளாதவர் ஒரு கட்டத்தில் அவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
“அம்மா .. அண்ணன்” என்று சொல்ல வந்த அனன்யாவிடமும் தாயம்மாவிடமும் கண்ணைக் காட்டி ஒன்றும் பேச வேண்டாம் என்றவன் .. படிகள் வழியாக கீழிறங்கிச் சென்று விட்டான்.
ரமேஷும் சாப்பிடாமலே எழுந்து சென்று விட , அதற்கு மேல் அங்கு அமர யாருக்கும் மனதில்லை.
தாயம்மா ஜானாகியை அழைத்துக் கொண்டு லிப்ட் நோக்கிச் சென்றவர். ராதிகாவையும் அனன்யாவையும் பார்த்துவிட்டு , “கண்ணுங்களா … பிள்ளைக ரெண்டு பேரும் சாப்பிடாம போய்ட்டாங்க. கீழப் போய் அவங்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க … அம்மாவ தான் உனக்கு தெரியும்ல கண்ணு … நான் அம்மாவ கவனிச்சிக்கிறேன் .. நீங்க அந்த புள்ளங்கள கவனிங்க ” என்று விட்டுச் சென்றுவிட்டார்.
வேலையாட்களை அழைத்து எல்லாவற்றையும் ஒதுங்க வைத்தவர்கள் , கீழே சென்று ரமேஷுக்கும் அரவிந்த்க்கும் தேவையான அளவு உணவை எடுத்துக் கொண்டு அவர்களது அறை நோக்கிச் சென்றனர்.
மேலே செல்லும் போதே ‘ தட்.. தட்’ என்ற சத்தம் கேட்கவும் ராதிகா சுற்றும் முற்றும் பார்க்க , மாடியிலிருந்த வரவேற்பறை பால்கனியைக் காட்டி ” அண்ணி அங்க இருந்துதான் சத்தம் வருது. அண்ணனாதான் இருக்கும் ரூம்ல இல்ல போல, அவர் கொஞ்சம் மூட் அப்செட் ஆனா அங்க போய் விளையாட ஆரம்பிச்சிடுவார்.” என்று அனன்யா சொல்லவும் அப்படியே அந்த பால்கனி போகும் வழியிலயே நின்றவள் , ” அனு … நான் உங்கண்ணனப் பார்த்துட்டு வரட்டா …நீ ரமேஷ்ண்ணாக்கு சாப்பிட எடுத்துட்டுப் போறியா”
“அட அண்ணி … நீ உங்க வீட்டுக்காரரப் பார்க்கப் போ … ஆனா அந்த சிடுமூஞ்சிக்கெல்லாம் சாப்பாடு நான் கொண்டு போகமாட்டேன் பா… என்னையக் கண்டாலே கிறுக்குப் பிடிச்சிரும் போல அப்படி கத்துவார் உங்க அண்ணன், எனக்குத் தெரிஞ்சி உன்கிட்ட மட்டும் தான் அவர் அமைதியா பேசுறதே”
” என்ன அனு அப்படி சொல்ற … அவங்க சாப்பிடாம முகம் வாடிப் போனாங்க … அவங்களுக்கும் என்னைப் போல அப்பா அம்மா இல்ல.. இப்ப அத்தை அவங்கம்மா பத்தி பேசுனதும் மனசு ரொம்ப வேதனையா இருக்கும் அனு… நான் உனக்கு இருக்கேன் கவலைப் படாத அப்படினு யாராவது சொல்ல மாட்டாங்களானு எவ்வளவு நாள் ஏங்கியிருப்பேன் தெரியுமா … இப்ப ரமேஷண்ணா மனநிலையும் அப்படி தான் இருக்கும் … அப்ப அவங்க கோபமா பேசினாக்கூட நாம கேர் பண்ணாம இருந்தா … அவங்களே கோபத்த விட்டுருவாங்க… சரி வா உங்கண்ணன நான் அப்புறம் பார்த்துக்கிறேன் , முதல்ல அவங்களுக்கு சாப்பிட கொடுக்கலாம்”
“அண்ணி.. இவ்வளவு சொன்ன பிறகு புரியாம இருக்குமா …ம் …. நீ போய் எங்கண்ணாவப் பாரு .. நான் அந்த சிடுமூஞ்…சாரி சாரி உங்கண்ணாவுக்கு சாப்பிடத் தாறேன் ஓகேவா … ” என்றவள் ரமேஷ்கான உணவை எடுத்துக் கொண்டு கதவைத் தட்டினாள்.
சில நாட்கள் ரமேஷ் உணவருந்த நேரமானால் வீட்டில் வேலை செய்யும் யாரிடமாவது சாப்பாடை தந்து விடுவது தாயம்மாவின் வழக்கம் என்பதால் , கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் ,
“அங்கயே வச்சிட்டு போங்க , நான் அப்புறம் சாப்ட்டுக்கிறேன்” என்று குரல் கொடுத்தான்.
“ஆமா ஆமா இவங்க அப்புறம் சாப்பிடுற ஆளு ” என முனங்கியவள் , கதவை வேகமாக தட்ட அது திறந்துக் கொண்டது.
அது திறந்து கொண்டது கூட தெரியாமல் கட்டிலில் குப்புறப் படுத்து கண் மூடி இருந்தவனின் தோற்றம் அனன்யாவை ஏதோ செய்ய, உணவுப் பாத்திரங்களை மேசை மீது வைத்து விட்டு அவனருகில் வந்தாள்.
“அத்..தான் “மெதுவாக அழைக்க அவனுக்கு கேட்கவில்லைப் போல , சத்தமாக “அத்தான் ” என அழைக்கவும் திடுக்கிட்டு எழுந்தவன் அனன்யாவை எதிர் பார்க்கவில்லை.
“ஏய் … நீ எப்படி இங்க வந்த… வெளிய போ”
“ம் …கால்ல நடந்துதான் வந்தேன். சாப்பிடுங்க நான் வெளிய போறேன்”
“நான் சாப்பிட்டுக்கிறேன் …நீ முதல்ல வெளிய போ”
அவன் வெளிய போ ,வெளிய போ என்றது அனன்யாவுக்கு கண்ணீரை வரவழைக்கப் பார்த்தது.. அவள் முகமெல்லாம் சிவந்து கண்ணீரை அடக்கப் பெரும்பாடுபட்டாள். ஆனாலும் ராதிகா சொன்னது நினைவில் வர , தொண்டை அடைக்க ,
“நீங்க சாப்பிடாம அப்படியே வச்சிருவீங்க நான் நிறைய நாள் பார்த்துருக்கேன். என் முன்னாடி கொஞ்சம் சாப்பிடுங்க நான் கிளம்பிடுவேன்”
அவள் அப்படி அவன் மீது அக்கறைக் கொண்டு பேசியது ரமேஷுக்கு கொஞ்சம் வருத்தத்தை தர அவள் அருகில் வந்து நின்றவன்,
“வேண்டாம் … இப்படி என் கிட்டப் பேசாதே … உனக்குத் தெரியுமா … எங்கம்மான்னா எனக்கு உயிர் … அவங்க இனி எனக்கு இல்லைங்கிறதை அந்த வயசில் எனக்கு ஏத்துக்கவே முடியல … ஆனா நீ பிறந்ததும் உன்னைப் பார்க்க தாத்தாக் கூட்டிட்டு வந்தார்.
என் தாய் மாமா பொண்ணு அப்படியே எங்கம்மா போல இருந்த … ஆசை ஆசையா உன்னைத் தூக்குவேன் கொஞ்சுவேன். ஏன் அரவிந்த் கைல வச்சுருந்தத விட உன்னை நான் தான் அதிகம் தூக்கி வச்சுருப்பேன்.
நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது திடீர்னு தாத்தா ஒரு நாள் கூப்பிட்டு , நீ பெரியவளாகிட்ட அவளுக்கான சடங்குகளை செய்னு சொன்னார். நான் உனக்கு குடிசை கட்டும் போது என்னைப் பார்த்த சந்தோஷத்துல ‘அத்தான்’னு ஓடி வந்த , நானும் சந்தோஷமா தான் இருந்தேன்.
அப்ப நம்ம சொந்தத்துல ஒரு பெரியம்மா வயசுக்கு வந்த பிள்ளைய இனித் தொட்டுப் பேசக்கூடாது சொன்னாங்க, உன்னையும் திட்டுனாங்க … அப்ப உன்னைய விட்டு விலகி இருக்கிறதுதான் நல்லதுனு ஒதுங்க ஆரம்பிச்சேன். அதனால தான் நீ பக்கத்துல வரப்பலாம் கோபமா பேசுவேன்.
எங்கம்மா மேல பாசம் வச்சுருந்தேன் அவங்க இல்ல , உன் மேலயும் நிறைய அன்பு வச்சுருந்தேன் … நீயும் எனக்கு இல்லனு முடிவு பன்னி
உன்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கிறேன் …ப்ளீஸ் இப்படி ரூம்குள்ளலாம் வராத … இன்னொருத்தர் வீட்டுக்குப் போற பொண்ணு, யாரும் எதுவும் பேசுற போல வச்சுக்கக் கூடாது”
அதுவரை அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தவள் இந்த வார்த்தையைக் கேட்டதும் ,
” என்ன … என்ன சொல்றீங்க”
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு , “உங்கண்ணன் உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டானாம். நாளைக்கு அவங்களும் அந்த பெரியம்மா போல எதுவும் சொல்லக் கூடாதில்லயா … அதான் ” என்றவன் திரும்பி நின்றுக் கொண்டான்.
“நான் வேற வீட்டுக்குப் போகமாட்டேன்”
“சின்ன பிள்ள போலப் பேசக்கூடாது , கல்யாணம் ஆனா புருஷன் வீட்டுக்குப் போய் தான் ஆகணும்.”
“சரி .. முதல்ல சாப்பிடுங்க நான் அப்பதான் வெளிய போவேன்”
” இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்கேன் …நீ கேட்க மாட்டியா”
“சும்மா சீன் போடாம முதல்ல சாப்பிடுங்க நான் உடனே வெளிய போறேன்”
முதலில் ரமேஷ் வெளிய போ என்ற போது இருந்த மன வருத்தம் … இப்பொழுது சுத்தமாக இல்லை. மாறாக அவன் கூறிய விளக்கங்களால் மனதில் இத்தனை நாள் அழுத்திக் கொண்டு இருந்த பாரங்கள் காற்றாய் பறந்து விட்டது போல் இருந்தது. ஆனால் ஏதோ புரியாத ஓர் உணர்வு வந்து ஒட்டிக் கொண்டது. அதனாலயே அவனோடு இப்படி இலகுவாய் பேச முடிந்தது.
தான் சாப்பிட்டால் தான் வெளியே செல்வாள் என்பதால் வேகமாக தட்டை திறந்து என்ன என்றுக் கூடப் பார்க்காமல் சாப்பிட்டவன் ,
“போதுமா … சீக்கிரம் கிளம்பு … இனி இங்க அதிகம் வர மாட்டேன் … அங்கயே இருந்துக்குவேன்”.
“கிளம்புறேன் அத்தான். அப்புறம் கல்யாணம் பண்ணா புருஷன் வீடு போகனும்னு எனக்குத் தெரியும் .. சோ நான் கல்யாணம் பண்ணுவேன் …”
அவனை நெருங்கி நின்றவள் , அவன் கண்களைப் பார்த்து “ஆனா வேற வீட்டுக்கெல்லாம் போகமாட்டேன்” , அந்தப் பாத்திரங்களை கையில் எடுத்துக் கொண்டு வாசல் வரை சென்றவள் , திரும்பி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனிடம் , இங்கயே தான் இருப்பேன் , எப்படினு கண்டுபிடிங்க… “
கண்ணடித்து , நாக்கைத் துருத்தி அழகு காட்டியவள் “வரட்டா” என்று சிரித்துக் கொண்டே வேகமாக வெளியேறினாள்.
வார்த்தைகளிலும் செய்கைகளிலும் … தன்னை கட்டிப் போட்டுச் செல்பவளை மகிழ்ச்சியோடுப் பார்த்து நின்றான் ரமேஷ்.
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி
அவனுக்கும் காதல் பூ பூத்தது.. ஆம் காதல் அழகாய் பூத்தது….