“ரதி …நீ சொன்னதுக்கு உண்மைலயே எனக்கு ரொம்ப கஷ்டமாருக்கு .நான் செய்தது தப்புதான். ஆனால் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன். உனக்கு இதப் புரிஞ்சுக்க முடியுமா தெரியல … நீ சொன்ன உடல் ஈர்ப்பு உண்டுதான் .. அது மட்டுமே உன்னையப் பிடிக்க காரணமாகுமானு கேட்டா எனக்கு நிச்சியம் தெரியாது … உன் செயல்கள் , பேச்சுகள் எல்லாமே எனக்குப் பிடிச்சது … ஆனா எப்போ இது தான் காதல் … என் மனைவி நீதான்னு நினைக்க ஆரம்பிச்சேன்னா , நீ பஸ்ஸ தவற விட்டாலும் அசராம அந்த நேரத்திலும் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சு அடுத்து அடுத்து முயற்சில இறங்கினப்பாரு அப்ப முடிவு பன்னிட்டேன் நீ தான் என் மனைவி னு”
” என்ன அன்னைக்கு முதல்லயே என்னைப் பார்த்துட்டிங்களா”
அன்னாந்து பார்த்துக் கேட்டவளின் நெற்றி முட்டியவன் புன்னகையோடு” உன்னைக் கொடைக்கானல்ல வச்சு பஸ்லயே பார்த்துட்டேன் … உன் பஸ் பின்னாலயே ஃபாலோ பன்னி வந்தேன். நீ என்ன செய்றனு பார்த்துக்கிட்டே தான் இருந்தேன். எந்த சூழ்நிலையிலயும் மனசு தளராத உன் குணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போச்சு , சரி ஃபாரின் டிரிப் முடிச்சு வந்து உங்கப்பாகிட்ட பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன்”
“அப்பாவா…” என்று கண்ணைச் சுருக்கியவளிடம்,
“ம்… சீனியர் உன் கூடப் பிறந்த அண்ணன்னு நினைச்சிட்டேன் “
அவள் தலையில் பாதி அவிழ்ந்த நிலையில் இருந்த டவலை முழுவதுமாக தன் கைக்கொண்டு அகற்றியவன், ஒரு கையினை அவள் நீண்டக் கூந்தலில் படரவிட்டுக் கொண்டே ,
“மை டியர் ஸ்வீட்டி .. காதல்னு வரும் போது ‘நீ’ மட்டும் தான் கண்ணுக்குத் தெரிஞ்ச … உன் பெயர் கூட எனக்குத் தெரியல .. நான் உன்னை விரும்புறேன்னு சொன்னதும் ரமேஷ் தான் மற்ற விவரங்கள் சொன்னான் நீ ஹாஸ்டல் பார்க்கிறதையும் … அது எப்படி நான் இருக்கும் போது உன்னை தனியா அனுப்பிருவேனா…” என்று புருவங்கள் உயர்த்தி அவன் கேட்ட அழகில் , தன் கணவனாகிப் போன கம்பீரமான ஆண்மகனிடம் மனம் செல்லத்தான் செய்தது.
ஆனால் எந்த உணர்வுகளையும் காட்டாது அமைதியாய் தலை கவிழ்ந்தவளிடம் “அன்னைக்கு நீ கிளம்புறது தெரிஞ்சு சீனியர்ட்ட பேசி உன்னை அங்கயே தங்க வைக்கச் சொல்லனும் .. தங்கச்சியும் நீயும் ஒரே கோர்ஸ் சேர்ந்து இருக்கீங்கனு தெரியும் , சோ ரெண்டு பேரோட படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பத்திப் பேசலாம்னு நினைச்சிருந்தேன்…. சூழ்நிலை என்னை அப்படி பன்ன வச்சிருச்சு … என் மனசு புரிஞ்ச ரமேஷ் உன்னைய காவல் காத்துட்டே இருந்தான் நான் வரும் வரை … இந்த திடீர் கல்யாணத்தால உனக்கு வருத்தம்னாலும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்… எனக்கு விவரம் தெரிஞ்சு இப்ப நீ என் பக்கத்துல இருக்கிற இந்த நொடி எனக்கு எந்தளவு மகிழ்ச்சிய தருதுனு சொல்ல வார்த்தைகள் இல்லடா… ஐ லவ் யூ … ஐ லவ் யூ வெரி மச்” என்றவன் …வெளியே பேச்சு சத்தம் கேட்கவும் ,சட்டென்று அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு ,
“ப்ளீஸ் இதை திடீர் கல்யாணம் , காதல் கல்யாணம்னோ நினைக்காதே .. நம்ம நாட்டுல பெரியவங்க பார்த்து வச்சு முடிக்கிற கல்யாணம் போல நினைக்க ட்ரை பன்னு… மெதுவா என்னைய ஏத்துக்கப் பாருடா …அப்புறம்… அப்புறம் பேச நிறைய இருக்கு ….ம் .. ப்ளீஸ் ட்ரை டூ அன்டர்ஸ்டான்ட் மீ ” என்றவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.
உள்ளே ஈஸ்வரியோடு பேசிக் கொண்டே வந்த தாயம்மா, ஈரக்கூந்தல் விரிக்கப்பட்டு, முகம் சிவந்து சுவற்றில் சாய்ந்திருந்த ராதிகாவைப் பார்த்தவர் முதலில் திகைத்தாலும் , சமையலறையில் இருந்து அரவிந்த் வெளியேறியதை கவனித்திருந்ததால் …முகம் மலர்ந்து ராதிகா அருகில் வந்தவர் ,
” ஈஸ்வரி நம்ம மருமக குடிக்க ஏதாவது கொண்டு வா … என்ன கண்ணு தலைய ஈரமா வச்சுருக்க ..வா கண்ணு நான் துவட்டி விடுறேன்”
“பரவால்லங்க.. நான் துவட்டிக்கிறேன்”
“அட வா கண்ணு உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்” என்றவர் ராதிகாவை அழைத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்து துவட்டிவிட ஆரம்பித்தார். “
“இல்ல அனு .. எனக்கு அது பழக்கமில்லை … எப்படி யூஸ் பன்றதுனு தெரியாது” இப்படியாக தன் புது உறவினர்களுடன் பேச்சில் ஆழ்ந்த ராதிகாவிற்கு எல்லாமே புதிய அனுபவமாக இருந்தது.
தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்மேல் விருப்பம் கொண்டதாக சொன்ன அரவிந்த் , அண்ணன் மனைவியாக வந்தவளுக்காக ஒரே நாளில் கவலைப்படும் நாத்தனார் , தாயைப் போல் அன்பாய் பேசும் தாயம்மா, சகோதரனாய் தன் நலம் காக்கும் ரமேஷ் … சுயநினைவற்ற நிலையிலும் தன்னை அன்போடு வரவேற்ற மாமியார்… இப்படி ஒவ்வொன்றாக நினைவில் கொண்டு வந்தவள் மனம் இதம் கண்டது.
தாயம்மாவிடம் சொல்லி வெளியே கிளம்பத் தயாரான அம்மாவைப் பார்க்க வந்த அரவிந்த் “ம்மா .. உங்க மருமகளுக்கு நிறைய ட்ரஸ் வாங்கனும் சொன்னீங்கல்ல போகலாமா “
அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ , கேட்ட அனைவருமே திகைத்தனர். அனன்யா ராதிகா அருகில் வந்தவள் , “ஆமாம் அஞ்சு அருக்குட்டிக்கு பொண்ணுப் பெத்துக் கொடு” என்று சத்தமாக சொன்னவள் , அவள் காதில் “எங்கண்ணாக்கு முதல்ல பையன் பெத்துக்குடு…ஏன்னா என் பொண்ண அவனுக்குத் தான் கட்டிக் கொடுப்பேன்” என்றதும் ,
” ச்சூ… அனு” என்று முகம் சிவந்தவள் தாயம்மா பின்புறம் சென்று மறைந்து கொண்டாள். தங்கைக்கும் மனைவிக்கும் என்ன பேச்சுவார்த்தை நடந்ததோ தெரியாது. ஆனால் தங்கையின் பேச்சில் முகம் சிவந்தவள் வெட்கப்பட்டுக் கொண்டே தாயம்மாவின் பின்புறம் மறைந்துக் கொண்டது … அரவிந்தின் முகத்திலும் புன்னகையை தோற்றுவித்தது.
தாயம்மா தனக்கு முட்டி வலி அதிகமாக இருப்பதாக சொல்லவும் நால்வரும் கிளம்பிச் சென்றனர்.
அந்த மிகப் பெரிய மருத்துவ மனையின் முன் வண்டியை நிறுத்தியவனிடம் “அம்மு என்னைய இங்க ஏன் கூட்டிட்டு வந்தீங்க , நான் நல்லாருக்கேன்… அரவிந்த் அஞ்சுவுக்கு டரஸ் வாங்கனும் சொன்னேன்ல , என்னைய கடைவீதிக்கு கூட்டிட்டுப் போ”
“ம்மா தாயம்மாக்கு முட்டி வலிக்கு மருந்து வாங்கிட்டுப் போகலாம் ..வாங்க” என்ற அரவிந்த் .. அவரைக் கைப் பிடித்து அழைத்து மனநல மருத்துவர் இருந்தப் பகுதியை நோக்கிச் சென்றான்.
ராதிகாவிடம் பேசிக் கொண்டே வந்தவரைப் பார்த்த மருத்துவருக்கே மிகுந்த ஆச்சிரியமாகி விட்டது. அவரைப் பேச வைப்பதே பெரிய வேலையாக இருக்கும். எப்பொழுதும் வெறித்துக் கொண்டு ஒன்றிரண்டு வார்த்தை மட்டும் பேசுபவர் … இன்று சாதாரண மனநிலையில் பேசுவது போல் தான் இருந்தது.
எனவே மகிழ்ச்சியாக வரவேற்றவரிடம் ராதிகாவுடன் அம்மாவை வெளியே நிற்க வைத்துவிட்டு அனன்யாவுடன் சென்றவன் , நேற்று ராதிகா வந்த நேரத்திலிருந்து இப்போது இங்கு வருவதற்கு முன்பு வரை நடந்ததை தெரிவித்தான்.
அனைத்தையும் கேட்டுவிட்டு, அவனம்மாவையும் தனியாக அமர வைத்துப் பேசியவர் இறுதியாக அனன்யாவோடு அவரை வெளியேக் காத்திருக்கச் செய்தவர், அரவிந்தையும் ராதிகாவையும் மட்டும் அமர வைத்து விளக்கமளித்தார்.
ராதிகாவைப் பார்த்து “உங்களதான் அந்தப் பொண்ணு அஞ்சுனு நினைக்கிறாங்க. உங்கள பார்த்திருக்கிங்களா கேட்டா , எங்கண்ணன் போட்டோ காட்டினார் அப்படிங்கிறாங்க ஒரு வேளை அந்தப் பொண்ணோட சாயல் உங்ககிட்ட தெரியலாம்.”
“மிஸ்டர் அரவிந்த் இத்தனை வருஷம் அவங்க மனசுல இருந்த அழுத்தம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இப்ப அவங்க என்னப் பேசுறாங்களோ , எதிர்பார்க்கிறாங்களோ அதையெல்லாம் செய்ய விடுங்க.. கூடிய சீக்கிரம் நீங்க தான் அவங்க அருக்குட்டி அப்படிங்கிறத ஏத்துக்கு வாங்க. இத்தனை நாள் பொறுத்துக் கிட்ட நீங்க… ஆனால் நீங்கதான் அவங்க அருக்குட்டி அப்படிங்கிறத மனசுல பதிச்சுட்டே வாங்க..கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க” என்றவர் அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை அளித்தார்.
வெளியே வந்தவன் அமைதியாகவே இருந்தான். அவர்களை அழைத்துக் கொண்டு கோவையின் மிகப் பெரிய ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றவன் தங்கையிடம் பணமாகவும் , டெபிட் கார்டுகளையும் தந்தவன் ,
“அம்மா உள்ள போய் உங்க அஞ்சுவுக்கு என்ன என்ன வேணுமோ வாங்கிக் கொடுங்க. அப்பா,தாத்தா, மாமா மூணு பேருமே நிறைய பணம் தந்து விட்டாங்க .. வாங்கிட்டு கூப்பிடுங்க நாம போகலாம்” என்றவன் அவர்களை முன்னால் நடக்க விட்டு ,
” அனுமா , உனக்குத்தான் தெரியும் உங்கண்ணிக்கு என்ன என்ன வேணும்னு , இன்றைய நிலையில அவ எதுவும் என் கிட்ட வாங்க மாட்டா , நீ பார்த்து எல்லோருக்கும் வாங்கிட்டு எனக்கு போன் பன்னு … நான் கார்ல உக்காந்து சில போன் பன்னனும்” என்று விட்டு சென்று விட்டான்.
எல்லாம் வாங்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்தவர்கள், அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சிவா வீட்டினரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ராதிகாவைக் கண்டதும் ‘அத்தை’ என்று ஓடி வந்த இரு குழந்தைகளும் ராதிகாவை மெய் மறக்கச் செய்தனர். இரு குழந்தைகளையும் தூக்கிக் கொஞ்சிக் கொண்டே அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றாள்.
அரவிந்தும் வரவேற்றவன் சிவாவிடம் பேசிக் கொண்டு இருந்தான். முதலில் புதிய முகங்களைப் பார்த்த ஜானகி, சிவா அப்பா அருகில் வந்து
” வாங்க வணக்கம் , அஞ்சுவுக்கு அப்பா , அண்ணன் மட்டும்தான்னு அண்ணன் சொன்னாருங்களே , அவ அண்ணனுக்கு கல்யாணம் ஆனத சொல்லவே இல்லங்க .. பேசிட்டு இருங்க .. நான் எல்லாருக்கும் சாப்பாடு தயார் பன்றேன்” என்று சந்தோஷமாக சொல்லிவிட்டுச் சென்றார்.
வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க .. அரவிந்த் அம்மாவின் பேச்சுக்கான காரணத்தை விளக்கினான்.
சிவாவுக்கும் ,ராணிக்கும் அவர் மனநிலை புரிந்ததால் அமைதியாகிவிட்டனர். ஆனால் சிவாவின் அப்பாவோ ‘அஞ்சு ‘ என்ற பெயரில் குழப்பமாகினார்.
இருப்பினும் தாங்கள் வந்தக் காரணத்தை விளக்க முற்பட்டார்.
“அதுங்க தம்பி .. கல்யாணம் திடீர்னு நடந்துருச்சு … அதுக்காக பிள்ளைய அப்படியே விட முடியாதுங்களே … அது தான் …என் தங்கச்சி அவ மருமகளுக்கு நிறைய செய்யனும்னு ஆசை பட்டாங்க. அதுதான் எங்களால முடிஞ்சத எங்கப் பொண்ணுக்கு செய்யலாம்னு வந்தோமுங்க.”
என்றவர் சில பைகள் பெட்டிகள் அனைத்தையும் காண்பித்து விட்டு , “தம்பி கோவிச்சுக்கக் கூடாது …. சீக்கிரமா உங்க கல்யாணத்த ஊருக்கு அறிவிச்சீங்கனா …. ரொம்ப நல்லது … புரிஞ்சுகுவீங்கனு நினைக்கிறேனுங்க”
“கண்டிப்பா மாமா, சீக்கிரமே தெரியப்படுத்திருவேன் என்ற அரவிந்த் , மதியம் அவர்களை சாப்பிட வைத்து அவர்களுக்கான அறை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவாவை மட்டும் அழைத்துக் கொண்டு , தான் அலுவலகம் சென்று விட்டு மாலையில் வருவதாக சொல்லி விட்டுச் சென்றான்.
எப்பொழுதும் ஏதோ ஓர் யோசனையில் இருப்பதாகவே தோன்றும் ராதிகாவின் முகம் குழந்தைகளைக் கண்டதும் மலர்ந்து விரிந்ததையும் … அவர்களிடம் பேசி விளையாடிதையும் கண்ட அரவிந்த் இரவே கிளம்புவதாக சொன்னவர்களை ராதிகாவின் சந்தோஷத்திற்காக ஒரு நாள் தங்கி விட்டுச் செல்லுமாறு சொல்லியிருந்தான்.
மனையாளின் மதிமுகம் எப்பொழுதும் ஒளிர்ந்துக் கொண்டே இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யத்தயராக இருந்தான் அந்த அன்புக் காதலன்.
மனைவியின் முகம் பார்த்தே அவளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை உடனே நிறைவேற்றும் கணவன் கிடைப்பது வரம். ராதிகாவிற்கும் அந்த வரம் அவள் கேளாமலே கிடைத்தது.