” ஏன் பயந்தா என்ன? எனக்கு பயம் கிறத விட ஒரு அருவெறுப்பு …உவே… அவ்வளவுதான் “
“அப்ப ஓகே… இல்ல உன் காதுல ரத்தம் வர அளவு அட்வைஸ் மழைதான்.. எதுக்கும் பயப்படக் கூடாது.. தைரியமா இருக்கனும் , எந்த நிலையிலும் ஸ்டெடியா இருக்கனும் அப்படி இப்படி … “
“அவங்க சொல்றது சரிதானே அனு”
“சரிங்க அண்ணி .. நீங்க உங்க வீட்க்காரரை எப்படிங்க விட்டுக் கொடுப்பீங்க..” என்றுப் பேசிக் கொண்டு இருக்கும் போதே இன்டர்காம் ஒலிக்கவும்,
“அடடா விஷயத்தையே மறந்துட்டேன், வா வா கீழப் போகலாம்” என்று இழுத்துக் கொண்டுப் போனாள்.
அதே நேரம் ரமேஷிடம் ஏதோ பேசுவதற்காக வந்த அரவிந்த் அவன் அறைக் கதவை தட்டி காத்திருக்கும் போது , அவனும் திறந்து வெளியே வர .. ராதிகாவும் அனன்யாவும் வேகமாக கீழிறங்குவதைப் பார்த்து விட்டு அவர்களும் பதட்டத்தோடு பின்னாலயே சென்றனர்.
அம்மாவின் அறை உள்ளே சென்றால் அங்கு கட்டிலில் நிறைய நகைப் பெட்டிகள் இருந்தன. அதில் சிலவற்றை எடுத்து ராதிகாவின் காதிலும் ,கழுத்திலும் , கைகளிலும் ஜானகிப் போட்டு விட்டுக் கொண்டு இருந்தார்.
“ம்மா , உங்க அஞ்சுவுக்கு போட்டது எல்லாம் ரொம்ப அழகா இருக்கு ” என்று அனன்யா சொல்லவும் , “ம்… ஆமா .. இது எல்லாம் எங்கம்மாவோட நகைங்க , அஞ்சு வீட்டுக்கு வந்ததும் கொடுக்கிறதுக்காக அப்பா வச்சுருந்தார். அதான் அவ வந்ததும் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.” என்றவர் அவளுக்குப் போட்டு அழகுப் பார்த்ததோடு மற்ற பெட்டிகளையும் அவள் கையில் கொடுத்து
” இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு அஞ்சு…சரி போய்த் தூங்கு … நாளைக்கு நாம கடைக்குப் போய் உனக்கு நிறைய புடவை எடுத்துட்டு வரலாம். உனக்காக வாங்கினது எல்லாம் பழசாயிருச்சு… புதுசா வாங்கலாம் சரியா”
சரி என்பதாக தலையாட்டியவளைப் பார்த்த தாயம்மா , ” நீ போய் தூங்கு கண்ணு , இத உங்கையில கொடுத்தப் பிறகு தான் தூங்குவேன்னு ஜானகி சொல்லவும் தான் உன்னைக் கூப்பிட்டேன்.”
“பரவால்லங்கம்மா … நீங்க எப்ப கூப்பிட்டாலும் வருவேனுங்க ” என்றவள் … அனன்யா துணையோடு அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு வாசலருகே நின்று ராதிகாவையேப் பார்த்துக் கொண்டு இருந்த அரவிந்தை தலை நிமிர்ந்து பார்க்காமல் சென்றாள்.
அருகில் வந்த அனன்யாவை கவனிக்காது மனைவியையே வைத்தக் கண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்த அண்ணனைப் பார்த்தவள் , அவனுக்கு பின்னால் நின்றுக் கொண்டு இருந்த ரமேஷிடம் ,
“சீக்கிரம் உங்க மச்சான் கல்யாணத்த ஊருக்கு அறிவிக்கிற வேலையைப் பாருங்க … ரெண்டு பேரையும் ரொம்ப நாள் பிரிச்சு வைக்க முடியாது” என்று விட்டு நகர்ந்து விட்டாள்.
அனன்யா அப்படித்தான் , சிறு வயதில் இருந்து தந்தையாக இருந்து தனக்குப் பார்த்து பார்த்து செய்யும் அண்ணனுக்கு பிறந்த நாள் என்றால் ரமேஷிடம் வந்து அரவிந்த்க்கு ஏதாவது வாங்க துணைக்கழைப்பாள். அவனுக்கு சிறு தலைவலி வந்தாலும் ரமேஷிடம் ஓடி வந்து அவனை மருத்துவமனை அழைத்துச் செல் என்பாள். அந்த அளவு அவன் மீது பாசம் அதிகம். பெரும்பாலும் அரவிந்தை வைத்து தான் அவர்கள் பேச்சுக்கள்.
இது போல் தனக்கு யோசிக்க யாருமே இல்லை என்ற கவலை அவனுக்கு அதிகம் உண்டு. இப்பொழுதும் அண்ணனின் மண வாழ்வுக்காக தன்னிடம் சொல்லிவிட்டுப் போனவளை ஆச்சரியமாகப் பார்த்தவன் , தன் நண்பனைத் திரும்பிப் பார்க்க அவன் கண்களோ அறைக்குள் சென்று மறையும் வரையிலும் மனைவியையேப் பார்த்துக் கொண்டு இருந்தது.
அருகில் வந்த ரமேஷ் ஒரு கைக்குட்டை எடுத்து அரவிந்திடம் தந்தான்.
“என்னடா “
“ம் … தொடச்சுக்கோ … இன்னும் கொஞ்ச நேரத்துல சிறுவாணி ல கலந்துரும் நீ விடுற ஜொள்ளு …. சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிரனும் … “
“கிண்டல் பன்னாதா மச்சான் … நிறையத் தூக்கிட்டுப் போறாளே நாமளும் ஹெல்ப் பன்னுவோமானு பார்த்தேன்… சரி சரி வா…. நாளைக்கு அம்மாவ டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகலாம் பார்க்கிறேன். இன்னைக்கு அவங்க நடந்துக்கிறது எல்லாம் வித்தியாசமா இருக்கு”
“நானும் நினைச்சேன் மச்சான் .. அப்புறம் இன்னொரு விஷயம் ..மொட்ட மாடிக்கு காத்து வாங்கப் போறியோ இல்லை காதல் வாங்கப் போறியோ தெரியாது. ஆனா இனி கதவ பூட்டிரு … ” என்று சொல்லி சென்று விட்டான்.
அவன் சொன்னதும் தான் தன் தவறை உணர்ந்தவன் சிறிது சங்கடத்திற்கு ஆளானான். பேசுவதற்கு மட்டுமே தான் சென்றான்.. ஆனால் ….
“ச்ச… கல்யாண வயசுல தங்கச்சியும் , ரமேஷும் இருக்கிறப்போ கொஞ்சம் பார்த்து இருக்கனுமோ..” தலையை உலுக்கிக் கொண்டவன் சிறிது சங்கடத்துடனேயே அறைக்குச் சென்றான்.
அறையில் படுத்திருந்தவனுக்குள் பல்வேறு யோசனைகள் ,தங்கைக்கு திருமணம் செய்து விட்டு தன்னைப் பற்றி யோசித்து இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்க ஓர் முடிவு எடுத்தவுடன் தான் அவனுக்கு உறக்கமே வந்தது.
ராதிகாவின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருந்தது. கோவையில் விடுதியில் தங்கி வேலைக்குப் போய்க் கொண்டே மேற்படிப்பு படிக்கலாம் … படித்து முடித்து நிறைய சம்பளம் வாங்கித் தன்னைப்போல் யாருமற்ற பிள்ளைகளுக்கு ஏதேனும் உதவிகள் செய்து அப்படியே காலத்தை கழித்து விடலாம் என்பது போன்ற எண்ணங்கள் தான்.
இப்படி ஒரே நாளில் தன் வாழ்க்கை மாறும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அரவிந்த் சொன்ன காதல் என்பது ஓர் வார்த்தையாக மட்டுமே அவளுக்கு தெரிந்தது. ஆனால் அந்த அணைப்பு .. நிச்சியம் அதில் இதம் இருந்தது…முத்தம்…. நினைக்கும் போதே உடலில் ஓர் சிலிர்ப்பு ஓட படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்து விட்டாள். அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனன்யாவைப் பார்த்தவள் … அவளுக்கு தொந்தரவு தராத வண்ணம் எழுந்து அந்த அறையின் பால்கனியில் அமர்ந்து இருளை வெறிக்க ஆரம்பித்தாள்.
புதிதாககழுத்தில் போடப்பட்ட நகைகள் உறுத்த, அதை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்தவள். கையில் கடைசியாகத் தட்டுப்பட்ட மாங்கல்யத்தையும் கழற்ற கை வைக்க .. அவளால் முடியவில்லை … இதை அன்று அத்தை கையில் தந்து உன் அம்மாவினுடையது என்றபோது அதை சரியாகப் பார்க்க கூட இல்லாமல் வீசி எறிந்தவள் தான்.. ஆனால் இன்று … முடியவில்லை அன்று போல் இன்று கழற்றித் தூக்கி எறிய மனமும் வரவில்லை , கையும் ஒத்துழைக்க வில்லை.
ஏன் .. ஏன்.. முடியவில்லை … அவளுக்குப் புரியவில்லை. ஒரே நாளில் இதற்கு மதிப்பு தருகிறேனா… வேண்டாம்.. இது எனக்கு வேண்டாம்.. இந்த வாழ்வும் வேண்டாம் … என்று சத்தமில்லாமல் முழங்காலில் தலை வைத்து அழுதவளால் என்ன முயன்றும் அதை கழற்ற மனம் வரவில்லை. அழுது கொண்டே இருந்தவள் எப்போது தூங்கினாளோ … காலையில் அனன்யா வந்து தட்டி எழுப்பவும் தான் ,வீங்கியிருந்த கண்களை சிரமப்பட்டு திறந்தாள்.
” ஏன் அண்ணி இங்க வந்து படுத்து இருக்க … உன் கண்ணெல்லாம் சிவந்துருக்கு பாரு ..” என்று அவளை எழுப்பி அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
“இல்ல.. தூக்கம் வரலனு அங்க உட்கார்ந்து இருந்தேன் .. அப்படியே தூங்கிட்டேன் போல.. நான் போய் குளிச்சிட்டு வாறேன்” என்று அவள் முகம் பார்க்கத் தயங்கி வேகமாக குளியலறை சென்று விட்டாள்.
அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்த அனன்யா உடனே அண்ணனைத் தேடிச் சென்றாள். அறைக்கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றவள் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்து விட்டு கீழே அம்மாவிடம் சென்று விட்டாள்.
ரமேஷ் அப்போதுதான் கிளம்பிக் கொண்டு இருந்தான். ,ஹாலில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டு இருந்த அனன்யா, மேலேயிருந்து இறங்கி வந்தவன் சமையலறை புறம் ஒரு பார்வைப் பார்த்து விட்டு வெளிவாசலை நோக்கி நடப்பதைக் கவனித்து விட்டு , “அத்தான் ” என்றழைத்தாள்.
முழுக்கை சட்டையை மடக்கி விட்டுக் கொண்டே சென்றவன் அவளின் அழைப்பில் நின்று திரும்பிப் பார்த்தான்.
“ஒரு நிமிஷம் ” என்றவள் வேகமாக சமையலறைச் சென்று மூடியிட்ட கோப்பை ஒன்றைக் கொண்டு வந்து , ” இந்த காஃபி மக் ல காஃபி இருக்கு .. ட்ரைவ் பன்னும் போது கூட குடிச்சிக்கலாம் … ” என்று தந்து விட்டு மறுபடியும் சோஃபாவில் அமர்ந்து டீவிப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இதுவரை இப்படிக் காலையில் கிளம்பும்போது சமையல்காரம்மா இருந்தால் அவரே கொண்டு வந்து தருவார் .. இல்லை அவனே கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டுச் செல்வான்… அரவிந்த் மட்டுமே சாப்பிட்டியா , சாப்பிடு என்று உரிமையோடு சொல்லும் நபர் .
அனன்யா கல்லூரிக்குப் போக வர இருப்பாள் … மற்றபடி இன்று போல் அவளாகவே செய்துப் பார்த்ததில்லை. இப்படி யோசித்துக் கொண்டே வீட்டு வாசல் நோக்கிச் சென்றவனை அரவிந்த்தின் குரல் தடுத்து நிறுத்தியது.
” ரமேஷ் ஒரு நிமிஷம் நில்லுடா” என்று படியிறங்கி வந்தவன் தொழில் விஷயமாக ஏதோப் பேசிக் கொண்டு இருந்தான்.
ராதிகாவும் குளித்து முடித்து வந்தவள் இவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டே கீழே இறங்கினாள்.
“ம்ச் … சொல்லுங்கண்ணா” என்றதும் போனில் ஏதோ ரமேஷிடம் காண்பித்துப் பேசிக் கொண்டு இருந்தவன்,
“உனக்கு கல்யாணம் முடியற வரை உன் கூடத்தான் இருப்பா” என்றதும் , சோபாவில் அமர்ந்திருந்தவள் பட்டென்று எழுந்து நின்று “என்ன ” என்றுப் பார்த்தாள்.
அவள் பார்த்தது அரவிந்தை அல்ல ரமேஷை , அதே நேரம் ரமேஷும் அனன்யாவை தான் பார்த்தான்.
சத்தமே இல்லாமல் இருக்கவும் தலையை நிமிர்த்தி தங்கையைப் பார்த்தவன் அவள் பார்வை ரமேஷிடம் இருப்பதையும் , ரமேஷின் பார்வை அனன்யாவிடம் இருப்பதையும் பார்த்து குழம்பி நின்றான்.
“இது என்ன இவங்க ரெண்டு பேரும் இப்படி முழிக்கிறாங்க..” அவனது குழப்பத்திற்கு ஏதோ விடை கிடைப்பது போல் இருக்கவும் … மனதில் நிம்மதியும் முகத்தில் முறுவலும் ஒருங்கே தோன்றி அரவிந்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
” எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்கிறது இதுதானோ … டேய் அரவிந்தா இத்தனை நாள் கவனிக்காம விட்டுட்டியே … பின்ன எனக்கு காதல் வந்த பிறகு தானே … இந்த பார்வைக்கெல்லாம் அர்த்தம் புரியுது….இருடா மச்சான் உன்னைய ஒரு வழிப்பன்றேன்…”