அப்படியே நின்றுக் கொண்டு இருந்தவளின் கையைப் பிடித்து இழுக்கவும் , இடித்துக் கொண்டு அவனருகில் குனிந்தவள் , பெரியவரின் பாதம் தொட்டு எழுந்தாள்.
அவர்களை ஆசிர்வதித்தவர் , அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு் “தம்பி நீங்க எவ்வளவு பெரிய குடும்பம்னு எனக்கு நல்லாவே தெரியும். எங்க வீட்டுப் பொண்ண விரும்பி … அதுவும் அவசூழ்நிலைய புரிஞ்சி தாலி கட்டியிருக்கீங்க … எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.. இவளையே நினைச்சுட்டு இருந்த என் தங்கச்சியோட ஆன்மா இனி நிம்மதியா இருக்கும்… ஒரு நிமிஷம் என்றவர் , உள்ளறைக்குச் சென்று , ஒரு சிறிய கவரை எடுத்து வந்து் ,
“தம்பி இது ராதிகா கைல தர சொல்லி என் தங்கச்சி தந்ததுங்க .. கண்டிப்பா இன்றைய நிலைமைல ராதிகா இதை வாங்க மாட்டா , அவ மனம் எப்ப இதைப் பார்க்கனும்னு தோணுதோ அப்ப பார்த்துக் கட்டும்.” என்றவர் அதனை அவனிடம் தந்தார்.
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் நடந்ததை வியப்போடு பார்த்துக் கொண்டு இருந்தனர். அவனின் உயரம் தெரிந்த பலரும் அரவிந்த் தங்களது உறவினனாதை பெருமையோடும் , சிலர் இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன் ‘ என்று பொறாமையோடும் பார்த்துக் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அத்திருமணத்தை ஏற்றுக்
கொண்டனர்.
அங்கு புகைப்படத்திற்கு போடப்பட்டு இருந்த மல்லிகைப் பூவை எடுத்து வந்த ராணி , ராதிகாவின் தலையில் சூடினாள்.
பூச்சூடிய ராதிகா அரவிந்தின் கண்களுக்கு அவ்வளவு அழகாகத் தெரிந்தாள். சூழ்நிலை ரசிக்க நேரம் தரவில்லை , எனவே அங்கிருந்தவர்களைப் பார்த்து,
“ஒரு நல்ல நாள் பார்த்து ஊருக்கு எங்கள் திருமணத்தை அறிவிப்பு செய்றேன். அன்றைக்கு நீங்க எல்லாரும் தவறாம வரணும்” என்று கைகூப்பியவன் , மீண்டும் ராதிகாவின் கைப்பிடித்து,
“வா நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்துச் சென்றான்.
அதற்குள் அங்கு ரமேஷிற்கு இன்னொரு காரை வரவழைத்து இருந்தவன் ,
“அரவிந்த் , நீ தங்கச்சியக் கூட்டிட்டு உன் கார்லப் போ , நான் என் கார்ல வந்துடுறேன் ” என்றவன் , அங்கு வெளியே இருந்த ராதிகாவின் பைகளை எடுக்கப் போனான்.
அதற்குள் அதனை எல்லாம் எடுத்துக் கொண்ட சிவா ,அரவிந்தின் காரில் வைத்து விட்டு “தேங்க்ஸ் ” என்று அணைத்துக் கொண்டான். ராதிகாவைப் பார்க்க , அவள் உணர்வற்ற நிலையில் வெறித்துக் கொண்டு இருந்தாள். எனவே சிவா ஒன்றும் பேசாது நகர்ந்துக் கொண்டான்.
அரவிந்த் காரின் முன்பக்க கதவைத் திறந்துவிட, அதில் ஏறும் எண்ணமில்லாது இருந்தவளை “ராதிகா உட்கார்” என்றான். அப்பொழுதும் அவள் அப்படியே நிற்கவும் .. அவள் தோள் தொட்டு அழைத்தான். தொடுகையை உணர்ந்தவள் , அமைதியாக ஏறி அமர்ந்து கொண்டாள்.
கோவையை நோக்கிக் காரைச் செலுத்தியவனை அவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. காரில் தலை சாய்த்து கண்மூடிக்கொண்டாள்.
இடையில் ஓர் உணவகத்தில் நிறுத்தியவன், அவளைத் தட்டி எழுப்ப அப்பொழுதுதான் சுற்றுப் புறம் உணர்ந்தவள் , காரைத் திறந்துக் கொண்டு அங்கிருந்த பெண்கள் கழிவறை நோக்கிச் சென்றாள்.
அவளுக்கும் ஒரு காபி வாங்கிக் கொண்டு காரில் சாய்ந்து நின்று கொண்டான். வந்தவள் முகம் கழுவி இருப்பாள் போல , முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டே வந்தவள் அவன் தந்த காப்பியை வாங்கிக் கொண்டாள்.
அவள் இரண்டு வாய் குடித்திருப்பாள் , “ஒரு நிமிஷம் “என்றவன் , காபி கப்பினை கார் மீது வைத்து விட்டு ,அவள் முகம் கழுவும் போது இடம் மாறி இருந்த பொட்டினை எடுத்து நெற்றியில் வைத்தான்.
அவனது தொடுகையில் ஏதோ ஓர் உணர்வு வர , அவளும் காபியை காரின் மீது வைத்தவள் , நகர்ந்து கார் கண்ணாடியில் முகம் பார்த்து திருத்திக் கொண்டாள்.
அவனுக்கோ கன்னம் தொட்டதும் நெற்றித் தொட்டதும் மயக்கம் தர அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ராதிகா எதுவும் பேசவும் இல்லை , அவனைப் பார்க்கவும் இல்லை. திரும்பவும் காபியை எடுத்தவள் வேறுபுறம் பார்த்துக் கொண்டு அருந்த ஆரம்பித்து விட்டாள்.
அவனும் அந்த கப்பினை எடுக்க , அது முழுதும் இருந்ததை கவனித்தான். ஏனெனில் அவன் பாதிகப் குடித்து விட்டுருந்தான்.
அது அவள் வாய் வைத்த காபி என்பது பரவசத்தைத் தர சூட்டைக் கூட உணராது தாகத்திற்கு நீரை வேகமாக அருந்துவது போலக் குடித்தான்.
அவளும் எதுவும் கவனிக்காது அவன் மீதி வைத்திருந்ததை குடித்துவிட்டு குப்பைக் கூடையில் போட்டுவிட்டு வரவும் அவன் கார் கதவை திறந்து வைத்திருக்கவும் சரியாக இருந்தது.
ஏறி அமர்ந்து கொண்டவள் , முன்பு போல கண்களை மூடவில்லை , ஆனால் சாலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கோவையை ஒன்பது மணிபோல் அடையவும் , ரமேஷின் போன் வரவும் சரியாக இருந்தது.
“மச்சான் தாயம்மாகிட்ட என்னாச்சுனு சொல்லிட்டேன் …. உன் செல்ல பாப்பாவும் கூட தான் இருந்தா… அந்த கோலிக்குண்டு கண்ண விரிச்சு விரிச்சு கேட்டுட்டு இருந்தா ” என்று சிரித்துக் கொண்ட ரமேஷ் ” பட் அவ என்ன நினைக்கிறா , உன்னை எப்படி ரிசீவ் பன்னுவா அதெல்லாம் எனக்கு தெரியாது”
“நான் நேர்ல பேசிக்கிறேன்…. புரிஞ்சுப்பா ” என்றவன் ராதிகாவை தான் பார்த்தான்.அவளோ அவனைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
திடீர் திருமணம் அவளை பாதித்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டவன் அவள் மெளனத்தை பெரிதாக எடுக்கவில்லை.
வீட்டை அடையவும் வாசலில் நின்றிருந்த காவலாளி கதவைத் திறந்து விட ஒரு பெரிய புல்வெளி பூந்தோட்டத்தைக் கடந்து வீட்டு வாசலில் சென்று நின்றது கார் .
ரமேஷ் , அனன்யா , தாயம்மா , மற்றும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் நான்கைந்து பேர் அங்கு நின்று இருந்தனர்.
இறங்குவதற்கு முன்பு ” இது தான் நம்ம வீடு” என்றவன் இறங்கி மறுபுறம் வந்து அவளுக்கு கதவைத் திறந்து விட்டான்.
மெல்ல இறங்கியவள் அங்கு நின்று இருப்பவர்களை எல்லாம் பார்க்க தயங்கி தலை குனிந்து நின்றிருந்தாள்.
அவள் அருகில் வந்த தாயம்மா அவளுக்கு திருஷ்டி கழித்து கன்னம் தொட்டு “மகாலட்சுமியே நம்ம வீட்டுக்கு வந்தது போல இருக்கா நம்ம வீட்டு மருமக, என்றவர் பாப்பா இங்க வந்து அண்ணன் அண்ணிக்கு ஆரத்தி எடுகண்ணு” என்று அனன்யாவை அழைத்தார்.
ஆரத்தி தட்டுடன் வந்த அனன்யா இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து தாயம்மா சொன்னது போல் செய்தாள்.
கண்கள் கலங்க அனன்யாவின் கையைப் பற்றிக் கொண்டவள் , “எனக்கு … எனக்கு.. எனக்கு ஒன்னும் தெரியாது.. திடீர்னு ..” என்று சொல்லிக் கொண்டு இருந்தவளின் வாயை மென்மையாக மூடியவள் , “அண்ணி “
அவளது அழைப்பில் கண்களை விரித்தவளிடம் ,
“என்னப் பார்க்கிறீங்க, நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸாவும் , ஒரே வயசா இருந்தாலும் அண்ணன் மனைவிய அண்ணி்னு தான் கூப்பிடனுமாம் … இவ்வளவு நேரம் தாயம்மா அட்வைஸ். சோ அண்ணி தான் நீங்க “
“அண்ணிய உள்ளக் கூட்டிட்டு வந்துப் பேசு பாப்பா” என்ற தாயம்மா ” வலது கால் எடுத்து வச்சு வா கண்ணு” என்றார்.
தங்கள் முதலாளியின் மனைவியை வரவேற்க வந்த அனைவர் கையிலும் தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சில ஆயிரங்களைக் கொடுத்து விட்டு அரவிந்தும் ரமேஷும் உள்ளே சென்றனர்.
அனன்யா”அண்ணா ..அண்ணியப் பார்த்த நாளிலருந்து காதலிச்சுட்டு இருந்து இருக்கீங்க, எங்கிட்ட சொல்ல வே இல்ல நீங்க ” என்று சலுகையாக கோபம் கொண்டவளிடம் ,
ராதிகாவைப் பார்த்துக் கொண்டே “உங்கண்ணிட்டயே நான் சொல்லல பாப்பா ப்ளீஸ் … இதுக்கு மேல என்கிட்ட கேட்காத மா” என்று கெஞ்சியவனிடம்,
“அதனால உங்கள விட்டுடுறேன். இல்ல … ” என்று அவனிடம் செல்லம் கொஞ்சிப் பேசிக் கொண்டு இருந்தாள். பேச்சு தங்கையிடம் இருந்தாலும் பார்வை தன் மனைவியிடமே இருந்தது. தாயம்மா அவளை பூஜையறைமுன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
ரமேஷ் போனை நோண்டும் சாக்கில் அண்ணன் தங்கை உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்தான்.
பூஜை அறை விட்டு வெளியே வந்த தாயம்மா அனைவரையும் பூஜையறை வர வைத்து ராதிகாவை விளக்கேற்ற வைத்தார். அவர் சொன்னதைச் செய்தவள் , கண்கள் மூடி தெய்வத்தை வணங்க … கண்ணீர் வர ஆரம்பித்தது.
அனைவரும் அவளையே பார்க்க தாயம்மாதான் சுதாரித்து , அவள் கைப் பிடித்து வெளியே அழைத்து வந்தவர் , ” நீ இந்த வீட்டுக்கு வந்திருக்கிற மகாலட்சுமி கண்ணு , உனக்கு இங்க எந்தக் குறையும் வராது … அழாத கண்ணு” என்று அவள் கண்களை துடைத்து விட்டு ,
” வாங்க அம்மாவப் போய்ப் பார்க்கலாம்” என்று அனைவரையும் அழைத்துச் சென்றார்.
அங்கு கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டு இருந்த ஜானகியிடம் அழைத்துச் சென்றவர் .
அவர் தோளை மெல்ல தட்டி எழுப்பி “ஜானகி இங்கப் பாரு, யார் வந்துருக்கிறதுனு” என்றார்.
மெல்லக்கண் விழித்துப் பார்த்த அவர் முகம் ராதிகாவைக் கண்டு , பூவாய் மலர ஆரம்பித்தது. எழுந்து அவளருகே வந்தவர் , “அஞ்சு வந்துட்டியா … சொன்னது போலவே உன்னைக் கூட்டிட்டு வந்துட்டாங்களா” என்று வேகமாய் அறையை விட்டு வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்து விட்டு , அவளிடமே மீண்டும் வந்தார்.
ராதிகாவிற்கு அவர் பேசியது ஒன்றும் புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தில் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது.