அவ்வார இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருக்க .. தாமரை தில்லை என இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஏற்கனவே தாமரை எழுதியிருந்த மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவும் வந்திருக்க அடுத்த வாரத்தில் சென்னைக்கு கவுன்சிலிங் செல்வதாக இருந்தாள் தாமரை.
தில்லையோ விவசாயக் கல்லூரியில் இளங்கலை பயில விண்ணப்பித்திருந்தாள். தன் தோழியிடமும் ,
“தாமரை கவுன்சிலிங்ல எப்படியாவது மதுரை மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கிரு டி நீ நல்ல மார்க் வாங்கி இருக்கிறதால நாம் கேட்டது கிடைக்க வாய்ப்பு இருக்கு.. ரெண்டு பேரும் காலேஜ் முடிச்சு வந்து பஸ் ஸ்டான்ட்ல மீட் பண்ணிக்குவோம் சரியா.”தோழியையும் தினமும் பார்க்கலாம் தானும் மருத்துவர் ஆவது உறுதி என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக வளைய வந்தாள் தாமரை.
அருணாச்சலத்திற்கு சூரத்தில் நடைபெறும் தொழிலாளர் சங்க மாநாட்டில் கலந்துக் கொள்ள வேண்டி இருப்பதால் அவர் இரு நாட்களுக்கு முன்பே அங்கு சென்று விட்டார். ஆதவனிடமும் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வர சொல்லிவிட்டார். அவரும் கவுன்சிலிங் நடைபெறும் நாளில் கலந்துக் கொள்வதாக ஏற்பாடு செய்துக்கொண்டார்.
மீனாட்சியின் உடல்நிலையால் வெளியே எங்கும் செல்லவே தயக்கமாக இருந்தாலும்.. சென்னை வரை செல்லும் வயதுப் பெண்ணிற்கு பெண் துணை தேவை என்பதாலயே அவரும் கிளம்புவதாக இருந்தது. வெகு தூரம் காரில் பயணிப்பதும் சிரமம்..விமானப் பயணமும் மீனாட்சிக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால் அவர்கள் இரயிலில் செல்ல திட்டமிட்டனர்.
சென்னைக்கு குடும்பமாக சென்று கவுன்சிலிங்கில் பங்கேற்க எல்லாம் தயாராக வைத்து விட்டு கிளம்புவதற்கு முதல் நாள் அன்று ஆனந்த விகடனை கையில் வைத்துக் கொண்டு வீட்டு வரவேற்பறையில் இருந்த ஒற்றை சோஃபாவில் தாமரை அமர்ந்திருக்க .. மல்லிகை பூவை தொடுத்த வண்ணம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சன் டிவியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. ஆதவனைத் தேடி வந்திருந்த விஜய் ஆனந்தின் விழிகளில் .. தாவணியில் கால்களை சோஃபாவில் தூக்கி வைத்துக் கொண்டு தன் நீண்ட ஒற்றை ஜடையின் நுனியினை ஒரு கையால் சுருட்டி சுருட்டி விளையாடிக் கொண்டும் மறுகையில் ஆனந்த விகடன் புத்தகத்திலும் முழ்கிப் போயிருந்தவளை ரசித்துக் கொண்டே …
“ஆன்ட்டி… ” என்றான். மீனாட்சியை அழைத்தாலும் விழிகள் தாமரையை தானே பார்த்துக் கொண்டிருந்தது. திடுக்கிட்டு விழித்தவளது கைகளிலிருந்து புத்தகம் நழுவி விழ.. படக்கென்று இறங்கி நின்றவளுக்கு விஜயைக் கண்டதும் தோன்றியது ஆனந்தமா.. ஆவலா.. அதிர்ச்சியா… ம்கூம் அவளால் உணர முடியவில்லை. விஜயின் உதட்டில் மெல்லிய புன்னகை.
மற்றொரு நீண்ட சோஃபாவில் அமர்ந்திருந்த மீனாட்சியும் வாசலை திரும்பிப் பார்த்தவர், விஜயைக் கண்டதும் முகம் மலர…
” வாங்க தம்பி.. உக்காருங்க எப்படி இருக்கீங்க..” என்றவர் மகளிடம் ,
“பாப்பா குடிக்க தண்ணி கொண்டு வாம்மா..” என தாமரையை உள்ளே அனுப்பி விட்டு அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவர்களருகே வருகையில் ,
“ஆமா ஆன்ட்டி இங்க தாத்தா தொழில பார்க்கிறதுக்கான எல்லா வேலையும் பார்த்துட்டேன். ஆனாலும் ஒரு குழப்பம் இருந்துட்டே தான் இருக்கு … இங்கேயே இருந்துப் பார்க்கிறதா.. இல்ல அப்ப அப்போ வந்துப் பார்க்கிறதானு… ” என்றவன் தண்ணீரை தன் முன் நீட்டியவளைப் பார்த்துக் கொண்டே..
“எனக்குனு இங்க யாரு இருக்கா ஆன்ட்டி… அப்படி இருந்தா… அவங்களுக்காக இருக்கலாம்.. ” அதுவரை தரையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகளை உயர்த்தி விஜயைப் பார்த்தாள். உடனேயே மென்னகைத் தோன்ற …
“முடிஞ்சவரை இருக்க பார்க்கறேன்.” என வாய் மீனாட்சியிடம் சொன்னாலும் விழிகள் என்னவோ தாமரையிடம் மட்டுமே பதில் சொல்லியது. அவளும் விழிகளைத் தாழ்த்தி திரும்பி வேகமாக மாடியேறி விட்டாள்.மீனாட்சி அவனிடம்,
” ஏன் தம்பி அப்படியெல்லாம் சொல்றீங்க.. நாங்க இல்லையா உங்களுக்கு .. ஆதவன் கூட அவங்கப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தான்… விஜய்க்கு நீங்கதான் முன்ன நின்னு தொழில கத்துக் கொடுக்கணும்னு… “தாமரை செல்வதை ஓரக்கண்ணால் பார்த்தவன் ,
“சரிங்க ஆன்ட்டி… ஆதவன் வர்ற நேரம் தானே.. நான் அவனை பார்த்துட்டு போறேன்… அதுவரை வெளிய மரத்தடியில உட்கார்ந்து இருக்கிறேன்.” என்றவன் , வீட்டின் முன்னிருந்த வேப்ப மர நிழலில் கற்களால் கட்டப் பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
அங்கிருந்து பார்த்தால் தாமரையின் அறை ஜன்னல் தெரியும் என்பதை அவன் முன்பொருமுறை கவனித்து இருந்தான். அதனாலயே அங்கு சென்று அமர்ந்தான். அங்கிருந்து பார்க்கையில் அவன் மேலே அந்த அறையை பார்ப்பது போல் யாருக்கும் தெரியாது. ஆனால் பார்வையிடுபவனுக்கும் அந்த பார்வையை உள்வாங்குபவளுக்கும் தெரியாமல் போகுமா…
தாமரையோ அறையிலிருந்து வெளியே வந்து மேலே இருந்து கீழே கூடத்தைப் பார்க்கையில் மீனாட்சி மட்டும் தனியாக இருப்பது போல் தெரிய , அவன் போய் விட்டான் என நினைத்து கீழே இறங்கியவளிடம்,
“பாப்பா அப்பா ஆபிஸுக்கு போனடிச்சுக் கொடு… ஆதவன் கிளம்பிட்டானா கேட்கணும்” என்றவர் அருணாச்சலத்திடம் விஜய் வந்த விவரம் கூறி ஆதவனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதைக் கூற… தாமரையின் இதயமும் படபடவென அடித்துக் கொண்டது.. மெதுவாக தன் அறைக்குச் சென்றவள் ஜன்னல் அருகே வந்து விஜய் நிற்கின்றானா எனப் பார்க்க… விஜயின் விழிகள் ஜன்னலிலே தானே இருந்தது … அவன் பார்ப்பதை உணர்ந்தவளுக்கு முகம் வெட்கத்தில் சிவந்து ஜன்னலை விட்டு விலகியதோடு சுவரோடும் சாய்ந்து கொண்டாள்.
விஜய்க்கும் அவள் அவனைப் பார்த்து விட்டு மறைந்துக் கொண்டது தெரிய .. தன் பார்வைக்கு பதில் பார்வை இருக்கிறது என்பதை அறிந்த நொடி உற்சாகத்தில் மிதக்க துவங்கினான். சிறிது நேரத்தில் ஆதவனும் தனது புல்லட்டில் வீட்டு வளாகத்தில் நுழைந்தவன் விஜயை கண்டு விட்டு , வீட்டினுள் வரும்படிக் கூற… மறுத்தவன் ,
“பரவாயில்ல ஆதவ் … தாத்தா தொழில்கள தக்க வச்சுக்க இங்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். இங்க இருந்தே பார்க்கலாமா.. இல்ல அப்பப்ப போக வரப் பார்த்துக்கலாமானு குழப்பமா இருக்கு .. “
ஆதவனோ , “டேய் இதுலென்ன குழப்பம்.. உன் அம்மா வீட்டு வழில நெருங்கின சொந்தம்னு யாருமே இல்லையே டா .. ஆனா இங்க பாரு… இந்த ஊர்ல யாரப் பார்த்தாலும் பேரன்.. மகன்.. மருமகனே… மச்சான்னு சொந்தம் சொல்ல அத்தனை பேரும் இருக்காங்க.. எங்கப்பாவயே பார்த்தல்ல.. உன் அப்பா … தாத்தா பேரைச் சொன்னதும் நீ யாருனு சொல்லிட்டாங்க… அதோட ..” என நிறுத்தியவனது முகம் சிறிது வருத்தத்தைக் காட்ட ..
“என்ன ஆதவ்.. ஏன் டல்லா இருக்க… “
” விஜய் … அம்மாவோட மெடிக்கல் ரிபோர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டுப் போய் டாக்டரப் பார்த்தேன்… கொஞ்சம் பயமா இருக்கு … ஆனா எதையும் தாங்கி தான் ஆகணும்…” என கண் கலங்கிய ஆதவனது தோளில் ஆதரவாக கைப் போட்டவனிடம்,
“அப்பாவும் தளர்ந்துட்டாரு… நான் படிக்க போறதால கொஞ்சம் சிரமம் தான்.. நீ இங்க இருந்தா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் டா.. நீ பக்கத்துல இருக்கிற… எதுவும்னா உடனே உன்னையக் கேட்டுக்கலாம்ங்கிறதால நான் தைரியமா வெளிநாடு கிளம்புவேன்… முடிஞ்சா உன் படிப்பு நேரமும் , உன் வேலை நேரமும் போக எங்க அப்பாவுக்கும் ஹெல்ப் பண்ணுவ இல்லையா .. முடியுமா விஜய் ” என்றவனிடம்,
“முடியுமா வா .. செய்யுனு சொல்லுடா… எனக்கு யாரும் இல்லனு சொல்லும் போதெல்லாம் நான் இருக்கேன்னு சொல்லிட்டு … இப்ப யாரோ போல கேட்கிறியே டா.. நீ கவலைப்படாம உன் படிப்பை அங்க பார்.. நான் இங்க மதுரைல இருந்தே என் எக்ஸாம்ஸ்க்கு தயாராகிட்டே.. தாத்தாவோட பிஸ்னஸும் பார்த்துக்கலாம்னு இருக்கேன். அப்படியே அங்கிளுக்கு என்னாலான உதவிகளையும் செய்றேன் சரியா..” என்ற விஜயை அணைத்துக் கொண்ட ஆதவனை தானும் அணைத்தவன் பின்னால் தாமரை நிற்பதைக் கண்டு புன்னகையோடு அவளைப் பார்த்தான்.
ஒரு நொடி அவனுக்கு புதில் புன்னகை கொடுத்தவள்… ஆதவனிடம், “அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க..” என்றவளுக்கு மனம் முழுவதும் குளிர்ந்தது. இருள் கவியத் துவங்கிய நேரம் என்பதால் அவள் வருவதை நண்பர்கள் இருவரும் பேச்சு மும்முரத்தில் கவனிக்கவில்லை. வந்தவள் இருவர் பேசியதையும் கேட்க நேர விஜயை மனதுக்குள் ஏற்றிக் கொண்டிருந்தாள். அதனாலயே அவனது புன்னகைக்கு பதில் புன்னகையும் கொடுக்க முடிந்தது.
அந்த புன்னகைக் கொடுத்த பரவசத்தில் இருந்தவனை ஆதவன் தோள் மீது கைப் போட்டு உள்ளே அழைத்துச் செல்ல .. தாமரை பின் தொடரவில்லை. அவளுக்கும் விஜயின் உணர்வுகளே.. அவன் அமர்ந்திருந்த கல் பெஞ்சில் அமர்ந்து அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை தூக்கி மடியில் அமர்த்தி பிடித்துக் கொண்டாள்.
உள்ளே சென்றவனுக்கு உண்டு முடிக்கும் வரை தாமரை கண்ணில் படவில்லை. நேரமாகவும் கிளம்பி வெளியே வந்தால் தாமரை இன்னமும் ஆட்டுக்குட்டியை மடியில் அமர்த்தி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் வெளியே வருவது தெரிந்ததும். அதனை அதன் தாயருகில் விட்டவளிடம் ஆதவன் ,
“பாப்பா இது தான் இப்ப நீ புதுசா பேரு வச்ச பூங்கொடியா…” எனக் கேட்டவன், கூடவே “அம்மா உன்னைத் தேடுறாங்கமா..” என்றதும் எதிரில் வந்துக் கொண்டு இருந்தவர்களை நிமிர்ந்து பாராமல் வீட்டினுள் செல்ல அவர்களைத் தாண்டிச் சென்றாள்.
விஜயோ வேகமாகச் சென்று தாமரை கீழே இறக்கிய ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டான். அவள் வைத்திருந்தாள் என்ற நினைவே சுகமாக இருக்க… அவனும் மென்மையாக தடவ … ஆதவன் ,
“நீயும் பாப்பா போல தான.. படிப்ப தவிர அவளோட அதிகமான பொழுதுகள் ஆடு..மாடு… கோழி தான்…” எனப் பேசிக் கொண்டே நண்பனோடு சென்றான்.