சிவா வீட்டினுள் வந்தவன் ராதிகாவிடம் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி குடிக்க கொண்டு வரச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அங்கு வந்திருப்பதிலயே அவர்கள் இருவரும் தான் அவளுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் , அவளும் கையில் ஜுஸ் அடங்கிய தட்டுக்களை எடுத்துச் சென்றாள்.

ஓர் காட்டன் சுடிதார் அணிந்து துப்பட்டாவை தோளில் போட்டு இருந்தவள் .. கண்கள் குழிந்து கருவளையம் கொண்டு அவள் இருந்த தோற்றம் …. சட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்து விட்டான் அரவிந்த்.

அவனை ஈர்க்கும் அந்தக் கண்கள் இன்று எங்கோ பார்த்திருப்பது போல் … எங்கு என்று யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு சட்டென்று விடை கிடைத்தது.

அது அவன் தாயின் கண்கள் , ஆம் அரவிந்த்திற்கு விவரம் தெரிந்த நாள் முதல் இப்படி குழிந்த .. கருவளையம் போட்டு எதையோ வெறித்துக் கொண்டே இருக்கும் தாயின் கண்களைப் போல் தான் தோன்றியது.

அவரும் எப்போதும் சோகத்தில் உழன்று கொண்டிருப்பார் , இவளும் அப்படித்தானோ , அதுதான் இந்தக் கண்கள் என்னைக் கட்டிப்போட்டுள்ளதோ என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

சிவாவின் “எடுத்துக்கோங்க அரவிந்த் ” என்ற குரலில் இயல்புக்கு வந்தவன் , அவளிடமிருந்து ஜூஸை வாங்கிக் கொண்டு அமர்ந்தான்.

ரமேஷிற்கு அரவிந்தின் நிலைப் புரிந்ததால் அமைதியாக இருந்தான். அதற்குள் அங்கு வந்திருந்த பலரும் இவர்களைத் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

காரணம் என்னவெனில் கோவையின் மிகப் பிரபலமான குடும்பங்களில் அரவிந்த் குடும்பமும் ஒன்று , அவர்களது பல நிறுவனங்களில் அங்கு வந்திருந்த சிலரும் வேலை செய்கின்றனர். எனவே தான் தாங்கள் மதிக்கும் முதலாளி , தங்கள் வீட்டுப் பையனின் நட்பிற்கு மதிப்பளித்து வீடு தேடி வந்திருப்பது கண்டு ஆச்சரியமடைந்து இருந்தனர்.

அமர்ந்து இருந்த அரவிந்திற்கோ சிவாவிடம் ராதிகாவை எப்படி பெண் கேட்பது என்ற யோசனையே ஓடியது. முதலில் ராதிகாவிடம் பேசி சம்மதம் வாங்கி விடுவோமா என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் அவனது மொபைல் ஒலித்தது.

தவிர்க்க முடியாது அழைப்பு பேசிவிட்டு வந்து அடுத்த முடிவு எடுக்கலாம் என்று வெளியே வந்து ஓர் ஓரமாக நின்றுக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தான்.

சிவாவின் குழந்தையை தோளில் போட்டு தூங்க வைத்துக் கொண்டு இருந்த ராதிகாவும் , குழந்தை தூங்கியதால் ராதிகாவின் அறைக்குச் சென்றாள்.அவள் வாசலருகே வரவும் , அங்கே அவள் பெயர் வைத்து விவாதம் நடக்கவும் அப்படியே நின்று விட்டாள்.

இதுவே தான், வெளியே போன் பேசி முடித்ததும் நகரப் போனவன் காதில் அந்த ஜன்னல் வழியே ராதிகா என்ற பெயர் கேட்கவும் அவனும் நின்று விட்டான்.

“ம்மா … எனக்கே ராதிகா கிளம்புறாளேனு வருத்தமா இருக்கு .அவருகிட்ட பேசிப் பார்க்கிறேன் , அவங்க சரினு சொன்னா மேற்கொண்டு பேசலாம்.”

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன் .. இந்த வீடு உன் மாமானாருக்கும் அவர் தங்கச்சிக்கும் சரிபாதினுதான் முதல்ல இருந்து தெரியுமே. இப்ப அவங்களும் இல்லாம போய்ட்டாங்க … பெத்த பிள்ளையா இருந்தா யாரும் எதுவும் சொல்லப் போறது இல்லையே”

“ஷ்… அம்மா நீங்கப் பேசுறது எனக்கு சரியாபடல .. “

” என்ன சரியாப் படல , உனக்கும் பொண்ணு இருக்கு .. யாரோ அப்பன் பேர் தெரியாதவளுக்கு இதெல்லாம் போறதா..”

வெளியில் கேட்டுக் கொண்டு இருந்த அரவிந்திற்கு கோபத்தில் கண்கள் சிவக்க ஆரம்பித்தது என்றால் , ராதிகாவிற்கு அழுகையில் சிவக்க ஆரம்பித்தது .

இருவருமே நகரலாம் என்று எத்தனிக்கையில் அந்த அம்மாவின் அடுத்த வரிகள் இருவரையும் திகைக்க வைத்தது.

“ம்மா , பாவம்மா அந்தப் பொண்ணு அப்படி எல்லாம் பேசாதீங்க”

” என்னமோ நான் மட்டும் தான் இப்படி பேசறதா சொல்ற ,உங்க வீட்டப் பத்தி தெரிஞ்ச எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியும் தானே.. அப்படி இருக்கும் போது யாரு இவள கல்யாணம் கட்டுவாங்க… அவங்க அம்மா போல இவளா யாரையாவது தேடி கட்டுனா தான் உண்டு.

அதுக்குத் தான் சொல்றேன், யாரோ எவரையோ கல்யாணம் கட்டி இந்தச் சொத்துப் பூரா வெளியப்போறதுக்கு பதிலா உங்க அண்ணன் பிரபாகரை கட்டி வச்சிட்டா சொத்து நம்ம கிட்டயே இருக்கும். “

இதற்கு மேல் ஒரு நிமிஷம் கூட பொறுக்க முடியாது என்று தோன்றவும் அரவிந்த் சிவாவைத் தேடிச் சென்றான்.

அதே நேரம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தவள் , கட்டிலில் கிடத்தி விட்டு , ‘ஒரு நிமிஷம் அண்ணி’ என்றவள் வேகமாக வெளியேறி மாடியறைக்குச் சென்றாள்.

அரவிந்த் கூட்டத்தில் யாரோடோப் பேசிக் கொண்டு இருந்த சிவாவை நோக்கிச் செல்லும் போது , தன் பெட்டி பைகள் சிலவற்றை தூக்கிக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டே படியிறங்கியவள், அங்கு அமர்ந்து இருந்த சிவாவின் அப்பாவை நெருங்கி ,பெட்டிகளை கீழே வைத்து விட்டு பையினுள் இருந்து சில காகிதங்களை எடுத்தாள்.

“பெரியப்பா ஒரு நிமிஷம் உள்ள வாரீங்களா, அண்ணா நீங்களும் ” என்றவள், அந்தக் காகிதங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவர்கள் உள்ளே செல்லவும் , அரவிந்த் ரமேஷிடம் கண்ணசைத்து அவனையும் உள்ளே வரச் சொன்னான். அங்கே எல்லோரும் குழுமியதும்,அங்கு வரவேற்பறையில் அவளது் தாய் மாமனும் அவர் மனைவியும் இணைந்து இருந்த புகைப்படத்தின் முன் நின்றாள்.அவர்களை வணங்கி விட்டு , அவளது பெரியப்பாவிடம் திரும்பி ,

” பெரியப்பா .. என்னைப் பெத்தவங்களப் பத்தி தெரியாதுங்க , ஆனா விவரம் தெரிஞ்ச நாளிலருந்து எனக்கு தாயா தகப்பனா இருந்தது இவங்க தாங்க” என்று அவர்களது போட்டோவைக் காட்டினாள்.

“தாய்மாமா தாய்க்கு சமமானவர்னு சொல்லுவாங்க , ஆனா எனக்கு தாயாவே இருந்தாருங்க. என்னைய வளர்க்க ஒத்துக்கிட்டா மட்டும் தான் நான் கல்யாணம் பன்னுவேன்னு சொல்லி , எங்கம்மாவுக்கு நல்ல பிரண்டா இருந்த எங்கத்தைய கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.

எங்க அத்தை அவருக்கும் மேல என்னையப் பார்த்துக்கிட்டாங்க , எனக்காகவே குழந்தை பெத்துக்காமலயே இருந்தாங்களாம்” என்று அவர் நினைவில் அழுதவளை அணைத்துக் கொண்ட ராணியிடம் ,

“அண்ணி அப்படி பட்டவங்களோட வளர்ப்பு தப்பாகாது இல்லையா … “ராணியின் அம்மாவைப் பார்த்துக் கொண்டவள் ,

 “பெரியப்பா , மாமா சம்பாதித்த அத்தனையும் நான் அத்தைக்கு வைத்தியம் பார்க்கத்தான் செலவழிச்சேன். இந்த பேப்பர்ல எல்லாம் அத்தைக்கு உரியது எல்லாம் சிவா அண்ணன் குழந்தைகளுக்கு மட்டும் தான் , எனக்கு எந்த உரிமையும் இல்லனு , இப்ப இல்லை … எப்போ இங்கயிருந்து கிளம்புனும்னு முடிவு பன்னேனுங்களோ … அப்பவே எழுதி வச்சிட்டேனுங்க..” என்று அந்த காகிதங்களை சிவாவின் கைப்பிடித்து வைத்தாள்.

ஏதோ சொல்ல வந்த சிவாவிடம் , “அண்ணா என்னைப்பற்றின கவலை உங்க யாருக்கும் வேண்டாம். என் கிட்ட படிப்பு இருக்கு , அதை வச்சு நான் இந்த உலகத்துல இருந்துருவேன்” என்றவள் திரும்பி ராணியிடம் வந்து

 “அண்ணி , உங்க அண்ணாவுக்கு நல்ல குடும்பத்தில பெண் பார்த்துக் கல்யாணம் பன்னுங்க. என் மேல பரிதாபப்பட்டு எந்த முடிவும் எடுக்காதிங்க “

கேட்டுக் கொண்டு இருந்த அரவிந்த் , தான் கேட்ட விஷயங்கள் அவளுக்கும் தெரிந்ததினால் தான் இப்படி பேசுகிறாள் என்றுப் புரிந்துக் கொண்டான்.

“பெரியப்பா , என்கிட்ட இப்ப இருக்கிறது இந்த கொடைக்கானல் வீட்டு சாவி மட்டும் தான்… அந்த வீட்ட நான் எது செய்யவும் உரிமை இல்லையாம்…(விரக்தி சிரிப்பு சிரித்துக் கொண்டவள் ) அது நான் கல்யாணம் பன்னி எனக்கு பிறக்கிற பிள்ளைங்களுக்காம்…. எனக்காவது …கல்யாணமாவது….”

கார் பொம்மை வைத்து விளையாடிக் கொண்டு இருந்த சிவா மகனைத் தூக்கிக் கொண்டவள் , “குட்டி பையா அத்தைய  மறந்துராதீங்க ” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு இறக்கியவள் , திரும்பி அத்தனை பேரையும் பார்த்து கண்கள் கலங்க கரம் கூப்பி ” நான் கிளம்புறேன்” என்று வெளிவாசலை நோக்கி நடக்க எத்தனித்தாள்.

அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. எல்லோருமே அவளது பேச்சை ஒரு வித மன இறுக்கத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தனர். அவள் கிளம்புகிறேன் என்று நகரப் போக அவளைப் பார்த்த அனைவருமே திகைத்தனர்.

ராதிகாவுமே திகைத்துப் போய் தான் நின்றாள். காரணம் அத்தனை பேர் முன்னிலையில் அரவிந்த் ராதிகாவின் கையைப் பற்றி நிறுத்தி இருந்தான்.

“சார் ” என்று கையை உருவிக் கொள்ள முயற்ச்சித்தவளை அவள் மாமா அத்தை புகைப்படம் முன்பு கைப் பிடித்து அழைத்து வந்தவன். அவள் கையை விடாமலயே அங்கிருந்த அவளது உறவினர்களைப் பார்த்து,

 “உங்கள்ல பாதிப்பேருக்கு என்னைத் தெரிஞ்சு இருக்கலாம் …தெரியாதவங்களுக்கு ….. ” என்று ஆரம்பித்தவன் தங்கள் குடும்ப நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி அவற்றின் உரிமையாளர் என்பதை தெரிவித்தவன் ,

” எங்க ஆபிஸ்ல இரண்டு மாசத்துக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்த ராதிகாவ நான் விரும்ப ஆரம்பிச்சேன் , நான் விரும்பினது அவளுக்குத் தெரியாது. சிவா என் நண்பர் அப்படிங்கிறதால பெண் கேட்க வந்தேன்… ஆனா இங்குள்ள சூழ்நிலை ….” என்றவன் சிவாவைப் பார்த்து,

 “சாரி சீனியர் , இனி அதுக்கெல்லாம் நேரமில்லை … இப்ப இங்க இருக்கிறவங்க சாட்சியா … ” என்றவன் , மறு கையால் அவனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து ரமேஷிடம் இருந்து காலையில் வாங்கியிருந்த அந்த தாலிச் சங்கிலியை எடுத்து , என்ன நடக்கிறது என்று எல்லோரும் உணரும் முன்பே ராதிகாவின் கழுத்தில் அணிவித்தவன் , அங்கு இருந்த குங்குமத்தை எடுத்து , அவள் விழி விரிய அவனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே … அவள் நெற்றியிலும் , வகிட்டிலும் வைத்து விட்டான்.

அந்தக் கண்கள் அவனுக்கு என்ன சொல்லியதோ… ஆனால் அவனின் கண்கள் “உனக்கு நான் இருக்கிறேன்” என்ற செய்தியை சொல்லியது.

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே..

அதை அவள் புரிந்துக் கொண்டாளோ இல்லையோ தெரியவில்லை….

அவனது கை அவளது கையை இறுகப்பற்றி அவளுக்கு உணர்த்த ஆரம்பித்தது.

“உனக்கு என்னைப் பிடிக்குமா இல்லையா தெரியாது .எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ” என்றவன் திரும்பி அவள் பெரியப்பா அருகில் வந்து ,

“அங்கிள் எனக்கு வேற வழித் தெரியல .. அவள தனியா விட என்னால முடியாது .. என்னை மன்னிச்சிடுங்க … என் மனைவிய நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்… எங்கள ஆசிர்வாதம் பன்னுங்க” என்றவன் , குனிந்து அவர் பாதம் தொட்டான் …. ராதிகா அப்படியே நின்று இருந்தாள்.

சுவாசம் போல அருகில் இருந்து

சுகப்பட வைப்பேன்..

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே..

 

           காதல் அழகானதே….