அழகு 22

    ஒரு பெட்டியில் தன் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்ட ராதிகா , மற்றொரு பையில் சில அத்தியாவசிய பொருட்களையும் , தன் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

கதவை தட்டிவிட்டு  குழந்தையுடன் உள்ளே வந்த ராணி ” ராதிகா நான் சொல்றத கேட்கவே மாட்டேனுட்ட … இதுவே உன் கூடப் பிறந்த அண்ணனா இருந்தா கேட்டு இருப்ப தானே”.

அதுவரை சோகம் பூசியிருந்த முகம் குழந்தையைக் கண்டதும் மலர்ந்தது.

குழந்தையை கையில் வாங்கிக் கொண்டவள் ராணியைக் கைப் பிடித்து கட்டிலில் அமர வைத்து விட்டு

 “அண்ணி … நாம கடைசி வரை இதே அன்போட இருக்கனும்னு தான் நான் கிளம்புறேன். எங்க அண்ணிப் போகப்பேறேன், இதோ இருக்கிற கோயம்புத்தூர்க்கு தானே , இந்தக் குட்டிய பார்க்கனும்னு தோணுனா உடனே பஸ் ஏறி வந்துடப் போறேன்.எந்த உறவுமே தள்ளி இருக்கிறவரை தான் அண்ணி நல்லாருக்கும் … எப்பவும் நம்ம அன்பும் பாசமும் நிலைக்கனும் அண்ணி .. அதுதான் … “

குழந்தையைப் பார்த்து “ஏன்டா செல்லம் அத்தை ஊருக்குப் போய்ட்டு வாறேன் … ” என்று முத்தமிட்டுக் கொஞ்சிக் கொண்டு இருந்தாள். குழந்தையின் சிரிப்பில் தன் சோகத்தை பின்னுக்கு தள்ளினாள்.

ராணிக்கும் அவள் சொல்வது சரியாகத் தெரிந்தாலும் மனதில் ஓர் உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது.

         கோவை விமான நிலையத்தில் அதிகாலை மூன்று மணியளவில் ரமேஷ், அரவிந்தின் வருகைக்காக காத்திருந்தான். சரியான நேரத்தில் வந்து இறங்கிய அரவிந்தை காரில் ஏற்றிக் கொண்டு அவர்களது வீடு நோக்கி காரைச் செலுத்தினான்.

“என்னடா .. பிஸ்னஸ்டீல் தான் நல்லபடியா முடிஞ்சிடுச்சே , அப்புறம் ஏன் இந்த யோசனை.”

” ராதிகா”

“அதுதான் நாம பொண்ணு கேட்டு போகப் போறோமே , சீனியர் கிட்ட பேசலாம், நீ வந்ததும் பேசலாம்னு இருந்தேன்.”

“அவ சரினு சொல்லுவாளானு டென்ஷனா இருக்குடா… “

“அதெல்லாம் எப்படியாவது பேசிக்கலாம் கவலைப்படாதே , அன்னைக்கு கோவை ஆபிஸ்ல வேலை வேணும்னு கேட்டு வரவுமே சீனியர் கிட்ட பேசி எப்ப பதினாறாம் நாள்னு கேட்டேன். அந்த டேட்டை சொல்லவும் தான் உன்னை இன்னைக்கு  எப்படியாவது வந்துருனு அவசரமா கிளம்பி வரச் சொன்னேன்.

பேசிக் கொண்டே கோவையின் புறநகரில் அமைந்துள்ள அந்த மிகப் பெரிய பங்களா வளாகத்தினுள் நுழைந்தது அவர்களது கார் .

       அந்த அதிகாலை நேரத்திலும் அண்ணனின் வரவுக்காக அந்த மிகப் பெரிய வரவேற்பறையிலயே காத்துக் கொண்டு இருந்த அனன்யா அரவிந்தனைக் கண்டதும் “அண்ணா” என்று ஓடி வந்தாள்.

“பார்த்து பாப்பா கீழ விழுந்துராதமா” என்று சொல்லிக் கொண்டே தங்கையை தோளோடு அணைத்துக் கொண்டு,

“ஏம்மா காலையில பார்த்துக்கலாம்ல , போய் தூங்குமா”

” உங்கள பார்க்காம தூக்கம் வராது. அதான் அலாரம் வச்சு எழுந்துட்டேன்”

“அம்மாவப் பார்த்துட்டு வந்துடுறேன் ” என்றவன் ,

” இந்த பேக் முழுசும் உனக்குத்தான் மா , நீ ரூமுக்கு எடுத்துட்டுப் போய் பாரு…” என்று அம்மாவின் அறை நோக்கிச் சென்றான்.

அரவிந்த் காட்டிய பெட்டியை நகர்த்திக் கொண்டே மாடிப்படி வரை சென்றவள் , படியில் தூக்க முடியாது மெதுவாக ஏறிக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுதுதான் சமையலறை சென்று தண்ணீர் பாட்டிலோடு வந்துக் கொண்டு இருந்த ரமேஷ், ” தள்ளு நான் எடுத்துட்டு வாறேன்” என்று அதை இலகுவாகத் தூக்கிச் சென்று அனன்யா அறை முன்பு வைத்து விட்டு அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனது செய்கையில் புன்னகை புரிந்து கொண்ட அனன்யா” இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று நாக்கைத் துருத்தி பழிப்பு காட்டவும் , உள்ளே சென்றவன் ஏதோ எடுக்க திரும்பி வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவளது செய்கையைக் கண்டவன் கோபமாக முறைக்க , துருத்திய நாக்கை கடித்துக் கொண்டு அறைக்குள் பெட்டியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள்.

திரும்பி உள்ளே வந்தவன்”ஊசிப் பட்டாசு ‘ஒரு முறைப்புக்கு பயந்து ஓடுறதப் பாரு” என்று சிரித்துக் கொண்டான்.

அன்னையின் அறைக்குச் சென்ற அரவிந்த் , கட்டிலருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து , தூங்கிக் கொண்டு இருந்தவரின் வலது கையை எடுத்து தன் கையுள் வைத்துக் கொண்டவன் , ” ம்மா … நான் வந்துட்டேன். முதல்ல உங்க கிட்ட சாரி கேட்டுக்கிறேன்மா…. ” என்றவன் , சாரி ,சாரி என்று வார்த்தைக்கு வார்த்தை அவர் புறங்கை மீது முத்தம் பதித்தான்.

தொடுகையில் உறக்கம் கலைந்தவர் அவனைப் பார்த்து சிரித்து விட்டு , மறுபடியும் உறங்கி விட்டார்.

அவரது புன்னகையில் அவனுக்கும் புன்னகை பூக்க , அதே அறையில் ஓரமாக ஓர் கட்டிலில் படுத்திருந்த தாயம்மா இவர்களது பேச்சுக் கேட்டு எழுந்து வந்தார்.

” எப்ப கண்ணு வந்தீங்க .. நான் போய் குடிக்க எதாவது கொண்டு வாறேன்”

“தாயம்மா இருங்க இருங்க .. உங்க தூக்கத்தை கெடுத்துட்டேனுங்களா, அம்மாவ பார்க்கனும் போல இருந்துச்சு அதான் நேரம் மறந்து உள்ள வந்துட்டேன்”

” என்ன கண்ணு இப்படி பேசறீங்க , உங்க அம்மாவ பார்க்க நீங்க நேரம் காலம் பார்க்கனுமா , நீங்க இருங்க , நான் வந்துருறேன்” என்றவர் வெளியே சென்று விட்டார்.

மறுபடியும் அம்மாவிடம் திரும்பியவன்” ம்மா நான் ஏன் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேன் தெரியுமா , அப்பா நம்மள விட்டு போய்ட்டாங்கனு தெரிஞ்ச நேரத்துலருந்து நீங்க  பேசறதயே நிறுத்திட்டீங்க … நம்ம பாப்பா பிறந்ததும் தான் பேச ஆரம்பிச்சிங்க , ஆனா இன்னும் நீங்க அந்த நாளுல இருந்து வெளியே வரல… பாவம் தாத்தா உங்கள பழைய மாதிரி ஆக்க எவ்வளவோ முயற்சி பன்னியும் அது முடியாம போச்சு… டாக்டர்ஸ் என்ன காரணம் சொன்னாங்க தெரியுமா.. உங்கம்மா உங்கப்பா மேல உயிரையே வச்சுருந்துருக்காங்க , அவங்களால அவர் இந்த உலகத்துல இல்லங்கிறத ஏத்துக்க முடியல .. எப்ப அவங்க அத உணர்றாங்களோ அப்ப இயல்புக்கு வந்துருவாங்க சொன்னாங்க”

சிறிது நேரம் பேச்சை நிறுத்தியவன்…

” எனக்கு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சப் போ , என்ன பெரிய காதல் பிள்ளைங்கக் கூட மறந்து போற அளவுக்குனு நினைச்சேன். ஆனா இப்போ ….ஒரு ரெண்டு மூணு மாசம் கூட முழுசா முடியல மா .. என் எண்ணம் செயல் எல்லாமே ராதிகாவ சுத்தியே வருது மா , அவகிட்ட முழுசா ரெண்டு வார்த்தைக்கூட நான் சரியா பேசுனது இல்ல … ஆனப் பாருங்களேன் .. அவளுக்கு யாருமில்லமா தனியா தவிக்கிறானு தெரிஞ்சதும் என் வேலைய எவ்வளவு சீக்கிரம் முடியுமோ , அவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டு வந்துட்டேன். கொஞ்ச நாள் பார்க்க , நினைக்க மட்டுமே செய்ற எனக்கே இப்படி இருக்குனா ….எட்டு வருஷம் உயிரும் உணர்வுமா கலந்து இருந்த அப்பாவோட இழப்பு உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும். அதைப் புரிஞ்சிக்காம அம்மா அப்படி இருந்து இருக்கலாம் அப்படி இருந்து இருக்கலாம்னு நினைச்சுட்டேன்…”

கண்கள் கலங்க தன் வலக்கரம் கொண்டு குழந்தையின் தலையை தடவிக் கொடுப்பது போல, தற்போது குழந்தையாகவே தெரியும் தாயின் தலையை தடவிக் கொடுத்தான்.

கையில் சூடான காப்பியுடன் உள்ளே வந்த தாயம்மா “கண்ணு .. ஸ்கூல் லீவு விட்டாச்சா அருக்குட்டி எப்ப வருவாங்கனு  அம்மா கேட்டுட்டே இருந்தாங்கப்பா … இப்ப தான் நிம்மதி”

காபியை அருந்திக் கொண்டே “தாயம்மா நீங்க எப்படியும் சமாளிச்சிருவீங்கனு தெரியுமே… சரிங்க தாயம்மா நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க .. நாங்க நாளைக்கு திருப்பூருக்கு நேரமே கிளம்பிருவோம்.. ” என்றவன் படுக்கச் சென்று விட்டான்.

         விடிய விடிய தூக்கமே இல்லாது புரண்டுக் கொண்டிருந்த ராதிகா அதிகாலையே விழிப்பு வர .. அந்த வீட்டு மாடி பால்கனியில் வந்து நின்று கொண்டு இருந்தாள். குழந்தைகள் சத்தம் கேட்கவும் , கீழே வந்தவள் குழந்தைகளை ராணியிடம் வாங்கிக் கொண்டு திரும்புகையில் வெளியில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

அதிலிருந்து இறங்கியவர்களை யோசனையுடன் பார்த்த ராதிகாவிற்கு அருகில் வந்தவர்கள் , ” நல்லாருக்கியா அம்மணி”

என்று கேட்ட பெண்மணிக்கு தலையாட்டியவளை , அவள் பின்னயே வந்த ராணி தன் பெற்றோர் என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

அன்று அவளது அத்தையின் இறுதி பயணத்தின்போது வந்தவர்கள் தான். ஆனால் ராதிகா இருந்த மனநிலையில் யாரையும் தெரிந்து கொள்ளவில்லை.

அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு , மாடியேறப் போனவளிடம் குழந்தைகளை வாங்கிக் கொண்டார்கள்.

இங்கு வந்ததிலிருந்து அவளுக்கிருந்த ஒரே ஆறுதல் இந்தக் குழந்தைகள் தான். இப்பொழுது விட்டுப் பிரிவது கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனம் என்பதைப் புரிந்துக் கொண்டவள் முன்பு ஓர் இளைஞன் அவளையேப் பார்த்துக் கொண்டு வந்தான்.

“குட் மார்னிங் ” என்று அவளிடம் பேசியவனிடம் அவளும் “குட் மார்னிங் ” என்று விட்டு நகர்ந்து விட்டாள்.

ராதிகாவயே பார்த்துக் கொண்டு நின்ற பிரபாகரை ,

அங்கு வந்த ராணி ” அண்ணா வாங்க” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

நேரம் ஆக ஆக உறவினர் கூட்டம் பெருகிக் கொண்டேப் போனது. ராதிகாவிற்கு யாரையும் தெரியாததால் மாடியிலிருந்த அறையிலயே முடங்கிக் கொண்டாள். நேரம் செல்ல அவளை அழைத்த ராணி கீழே முறை செய்ய அழைத்துச் சென்றாள்.

சில நெருங்கிய உறவுகளைத் தவிர மற்றவர்கள் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.

      மாலை நேரம் நெருங்கும் போது திருப்பூர் அலுவலகத்தில் தங்களது அலுவல்களை முடித்துக் கொண்ட அரவிந்தும் , ரமேஷூம் ராதிகா வீட்டிற்கு வந்தனர். வந்தவர்களை சிவா வரவேற்று அமர வைத்துப் பேசிக் கொண்டு இருந்தான்.