இதற்கு மேல் அங்கு நிற்பது நாகரீகமற்ற செயல் என்பதை அறிந்த ரமேஷும் அனன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ராதிகாவிடம் சொல்லிக் கொள்ளாமலயே வெளியே வந்தனர்.
இருவரும் மெளனமாகவே வெளியேறும் போது தான் ரமேஷுக்கு அரவிந்தின் ஞாபகம் வர, காரினுள் ஏறாமல் தள்ளி நின்று “அரவிந்தா “
“சொல்லுடா”
” கேட்டுட்டு இருந்திருப்பனு நினைக்கிறேன். எதிர்பார்க்கலடா, தட்டிட்டு உள்ளப் போனேன் .. ஏதோ ஒரு செயின… கடவுளே ” என்று தலையிலடித்துக் கொண்டவன் ,
“மச்சான் ஒரு நிமிஷம் டா , அந்தச் செயின் என் காலடில விழவும் கையோட எடுத்துட்டு வந்துட்டேன்… போய்க் கொடுத்துட்டு வந்துடுறேன்” என்று பேசிக் கொண்டே மருத்துவமனையுள் நுழையப் போனவனை தடுத்தது அரவிந்தின் குரல்.
” ரமேஷ் ..ரமேஷ்.. வெய்ட் பன்னு டா , அது என்ன செயின் ..அவ பேசினத தான் நான் கேட்டேனே.. நீ இப்ப திரும்பக் கொடுத்தாலும் அவ வீசி எறியத்தான் போறா… அதை அப்படியே நீ வச்சிரு , நான் இன்னும் இருபது நாள்ல வந்துருவேன் அப்ப பேசிக்கலாம்”
“என்னடா சொல்ற … நீ காதல் அழகு அப்படி இப்படிங்கிற , அந்தப் பொண்ணோ .. காதல் அப்படினு சொன்னாலே எரிமலையா வெடிப்பா போல .. எனக்கு ஒன்னும் புரியலடா”
” ரமேஷ் அவ குடும்ப விவரம் முழுசா தெரியாம நாம எதுவும் பேச முடியாது தான…ஆனால் ….இப்ப சொல்றேன் டா .. இந்த நிமிஷத்துலருந்து அவ என் மனைவி .. , அவ ஆதங்கத்தையும் மனக்குறையையும் போக்க வேண்டியது என் கடமை. இனி நான் பார்த்துக்கிறேன். அனுவுக்கு கல்யாணம் பன்னிட்டு அடுத்து யோசிக்கனும் நினைச்சேன், ஆனா இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல போல ….. “
ஏனோ அனுவின் கல்யாணம் என்றதும் ரமேஷின் பார்வை , காரில் அமர்ந்து தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த அனன்யாவின் மீது சென்றது.
சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டவன் , “சரிடா யோசிச்சு முடிவு பன்னிக்கோ , இங்க நம்ம ஆளுங்கள வச்சு பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாம வேலைய முடிச்சிட்டு வா” என்றவன் காரை நோக்கி வந்தான்.
ராதிகா உள்ளே நடந்துக் கொண்டதை நினைத்து யோசித்துக் கொண்டு இருந்தவள் ரமேஷ் வந்ததையோ காரை எடுத்துக் கொண்டு கோவை நோக்கிக் காரை விட்டதையோ கவனிக்கவில்லை.
சிறிது தூரம் சென்றதும் தான் பாதையைக் கவனித்தவள்” என்னாச்சு ஆபிஸ் போகலயா , கோவை ரோடு வந்தது போல இருக்கு”
அவள் புறம் திரும்பாமலயே “இல்ல போன்ல பேசிட்டேன், இரண்டு நாள் கழிச்சி வந்தா போதும் “
“ஷ் … முதல்லயே சொல்றதுக்கு என்ன… இப்ப எங்கயாவது ஒரு மோட்டல்ல நிறுத்துங்க”
“ஏன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கலாம்.”
“ஐயோ கடவுளே … லூசு லூசு ஒழுங்கா வண்டிய நிறுத்து”
அவள் ‘லூசு’ என்றதில் கடுப்பானவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.
“ஐயோ அத்தான் சாரி சாரி … நம்ம ஆபிஸ் போலாம்னு சொல்லிட்டு , இப்படியே கிளம்பினீங்களா , அதான் டென்ஷன் ஆகிட்டேன்.. எனக்கு எனக்கு … ரெஸ்ட் ரூம் போகனும்” என்று திரும்பி வேறு பக்கம் பார்த்துக் கொண்டே சொல்லவும் , ரமேஷிற்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாயிற்று.
சிறு வயதிலிருந்தே இப்படி அவனிடம் வாய் பேசுபவள் , அவன் கோபமுகம் காட்டினால் பயந்து அமைதியாகி பணிந்து போவாள்.. இன்றும் அப்படியே நடக்கவும் ..
” இவ அண்ணன் இவளுக்கு கல்யாணம் பன்னனும்ங்கிறான்….இவ என்னடானா இன்னும் வளரவே இல்ல”
வண்டியின் வேகத்தைக் குறைத்தவன் , அந்த சாலையோர உணவகத்தில் நிறுத்தினான். வேகமாக காரை விட்டு இறங்கியவள் ரெஸ்ட்ரூமை நோக்கி ஓடியதைக் கண்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
” அணுகுண்டு … எல்லாம் வாய்தான் … மற்றபடி… சாதாரண ஊசிப் பட்டாசு ” என்று சிரித்துக் கொண்டான்.
அதே நேரம் அங்கே ராதிகாவின் செயலையும் ,பேச்சையும் கேட்டு அதிர்ச்சியடைந்த அவள் அத்தை மூச்சு வாங்க பேச ஆரம்பிக்கவும் ,
“அத்தை வேண்டாம் ப்ளீஸ் நான் பிறக்க காரணமானவங்கள பத்தி பேசாதீங்க … எனக்கு வெறுப்பா இருக்கு “
“அப்படி சொல்லாத மா , கீதா புனிதமானவ… அவ ஒருத்தன நம்பி தாலி கட்டிக்கிட்டதும் இல்லாம உன்னையும் வயித்துல சுமந்துருக்கானா அவ அவங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சு இருந்திருப்பா… அதை போய் வீசிட்டியே என் மேல நிஜமாவே பாசம் வச்சிருந்தா தயவு செய்து அதை எடு… ” என்று மூச்சு வாங்கி வாங்கிப் பேசவும் , அவரது அண்ணன் அறையினுள் நுழையவும் சரியாக இருந்தது.
வேகமாக இருக்கையை விட்டு எழுந்தவள் ” பெரியப்பா நான் டாக்டரக் கூட்டிட்டு வாரேன்” என்று வெளியே ஓடினாள்.
தன் தங்கை அருகே வந்து கையைப் பிடித்தவரிடம்
” ண்ணா .. எனக்கு நம்பிக்கை இருக்கு … கீதா கொடுத்தத அவகிட்ட கொடுத்தேன் .. அவ கீழ போட்டுட்டா நீங்க எடுத்து வச்சு அவ கைல ஒப்படைச்சுடுங்கண்ணா,
கீதா அந்ததாலிய மறைச்சே வச்சு இருந்து இருக்கா… ராதிகாவ பெத்து அவங்க மாமா கையில கொடுத்து’ ராதிகா’னு பேர் வச்சு அந்த தாலியயும், இந்தக் கிழிஞ்சு போன போட்டோவும் கொடுத்துட்டு போய்ட்டா… இதைத் தவிர அவங்கப்பா பத்தின விவரம் வேற ஒண்ணும் கிடைக்கலங்கண்ணா… நீங்க .. நீங்க “
அதற்குள் டாக்டரை அழைத்து வரவும் அவர் அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.
தன் காலில் தட்டுப்பட்ட ஓர் கிழிந்த போட்டோவை எடுத்துப் பார்த்தவர் ராதிகாவின் அம்மாவும் அப்பாவும் ஜோடியாக ஒர் கோயில் முன்பு நின்றுக் கொண்டு இருப்பது போல் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது தேய்ந்து போய் சரியாக முகம் தெரியாமல் இருந்தது. தாலியை கீழே கிடக்கிறதா என்றுப் பார்த்தவர் , ராதிகா எடுத்து வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.
ராதிகாவிற்கோ அதைப் பற்றிய சிந்தனையே இல்லை. ஐசியூ வார்ட் முன்பு எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களில் ரமேஷிற்கு அவன் நிறுத்தி வைத்திருந்த ஆட்கள் தெரிவித்த விஷயம் ராதிகாவின் அத்தை காலமானார் என்பதைத் தான்.
உடனே அரவிந்துக்கு தெரிவிக்க நினைத்தவன் .. வேண்டாம் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவன் ஒரு மாலை வாங்கிக் கொண்டு சிவா வீட்டிற்கு சென்றான்.
ராதிகா வைப் பிடித்துக் கொண்டு எல்லோரும் அழ ,அவளோ கண்ணாடிப் பேழையில் கண் மூடியிருந்த அத்தையை தான் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ரமேஷிற்கு அவளது தோற்றம் மனதைப் பிசைய அரவிந்தை உடனே வர சொல்லலாமா என்று நினைத்துக் கொண்டு இருந்தான். பின்னர் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு , சிவாவின் தோளில் கை வைத்து விட்டு கிளம்பிவிட்டான்.
நான்கைந்து நாள் கழித்து கதவைத் தட்டிக் கொண்டு அவன் கேபினுக்குள் வந்த ராதிகாவைக் கண்டு மனம் பாரமானது போல் இருந்தது.
தானும் தாய் தந்தையை இழந்த போது இப்படித்தானே இருந்தோம் என்ற எண்ணமே அவனை ராதிகா மேல் அன்பைக் காட்ட காரணமாகியது.சும்மாவே மெலிந்திருந்தவள் இன்று ரொம்பவும் மெலிவாகத் தெரிந்தாள். கண்கள் கீழ் கருவளையங்கள் அவள் உறக்கமில்லா நிலையைக் காட்டியது.
“நீ ஒரு பத்து நாள் கழிச்சே வேலைக்கு வந்துருக்கலாமே மா”
“பரவால்லங்கண்ணா” என்ற போது அவளது குரல் காற்றாகத்தான் ஒலித்தது.
“அண்ணா .. எனக்கு ஒரு உதவி கிடைக்குமா”
“சொல்லுமா .. என்ன செய்யனும் “
“அண்ணா , எனக்கு உங்க கோயம்புத்தூர் ஆபிஸ்ல வேலை போட்டுத் தர முடியும்ங்கலா , எனக்கு வாராவாராம் காலேஜ் கிளாஸ் அங்க இருக்கும். இங்க இருந்து போய்ட்டு வர கஷ்டம்.”
“அங்க எங்க இருப்பமா”
“இங்க யாருமே இல்லையேணா “
சொல்லும் போதே குரல் கரகரத்து அழுகை வரும் போல் ஆனது.
“அங்க ‘ விமன்ஸ் ஹாஸ்டல் ‘ பார்த்து இருந்துக்குவேன். யாருக்கும் சுமையா இருக்க கூடாதில்லயா.”
“ம்.. நான் ஏற்பாடு பன்றேன் மா”
“ரொம்ப தேங்க்ஸ்ங்கண்ணா… அத்தைக்கு பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும் நான் அங்க சேர்ந்துக்குறேனுங்கண்ணா … உங்க உதவிய மறக்கமாட்டேனுங்க” என்றவள் கிளம்பப் போகவும் , அவளை அமர வைத்து பழச்சாறு அருந்த வைத்தான்.
அவள் கிளம்பிப் போவதையேப் பார்த்துக் கொண்டு இருந்தவன் , இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பது போல் அரவிந்த்ற்கு போன் அடித்து விட்டான்.
இன்றும் அங்கு அதிகாலை நேரத்தில் வந்த போனை எடுத்துக் காதிற்கு கொடுத்த அரவிந்திடம் ரமேஷ் அனைத்து விவரங்களையும் கூற ,
“ஏன்டா …ஏன்டா இப்படி பன்ன … எனக்கு இப்ப அவள விட என் தொழில் ஒன்னும் பெரிசு கிடையாது. எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துருவேன் … இனி யாரையும் நம்புறதா இல்ல”
என்றவன் போனை வைத்துவிட்டான்.
சிறிது நேரம் கழித்து திரும்ப அழைத்தவன்” சாரிடா ஏதோ கோபத்துல பேசிட்டேன்”
ரமேஷோ “போடா …நீ பேசினதுல என்ன தப்பு இருக்கு.. இப்பதான் எனக்கு நிம்மதியான ஃபீல் … சீக்கிரம் வாடா , என் தங்கச்சிய ஹாஸ்டலுக்கு எல்லாம் போக விடாம நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வர வழியப்பாரு “
“கண்டிப்பாடா … காதல் கன்றாவினு சொன்ன அவ வாயாலயே காதல் அழகானதுனு சொல்ல வைப்பேன். அது காதலனா இருந்து இல்ல கணவனா இருந்து புரியவைப்பேன் .. வரேன் மச்சான்…”
ஆம் … சொன்னது போல் விரைவிலேயே வந்தவன் செல்வி. ராதிகாவை … திருமதி. ராதிகா அரவிந்த நாராயணன் ஆக்கிக் கொண்டான்…