அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. கார் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து சாலையையே வெறித்துக் கொண்டு இருந்தாள் ராதிகா .
தூங்கியது போலும் தெரியவில்லை. ஏதோ யோசனையில் இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.திருப்பூர் நகரத்தை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்து வீடு எங்கே என்று கேட்க அவளைப் பார்த்தான். அப்பொழுதும் அவள் அசையவில்லை , வண்டியை ஓரம் கட்டியவன் , ” ராதிகா” என்று அழைத்தான். அப்பொழுதும் அவள் நினைவுகள் இங்கு இல்லை என்றதும் ,மடி மீது கோர்த்திருந்த அவள் கரத்தின் மீது தன் இடக்கரத்தை வைத்து மெதுவாக தட்டினான்.
தொடுகையை உணர்ந்தவள் சட்டென்று கையை இழுக்கவும்” சாரி சாரி .. நான் ரொம்ப நேரம் கூப்பிட்டேன் நீங்க பார்க்கல அதான் … “
“ஓ சாரி சார்” என்றவள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “திருப்பூர் வந்துட்டுங்களா சார். “
” வந்தாச்சு வீடு எங்கன்னு சொன்னா போகலாம்”
“அத்தைக்கு ….அத்தைக்கு ரொம்ப வீசிங் ஆகி ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்களாம். என்னைய அங்கவிட்டுடுங்க” என்று தேம்பிக் கொண்டே சொன்னவளிடம் , மருத்துவமனை பெயரைக் கேட்டு அங்கு அழைத்துச் சென்றான்.
மருத்துவமனையைக் கண்டதும் வேகமாக இறங்கியவள் , அவன் புறம் வந்து கைகளைக் குவித்து “நீங்க செய்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன் சார், ரொம்ப ரொம்ப தேங்ஸ் ” என்றவள் வேகமாக மருத்துவமனைக்குள் புகுந்து விட்டாள்.
உள்ளே வந்தவள் கண்டது , அவசர சிகிச்சைப் பிரிவின் வெளியே இரு குழந்தைகளை ஆளுக்கொருவராக தோளில் போட்டுக் கொண்டு அங்கு போடப்பட்ட இருக்கைகளில் சாய்ந்து அமர்ந்து இருந்த ராணியையும் , பெரியப்பாவையும் தான்.
பெரியப்பாவிடம் சென்று குழந்தை ஆதியை வாங்கித் தோளில் போட்டுக் கொண்டவள் , அவள் அத்தையைப் பற்றிய விவரம் கேட்டறிந்தாள்.
அப்பொழுது அவள் பின்னயே வந்த அரவிந்த் , அவள் அருகே சென்று நிற்கவும் , ஏற்கனவே சிவா சொல்லி இருந்ததாலும் , அவன் அந்த ஊரின் மிகப் பிரபலம் வாய்ந்த இளம் தொழிலதிபன் என்பதாலும் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டவர் அவனிடம் கை கொடுத்து வரவேற்று அவளைப் பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.
அவனும் இலகுவாக கைக் கொடுத்து புன்னகைப் புரிந்தவன்” உங்கப் பொண்ணு விபரம் சொல்லி இருப்பாங்கனு நினைக்கிறேன்.அத்தைக்கு உடம்பு சரியில்ல சொன்னாங்க. இப்ப எப்படி இருக்காங்க.” என்று விபரம் கேட்கவும் ,
“கொஞ்சம் சீரியஸ் தான் சார்”
“அங்கிள் , நான் உங்க பையனோட பிரண்ட் , என்னையப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க .. சார் லாம் வேண்டாம்”
“சாரி அங்கிள் , நான் கிளம்புறேன் , எதுவும் ஹெல்ப் னா சொல்லுங்க”
கிளம்புகையில் ராதிகாவைப் பார்த்து தலையசைத்தான். அவளும் குழந்தையை வைத்துக் கொண்டே ஒரு தலையசைப்பைத் தந்தாள்.
அவனுக்கு அந்த தலையசைப்பே போதுமானதாக இருந்தது. அவள் கையைத் தொட்ட கையினை விரித்துப் பார்த்தவனுக்கு அவள் கைகளின் மென்மை இன்னும் கையில் இருப்பதுப் போலவே உணர்வு.
வீடு வந்தவன் உடனடியாக தன் லாப்டாப்பை எடுத்து அவர்களது திருப்பூர் அலுவலகத்தில் வேலை செய்யும் ராதிகாக்களின் விவரங்களை எடுத்துப் பார்த்தான் கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ராதிகாக்களாவது அதில் இருந்தனர். அதுவும் ஒரே பிரிவில் இரண்டு மூன்றுப் பேர் இருக்கவும் சோர்ந்து தான் போனான் அரவிந்த்.
இவள் எந்த ராதிகா எந்தப் பிரிவில் வேலை செய்கிறாள் என்றுத் தேடிக் கொண்டு இருந்தான். பெயரைத் தவிர எந்த விவரமும் தெரியவில்லை. ரமேஷிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.
இரண்டு நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் தொழிலதிபர்கள் மாநாட்டிற்கு செல்ல வேண்டி இருந்ததால் போய் வந்து விவரம் கேட்டுக் கொள்ளலாம் என்று கிளம்பத் தயாரானான்.
அரவிந்த் வெளிநாடு கிளம்பி போய் ஒரு வாரம் ஆகியிருக்கும் , கோவையிலிருக்கும் அந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் படிப்பிற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு , சிறிது நேரம் அந்தப் பல்கலை கழக வளாகத்தில் இருந்த பூங்கா நிழற்குடையின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து தான் சமர்ப்பித்த சான்றிதழ்களின் நகல்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு இருந்தாள்.அவள் கிளம்ப எத்தனிக்கையில் அவளது துப்பட்டாவை யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றவும் நகர முடியாமல் அங்கேயே அமர்ந்து விட்டாள்.
“அண்ணா..… “
இவள் வயதில் ஒரு பெண் தான் இவள் அமர்ந்திருந்த கல் இருக்கையின் மறுபுறம் வந்து ராதிகாவின் துப்பட்டா நுனியில் அமர்ந்து இருந்து போன் பேசிக் கொண்டு இருந்தாள்.
ராதிகா அவளிடம் சொல்ல முற்படுகையில் “சரிங்கண்ணா நீங்க அங்க நல்லா விடிஞ்சதும் போன் பன்னுங்க, இப்ப தூங்குங்கண்ணா. நான் எல்லாம் கொடுத்து கரெக்டா காலேஜில சேர்ந்துட்டேன்.. ம் உன் பிரண்ட் அந்த சிடுமூஞ்சி கூடதான் வந்துருக்கு “
அவளது “அண்ணா” என்ற அழைப்பும் , அண்ணனிடம் செல்லம் கொஞ்சி சினுங்கலாகப் பேசிய பாணியும் ராதிகாவை கவர அப்படியே அமர்ந்து விட்டாள்.
அவள் பேசி முடித்ததும் “எக்ஸ்கியூஸ் மீ”
“எஸ்” என்று திரும்பியவள் , ராதிகாவைக் கண்டு விழி விரித்தாள்.
ராதிகாவிற்கும் அவளை எங்கோப் பார்த்த உணர்வு. அவள் திரும்பியதும் துப்பட்டாவை எடுத்துக் கொண்டவள் புன்னகையுடன் கிளம்பமுற்பட,
“வெயிட் வெயிட் … ஹாய் நான் அனன்யா , இப்ப எம்.பி.ஏ. ல சேர்ந்து இருக்கேன். உங்கள …. உங்கள எங்கயோ பார்த்தது போல இருக்கு. ” என்றவள் தான் படித்த பள்ளி கல்லூரி பெயர்களைக் கூறி அவள் அங்கெல்லாம் படித்தாளா என்று விசாரித்துக் கொண்டு இருந்தாள்.
ராதிகாவிற்கும் அவளது முகம் பரிட்சையாமானது போல் தான் தெரிந்தது .. ஆனால் அவள் போல் வெளிப்படையாக கேட்டுப் பழக்கமில்லாததால் , அவள் கேட்டதற்கு மட்டும் பதிலளித்தாள் அப்படியே அவர்கள் இருவரது படிப்பு பற்றிப் பேசியவர்கள் , தாங்கள் இருவரும் சம வயதுடையவர்கள் என்பதால் பெயர் சொல்லி அழைத்துப் பேசிக் கொண்டு அந்த வளாகத்தை விட்டு வெளியே வந்து இருந்தனர்.
அனன்யாவிடம் விடை பெற்று ராதிகா பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் துவங்க , அங்கு அந்த விலையுர்ந்த காரின் மீது சாய்ந்து நின்று மொபைலில் ஏதோப் பார்த்துக் கொண்டு இருந்த ரமேஷின் அருகில் வந்ததும் இரு பெண்களுமே நின்றனர்.
அரவம் கேட்கவும் நிமிர்ந்தவன் கண்களில் முதலில் தென்பட்டது அனன்யா தான். அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே திரும்பியவன் ராதிகாவை கண்டதும் முகம் மலர்ந்தான்.
“நீ எங்க மா இங்க”
“இங்க காலேஜ்ல அப்ளிகேஷன் கொடுக்க வந்தேனுங்கண்ணா”
ரமேஷின் முகத்தையேப் பார்த்துக் கொண்டு இருந்த அனன்யாவுக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். அவள் பிறந்திலிருந்து அவனைப் பார்க்கிறாள் யாருடனுமே இப்படி முகம் மலர்ந்து பேசியது இல்லை. ஆண்களிடம் பேசினாலும் பெண்களிடம் அவன் பேசிப் பார்த்ததே இல்லை.
ராதிகாவிடம் ஒர் மென்மையான பேச்சைப் பேசுபவன், அனன்யாவிடம் மருந்துக்கும் புன்னகை புரிந்ததில்லை. முதலில் திகைத்தவள். ராதிகாவின் அண்ணா என்ற அழைப்பில் ஆசுவாசம் கொண்டாள்.
“பரவால்லயே இந்த சிடுமூஞ்சிய அண்ணானு கூப்பிடுற அளவுக்கு ஆளு இருக்கே .. ” மனதில் நினைத்து புன்னகைப் புரிந்து கொண்டவள் , ராதிகாவிடம் திரும்பி ,
” இவங்கள உனக்குத் தெரியுமா” என்றாள்.
“தெரியும் அனு , இவங்க ஆபிஸ்ல தான் நான் வேலை பார்க்கிறேன்” என்று ஆரம்பித்து அவள் வேலைக்கு வந்த விவரம் தெரிவித்துக் கொண்டு இருந்தாள். இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அரவிந்திடம் இருந்து ரமேஷிற்கு அழைப்பு வர , அவன் சிறிது தூரம் தள்ளி நின்று ,
“மச்சான் உன் பாசமலர் எழுப்பி விட்டாச்சு அப்படித்தானே….” என்று பேச ஆரம்பித்தான்.
அனன்யாவிடம் பேசிக் கொண்டு இருந்தவள் நேரமானதால் கிளம்பவும் , ரமேஷிடம் வந்து “அண்ணா நான் கிளம்புறேனுங்க” என்று தலையசைத்தவளை நிறுத்தி “ஒரு நிமிஷம்மா , அத்தைக்கு உடம்பு பரவால்லயா”
“இல்லைங்கண்ணா இன்னும் முடியாம தான் இருக்கிறாங்க. ” என்று விவரம் கூறியவள் அவனிடம் விடை பெற்றுக் கிளம்பி விட்டாள்.
திரும்ப போனைக் காதில் வைத்த ரமேஷிடம் , முதலில் தூக்க கலக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த அரவிந்த் இப்பொழுது உற்சாகமாக “டேய் மச்சான் ,நீ ராதிகா கூடவா பேசிட்டு இருந்த “
அவனது கேள்வியில் அசந்து விட்ட ரமேஷ் “மச்சான் , எப்படிடா அன்னைக்கு ஒரு நாள் தான ராதிகா கூடப் பேசியிருப்ப , எப்படிடா இவ்வளவு கரெக்ட்டா கண்டுபிடிச்ச “
” ரமேஷ்… ரமேஷ் “
“சொல்லுடா”
” ரமேஷ் “
“சொல்லுடா”
” ரமேஷ்.. நான் ….எனக்கு …”
“மச்சி ஒரு நிமிஷம ‘ வீடியோ கால்’ வா”
“ஏன்டா”
“ம் நீ விடுற ஜொள்ளப் பார்க்கத்தான் “
“ப்ச்…. போடா”
“பின்ன என்னடா என் பெயரை ஏலம் விட்டுட்டு இருக்க … ஒழுங்கா விஷயத்தை சொல்லு”
சிறிது நேரம் மெளனமாக இருந்தவன் பின் ” என்னவோ தெரியலடா … எந்தப் பொண்ணுகிட்டயும் வராத ஓர் உணர்வு இவளப் பார்த்த நேரத்துலருந்து இருக்குடா … ஏதோ படபடனு … அவளைப் பார்த்துக்கிட்டே, பேசிக்கிட்டே இருக்கனும் போல … “புன்னகைத்துக் கொண்டவன்” ஐ ம் ஃபால் இன் லவ் … ஆமாடா நான் காதல்ல விழுந்துட்டேன். எனக்கு ராதிகாவ ரொம்ப பிடிச்சு இருக்கு … ஏதோ ஒரு வெறுமை எப்பவும் மனசுல இருக்கும் ,இப்ப அப்படி இல்லடா … அவள நினைச்சாலே அப்படி ஒரு சந்தோஷம் வருது…. காதல் வந்தா எல்லாம் அழகா தோணுமாம். எனக்கும் அப்படி தான் இருக்கு ….. காதல் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகானது டா….. “
ராதிகாவை நினைத்து உருகி உருகி தன் உணர்வுகளை ரமேஷிடம் அரவிந்த் கொட்டிக் கொண்டு இருக்க …
ராதிகாவும் “அரவிந்த் சார் தங்கச்சியா இருக்கிறதால தான் எனக்கும் அனுவ எங்கயோ பார்த்தது போல இருக்குப் போல ” என்று அரவிந்தை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.