ஸ்டியரிங்கில் இருந்து தலையை எடுத்து அருகில் பார்க்க , பேருந்து கிளம்பிச் சென்று கொண்டு இருந்தது. அவள் ஏறியிருப்பாள் என்று காரை ஸ்டார்ட் செய்தவன் கண்டது சென்றப் பேருந்தின் பின்னோடு “ஸ்டாப் ஸ்டாப் ” என்று ஓடிக் கொண்டு இருந்த ராதிகாவைத் தான். நிச்சியம் அவள் சத்தம் யாருக்கும் கேட்டிருக்காதுதான். ஓடிச் சென்றவள் களைத்து மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்று விட்டாள். அதற்கு மேல் இருட்டில் செல்வது சாத்தியமில்லை.
அரவிந்த் அவள் ஓடும் போதே காரிலிருந்து இறங்கி அவள் பின் செல்ல இருக்கும் போது , ராதிகாவும் நின்று மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தாள். அவனும் நின்று போய் உதவலாம் என்று நினைக்கும் போதே , அவள் வேகமாக அவனை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாள்.
அந்த இருட்டில் அவனை அடையாளம் காண்பதும் சாத்தியமில்லைதான்.
இவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவனைக் கடந்து ஓடியவள் , அங்கு நின்று டீ குடித்துக் கொண்டு இருந்த இன்னொரு அரசுப் பேருந்தின் நடத்துனரிடம் ஏதோக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.
தன் காரின் அருகே வந்து அதில் சாய்ந்துக் கொண்டு கைகளைக் கட்டி நின்றவன், அவள் என்ன தான் செய்கிறாள் என்றுப் பார்த்தான். அவனுக்கு அவ்வளவு ஆச்சிரியம் , தனியாக வந்து இருக்கிறாள் என்றுத் தெரிகிறது. பேருந்தை தவற விட்டு விட்டாள் , நிச்சியம் அவள் உடமைகளும் அதில் போயிருக்கும் , ஆனால் அவள் கண்ணில் பயமோ அழுகையோ இல்லை மாறாக அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை தான் ஓடியது. அந்த தைரியத்தை ரசித்துக் கொண்டு இருந்த அரவிந்த் , அடுத்து அவள் என்ன தான் செய்கிறாள் என்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ராதிகா அப்பொழுதுதான் அந்தக் கடைக்காரரிடமிருந்து ஒரு பழைய போன் வாங்கி யாருக்கோ அழைப்பு விடுத்து அது எடுக்கப்படவில்லை என்றதும் .. அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தன.
இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தோன்றியதும் அவள் அருகே செல்ல நினைக்கையில் சட்டென்று கீழே அமர்ந்தவள் , தன் காலில் அணிந்திருந்த மெல்லியக் கொலுசைக் கழற்றி அதனை அந்தக் கடைக்காரரிடம் கொடுத்து ஏதோ பேசி அவரிடம் இருந்து ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுவிட்டு அந்த மற்றொரு பேருந்தின் நடத்துனரிடம் பேசிவிட்டு சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அன்று தன்னிடம் ‘சாரி ‘ , ‘தேங்க்ஸ்’ என்று சொல்லும் போது இருந்த குழந்தைத்தனம் எங்கே , இன்று இங்கு இப்படி ஓர் இக்கட்டான நிலையிலும் சோர்ந்து அழுது ஆர்பாட்டம் செய்யாது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து தீர்வு காணும் இந்த தைரியம் …. வாவ்….அரவிந்த்க்கு விசிலடித்து கைதட்ட வேண்டும் போல் ஓர் ஆவல் பொங்கியது.
தன் அன்னை இப்படி இருந்திருக்க வேண்டும் , என்று நினைத்தவன் தானே.. அதற்காகவே தங்கைக்கு இப்பொழுதே எல்லாம் கற்றுத் தர வேண்டும் என்று அதற்கான முயற்சிகள் எல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறான்.
அதனாலயே ராதிகாவின் அனைத்து செயல்களும் அவனை அதிகம் ஈர்த்துக் கொண்டு இருந்தது.
சாலையில் எதிர்வரும் வாகனங்களை பார்த்துக் கொண்டு இருந்தவள் முன்பு ஒரு சுமோ வந்து நிற்கவும் , சற்றுப் பின் நகர்ந்தாள். ஆனால் அதற்குள் அதிலிருந்த இருந்த இருவர் இறங்கி ஏதோ பேசப் போகவும் முன்றத்துக் கொண்டே பின்னால் நகர அரவிந்தின் மேல் இடித்துக் கொண்டாள்.
பயந்து விலகியவள் கையைப் பிடித்துக் கொண்ட அரவிந்த் , அவர்களை கோபப் பார்வைப் பார்த்துக் கொண்டே ராதிகாவிடம் “ஸ்வீட்டி இங்க என்ன செய்ற வா என் கூட ” என்று அவள் கைப் பிடித்து கார் அருகே அழைத்துச் சென்றான்.
முதலில் திகைத்துப் பின் அவன் முகம் பார்த்தவள் கண்களும் முகமும் சேர்ந்து ஒளிர்ந்தன. அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அந்த முகம் மலர்ந்த விதம் கண்டு அத்தனை சந்தோஷம்.
“சார் ” என்றவள் குரல் தேய்ந்து கண்ணிலிருந்து நீர் கொட்ட ஆரம்பிக்க அதைத் துப்பட்டாக் கொண்டு துடைத்துக் கொண்டே “சார் … ரொம்ப … ரொம்ப தேங்ஸ் சார். கிளம்பிக் கொண்டு இருந்த சுமோவைக் காண்பித்து “அவங்க அவங்க ரொம்ப மோசமா பேசினாங்க சார் ” என்றவளிடம்
அவள் முகம் அவனைக் கண்டு மலர்ந்த விதத்தில் மகிழ்ந்தவன் , அவள் அழுகையைக் கண்டு கலங்கி விட்டான்.
“ஒரு பொண்ணு இந்நேரத்துல இங்க சுதந்திரமா நிக்கிற அளவுக்கு நம்ம நாடு இன்னும் முன்னேறல .. அதுதான் நான் வந்துட்டேனே அழாதிங்க ” என்றவன் தெரியாதது போல் ,
“ஓகே இங்க என்ன இந்த நேரத்துல
தனியா… ” என்றான்.
பொங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டே விவரம் சொன்னவள், “சார் அந்த பேக்ல பணம் எல்லாம் நிறைய இல்ல சார். என் சர்டிபிகேட் எல்லாம் அதுலதான் இருக்கு. எம்.பி.ஏ அப்ளை பன்றதுக்காக வீட்ல இருந்த எல்லா சர்டிபிகேட்யும் ஜெராக்ஸ் எடுக்க கொண்டு வந்தேன். தொலைஞ்சா மறுபடி வாங்க லேட் ஆகும்… அப்புறம் என் படிப்பு .. என் வாழ்க்கையே அது தான் சார்” என்று துப்பட்டாவைக் கொண்டு கண்ணீரை துடைத்து துடைத்துப் பேசினாள்.
அவள் கைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தோன்றியதை அடக்கிக் கொண்டு “நோ பிராப்ளம் கிடைச்சிடும் .. யாராவது பார்த்தா எடுத்து தந்துருவாங்க.திருப்பூர் போனா கிடைக்கும் “
“அது தான் சார் வழில வர்ற வேற பஸ் க்கு வெயிட் பன்னேன். அதுக்குள்ள அந்த சுமோல வந்தவங்க … ” என்றவள் ..
“சார் சார் ஒரே ஒரு ஹெல்ப் ப்ளீஸ் “
“ஐயோ ஸ்வீட்டி எனக்கு செய்ங்கனு உரிமையோட நீ சொல்லாம் ” என்று நினைத்தவன்.
“சொல்லுங்க என்ன செய்யனும் “
“ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பன்ன முடியுமா .. நான் வேற பஸ் வந்ததும் ஏறிடுவேன். அதுவரை மட்டும் தான் ….”
அவளைப் பார்த்தவன் தன் மொபைலை எடுத்து ‘ வாட்சப் பேஸ்கட் பால்’ குரூப்பை எடுத்து அதில் சிவாவின் எண்ணைத் தேடி எடுத்தவன்” பாஸ் நான் அர்விந்த் பேசுறேன்”
“சொல்லுங்க அர்விந்த் ” என்று குரல் தேய்ந்து ஒலித்தது.
“பாஸ் உங்க சிஸ்டர் ….” என்று ஆரம்பித்தவன் விவரம் கூறிவிட்டு “நீங்க ஓகே சொன்னா அவங்கள நான் வீட்ல கொண்டு போய் விட்டுருறேன். இதுக்கு மேல பஸ் பிடிச்சி வீடு போறதுங்கிறது.…. “
” அர்விந்த் தேங்க்யூ தேங் யூ வெரி மச், இப்ப வீட்ல இருந்துதான் போன் பன்னாங்க. நேரம் ஆகுது, இன்னும் தங்கச்சி போன் எடுக்கலனு .. கொஞ்சம் அவகிட்ட கொடுங்க நான் பேசுறேன்” என்றவன் குரலில் அவ்வளவு சந்தோஷம்.
அரவிந்தையே பார்த்துக் கொண்டு இருந்த ராதிகா அவன் போனை தரவும் காதில் வைத்தாள். அங்கு அவன் என்ன சொன்னானோ “சரிங்கண்ணா, சரிங்கண்ணா” என்று தலையை ஆட்டிக் கொண்டு இருந்தவளை ரசித்தவனிடம் போனைத் திருப்பித் தந்தாள்.
வாங்கியவன் சிவாவிடம் பேசிவிட்டு மறுபுறம் வந்து கார் கதவைத் திறந்து விட்டான். அவளும் ஒன்றும் பேசவில்லை எறி அமர்ந்து கொண்டாள்.
மறுபுறம் புன்னகையோடு ஏறியவனுக்கு மனதில் அத்தனை உற்சாகம் ,தான் விரும்பும் பெண்ணை அருகமர்த்தி கார் ஓட்டுவது அவனுக்கு உற்சாகத்தை அளித்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாது ஓட்டிக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் சாலையைப் பார்ப்பதும் ,இவனைத் திரும்பிப் பார்ப்பதுமாக இருந்தவளை கவனித்தவன் , சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு ” எதுவும் சொல்லனுமா மிஸ் ….” என்று அவள் பெயரைத் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் நிறுத்தினான்.
” ராதிகா… அது தான் சார் என் பெயர் “
“ஓ சாரி .. சீனியர் சிஸ்டர்ங்கிறது மட்டும் தெரியும். பெயர் எனக்குத் தெரியல “
மனதினுள் ” ராதிகா… அழகான பெயர் …. எனக்கு ரதிதான் நீ “
“இதுக்கு ஏங்க ப்ளீஸ் , இந்தாங்க ” என்று போனை எடுத்துக் கொடுத்து விட்டு காரை எடுக்கப் போனான்.
“சார் சார் ஒரு நிமிஷம் “
அவள் ‘சார் சார்’ என்பது அவனுக்கு கடுப்பைக் கிளப்ப , அவளை என்ன என்பது போல் பார்த்தான்.
“கோவிச்சுக்காதிங்க சார் எனக்கு டச் போன் எப்படியுஸ் பன்னனு தெரியாது .இப்பக்கூட அந்த டீக்கடைக்காரர் கிட்ட பட்டன் போன் தான் வாங்கி பேசினேன் .. அதுதான் ….எனக்கு போனே இப்ப ஒரு ஆறு மாசமா தான் பழக்கம் , அதுவும் என் மாமாவோட பழைய பட்டன் டைப் போன் தான் “
“சார்” வார்த்தைய கண்டுபிடிச்சவன் என் கைல கிடைச்சான்… என்றுப் பல்லைக் கடித்தவன் ,
“ரொம்ப சிம்பிள் ” என்றவன் அவளுக்கு அதனை செயல்படுத்தும் முறையை சொல்லிவிட்டு அவன் காரை எடுக்க ஆரம்பித்தான்’
அவன் சொல்லித் தந்தது போல் செய்து தன் அத்தையின் போனுக்கு அடித்தவள் .. அங்கு சொல்லப்பட்ட விஷயத்தில் அதிர்ச்சியானாள் , ஆயினும் அதைக் காட்டிக் கொள்ளாது “இதோ வந்துட்டே இருக்கேன் பெரியப்பா ” என்று கண்களை துடைத்துவிட்டு, அவள் எண்ணிற்கு டயல் செய்தாள். கிட்டதட்ட ஒரு பத்து முறைக்கு அப்புறம் எடுக்கப்பட்ட அவள் போனில் , அந்த பேருந்தின் நடத்துனர் தான் பேசினார். இரவில் பேருந்து நிலைய அலுவலகத்தில் தரப்பட்டு விடும் , காலையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டது.
போனைத் திருப்பி அவனிடம் தந்தவள் “ரொம்ப தேங்ஸ் சார், கேட்டீங்களா தெரியல.. என் சர்டிபிகேட்ஸ் கிடைச்சிருச்சு காலையில பஸ் டிப்போல வந்து வாங்கிக்க சொன்னாங்க.” என்றவள் அமைதியாக திரும்பிக் கொண்டாள்.
ஏதோ கேட்கப் போகவும் அரவிந்தின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. ரமேஷ் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.
ப்ளூடூத்தை ஆன் செய்தவனிடம் “மச்சான் என்னடா ..நீ ஒட்டுறவேகத்துக்கு இன்னேரம் திருப்பூர் வந்திருக்கனுமே , இன்னும் டிரைவிங்ல இருக்கிறப் போல இருக்கு.”
“ஆமா மச்சான்” என்று ஆரம்பித்து விவரம் சொன்னவன் அவள் அருகில் இருப்பதையும் தெரிவித்து விட்டு , ராதிகாவிடம் ரமேஷ் உங்க கிட்ட பேசணுமாம் என்று போனைத் தந்தான்.
வாங்கியவள் ” சொல்லுங்கண்ணா, என்று ஆரம்பித்து பேசவும் , ” ரமேஷ் அண்ணனா சரிதான் … ஆனா தாயே என்னையும் அப்படி சொல்லி ராத , நான் ‘சார்’ ஆவே இருந்துட்டுப் போறேன்.
பேசி முடித்து போனை வாங்கியவனிடம் “மச்சான் நான் கேக்கிறதுக்கு ஆமா இல்லனு மட்டும் பதில் சொல்லு”
“ம்” என்றவனிடம் ,
“முதன் முதலா ஒரு பொண்ணுகிட்ட நீயா பேசியிருக்க… எதுவும் ஸ்பெஷல்… “
சிறிது நேரம் அமைதி , பதிலே இல்லை என்றதும் ரமேஷே , ” நீ அமைதியா இருக்கிறதப் பார்த்தா நான் சொல்றது சரி போல தோணுது. அப்படித்தானா”
“ம் …. ஆமா , இன்னும் கொஞ்ச நேரத்துல ரீச் ஆகிடுவோம். அப்புறம் பேசுறேன்” என்றவன் போனை கட் செய்து விட்டான்.