தன் இரு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்து கண்களை மூடி,

“ஓ காட் இவ கண்ல பேசி மயக்குறானுப் பார்த்தா , இப்படி அழகா சிரிச்சு கண்ல மட்டும் இல்ல உதட்டுலயும் முத்தம் கொடுங்கிற மாதிரி பேசிட்டு போறா”

அவள் அருகாமையும் பேச்சும் தந்த கலவையான உணர்வுகளால் இதயம் வேகமாக துடிப்பது போல் தோன்றவும் தன் இதயத்தில் வலக்கையை வைத்தவன் , முகத்தில் புன்னகை அரும்பியது ,

“அவ…. ஆமா என்ன அவ அவ… அவ பேர் கூடத் தெரியல , இதுல யாரோ ஒரு விமலாக்காவுக்கு நான் ஹெல்ப் பன்னதுக்கு தேங்ஸ்ஸாம்” வாய் விட்டு சிரித்தவன் ,

“ஒரு பெண் என்னை இவ்வளவு ஈர்க்கிறாளா , நான் நானாவே , எனக்காகவே சிரிச்சது இன்னைக்கு தான் …. இவ்வளவு ஸ்வீட்டா இருக்குமா ஒரு பெண்ணை ரசிக்கிற ஃபீலிங்ஸ் , இந்த உணர்வுக்கு பேர் தான் காதலா … பார்த்த ரெண்டே தடவைல காதல் வருமா …ம் “

தலையை உலுக்கிக் கொண்டவன் “முதல்ல உன்பேர்க்கண்டு பிடிக்கனுமே ஸ்வீட்டி… ” என்றவன் உடனே மொபைலை எடுத்து ரமேஷ் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

” என்ன மச்சான் “

அவன் போன் எடுக்கவும் “ஐயோ இவன்கிட்ட எப்படி கேக்கிறது.. “

“ஒன்னுமில்லடா கொஞ்சம் பிஸியா இருந்தேன் .அதான் கிளம்பிட்டியானு கேட்க தான் போன் பன்னேன்”

“மச்சான் தலையில ஏதும் அடிபட்டு இருக்கா”

“டேய் ” என்று பல்லைக் கடித்தவனிடம்

” பின்ன என்னடா , என்னைக்கும் இல்லாத புது வழக்கமா பிஸியா இருக்கேன் , நீ கிளம்பிட்டியானு கேட்கிற ..இந்த அஞ்சு வருஷமா நாம ஓடுற ஓட்டத்துல இந்த வழக்கமெல்லாம் இல்லையே”

“ஏதோ கேட்கனும்னு தோணிச்சு கேட்டுட்டேன். இதுக்கு ஏன்டா இந்த வரத்து வார … நான் வைக்கிறேன்.” என்றவன் போனை வைத்து விட்டான்.

அதன் பிறகு வேலைகள் அவனை இழுத்துக் கொண்டது. அலுவலகம் உள்ளே வரும்போது அவள் இருக்கிறாளா என்றுப் பார்க்கத்தான் செய்கிறான். ஆனால் அதன் பிறகு அவள் கண்ணிலே படவே இல்லை. அவள் எந்த பிரிவில் வேலை செய்கிறாள் என்பதையும் அறிய ஆவல் கொண்டாலும் அவனுக்கு நேரமில்லை .தன் குடும்பத்தார் அனைவரையும் இழக்கும் போது , தாத்தா ஒருவரால் பார்த்துக் கொள்ள முடியாமல் கை விட்டுப் போன சொத்துக்களை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தான்.

 ராதிகாவின் இறுதித் தேர்வு ரிசல்ட் வந்து விட்டதால் அவளது சான்றிதழ்களை வாங்கப் போக வேண்டியிருந்தது. எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் எம்.பி.ஏ படிப்பிற்கு அதிக செலவில்லாமல் படிக்கலாம் என்று சந்தோஷம் கொண்டாள்.

சிவாவை அவனது அலுவலகத்தி லிருந்து மும்பை அனுப்பி இருந்ததால் , வீட்டில் ராதிகாவின் அத்தையையும் ,ராணி மற்றும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தால் அவளது பெரியப்பாவாலும் கொடைக்கானல் வர இயலாத நிலை .

எனவே அதிகாலையில் கிளம்பி போய் விட்டு இரவிற்குள் திரும்புவதாக வீட்டினரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். வார நாட்களில் தான் கல்லூரி திறந்து இருக்கும் என்பதால் திங்கள் கிழமை விடுமுறை பெற்றுக் கொண்டு அதிகாலை பேருந்தில் ஏறி கொடைக்கானல் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தாள் ராதிகா .

அதே நேரம் கொடைக்கானலுக்கு இரு நாட்கள் முன்பே வந்து , அங்கு கை விட்டுப் போன தங்கள் தேயிலை தொழிற்சாலை மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தங்கள் தாத்தாவிற்கு சொந்தமான பங்களா மற்றும் தோட்டங்களை மறுபடியும் மீட்டுக் கொண்ட மகிழ்ச்சியில் அந்த அழகான அரண்மனை போன்ற பங்களாவில் பழமையும் நவீனமும் கலந்து தற்போது மாற்றியமைக்கப்பட்ட படுக்கை அறையில் சுகமான துயில் கொண்டு இருந்தான் அரவிந்த் நாராயணன்.

அவனது அலைபேசி அலறி அவனது துயிலைக் கலைக்கவும் , தூக்க கலக்கத்தோடே மொபைலை ஆன் செய்தான். மறுமுனையில் ரமேஷ் தான் பேசினான்.

“சொல்லு மாப்ள “

“மச்சான் போன வேலைலாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல சீக்கிரம் கிளம்பி வாடா. திங்கள்கிழமை ஆபிஸ் போனும்னு நினைச்சாலே பயமாயிருக்குடா, கேபின் குள்ள போன அடுத்த செகன்ட் உன் செல்ல பாப்பா ஆஜராகிடுறா டா .திருப்பூர் முழுசும் நானே பார்த்துக்கிறேன். கோயம்புத்தூர்ல இருந்து விடுதலைக் கொடுடா”

“என் தங்கச்சிய சமாளிக்க உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா .. இரு நான் வந்துப் பேசிக்கிறேன்.” என்றவன் உடனே தங்கைக்கு அழைத்தான்.

அங்கே போன் எடுத்த அவனின் தங்கை அனன்யா” என்னங்கண்ணா காலையிலயே போன், உன் பிரண்ட் என்னைய கம்ப்ளைன்ட் பன்னிட்டாங்களோ “

” அனுமா பாவம் மா அவன் , கொஞ்சம் பார்த்து செய் மா…. உன்னையக் கண்டாலே அரண்டுப் போய் நிக்கிறான். “

” ண்ணா… ” என்று அண்ணனிடம் கொஞ்சியவள், “நீங்க வாங்க அப்புறம் பேசிக்குவோம்.. அப்புறம் அண்ணா காலேஜ்க்கு அப்ளை பன்னனும் எல்லாம் சர்டிபிகேட்ஸ் யும் சரியா வச்சு இருக்கேன்”

“நான் வந்துருவேன் மா” என்றவன் எழுந்து சில வேலைகளை முடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமானான்.

எப்பொழுதும் பார்மல் உடையில் இருப்பவன் , ஜீன்ஸ் , டீ ஷர்ட் , அதன் மேல் கொடைக்கானல் குளிருக்கு இதமாக ஜெர்கின் அணிந்து கிளம்பினான்.

ராதிகாவும் பத்து மணிபோல் வந்து இறங்கி நேரே கல்லூரிக்கு வந்தாள். கைப்பையில் தண்ணீர் பாட்டிலும் பிஸ்கட்டும் வைத்திருந்தவள் , முகம் கழுவி பிஸ்கட் சாப்பிட்டு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு சான்றிதழ்களை எல்லாம் பெற்றுக் கொண்டு கிளம்புகையில் அவளது தோழியர் பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் அனைவரும் கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருப்பவர்கள் .. இவளும் அங்கே தான் என்ற நினைப்பில் பூங்காவிற்குச் சென்று விட்டு வீட்டிற்குப் போகலாம் என்று விட்டனர்.

ராதிகாவும் இனி அவர்களைச் சந்திப்பது அரிது என்பதாலும் , பூங்கா அருகில்தான் பேருந்து நிலையம் என்பதாலும் கூடச் சென்றாள்.

அவர்களுடன் சிறிது நேரம் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவள் மாலை நெருங்கவும் அவர்களிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையம் வந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி விட்டு ,  தான் கிளம்பி விட்டதாக அத்தைக்கு தகவல் சொன்னாள்.

குளிருக்கு துப்பட்டாவை தன் தலையைச் சுற்றிப் போட்டுக் காதுகளை மறைத்துக் கொண்டவள். ஜன்னல் கண்ணாடியை தள்ளி விட்டு வெளியேப் பார்க்கலானாள்.

அரவிந்தும் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டவன் காரில் ஏறி அந்த பங்களாவின் வெளிக் கதவு அருகே வருகையில் ஒரு பேருந்து வரவும் .. அங்கேயே நின்று பேருந்து செல்வதற்காக காத்திருந்தான்.

யதேச்சையாக பேருந்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்களில், முன்புறம் இருந்த இருக்கையில் தலை சாய்த்து அந்த பங்களாவையே வைத்தக் கண் வாங்காதுப் பார்த்துக் கொண்டு இருந்த ராதிகா கண்களில் பட்டாள்.

அந்தக் கண்களை மறக்க  முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தவனுக்கு கண்களின் தரிசனம் கிட்டவும் , காரிலிருந்து இறங்கி அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

“ஸ்வீட்டி இங்க கொடைக்கானல்லயா” என்று அவன் அகமகிழ்ந்துப் பார்க்க , அவளோ கீழே ஒருவன் நின்றுக் கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்ற எண்ணமே இல்லாது , அந்த பங்களாவை மட்டுமே பார்த்துக் கொண்டு சென்றாள்.

அவளை சந்தித்த நேரங்களில் எல்லாம் அவள் கண்கள் காட்டிய பயம், மகிழ்ச்சி ,திருப்தி, நன்றி , கோபம் போன்ற அத்தனையும் உணர்ந்தவன். இன்று அந்தக் கண்களில் வெறுமையை உணர்ந்தான்.

“என்னாச்சு , ஏன் இப்படிப் போறா” என்று யோசித்தவன் , “அவள் உணர்வுகள் என்னுள்ளும் பிரதிபலிக்கிறதா … இப்படி பார்வையை வச்சே நான் அவள் உணர்வுகளை படிக்கிறேனா , அப்ப இது தான் காதல் …பெயர்க்கூடத் தெரியாம வர்ற இந்தக் காதல்…”கார் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டவன் …. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ஸ்வீட்டி ..” புன்னகைப் புரிந்துக் கொண்ட அரவிந்த் அவள் பேருந்தைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.

அந்தப் பேருந்தின் பின்புறம் திருப்பூர் என்றே எழுதி இருந்ததால் , அரவிந்த் அதனைப் பின் தொடர்ந்தான்.மலையை விட்டுக் கீழ் இறங்கியப் பேருந்து ஊர்களுக்குள்ளே நின்று நின்று சென்றது.

எப்பொழுதுமே ஊட்டிமலை, கொடைக்கானல் மலையை விட்டுக் கீழிறங்கியதுமே, வேகமெடுத்து செல்லும் அவனின் விலையுர்ந்த வெளிநாட்டுக் கார் ராதிகாவிற்காக மெதுவாக ஊர்ந்து சென்றுக் கொண்டு இருந்தது.

திருப்பூரை அடைய இரண்டு மணி நேரங்கள் இருக்கும் போது ஊரை விட்டுத் தள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஓர் உணவகம் முன்பு பேருந்து நின்றது. நேரம் இரவு எட்டரை என்பதால் அதிலிருந்து இறங்கிய அனைவரும் உணவகம் நோக்கியும் , கழிவறை நோக்கியும் சென்றுக் கொண்டு இருந்தனர்.

அரவிந்தனும் தன் காரை பேருந்து அருகே நிறுத்தி ராதிகாவைப் பார்க்க , அவளோ கண்கள் மூடி பேருந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்து இருந்தாள்.

நடத்துனர் வந்து ஜன்னலைத் தட்டி பத்து நிமிடம் தான் நிற்கும் என்றதும் , வேகமாக கண்ணைத் திறந்தவள், தான் போட்டு இருந்த ஸ்வெட்டரைக் கழற்றி தன் கைப்பையின் மீது வைத்து விட்டு கீழிறங்கியவள் , அவன் கார் அருகே வந்து தன் தலையைச் சுற்றிப் போட்டு இருந்த துப்பட்டாவை உதறி தன் தோள் சுற்றிப் போட்டுக் கொண்டு கழிவறை நோக்கிச் சென்றாள்.

ஒரு நொடி தான் , அவள் அந்த துப்பட்டாவை உடலில் மாற்றிப் போட்ட நேரம் .ஆனால் அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அந்த ஒரு நொடியிலும் தன்னவளின் உடலின் செழுமையைக் கண்டு விட்டான்.

இத்தனை நாள் கண்களைப் பார்த்தே மயக்கம் கொண்டவனுக்கு இப்பொழுது அவளது உடலழகு அவன் உடலின் ஹார்மோன்களை தூண்டி விட்டது.

பட்டென்று ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்தவன் “ஐயோ அரவிந்தா நீ வர வர கெட்டப் பையனா  ஆகிட்டு வார…. உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு , அவள யாராவது இப்படிப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கும் “

“சாரி …சாரி …சாரிடா ஸ்வீட்டி” மனதினுள்ளேயே மானசீகமாக காதல் கொண்டவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்த அந்தக் கண்ணிய காதலன் , தன் அருகே நின்று இருந்த பேருந்து கிளம்பிச் சென்றதை கவனிக்கவில்லை…

     காதல் அழகானது… காதலியைக் கூட கண்ணியமாகப் பார்க்கும் அரவிந்தனின் காதலும் அழகானதே….