அன்றோடு ராதிகா அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வாரமானது. அவளுக்கு கணக்கு வழக்குகள் பார்க்கும் பிரிவு என்பதால் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலக அறையில் தான் பணிபுரிந்தாள். அங்கு ஒரு பெண் ஊழியரிடமே பயிற்சிப் பெற ஏற்பாடு செய்யப்பட்டதால் அவள் மிகவும் திருப்தியாகவே வேலைக்கு வந்து போய்க் கொண்டு இருந்தாள்.
காலையில் எழுந்தவுடன் அவர்கள் இருவருக்கும் தேவையானதை செய்து விட்டு கிளம்பும் ராதிகா , மாலை ஆறு மணிக்கெல்லாம் வீடு வந்து விடுவாள் .கம்பெனி பேருந்து அவளை வீட்டின் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் ஏற்றியும் இறக்கியும் செல்லும்.வீடு வந்ததும் சிவாவின் குழந்தைகளோடு விளையாடுவது ,மறுநாள் தேவையானதை எடுத்து வைப்பது அத்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருப்பது என அவள் பொழுதுகள் நிம்மதியாக கழிந்துக் கொண்டு இருந்தது.
ரமேஷை முதல் நாள் பார்த்ததோடு சரி. அதன் பிறகு அவள் பார்க்கவே இல்லை.
எப்பொழுதும் காலை வந்ததும் வரவேற்பறையில் உள்ள பயோ மெட்ரிக் கருவியில் தங்கள் கைரேகையை பதிந்து விட்டு தங்கள் இருப்பிடத்திற்கு செல்வது அங்குள்ள ஊழியர்களின் வழக்கம், அது போல் அன்றும் தன் வருகையை பதிவு செய்ய வந்தவள் , வரவேற்பறையில் இருந்த பெண் ஊழியரின் கண்கள் அழுது சிவந்தும் , அவர் தன் மொபைலை மொபைலைப் பார்த்துக் கொண்டு இருப்பதையும் பார்த்தவள் அவள் அருகில் சென்று “என்னங்க அக்கா , அழுதது போல இருக்கு”
அவள் கேட்டது தான் தாமதம் ” ராதிகா காலையில குழந்தைக்கு ரொம்ப உடம்புக்கு முடியல … என் மாமியாரும் அவரும் நான் கிளம்பும்போது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க … அது தான் போனுக்காக வெயிட் பன்றேன். ” என்று அழுதவளைப் பார்த்தவள் ,
“அக்கா நீங்க கொஞ்ச நேரம் வெய்டிங் ரூம்ல போய் வீட்டுக்கு போன் பன்னி குழந்தைக்கு எப்படி இருக்குனு கேட்டுட்டு வாங்க.அதுவரைக்கும் உங்க இடத்தில இருந்து உங்க வேலையை நான் செய்றேன்”
“உனக்கே நிறைய வேலை இருக்குமே ராதிகா.”
“பரவால்லக்கா , நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன் , நீங்க போய் போன் பேசப் பாருங்க ” என்றவள் அவள் போனைக் கையிலெடுத்துக் கொடுத்து அவளை அனுப்பி விட்டு அவளிடத்தில் ராதிகா அமர்ந்து கொண்டாள்.
அன்று போலவே இன்றும் அனைவரும் எழுந்து நின்று ‘ குட்மார்னிங் சார்’ என்று எல்லோரும் சொல்வதைக் கேட்டு ராதிகாவும் எழுந்து அவன் அவளைக் கடக்கும் சமயம் “குட் மார்னிங் சார்” என்றாள்.
வழக்கமாக தன்னை நோக்கி வரும் குட்மார்னிங் களுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் தருபவன், ராதிகாவின் குரலை நினைவில் வைத்திருந்தவன் , சட்டென்று நின்று அவளைப் பார்த்தான். ஆனால் கண்ணில் கூலர்ஸ் அணிந்து இருந்ததால் அவன் கண்களின் மின்னலை அவள் அறியவில்லை.
அவன் தன்னை கவனித்துப் பார்ப்பதைப் பார்த்து , விமலாவை தேடுகிறானோ என்று பயந்து “சாரி சார் விமலாக்கா குழந்தைக்கு உடம்பு சரியில்ல , ஒரு பத்து நிமிஷம் போன் பேசிட்டு வந்துருவாங்க” என்று அவன் விமலாவை ஏதேனும் சொல்லிவிடுவானோ என்று பயந்து ஆங்கிலத்தில் விளக்கமளித்தாள்.
படித்து முடித்து தற்போது தான் வெளி உலகில் தன்னை நிலைநிறுத்த முயற்சித்தவளுக்கு தெரியவில்லை .. அவன் பல கோடிகளுக்கு அதிபதி .. அவனுக்கு இருக்கும் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்களில் யார் வரவேற்பாளர் , யார் கணக்காளர் என்றெல்லாம் அவன் கவனித்ததே கிடையாது என்பதையும் , அந்தக் குரலும் கண்களுமே அவனைப் பிடித்து நிறுத்தியது என்பதனை அறியாது பயப் பார்வைப் பார்த்தவளைக் கண்டு புன்னகை அரும்பப் பார்த்தது.
அதை அடக்கிக் கொண்டவன் , தன் அருகே இருந்த செயளாலரிடம் அந்தப் பெண்ணிற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு கூறிவிட்டு லிப்டை நோக்கி நடந்தான்.
அவன் கூறிச் சென்றதைக் கேட்டு திகைத்துப் போய்ப் பார்த்தவள் , ஏதோ ஞாபகம் வந்தவளாக சட்டென்று அவனைத் திரும்பிப் பார்க்க , லிப்ட் அருகே சென்ற அவனும் தன் கூலர்ஸை (குளிர் கண்ணாடி) கழட்டி விரல்களில் சுழட்டிக் கொண்டே தன்னுடன் வரப் பார்த்த செயலாளர்களை கைகாட்டி தடுத்து , அவளைப் பார்த்தவன் நொடியில் கண்களைத் திருப்பிக் கொண்டு் லிப்டினுள் சென்று விட்டான்.
உள்ளே தனியே சென்றவனுக்கோ , அவள் முன்பு அடக்கிய சிரிப்பை , லிப்டினுள் அடக்க முடியவில்லை அவள் அவனைப் பார்த்ததையும் , பேசியதையும் நினைத்து நினைத்து சிரித்தவன் அலுவலக அறை செல்ல மனமில்லாது ஏழாவது தளத்தில் சென்று இறங்கினான்.
முகத்தில் புன்னகையோடு அறைக்குள் சென்று அங்கிருந்த பால்கனிக்கு சென்றான். தன் இரு கரங்களால் பால்கனி கம்பிகளைப் பற்றி கீழேப் பார்த்தவன் திருப்பூர் நகரின் பசுமையை கண்களில் நிரப்பிக் கொண்டு இருந்தான்.
அவன் வாய் விட்டு சிரிப்பது என்பது ஆபூர்வம். எப்பொழுது இப்படி சிரித்தான் என்பது அவனுக்கு ஞாபகமே இல்லை. அவனுக்கு தெரிந்து அவனது ஏழாவது வயதில் ஊட்டி கான்வென்டில் சேர்க்கப்பட்டான்.அத்தை மகன் ரமேஷும் அவனும் ஒரே வகுப்பில் ஒரே விடுதியில் தங்கிப் படித்தனர் .தந்தை, தாய் மாமன், அத்தை, மாமா என உறவுகள் அனைத்தும் ஒரே நாளில் இல்லாமல் போன நிலையில், தங்களது அத்தனை சொத்துக்களையும் பரமாரித்து, மகளும் பேரன்கள் பேத்தி மட்டுமே எஞ்சியக் குடும்பத்தை ஒற்றை ஆளாய் கட்டிக் காத்த தாத்தா ராமகிருஷ்ணா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இருபத்தி இரண்டு வயதிலேயே ரமேஷின் துணையுடன் பொறுப்பை எடுத்துக் கொண்டவன் , இந்த ஐந்து ஆண்டுகளில் கண்டது அசுர வளர்ச்சி தான். தாய் வழி ,தந்தை வழி சொத்துக்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வதோடு தாயையைும் தங்கையும் பார்த்துக் கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பும் சேர்ந்துக் கொண்டது.
அதனால் எப்பொழுதும் இறுக்கத்துடனே இருப்பான்.ராதிகாவைக் காட்டிலும் அழகான எத்தனையோப் பெண்களைப் பார்த்தும் பேசியும் கடந்து வந்தவனால் ராதிகாவைப் பார்த்து விட்டு கடந்து செல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று அவனை ஈர்க்கிறது, அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.
அப்பொழுது கதவைத் திறந்து கொண்டு வேகமாக வந்த ரமேஷ் , “மச்சான் என்னடா கேபின் கூட வராம , நேரா இங்க வந்துட்ட.. உடம்பு எதுவும் சரியில்லயா”
” ஏன்டா நேரா இங்க வந்தா எனக்கு உடம்பு சரியில்லனு ஆகிடுமா , சரி இந்த வாரம் முழுசும் உன்னை கோவை ஆபிஸ் பாருனுதானே சொன்னேன் .. இங்க வந்து நிக்கிற . “
“நான் இங்கயே பார்க்கிறேன் , நீ அங்க போ, உன் செல்ல பாப்பா என்னை வேலையே செய்ய விட மாட்டிக்கிறா டா , அது என்ன இது என்ன , ஏன் இப்படி ….அப்படி , என்னைக் கேள்விக் கேட்டே மண்டைகாய வைக்கிறா” என்று அலுத்துக் கொண்டவனிடம்,
“சின்னப் பொண்ணுடா இப்ப தானே காலேஜ் முடிச்சா , கேட்டு தெரிஞ்சிக்கிறா… இந்த வீக் ரிசல்ட் வந்ததும் எம்.பி.ஏ.சேர்க்கனும் அப்ப கத்துக்குவா” என்றவன் தங்கையின் நினைவில் முகம் மலர்ந்தான்.
“இங்க ஒரு டீடெய்ல் கலெக்ட் பன்ன வந்தேன் .நான் கிளம்புறேன். சரி வா கேபின் போகலாம். அங்க நீ சைன் பன்ன நிறைய இருக்கும் போல … ஸ்டாஃப் நிறைய பேர் வெய்டிங் ” என்றவன் அரவிந்தையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
அறையில் அரவிந்த்க்கு அலுவல்கள் வரிசைக் கட்டி நிற்க அவன் வேலையில் மூழ்கி விட்டான். தான் வந்தக் காரியம் முடிந்து கிளம்பி வெளியே வந்த ரமேஷின் எதிரில் ராதிகா வரவும் , “ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க , வேலை எல்லாம் பிடிச்சிருக்கா”
ரமேஷின் சிஸ்டர் என்ற விளிப்பில் முகம் மலர்ந்தவள்”நல்லா இருக்கேன் சார் . வேலையும் கத்துக்கிட்டேன் சார். நீங்க கோவை ஆபிஸ் போயிருக்கீங்கனு கேள்வி பட்டேன்”
“ம்.. ஆமா நாங்க மாத்தி மாத்தி பாத்துக்கிறதுதான். ஆமா அது என்ன சார் சார் னுட்டு, சீனியர் தங்கச்சி எனக்கும் தங்கச்சி தான்.சோ அண்ணன்னே கூப்பிடுங்க.. ..” என்றவன் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பி விட்டான்.
அரவிந்த் நாராயணன் என்ற பெயர் பலகையின் முன் நின்று , மற்றவர்கள் செல்வதற்காக காத்திருந்தவள் .அவர்கள் அனைவரும் சென்றதும் கதவைத் தட்டினாள்.
“எஸ்” என்று உள்ளிருந்து வந்த கம்பீரக் குரலில் உள்ளே சென்றவள் தன் துப்பட்டாவின் நுனியைத் திருகிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.
அவனோ தன் பார்வையை தன் மடி கணினி மீது பதித்துக் கொண்டே , தன் இடது கையை நீட்டிக் கொண்டு இருந்தான்.
அவனது செய்கையில் விழித்தவள் ” சார்” என்றாள். அவளது குரலை அடையாளம் கண்டு கொண்டவன் , சட்டென்று பார்வையை அவளிடம் திரும்பினான்.
அவனது பார்வையைச் சந்தித்த ராதிகாவின் கண்கள் ஒரு நொடி திகைத்து பின் சாதாரண நிலைக்கு வந்தது.
அவளின் பார்வையை சந்தித்தவன் மனதில் அத்தனை குதூகலம் , அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் ஒரு எண்ணம். எனவே அந்த சுழல் நாற்காலியை மேசையின் மிக அருகே கொண்டு வந்து தன் நீண்ட கரங்களை அதன் மேல் வைத்து விரல்களைக் கோர்த்துக் கொண்டே ” என்ன ” என்பது போல் பார்த்தான்.
அரவிந்தின் கண்கள் கேட்ட கேள்வியை உணர்ந்தவள் , “சாரி சார்” என்றாள் , தலையைக் குனிந்து துப்பட்டா நுனியை திருகிக் கொண்டே ,
புரியாமல் விழித்தவன்” சாரி … ஏன் ” எனவும் ,
“இல்ல நான் அன்னைக்குத் தான் முதல் நாள் வேலைக்கு வந்தேன், நீங்க தான் எம்.டினும் தெரியாது , அந்த லிப்ட் உங்க பிரைவேட் லிப்ட்னும் தெரியாது. நீங்களும் இங்க உள்ள ஸ்டாஃப்னு நினைச்சிட்டு மாடி ஏறி இறங்கின டென்ஷன்ல கொஞ்சம் பேசிட்டேன் …அதான்” என்று அவன் முகத்தையே மன்னிக்க மாட்டானா என்று உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சும்மாவே அந்தக் கண்களில் விழுந்து விடத் தோன்றிக் கொண்டு இருக்கிறது , இப்பொழுது அவன் பதிலுக்காக அவன் கண்களை இறைஞ்சுதலுடன் பார்க்கவும் தடுமாறியவன் ,
“இட்ஸ் ஓகே.. நோ பிராப்ளம் ” என்றான்.
அந்தப் பதிலைக் கேட்டதும் பளிச்சென்று மின்னிய அந்த கண்களில் தன்னைத் தொலைத்தவன் , திரும்ப மடிகணினி மீதுப் பார்வையைப் பதிப்பதுப்போல் அதைப் பார்த்தவன்”அடடா இவ கண்ணுல என்ன இருக்குனு தெரியலயே , அப்படியே அந்த கண்கள் ரெண்டுலயும் முத்தம் கொடுக்கனும் போல இருக்கே.. ” என்ற எண்ணம் தோன்றியதும் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து ஜன்னலருகே சென்று “என்ன நினைப்பு இது ” என்று தனக்குள் புலம்பிக் கொண்டவன் , திரும்பிப் பார்க்க ராதிகா இன்னும் நின்றுக் கொண்டு இருந்தாள்.
“என்னடா இது ..என் கிட்ட முத்தம் வாங்காம கிளம்ப மாட்டா போலவே ” என்று எண்ணிக் கொண்டே பார்த்தவனிடம் ,
“அப்புறம் தேங்க்யூ சார், விமலாக்கா அங்க இல்லனு கோபப்படுவீங்க நினைச்சேன் .. ஆனால் நீங்க அவங்களுக்கு ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணிட்டீங்க , அவங்க சார்பாவும் என் சார்பாவும் தேங்க்ஸ் சார்” என்றவள் அழகாய் பற்கள் மின்ன புன்னகைத்து வெளியேறிவிட்டாள்.