அழகு 18

சில வருடங்களுக்கு முன்பு ….

                      மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலில் அமைந்துள்ள பூம்பாறை எனும் சிறிய கிராமம். அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தன் அத்தைக்கு தேவையான மதிய உணவு , மருந்துகள் அனைத்தையும் அவர் படுத்திருந்த அறையில் இருந்த சிறிய மேசையில் கொண்டு வைத்த  ராதிகா ,

 “அத்தை எல்லாம் எடுத்து வச்சுருக்கேன். மதியானம் சாப்பிட்டுட்டு மாத்திரைப் போட்டு தூங்குங்க, நான் சீக்கிரமா வந்துருவேன்” என்றுக் கூறிக் கொண்டே அவருக்கு இட்லிகளை ஊட்டி விட்டாள்.

“ஸ்பூன் போட்டுத் தாம்மா , நானே சாப்பிட்டுக்குறேன்.”

“மதியானம் தான் நீங்க தனியா சாப்பிடனும் அப்ப ஸ்பூன்ல சாப்பிடுங்க , இப்ப நான் ஊட்டுறேன்” என்றவள் அவருக்கும் ஊட்டி விட்டு, தானும் சாப்பிட்டு விட்டு தன் மதிய உணவு அடங்கிய பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.

அப்பொழுது ஒரு டாக்ஸி வீட்டு வாசல் முன் நிற்கவும் யார் என்பது போல் பார்த்தாள். அதிலிருந்து இறங்கியவர் ராதிகாவின் அத்தை லட்சுமியின் அண்ணன் பரமேஸ்வரன் இறங்கி வந்துக் கொண்டு இருந்தார்.

அவரைக் கண்டதும் முகம் மலர்ந்த ராதிகா அவரைப் புன்னகையோடு வரவேற்று லட்சுமியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“அத்தை , பெரியப்பா வந்துருக்காங்க பாருங்க” என்றதும் மெல்ல கண் திறந்த லட்சுமி ,தன் அண்ணனைக் கண்டு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தார். பின் ராதிகாவைப் பார்த்து ,

 ” ராதிகா மா இன்னைக்கு உன் சம்பளம் வாங்கிட்டு எல்லாருக்கிட்டயும் சொல்லிட்டு வந்துருமா, சாயந்திரமா கிளம்பிடலாம்”

அந்த ஊரை விட்டுச் செல்வது மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் , லட்சுமியின் உடல்நிலைக்காக கிளம்பித்தான் ஆக வேண்டும் என்பதால் தன் மன வருத்தத்தை வெளிக்காட்டாது தலையாட்டி விட்டுச் சென்றாள்.

அவள் சென்றதும் தன் அண்ணன் புறம் திரும்பிய லட்சுமி “அண்ணா .. எல்லா ஏற்பாடும் பன்னிட்டீங்களா “

“பன்னிட்டேன் மா , அங்க போய் அவள காலேஜ்ல சேர்த்துக்கலாம். அவ விரும்பின மாதிரி இரண்டு மாச வேலைக்கு அங்க நம்ம ஊர்ல சிவாவுக்கு தெரிஞ்ச கம்பெனில சொல்லி வச்சு இருக்கேன். பார்ப்போம் கடவுள் அவளுக்குனு என்ன எழுதி வச்சுருக்காரோ அது தான நடக்கும் நீ மாத்திரை எல்லாம் சரியா எடுத்து தெம்பா இரு போதும் ” என்றவரை நன்றியுடன் பார்த்தார் லட்சுமி.

“ஏம்மா  கீதா உன் புருஷன் தங்கச்சி அப்படிங்கிறத விட, நம்ம தாய்மாமன் மகள் , அவ மகள நான் பார்க்க மாட்டேனா “

” அப்படி இல்லணா .. எனக்கு பிள்ளை இல்லாத குறைய தீர்த்து வச்சது அவதான். வாய் தான் என்னை அத்தைனு கூப்பிடுது மற்றபடி அவ அம்மாவா தான் என்னைப் பார்க்குறா “

” பின்ன உன் சிநேகிதி பொண்ணாச்சே ,சரி மா நான் கிளம்புறதற்கான ஏற்பாடுகள பன்னிட்டு வாறேன்” என்று எழுந்து வெளியே சென்றார்.

        ‘ ராதிகா’   பார்த்தவுடன் அனைவரையும் கவரும் அழகிய பெண் . சென்ற வாரத்தில் பி.காம். இறுதி ஆண்டு்த் தேர்வு எழுதி முடித்திருக்கிறாள். அந்த ஒரு வாரமும் அங்கிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு  வேலைக்குச் சென்றுக் கொண்டு இருந்தாள்.

அந்த தொழிற்சாலையில் கிளர்க் காக இருந்த அவள் தாய் மாமன் குமார் ஆறு மாதத்திற்கு முன்பு விபத்தில் உயிரிழக்கவும் , அவரது மனைவி லெட்சுமிக்கு அங்கு வேலை தரப்பட்டது. ஆனால் அவரால் அங்கு வேலை செய்ய உடல் ஒத்துழைக்க மறுத்துவிட்டது.

அவர் ஓர் ஆஸ்துமா நோயாளி , கெடைக்கானல் மலைப் பகுதி அவருக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே அவரது அண்ணன் அவரை திருப்பூர் அழைத்துச் செல்வதாக கூறியும் , ராதிகாவின் படிப்பை முன்னிட்டு தள்ளிப் போட்டவர் , சமீபமாக பக்கவாதம் தாக்கவும் , வயதுப் பெண்ணை வைத்துக் கொண்டு அங்கிருப்பது சரியல்ல என்று கிளம்ப முடிவு செய்தார்.

இத்தனை உடல் உபாதைகளோடும் லட்சுமி அங்கிருந்ததே ராதிகாவிற்காக தான்.

ராதிகா நடந்து செல்லும் தூரம் என்பதால் விரைந்து தொழிற்சாலையை அடைந்தவள் , அன்றைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு , அங்கு தன்னுடன் படித்த பள்ளிக் கல்லூரி தோழிகளிடம் சொல்லிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

ஏற்கனவே சொல்லி இருந்ததால் , அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களுக்கு பிரியாவிடைக் கொடுத்து அனுப்பினர். தேர்வு முடிவுகள் வந்ததும் சான்றிதழ் வாங்க வருவதாக சொல்லிவிட்டு அந்தக் காரில் ஏறிக் கொண்டாள்.

        அங்கு இருந்து கிளம்பி செல்லும் வழியில் இருந்த ஒரு மிகப் பெரிய பங்களாவை கடந்து செல்லும் போது காரில் அமர்ந்திருந்த மூவரின் பார்வையும் அந்த பங்களாவை ஒரு நொடி பார்த்து விட்டே  மீண்டது.

ஆனால் எப்போதும் இருளடைந்தது போல் காட்சியளித்த அந்த பங்களா அந்த இருளிலும் அன்று பகல் போல ஜொலித்துக் கொண்டு இருந்தது. வெளியே இத்தனை நாட்கள் கற்களால் பதிக்கப்பட்டு இருந்த பெயர் , இப்போது தங்க நிறத்தில் கம்பிகளால் டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

எப்போதும் பார்க்க விரும்பாத அந்த பங்களாவை கண்ணில் பார்க்க கூடாது என்பதற்காகவே வேறு வழிகளில் செல்வாள். இன்று காரோட்டி அந்தப் பாதையில் வரவும் பார்க்கப் போய்தான் அதன் மாற்றம் கண்ணில் பட்டது.

கண்களை மூடிக் கொண்டவள் “வேண்டாம் எதுவும் வேண்டாம் . குமார் லக்ஷ்மி மருமகள் அப்படிங்கிற அடையாளம் போதும் எனக்கு … “மனதினுள் புலம்பிக் கொண்டவள், கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

         மலையை விட்டு இறங்கி திருப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்தி விட்டுச் சென்றனர். திரும்ப அவள் அத்தை தன் பாதிப்படையாத ஒற்றைக் கையால் தட்டி எழுப்பவும் தான் எழுந்தாள்.

எப்போதாவது விடுமுறைக்கு அங்கு அழைத்து வருவார்கள், மற்றபடி தற்போது நிரந்தரமாகவே இங்கு தான் எனும் போது ஒரு வருத்தம் உண்டாயிற்று ராதிகாவுக்கு .

கொடைக்கானலில் இருந்த வீடு அவள் தாய் வழிபாட்டி வீடு , எனவே தாய் மாமன் வீட்டில் வளர்ந்தாலும் சொந்த வீடாகவே கருதினாள். தாய் மாமனுக்கு வாரிசும் இல்லாததால் அதை அவளுக்கே எழுதி வைத்துவிட்டார்கள். அத்தையின் உடல்நிலை முன்னிட்டு இங்கு வந்தாகிவிட்டது ,இனி பழகிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தாள்.

இவர்களைக் கண்டதும் வாசலுக்கே வந்து வரவேற்றார்கள் பரமேஸ்வரின் மகனும் மருமகளும் .அவரது மனைவி இருவருடங்களுக்கு முன்பு தவறி இருந்தார்.

“சிவா , நான் தான் நீ காத்திருக்காத சொன்னேன்ல , மருமகளுக்கும் பாவம் தூக்கம் போச்சு”

“ஒரு தொந்தரவும் இல்ல மாமா , உங்க பேத்தி இப்பதான் தூங்க ஆரம்பிச்சா , சரி வாங்க சித்தி , வா ராதிகா , மாடில எல்லாம் சுத்தம் படுத்திட்டேன், போய் தூங்குங்க , காலையில பேசிக்கலாம்.”

“உங்களுக்கு ரொம்ப தொந்தரவு தாரோமோ அண்ணி ” என்ற ராதிகாவிடம் ,

“நீ இப்படிலாம் பேசினா உதைதான் படுவ” என்று மிரட்டுவது போல் பேசி அவளை உரிமையாக அழைத்துச் சென்றாள் ராணி.

இவர்களது உரையாடலைப் பார்த்துக் கொண்டு இருந்த மற்ற மூவருக்கும் முகத்தில்  ஓர் திருப்திப் புன்னகை தோன்றியது.

மாடியில் இருந்த இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்ததால் இருவரும் பிரயாணக் களைப்பில் படுத்துறங்கி விட்டனர்.

கொடைக்கானல் குளிருக்கே பழகி விட்டு திருப்பூர் சீதோஷ்ணம் ராதிகாவை அதிகாலையிலயே எழ வைத்துவிட்டது. தன் அத்தையின் அறைக்குச் சென்றவள் அங்கு அவர் நன்கு உறக்கத்தில் இருப்பதைக் கண்டு , ஹால் அருகிலிருந்த பால்கனிக்கு சென்று விடியலை ரசித்துக் கொண்டு இருந்தாள்.

ராணியின் குரலும் குழந்தைகளின் அழுகுரலும் கேட்கவும் , கீழே இறங்கிச் சென்றாள். அங்கு சிவாவின் நான்கு வயது மகனும் , ஒரு வயது மகளும் ராணியின் காலைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தனர்.

“ஏன் அண்ணி ” என்றவள் அருகில் சென்று , ஒரு வயது அழகு பூச்சென்டைத் தூக்கிக் கொண்டாள்.

புதிதாய் ஒருவரைக் கண்டதும் இரு குழந்தைகளும் அழுகையை நிறுத்திவிட்டு திரும்பவும் அழத் துவங்க ஆரம்பித்தனர்.

“ரெண்டு பேரையும் தூக்கனுமாம் , அப்புறம் பால் எப்படிக் கலக்கறது ” என்ற ராணியிடம் ,

“அண்ணி நீங்க வேலையப் பாருங்க நான் இவங்களப் பார்த்துக்கிறேன்” என்றவள் ,

 “அத்தை உங்களை மாடிக்கு கூட்டிட்டு  போறேன் , நாம அங்கப் போய் விளையாடலாமா” என்று குழந்தைகளை கொஞ்சிக் கொண்டே அழைத்துச் சென்றாள்.

நேற்று வரை வெறுமையாய் தோன்றிய வாழ்க்கை அந்தக் குழந்தைகளைக் கண்டதும் மிகவும் அழகாகத் தோன்றியது அவளுக்கு.

அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றவள் “நாம இந்தச் செடிக்கு தண்ணி ஊத்துவோமா “என்றுக் கேட்டதும் , பெரியவன் தன் மழழை மொழியில்” அத்தை நான் நான் “என்றதும் அங்கிருந்த குழாயில் இருந்து ஒரு சிறிய வாளியில் குழந்தைகளை வைத்து தண்ணீர் ஊற்றி விளையாட்டுக் காட்டினாள் அவர்களுக்கு தங்களோடு விளையாடும் அந்த அத்தையை மிகவும் பிடித்துவிட்டது.

அதன் பிறகு ராதிகாவுக்கு அன்றைய நாள் மகிழ்ச்சியாகவே ஆரம்பித்தது போல் ஆனது.

மறு நாளில் இருந்து சமைத்துக் கொள்ளலாம் என்ற ராணி , அன்று முழுவதும் அவளே அவர்களுக்கு சமைத்து எடுத்து வந்தாள்.

அன்று இரவு ராதிகாவை அழைத்துப் பேசிய சிவா” ராதிகா மா , எங்க கம்பெனில இப்ப எந்த காலி இடமும் இல்ல. ஆனா என் பிரண்ட் வேலைப் பார்க்கிறது எங்க கம்பெனி விட ரொம்ப பெரிசு அங்க நிறைய பிஸ்னஸ் வச்சுருக்காங்க, அதுல ஒன்னு ல உன்னை சேர்த்து விடுறேன் சொல்லிருக்கான். உன் ரிசல்ட் வந்ததும் பெர்மனன்ட்டா வேறப் பார்த்துக்கலாம் சரியா”

“சரிங்கண்ணா, கரஸ் ல தான் எம்.பி.ஏ , பண்ணலாம்னு இருக்கேன். அதனால நீங்க சொல்ற இடத்துலயே சேர்ந்துக்கிறேன்.”

“ஒரு மூணு நாள் கழிச்சு அங்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.அத்தையவும் ஆஸ்பிட்டல்ல சேர்த்துரலாம்.. நீ எதுக்கும் கவலைப்படாதே சரியா”

உடன் பிறவா சகோதரனாக அவளுக்கு எல்லாம் செய்யும் சிவாவை நினைத்து அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

      வந்த மறுநாளே லட்சுமியை ஆஸ்பத்திரியில் வைத்து முழு பரிசோதனையும் செய்து அவருக்கான சிகிச்சை முறைகளைக் கேட்டு வந்திருந்தனர் மாத்திரை மருந்துகளுடன் பிஸியோதெரபி தான் இதை மீட்க வழி என்பதால், தினமும் அந்த நிபுணர் வீட்டுக்கு வந்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர்.

தன் கணவனின் சேமிப்பு முழுவதையும் தனக்கு வைத்தியம் செய்வதற்கே செலவழித்த ராதிகாவிடம் “ராதிகா மா .. என்னை கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனா போதும்மா.. உன் மாமா உன் கல்யாணத்துக்கு சேர்த்த பணத்துல எனக்கு செலவழிக்காத மா”

“அத்தை சும்மாயிருங்க , இந்த ஜென்மத்துல கல்யாணம்லாம் என் வாழ்க்கைல கிடையாது… நான் இப்படியே உங்க கூட கடைசி வரை இருந்துருவேன், அதனால அந்தப் பணத்தைப் பத்திலாம் கவலைப்படாதிங்க… எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”