” எந்தங்கச்சிக்கு கடவுள் அனுப்பினரொம்ப பெரிய கிஃப்ட் அவன்…. ஒரு அண்ணனா அவனோட இந்தக் கோலத்தைப் பார்த்து எனக்கு சந்தோஷம் தான் வருது … ” என்றவன் ரமேஷ் அருகில் சென்று அமர , பிறந்தக் குழந்தையின் வீறிடலும் கேட்க , அவனது மகளையும் கொண்டு வந்த நர்சிடம் இருந்து தானே குழந்தையை வாங்கிக் கொண்டவன் , தொண்டை கட்டி பேச முடியாது நர்சிடம் …..” என் … என் பப்ளி….. சாரி என் வொய்ஃப்” என ,
“அவங்க நல்லாருக்காங்க சார்…. ஒரு பத்து நிமிஷத்துல ரூம் கூட்டிட்டு போயிடுவோம்…” என்றவர் உள்ளே சென்று விட்டார். அரவிந்திடம் குழந்தையைக் காட்டியவன் ,
“மச்சான் …. பாறேன் எங்கம்மாவ… எப்ப போனவங்க எப்ப திரும்ப வந்துருக்காங்க….. தேங்க்ஸ் மச்சான் …. உன் பெரிய பொண்ண எனக்கு தந்ததால தான் எங்கம்மாவே என் பொண்ணா வந்துட்டாங்க … ” என்றவன் ஜானகியிடம் சென்று குழந்தையைக் கையில் தந்தவன் ,
அரவிந்திடம் மறுபடியும் வந்து கட்டி பிடித்து , “மச்சான் …. எனக்கு அழனும் போல இருக்குடா ….. உனக்கு புரியுதா தெரியல நான் எண்பது வயசு கிழவனாகி சாகும் போதுக் கூட எங்கம்மா இல்லங்கிற கவலை எனக்கு இருக்கும் டா …. ஆனா இப்ப எங்கம்மாவ நான் நல்லா வளர்ப்பேன்டா….” என்றவன் குலுங்க ஆரம்பித்து விட்டான்.
‘ காலம் கரைந்தோடும் துணை சேரும் உன் வாழ்வில்
மீண்டும் நான் உன் பிள்ளை’ … அம்மா
அங்கு நின்றிருந்த அனைவரது கண்ணிலுமே ரமேஷின் உணர்வுகளால் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அனன்யாவை அறைக்கு மாற்றியதும் ஜானகியும் ரமேஷும் தவிர அனைவரும் வீட்டிற்கு கிளம்ப அவர்களது மகன் தந்தையோடு தான் இருப்பேன் என்று விட்டான்.ஜானகி பேரனை வாங்கிக் கொண்டு ரமேஷை மகளைப் பார்க்க அனுப்பி வைத்தார்.
உள்ளே வந்தவன் கசங்கிய சட்டையிலும் கலைந்த தலையிலும் இருப்பதைப் பார்த்தவள் , கணவனை சைகையால் அருகழைத்து , மென்மையாக விரல்கொண்டு அவன் தலையை கோதிவிட்டு , பேச முடியாத அந்த நிலையிலும் ,
“உன்னோட…… என் மேலுள்ள அக்கறையும் அன்பும் எங்கம்மாவ எப்பவும் உன் கூடவே இருக்காங்கனு நீ காண்பிச்சுட்டே இருந்துருக்க….. அது தெரியாம இத்தனை நாள் இருந்துருக்கேன்….. அதுக்கு சாரி ….
தேங்க்ஸ் … …எங்கம்மாவ கூட்டிட்டு வந்ததுக்கு மட்டுமில்ல….உலகம் ரொம்ப அழகானதுனு காட்டிக் கொடுத்ததுக்கு…..பிகாஸ் அந்த உலகமே நீ தானே ….. லவ் யூ லவ் யூசோ மச் மை டியர் பப்ளி…… “
மனைவின் மீதான அவனது காதல் அத்தனையையும் அழகாக காட்டும் என்பது ரமேஷிற்கும் புரியாமல் இல்லை ….. காதல் அழகானதே……
ஒரு மாதம் கோவையில் தங்க வைத்து மனைவியைப் பார்த்த சக்திவேலுவுக்கு அதற்கு மேல் மனைவியையும் மகளையும் விட்டு விட்டு இருக்க முடியவில்லை . குழந்தையைக் காண வந்த மதரிடம் சொல்லி அவர்களது ஆசிரமத்திலிருந்து அமுதாவிற்கு தெரிந்த ஒரு அம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு அழைத்துச் சென்று விட்டான்.
ரமேஷ் மகளை கீழே விடவில்லை. வீட்டிற்கு வந்தால் கையில் தூக்கிக் கொள்பவன் பசியமர்த்த மட்டுமே மனைவியிடம் தந்தான். ராதிகாவிற்கு ஒன்பதாம் மாதம் துவங்க , அனன்யா மகளுக்கு பெயர் சூட்டும் விழாவைக்க முடிவு செய்யப்பட்டது. அரவிந்த் ராதிகாவிடம் சொன்னது போல அதிக நேரம் வீட்டிலிருந்தே வேலையைப் பார்த்துக் கொண்டான். இடையில் இருவரும் டெல்லி போக வேண்டிய சூழல்.. அரவிந்த் ரமேஷ் இருவருமே சென்றாக வேண்டிய கட்டாயம். தொழில் சம்மந்தமாக மத்திய அமைச்சர் ஒருவரை சந்திக்க வேண்டியிருந்தது. தள்ளிப் போட்டால் அந்த வாய்ப்பு வேறு நிறுவனங்களுக்குச் சென்று விடக் கூடிய நிலை.
இவர்கள் போக வா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்க அவர்களது நிறுவனத்தில் ராதிகாவுக்காக நியமிக்கப்பட்ட பெண் ஆலோசகர் ஒருவர் இந்த தகவலை ராதிகாவிடம் பகிர்ந்து விட்டார்.
கேட்டவள் கணவனை அழைத்து , “அத்தான் …. எனக்கு இன்னும் டேட் இருக்கு… நீங்களும் அண்ணாவும் போய் அந்த அமைச்சரை பார்த்துட்டு வாங்க ….”
“ம்ச்…. உன்னை விட பிஸ்னஸ் முக்கியமில்லனு சொல்லிருக்கேன் தானே…. பார்த்துக்கலாம் … “
” ம்ச் …. என்னடா புரிஞ்சுக்காம பேசுற ….போனா உடனேலாம் வர முடியாதுடா … ரெண்டு மூணு நாளாவது ஆகலாம்… திடீர்னு உனக்கு வலி வந்துருச்சுனா….ஓ காட் …அப்படிலாம் என்னால உன்ன விட்டு இன்றைய சூழல்ல என்னால நிம்மதியா இருக்க முடியாது….”
ஆனால் கடைசியில் ராதிகாவின் வாதமே வென்றது. பெயர் சூட்டும் விழா முடிந்து அன்றைய மாலையில் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
இதோ அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் இருந்த அந்தப் பூக்குவியலுக்கு அத்தையான ராதிகா , “அக்ஷரா ” என்ற அழகிய பெயரை மூன்று முறை சூட்டி மகிழ , அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஓர் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் ராதிகாவை அமர வைத்து பெண்கள் அனைவரும் மஞ்சள் சந்தனம் பூசி கண்ணாடி வளையல்களைப் பூட்டினர்.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்வு ராதிகாவை வாயடைக்கச் செய்து , கணவனை ஏறிட்டுப் பார்க்க , பிறர் அறியாது உதடு குவித்து ஓர் பறக்கும் முத்தம் தந்தவன் , அவளருகில் வந்து ,
” ராதிகாவுக்கு இதெல்லாம் இரண்டாவது தடவை … ஆனா ஜெனிஃபர்க்கு ….. இந்த வளையல் ஓசையை அனுபவிக்க வேண்டாமா….அதுக்குத்தான் சர்பிரைரர ர …… ஸ்ஸ்ஸ் என்று ராகம் இழுத்தவன் , அவளது பூங்கரங்களுக்கு வைர வளையல் அணிவித்து விட்டுத்தான் நகர்ந்தான்.
போகச் சொன்னாள் தான் ஆனால் அவன் மாலையில் கிளம்பும் முன் அறையில் வைத்து .. அவனை கட்டிக் கொண்டவள் விடாமல் அமர்ந்திருக்க ,
“ஸ்வீட்டி…. நீ வேண்டாம்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் நான் கிளம்பல … அந்த ப்ராஜக்டே வேண்டாம் . சொல்லுடா நீ இப்படி ஃபீலானா எப்படி….. “
“ச்சூ ….அப்படி சொல்லாதிங்க நம்ம பொண்ணு வர்ற நேரம் எல்லாம் நல்லதாவே ஆரம்பமாகனும் …. அத்தான் ….”
“சொல்லுடா”
“அத்தான் ” ….” நான் கிளம்பல ….” , “ஐயோ அத்தான் என்ன நீங்க நான் ஐ லவ் யூ சொல்ல வந்தேன் …” அதன் பிறகு இதழ் முத்தம் பெற்ற பின் தான் அவனை அனுப்பினாள்.
நான்கு நாட்களிலேயே அவர்களது வேலைகள் நிறைவடைய , இரவில் கிடைத்த ஓர் விமானத்தில் கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.ரமேஷும் அனன்யாவும் ராதிகா பிரசவம் முடியவும் திருப்பூர் கிளம்ப முடிவெடுத்ததால் அங்கு தான் இருந்தனர். அவர்கள் டெல்லியிலிருந்து திரும்பிய மூன்றாம் நாள் இரவிலேயே ராதிகாவிற்கு பிரசவ வலி ஆரம்பித்துவிட்டது.
குடும்பம் மொத்தமும் அந்த இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து விட்டனர். அனன்யாவை குழந்தையை வைத்துக் கொண்டு வர வேண்டாம் என்றாலும் கேட்கவில்லை. பிரசவம் பெண்களுக்கு மறுஜென்மம் என்பது ராதிகாவின் வாழ்க்கையில் உண்மையாகியதால் தான் அனைவருக்கும் அப்படியொரு பதற்றம்.
அரவிந்த் கையை விடாது பிடித்துக் கொண்டிருந்தவளைப் பார்க்க பார்க்க அரவிந்துக்கு அப்படி ஒரு பயம். அதை வெளிக்காட்டாது அவளுக்கு தைரியம் சொன்னாலும் அவனது கண்களின் சிவப்பையும் …. அவனது வேகமான இதயத் துடிப்பையும் உணர்ந்த ராதிகா ….. பிரசவ அறைக்குள் செல்லும் முன் ….
வலியோடு பல்லைக் கடித்துக் கொண்டு ….. , “அத் …. தான் … பயப்படாதீங்க நான் நல்லபடியா பாப்பாவ தூக்கிட்டு திரும்ப உங்ககிட்ட வருவேன் ….. ஐ…. ஐ…. லவ் …. யூ ….” என்றவளை உள்ளே அழைத்துச் சென்று விட்டனர்.
உள்ளேயிருந்து அவள் உச்சக்கட்ட வலியில் அலறியது கேட்ட அரவிந்துக்கு உலகமே இருண்டது போல் இருந்தது.
மெல்ல கண் விழித்தவள் அருகில் ஜானகி குழந்தையோடு அமர்ந்திருக்க … அரவிந்த் கைகட்டி குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
மெல்ல வாய் திறந்து ….” அத்…. தான் ” என அழைக்க … சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து அவள் கட்டிலில் வந்து அமர்ந்து அவளைப் பார்க்க …. மெல்ல புன்னகைத்தவள் …. “வந்துட்டீங்களா …. என்ன குழந்தை…..”
“பொண்ணுதான்டா ….நமக்கு மக பிறந்திருக்கா…. ” என்றவன் இரு டாக்டரைக் கூப்பிடுறேன் என எழ ,”எனக்கு தூக்கம் வருது…..” என்றவள் … அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.
மருத்துவர் வந்துப் பார்த்தவர் இனி பயப்பட ஒன்றுமில்லை அவள் நன்றாக இருக்கிறாள். இது உறக்கம் தான் என்ற பிறகு தான் அனைவரும் திருப்தியடைத்தனர்.
“ம்மா நீங்க வீட்டுக்குப் போங்க , இனி நான் பார்த்துக்கிறேன் … மூணு நாளா நீங்க சரியா சாப்பிடல தூங்கல….”
“நீ மட்டும் என்னப்பா … சரி தாயம்மா சாப்பிட கொடுத்து விட்டுருக்காங்க , நீயும் சாப்டுட்டு நர்ஸ பார்க்கச் சொல்லி கொஞ்சம் தூங்கு…. நான் வாறேன்….. “
மனைவியின் கட்டிலருகில் ஒரு இருக்கைப் போட்டு அவள் முகம் அருகேயே தலையை சாய்த்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்போது கண்ணயர்ந்தானோ கட்டில் ஆடுவது போல் இருக்கவும் கண் திறக்க ராதிகா கட்டிலில் சாய்ந்தமர்ந்து குழந்தைக்கு பசியமர்த்திக் கொண்டிருந்தாள். சட்டென்று எழுந்து அமர்ந்தவன் ,
“என்னடா நீயே எழுந்தியா… சொன்னா நான் தூக்கி தந்திருப்பேன்ல… “
“ஸ்ரீ குட்டி.அழற சத்தம் கேட்டுச்சு நீங்க நல்லா தூங்குறீங்க…. ஆமா இது என்ன பாஸ் ஊருக்குப் போய்ட்டு வந்ததுலருந்து ஷேவ் பண்ணலயா…. “
எழுந்து சுற்றிப் பார்த்தவன் , “என்ன ஸ்ரீ அழற சத்…” என்று ஆரம்பித்தவன் அவள் பேச்சின் வித்தியாசம் புரிபட …. பரபரப்படைந்து…
“இப்ப என்னை என்னனுக் கூப்பிட்ட டா”
புன்னகைத்துக் கொண்டே “உங்கள அரவிந்துன்னாக் கூப்பிடுவேன்…..போங்க பாஸ்….. இல்ல இல்ல இங்க என்கிட்ட வாங்களேன்.. ” எனவும் ,
உணர்வுகளின் தாக்கத்தில் அவள் அருகே வர , இடக்கையில் குழந்தைக்கு அணைவு கொடுத்திருந்தவள் , முன்பக்கம் கிடந்த ஜடையை பின்புறம் போட்டுக் கொண்டே , “ஏன் பாஸ் உங்க ஆராய்ச்சி அதுக்குள்ள முடிஞ்சிருச்சா…..”
“எ… என்ன ஆராய்ச்சி “என்று திணறியவனிடம்,
முல்லைப்பூ பற்கள் தெரிய புன்னகைத்தவள் , “ம்… உங்க நக்கீரர் ஆராய்ச்சி தான் …. பிரசவத்துக்கு ஹேர் கட் பண்ணுவாங்களா என்ன ….என் பெரிய ஜடையக் காணோம்….. சரி அதை விடுங்க” என்றவள் ,