ரமேஷிற்கு அரவிந்தை அனுப்ப மனதில்லை …. ஆனாலும் ராதிகா கொடுத்த நம்பிக்கையில் அரவிந்த் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரானான். இத்தனை வருடத்தில் எத்தனையோ முறைகள் வெளியூர் பயணம் மேற்கொண்டவனுக்கு இம்முறை அத்தனை சலனம். ராதிகாவுடன் அதிக நேரம் செலவிட்டதோடு , அவளருகிலேயே இருந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டான். கிளம்பும் நாள் நெருங்க நெருங்க அவளுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லிக் கொண்டே இருக்க ,
“அத்தான்…. நீங்க என்னை ரொம்ப சின்னப் பொண்ணாவே ட்ரீட் பண்றீங்க…. நான் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு அம்மா…. அதோட நம்ம வீட்ல எத்தனை பேர் இருக்காங்க அவங்களாம் என்னைப் பார்த்துக்க மாட்டாங்களா…. நீங்க கவலையேப் படாதீங்க … நான் நல்லபடியா இருப்பேன்…. உங்க கிட்ட வீடியோ கால் போட்டு தானே பேசப் போறேன்” என்றுப் பலவாறு பேசி அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். விமானம் ஏறும் வரை வீடியோ காலில் பேசி விட்டுத்தான் அவன் விமானமே ஏறியது.
ராதிகாவிற்கு திகட்ட திகட்ட அன்பை அள்ளித்தரும் கணவன் மீது கடலளவு காதல் பொங்கி வழிந்தது. ரமேஷ் தாயம்மாவையும் ஜானகியைும் அழைத்துக் கொண்டு ஊட்டி சென்று அமுதாவிற்கு சிறிய அளவில் வளைகாப்பு செய்து அழைத்து வந்தான்.அமுதாவிற்கும் அனன்யாவிற்கும் கிட்டத்தட்ட ஒரு வாரம் தான் முன்ன பின்ன பிரசவ தேதி தரப்பட்டிருந்ததால் சக்திவேல் ஊட்டியிலயே தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியும் … அரவிந்த் ரமேஷ் வற்புறுத்தலால் கோவையிலயே பிரசவத்திற்கு ஒப்புக் கொண்டான். எனவே தோழிகள் மூவரும் பெரியவர்களின் அன்பான கவனிப்பில் தாய்மையை நன்கு அனுபவித்தனர். அரவிந்த் வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் ராதிகாவை பார்த்துக் கொண்டே பேசி அவள் சாப்பிட்டாளா , வாக்கிங் போனாளா , இப்படி அவள் ஒவ்வொரு செயலையும் கேட்டு திருப்திப் பட்டுக் கொண்டான்.
ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தவன் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று மறுபடியும் எல்லா பரிசோதனைகளையும் செய்து அவள் நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்த பின் தான் அவன் அலுவலகம் சென்றதே.
” அனு உங்கண்ணனும் பயந்து என்னையும் பயங்காட்டி ……அப்பப்பா … இப்படித்தான் ஸ்ரீ வயித்துல இருக்கும் போதும் பண்ணுவாரா …..” என்றுப் புன்னகைத்துக் கொண்டே கேட்க , மற்றவர்கள் ராதிகாவுக்காக புன்னகைத்தலும் , அவர்களது முகத்தில் ஒரு வித பயம்தான் தெரிந்தது.
இதோ அனுவுக்கும் அமுதாவுக்கும் ஒரு மாதம் முடிந்து எட்டு துவக்கத்தில் இருந்தனர். மதர் இருமுறை வந்து இவர்களைப் பார்த்து விட்டுச் சென்றவர் அமுதாவின் பிரசவத்திற்கு வருவதாக சொல்லி விட்டுச் சென்றார் .
ஹாலில் குழந்தைகளோடு அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்க ராதிகாவின் உடலில் ஏதோ ஓர் மாற்றம்… சட்டென்று உடல் வேர்த்துக் கொண்டு வர , மெதுவாக சோஃபாவை விட்டு எழுந்தாள். தாயம்மா பார்த்தவர் , “என்ன கண்ணு….. நெத்திலாம் வேர்க்குது … எதுவும் செய்யுதா …. டாக்டர்கிட்ட போவோமோ….” என்றுப் பதட்டத்துடன் கேட்க , மற்றவர்களும் அருகில் வந்துக் கேட்க , எல்லோரிடமும் ஒன்றுமில்லை என்றவள் அறைக்குச் செல்வதாக சொல்லி மெல்ல நடந்து அறைக்குச் சென்றுக் கணவனுக்கு அழைத்து விட்டாள்.
” என்ன டென்மினிட்ஸ்ல வரீங்களா …. ஏன் அவ்வளவு வேகம் அத்தான் மெதுவா வாங்க …. யார் அனு போன் பண்ணாளா ….”
“இல்லடா உடம்புலாம் வேர்க்குதாம்… நீ தயாரா இரு ஹாஸ்பிட்டல் போகலாம்….”
“ஐயோ அத்தான் … அதெல்லாம் எனக்கு ஒன்னுமில்ல ….ம்ம்…. குட் நியூஸ் தான் … அதனால மெதுவா வாங்க…. ஸ்பீடா ட்ரைவ் பண்ணாதீங்க … அது தான் எனக்கு டென்ஷன் தரும் … சரி வாங்க” என்றவள் ஃபோனை வைத்து விட்டு அரவிந்துக்காக காத்திருந்தாள்.
சொன்னது போல் பத்தே நிமிடத்தில் வீட்டினுள் கார் நுழையும் சத்தம் கேட்க … அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அறையினுள் பிரவேசித்தவன் ….
“ஸ்வீட்டி உனக்கு ஒன்னுமில்லயே …. எதுக்கும் ஒரு தடவை டாக்டரைப் பார்த்துடலாம் வா ……நைட்டில இருக்கியா பரவால்ல …” என்றவன் ஒரு டவலை எடுத்து அவள் மேல் போட்டுக் கைப் பிடித்து அழைக்க …
அவனைத் தடுத்தவள் , “ஏங்க அவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன் இப்படிச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயந்து இப்படி ஓடி வரலாமா …. முதல்ல இந்த வண்டிய வேகமா ஓட்டறத நிறுத்துங்க….. இப்படி வேகமா வந்ததுக்கு நான் கொடுக்கிற அடி” என்றவள் அவன் முதுகில் செல்லமாக அடிப்பது போல் தட்டி விட்டு , அவன் கையை எடுத்து வயிற்றின் மேல் வைத்து ,
“குட்டிமா …. அப்பா இப்படி வேகமா வண்டி ஓட்டி வந்ததுக்கு நீங்க ஒரு உதை கொடுங்க .. ” என்று அவன் முகத்தையே பூரிப்போடுப் பார்க்க , அந்த நொடி வயிற்றில் இருந்த குழந்தையும் தாய் சொல்லை தட்டாது அசைவைக் கொடுக்க ,
கை வைத்திருந்த அரவிந்த் மகிழ்ந்து போய் மனையாளின் முகம் பார்த்தான். அவனுக்கு இது இரண்டாம் அனுபவம் … ஆனால் அவளுக்கு இன்றைய நிலையில் இது தான் முதல் அனுபவம் என்பதால் , உலகத்தின் உச்சகட்ட சந்தோஷம் என்றால் அது இதுதான் என்பது போல் அவனைப் பார்க்க …. வழக்கமாக அவனைக் கவரும் அந்தக் கண்கள் இன்று மேலும் ஈர்க்க , அந்த விழிகளில் இதழ் பதித்தவன் ,
” அட ஆமா…. இவங்க என் பொண்ணுதான் அது தான் அவங்க அம்மா போலவே ரொம்ப சாஃப்ட் …அது தான் மெதுவா உதைக்கிறாங்க ….என் பையன் அவங்கப்பா போல பயங்கர ஸ்ட்ராங்கா இருந்தார் … அவர் இப்படித்தான் உதைச்சு இங்கப் பார் என் கைவீக்கம் இன்னும் குறையல ….. “
அவன் மீசையைப் பிடித்து இழுத்தவள் , ” இருங்க இப்பவும் என் பையனயே உதைக்கச் சொல்றேன் ….இப்படி ஸ்பீடா கார் ஓட்டாதீங்க ப்ளீஸ்…. என்னாலநிம்மதியா இருக்க முடியாது….” என விளையாட்டுப் பேச்சாக ஆரம்பித்து சீரியசாக முடித்தாள்.
பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டவன் , “ஓகே என் பொண்ணு சொல்லிட்டாங்க ….இனி நடந்து போறவங்க கூட தோற்கிற அளவுக்கு கார் ஓட்டுவேன் சரியா…. ஆமா இந்த நைட்டிக்கு மேல கை வச்சா என் பொண்ணு என்ன செய்றாங்கனே தெரியலயே …. கொஞ்சம் அப்படியே …..” என்றவன் கையை அடித்து , அவன் காதினில் ரகசியம் பேச , அதற்குள் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த மகனைத் தூக்கிக் கொண்டவன் அவனைக் கொஞ்சிக் கொண்டே வெளியே செல்ல , ரமேஷ் முதற்கொண்டு குடும்பமே அவர்களுக்காக காத்திருந்தனர்.
வெளியே வந்தவர்கள் நேராக ஜானகியிடம் சென்று , ” ம்மா உங்க பேத்தி அவங்கப்பாவ பார்க்கணும்வரசொல்லுனு அவங்கம்மாவ போட்டு உதைச்சிருக்கா அதுதான் …..”
ராதிகாவுக்கு திருஷ்டி கழித்தவர் , ” நானும் பயந்துட்டேன் பா … எதுக்கும் இப்படி வேர்க்குதுனு டாக்டர்கிட்ட போய் கேட்டுட்டு பிரஷர்லாம் நார்மலானு பார்த்துட்டு வந்துருங்க… “
“மச்சான் நீ கிளம்புன வேகத்துல நானும் பின்னாலயே வாறேன். எதுனாலும் சொல்லுடா இப்படி டென்ஷனாக்காத….”
அதன் பிறகான நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு தான் பறந்தது எனலாம். அரவிந்தை சொல்லவே வேண்டாம் மனைவியை பூப்போல் தான் தாங்கினான்.ரமேஷோ … அரவிந்துக்கு இணையாகவே அவனும் இருந்தான். ஓர் வெள்ளிக்கிழமை இரவில் அமுதாவிற்கு வலியெடுக்க சக்திவேலுவும் அங்கிருந்ததால் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்ல ,அனன்யாவும் ராதிகாவும் அந்த இரவில் வேண்டாம் என்றாலும் கூடவே கிளம்பி விட்டனர்.
அமுதாவின் கைப்பிடித்துக் கொண்டே இருந்த சக்திவேலை சமாதானப்படுத்த அரவிந்த் ரமேஷ் இருவராலும் கூட முடியவில்லை.
பிரசவ அறைக்குள் செல்லுமுன் அவள் கையைப் பிடித்துக் கொண்ட சக்திவேல் ,
“அம்மு எனக்கு உன்னையத் தவிர யாரும் இல்லடா …. உள்ள போறது உன் உயிர் இல்ல … என் உயிர் …. திரும்பி நல்லபடியா நம்ம பிள்ளைய பெத்து எடுத்துட்டு வா… இங்க உனக்காக நான் காத்திருப்பேன்.” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு உள்ளே அனுப்பி விட்டு ரமேஷ் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
காலம் முழுதும் பொன்னாலும் வைரத்தாலும் பட்டாலும் மனைவியவளை அலங்கரித்தாலும் .. உனக்கு நான் இருக்கிறேன் என்ற வார்த்தை காதலனாகப்பட்ட காவலனான கணவனிடமிருந்து வரும் போது மட்டுமே அவள் உயிர்ப்போடு இருக்கிறாள் என்பதே உண்மை…. அது போதுமே எமனையும் வென்று வர ……
ராதிகாவும் அனன்யாவும் இப்போது தங்களவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அந்த இரவு நேரத்தில் மருத்துவ மனையின் அமைதியை சக்திவேலின் மகவு தன் அழுகை சத்தத்தால் நிறைக்க , சிறிது நேரத்தில் வெள்ளை பூந்துவாலையில் ரோஜா பூக்களே தோற்கும் வண்ணம் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த நர்ஸ் , கதவு திறக்கவும் அருகில் வந்து நின்ற சக்திவேலிடம் , “சார் உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கு , அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க…. இந்தாங்க ” என , தாயம்மாவை வாங்கச் சொல்லிப் பார்த்தவனுக்கு பேச்சே வரவில்லை …. வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை என்றாலும் கண்களின் வார்த்தைகளாக கண்ணீர் வந்து விட்டது.
தாயம்மா வாங்கியவர் , ” ஐயா….சத்தி…. இது உன் மக இல்லய்யா… உன் அம்மா கார்த்திகா தான்யா மறுபடியும் வந்து பொறந்துருக்கா…. உன்னைய நாலு வயசுல விட்டுப் போனவ…. பாரேன் அப்படியே அந்த கண்ணும் வாயும் …..”
அரவிந்தும் ரமேஷும் அவனைக் கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூற, ராதிகாவும் அனன்யாவும் குழந்தையை வாங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டனர்.
“ரதி இவங்கப்பா இல்லனா இன்னைக்கு இவங்க பெரியம்மா இங்க எங்கூட இல்ல …அதனால நம்ம பொண்ணுக்கு என்ன கிஃப்ட் தரலாம்.….இவங்கம்மா ஒரு பெரிய செஃப் அதனால ஊட்டில ஒரு ரெஸ்டாரன்ட் வாங்கிரலாமா….. “
” என் பொண்ணுக்கு இல்லாததா தாராலமா கொடுத்துரலாம்…” இப்படி ஆளாளுக்கு தங்கள் மகிழ்ச்சியை சொல்லாலும் செயலாலும் காட்டிக் கொண்டிருக்க , சுகப்பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீட்டிற்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்க , மூன்றாம் நாள் மாலையே அனன்யா வலி என்று வந்து விட்டாள்.
அன்று சக்திக்கு தைரியம் சொன்னவனா இவன் என்று தான் ரமேஷின் நிலை இருந்தது. அவன் முதல் குழந்தைக்கு இதைவிட அதிகமாகவே கவலையிலும் பதற்றத்திலும் இருந்தான் என்பதை ராதிகா அறியவில்லை. கணவன் அருகில் வந்தவள் ,
“அத்தான் நீங்களும் நம்ம பாப்பா பிறக்கும் போது இப்படி என் பக்கத்துலயே தான் இருக்கணும் ….அந்த டைம் வர வேலை எல்லாம் இப்பவே பார்த்து வச்சிருங்க….”
“நீ சொல்லவும் வேணுமாடா …. எத்தனை கோடி லாஸ் ஆனாலும் பரவாயில்ல ஒன்பதாவது உனக்கு ஸ்டார்ட் ஆனதுலருந்து நான் ஆஃபிஸ் வேலையவே வீட்லதான் செய்யப் போறேன். நீ சொன்னா அதுக்கூட செய்யாம இருக்கிறேன் ஓகேயா …..”
“ஐயோ என்னத்தான் நீங்க …. அந்த நேரம் என் பக்கத்துல இருங்கனு தான் சொல்றேன்…. இப்படிலாம் செய்தா தான் நீங்க என்னையும் நான் உங்களையும் எவ்வளவு விரும்புறோம்னு தெரிஞ்சுக்க முடியுமா என்ன …… வாழ்க்கையின் யதார்த்தம் எனக்கும் புரியும் …. ஆனாலும் ஒரு ஆசை அவ்வளவுதான்… அதுக்காக உங்கள வேலைய எல்லாம் போட்டுட்டு இருங்கனு சொல்லல….. நாம மட்டுமில்லையே நம்ம பிஸ்னஸ் நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்காங்க…. அதனால பிஸ்னஸ்ல லாஸ் ஆகிறதயே பேச வேண்டாம். நீங்க நார்மலா உங்க வேலையப் பாருங்க…. நம்ம குழந்தைங்க நம்மள தொந்திரவு பண்ணாம நல்லபடியா வருவாங்க” என்றவள் ரமேஷ் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்து ,
அவளது பேச்சில் , “நீயா யதார்த்தவாதி … … போடா … ” என்று நினைத்துப் புன்னகைத்துக் கொண்டவன் ,
“ஸ்வீட்டி ரெண்டு குழந்தைங்க அம்மாவானதும் நீங்க ரொம்ப பெரியாளா ஆகிட்டீங்க போல…. என்னமா பேசுற டா…. சரி அந்த டைம் நாம ஆஃபிஸ் விஷயம் முடிவு பண்ணிக்கலாம் ….” என்றவன் நண்பனைப் பார்த்து ,