அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு “இப்ப நான் ஆஃபிஸ் வரணும் அவ்வளவுதானே வந்துட்டாப் போச்சு” என்றவள் , மகனை உறங்க வைத்துவிட்டுக் கிளம்பினாள். அவன் விழிக்கும் போது நான் வீட்டில் தான் இருப்பேன் என்றக் கட்டளையோடு , மேலும் வரும் போது அவளே காரை ஓட்டிக் கொண்டு வர வேண்டும் என்றும் அரவிந்த் கூறி விட்டான் .

அலுவலகத்தில் யாரும் அவளை நேரடியாக அணுகாதவாறு பார்த்துக் கொண்டான். வீணான குழப்பங்களைத் தவிர்க்கவே…

அவனது கேபினுக்கு அருகில் ஓய்வறையைக் கண்டவள், “அத்தான் இந்த ரூம் எதுக்கு , ரெஸ்ட் எடுக்கணும்னா நம்ம வீடு பக்கம் தானே அங்கப் போயிரலாமே…..”

கேட்ட அரவிந்துக்கு வாய் கொள்ளாசிரிப்பு , ” இது நீ தான் கேட்ட … கல்யாணம் முடிஞ்ச புதுசுல உன்னைய நைட்லாம் தூங்கவிடலனு ஆஃபிஸ் வந்து அந்த சோஃபாவில தூங்குவ , அப்புறம் பையன் வயித்துக்குள்ள இருக்கான் நீ ஆஃபிஸ் வர வேண்டாம்னு சொன்னா பிடிவாதமா , நான் உங்க பக்கத்துலயே இருக்கணும் சொல்லிட்ட … அப்ப நீ ரெஸ்ட் எடுக்க இந்த சின்ன சோஃபா பத்தாதே….அதுதான் இந்த மினி பெட்ரூம் ” என்று நெருங்கி வந்தவனிடம் …. காதல் கரை புரண்டு ஓடத் தான் செய்தது …. தனக்காக பார்த்து பார்த்து செய்யும் கணவனை நினைத்து பெருமையும் , காதலும் போட்டிப் போட்டு பெருகியது. அவன் நெஞ்சிலயே சாய்ந்துக் கொண்டவள்,

“நான் அவ்வளவு பெரிய கே கே வா” என்றவள் முகத்தை சட்டென்று கைகளில் ஏந்தி , “என்ன சொன்ன …. திரும்ப சொல்லு”

“கேகே வா…. கும்பகர்ணி …. இப்படினு கேட்டு ஞாபகம் …. அத்தான் நீங்க தான் அப்படிச் சொல்வீங்களா….” என்றுப் புன்னகையுடன் கேட்க , அவளையேப் பார்த்தவன் என்ன சொல்லுவான் ,

ஆறு மாதமாக தொடர்ந்து அவள் காதில், ” கே கே எந்திரி, இங்கப் பாரு , ஸ்ரீக்கு பால் அமர்த்து , நான் கிளம்புறேன் … பையன் உனக்கு முத்தம் தரார் ….இப்படியாக அவள் காதில் ஓதிக் கொண்டு இருந்தானே…. அதைச் சொல்லவா முடியும் …. “

“ம்….. நான் நைட்டு உன்னையத் தூங்க விடலனு இங்க வந்து துங்குவ…”

“ஷ்… அத்தான் இது ஆஃபிஸ் ” என்று முகம் சிவந்தவள் , அதன் பிறகு தன் தினக் கடமையை இலகுவாக்கிக் கொண்டாள். மாதங்கள் செல்ல மகனுக்கு இரண்டாம் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டார்கள். அவனது பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பு அனன்யா மகனின் பிறந்த நாள் என்பதால் அனைவரும் திருப்பூர் சென்றனர்.

அப்பொழுதுதான் ஃபோனில் பேசிய அமுதவள்ளி தான் தாய்மையடைந்திருப்பதை தெரிவிக்கவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டிருக்க ,அனன்யாவும் முகம் நாண , “அண்ணி உனக்கும் மருமகள் வரப் போறா” என்க , அவளைக் கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறிய ராதிகாவின் நெஞ்சினுள்ளும் ஏதோ ஓர் உணர்வு.

“மாப்ள எங்கத்தையக் கூட்டிட்டு வந்துட்டப் போல….”

“மச்சா….. ன்ன்ன் “

ரமேஷின் தோளில் கைப்போட்டு, “ரொம்ப சந்தோஷமா இருக்குடா … ஒரு அண்ணனா என் தங்கச்சிய நினைச்சு சந்தோஷப்படுறேன்…. நண்பனா உன்னைய நினைச்சு பல மடங்கு ஹாப்பிடா”

“அரவிந்த் … நானும் தாயம்மாவும் இந்த வாரம் இங்க இருந்துட்டு வாறோம்…. நீங்க கிளம்புங்க , பேரன் பிறந்த நாளன்னைக்கு நாங்க எல்லாரும் அங்க இருப்போம்.” என்று அவர்களை வழியனுப்பினார். இரண்டு நாட்களில் தனக்குப் பெண் குழந்தைப் பிறந்திருப்பதாக நான்சியிடமிருந்து ஃபோன் வரவும் , மகிழ்ச்சியோடு மனதினில் சஞ்சலமும் கூடித்தான் போனது ராதிகாவிற்கு.

மகனுக்கு இரண்டாவது பிறந்த நாள் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் அரவிந்தின் முகத்தில் சிறு இறுக்கத்தைக் கண்டு கொண்டு தான் இருந்தாள். அவளாக’ என்ன’ என்றுக் கேட்டாலும், அப்படியே பேச்சைமாற்றிக் கொண்டு விடுவான்.

பிறந்த நாள் வேலைகள் சென்றுக் கொண்டிருக்கையில் , அன்று இரவு வீடு திரும்பியவனிடம் , “அத்தான் குட்டி பிறந்த நாள் பங்ஷன் முடிஞ்சதும் கொச்சின் போய்ட்டு வருவோமா ….. “

அவள் தோழி அங்கிருக்கிறாள் , அவள் அங்கு சிறிது நாட்கள் அங்கு தான் இருந்தாள் என்பது எல்லாம் அப்போது அவனுக்கு நியாபகமில்லை. அவனுக்கு கொச்சின் என்றாலே ராதிகாவின் தன்னை மறந்த நிலைக்கான காரணம் தான் நினைவில் வரும். எனவே பதட்டத்துடன் ,

“கொச்சிக்கா ….அங்க எதுக்கு டியர்  வேற இடம் நிறைய இருக்கே , அங்க போலாமா …. இல்ல ஃபாரின் எங்கயாது போய்ட்டு வருவோமா… ப்ளைட் டிக்கட் போடட்டா “

“போங்கத்தான் …. நான் சுத்திப் பார்க்கவா கொச்சின் போலாம் சொன்னேன். நான்சிக்கு பொண்ணு பிறந்திருக்கா … அந்தக் குட்டிய பார்க்க ஆசைப்பட்டுக் கேட்டேன்.

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன், ” கண்டிப்பா போய்ட்டு வரலாம் டா” ராதிகா தான் குழம்பிப் போனாள். கொச்சின நினைச்சாலே எல்லாரும் சந்தோஷம் தான் படுவாங்க…. அத்தான் ஏன் டென்ஷனாகிறாங்கனு புரியலயே…. “

பிறந்த நாளுக்கு முதல் நாள் வந்திறங்கியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராதிகா .. பிறந்த நாள் முடிந்ததும் நான்சியைக் காண கொச்சின் போகப் போவதை சொல்லி சந்தோஷப்பட , இவளின் சந்தோஷம் யாரிடமும் மகிழ்ச்சியை உண்டு பண்ணவில்லை மாறாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இறுதியில் அனைவரது பார்வையும் அரவிந்திடம் தான் இருந்தது.

அவனோ கைக் கட்டிக் கொண்டு தரையில் பார்வையைப் பதித்து யோசனையில் இருந்தான்.

அனன்யா அருகில் வந்த ராதிகா , மெதுவாக ” ஏன் அனு கொச்சின் போகணும் சொன்னாலே எல்லாருமே ஒரு மாதிரி யோசிக்கிறீங்க ….. “

“அது…. அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணி , வா நாளைக்கு போட்டுக்கிற ட்ரஸ்லாம் பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

அரவிந்தை அருகில் அழைத்த ஜானகி ,

“கவலைப் படாதப்பா, நீ பழச போட்டுக் குழப்பி அவளையும் குழப்பாத ….. இன்னைக்கு நாம சந்தோஷமா இருக்கோமா அதுதான் முக்கியம்.”

“ம்மா.. இவர் பிறந்த நாளையும் மறக்க முடியல …. கொச்சினையும் மறக்க முடியல… அவ அங்க போகணும் சொன்னதுமே எனக்கு அந்த நாட்கள் தான் மா ஞாபகத்துக்கு வருது ….”

” ரமேஷ்… பிறந்த நாள் ஏற்பாடெல்லாம் சரியா இருக்கானு ரெண்டு பேரும் போய் சரி பாருங்க , முதல் பிறந்த நாள ஏன் கொண்டாடலனு ஒரே கேள்வி , நாம எப்படியோ சமாளிச்சிட்டோம் … அதனால நாளைக்கு நல்ல படியா பண்ணனும் ,போங்க அதை கவனிங்க ,அழைச்சிட்டுப் போப்பா அவனை “

அதன் பிறகு பிறந்த நாள் வேலைகள் துரிதமாக நடந்தன. முதலில் யோசனையோடு அந்த நாளைத் தொடங்கியவன் மனைவியின் உற்சாகத்தில் தானும் பங்கெடுக்க ஆரம்பித்தான். யாரும் அவளிடம் தனிப்பட்டு எந்தக் கேள்வியும் கேட்காதது போல் பார்த்துக் கொண்டான். குடும்பமாக பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தவர்கள் , அடுத்த இரு நாட்களில் கொச்சினுக்கு கிளம்பினர்.

விமானத்தில் ஏறி அமர்ந்த நேரத்திலிருந்து அவன் யோசனையாகவே இருக்கவும் ,

“ஏன் அத்தான்…. எனக்கு கொச்சின்லதான் நினைவு தப்பிருச்சா , எதுவும் கார் ஆக்ஸிடென்ட் போல ….”

“ச… ச்ச என்னடா கேள்வி இது உனக்கு ஆக்ஸிடென்ட்டலாம்  ஆகல….”

“இல்லையே திருவனந்தபுரம் பக்கத்துல என்னைய மதர் கேட்டப் போ இது கொச்சியானு கேட்டேனாம் ….. அதாவது என்மைன்ட்ல கொச்சின்கிற ஊரு நல்லா பதியப் போய் தானே நான் கேட்டுருக்கேன். அதான என்னைய அங்க கூட்டிட்டுப் போனாங்க….”

“உனக்கு ஒன்னும் இல்ல. அங்கயும் நமக்கு பிஸ்னஸ் உண்டு… ரொம்ப நாளா அங்க போய் பார்க்கல….அதான் யோசிச்சுட்டு இருந்தேன் …நீ உன் பிரண்ட்க்கு கொடுக்க வேண்டியது எல்லாம் சரியா எடுத்துக்கிட்டியா…. ” என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றி விட்டான்.

அவர்கள் கொச்சினை அடைந்து அங்கு சிறிய தீவு போன்ற இடத்தில் இருந்த ஒர் மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றனர். “என்னத்தான் அத்தை நமக்கு இங்கயும் ஒரு வீடு இருக்குச் சொன்னாங்க , நீங்க ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க ….. ஆனா ரொம்ப நல்லா இருக்கு … நான் துரத்துல இருந்து ஆச்சரியபட்டு பார்த்த இடத்துல வந்து தங்குவேன்னு நினைக்கவே இல்லை.”

” இந்த சந்தோஷத்தப் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு … இந்த பால்கனில நின்னு நைட் கடல் பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கும் அது தான் இங்க தங்க ஏற்பாடு பண்ணினேன் …. சரி சரி கிளம்பு”

அதன் பிறகு கிளம்பி நான்சியின் வீட்டை அடைந்தனர். நான்சியின் பிறந்துப் பத்து நாளேயான அந்த பூக்குவியலை மடியை விட்டு இறக்க மனமில்லை ராதிகாவுக்கு . குழந்தைக்கும் தோழிக்கும் வாங்கியப் பொருட்களை அவள் மறுக்க மறுக்க அவர்கள் வீட்டில் வைத்து விட்டு , அவள் முன்பு தங்கி இருந்த தேவாலயத்தோடு இணைந்த பள்ளி வளாகம் சென்று அனைவரையும் சந்திக்க வைத்து அழைத்து வந்தான்.

ராதிகாவின் மனம் முழுவதும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே. அந்த பரவசத்தோடே அறைக்கு வந்து மகனை உடல் கழுவி உறங்க வைத்தவள் , பால்கனியில் நின்று அரபிக் கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவனின் முதுகில் முகம் புதைத்து கைகளை முன்புறம் கொண்டு அரவிந்தை அணைத்துப் பிடித்தவளை , ” ரதி ” என்றழைத்து முன்புறம் கொண்டு வந்து அணைத்துக் கொண்டான்.

“அத்தான் .….நான் இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ….இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம் …. ஐ லவ் யூ அத்தான்…. ஐ லவ் யூ”

அவள் உச்சந்தலையில் முகம் பதித்து , “உன் முகம் பார்த்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன்டா…. அது எப்படி ராதிகா தான் எல்லாரையும் மயக்கி வச்சுருந்தான்னா ஜெனி அதுக்கும் மேல …. ஜெனிசேச்சி , ஜெனி மோள், ஜெனி ஜெனி….. எத்தனை பேரு , அதுவும் அந்த சார் உன்னையப் பார்த்து ஏக்க மூச்சு விடுறார் .” என்று புன்னகைக்கவும் ,

“அது அவர் என்னைய லவ் பண்றேன் , கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்னு சொல்லிட்டு இருப்பார்….ஆனா அவருக்குத் தெரியாதே என் உடல் தான் இங்க இருந்துருக்கு….உயிர் அரவிந்த் கிட்டயும் , ஸ்ரீராம் கிட்டயும் இருந்துருக்குனு ….”

“ஷ்யர்…ஷ்யர்… சரி நாளை காலைல கிளம்பணும் போய் படுக்கலாம் … “

“ம்…. படுக்கலாம் …. ஆனா அத்தான் ….. “

“சொல்லுடா … “

“நாம அப்புறம் தூங்கலாம் ….. எனக்கு … எனக்கு.. நீங்க வேணும்… அதாவது … எந்தக் கட்டுப்பாடும் இல்லாம …. ஸ்ரீ குட்டிக்கு ரெண்டு வயசு ஆகிருச்சு …. அவருக்கு தங்கச்சிப் பாப்பா வேணும் … மொத்தத்துல ராதிகா ஸ்ரீய வயித்துல வச்சுருத்தப்போ இருந்த உணர்வுகள் ….. ஜெனிஃபர்க்கு வேணும்…. உங்களை …. உங்க காதலை உணர்ந்த எனக்கு தாய்மையையும் உணர ஆசையா இருக்கு அத்தான் ….”

மனைவியின் ஆசையையும் கோரிக்கையையும் கேட்ட அரவிந்த் அப்படியே உறைந்து நின்றான்.

                                             காதல் அழகானது…..