அழகு 13

           அரவிந்தை யாரோ திட்டுகிறார்கள் …. அவர்களிடம் “திட்ட வேண்டாம் ” என்று சொல்ல நினைக்கிறாள் ராதிகா … ஆனால் வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் பேச முடியவில்லை. தலை வலிப்பது போல் இருக்கவும் கையை எடுத்து நெற்றிக்கு கொண்டு செல்ல முயலவும் ,

“ஷ் … பேஷன்ட் கண் விழிக்கப் பார்க்கிறாங்க..” எனவும் , மெதுவாக கண்களை பிரித்தவளைச் சுற்றி டாக்டர்களும் நர்ஸ்களும் நிற்க , அருகிலேயே அரவிந்தும் நின்றுக் கொண்டிருந்தான்.

மெதுவாக எழ முயன்றவளை பிடித்து தடுத்த அரவிந்த் , “படுடா… படுடா… “

“இல்ல இருக்கட்டும் அத்தான்… நாம ஹாஸ்பிட்டல்லயா இருக்கோம். குட்டி …குட்டி ..தேடுவார் … வாங்கப் போகலாம். லைட்டா தலை வலிச்சது அவ்வளவுதான் “

அருகில் வந்த வயதில் மூத்த டாக்டர் ஒருவர் … ” அதேதான் மோளே … ஒரு சின்ன தலைவலிக்கு உங்க ஹஸ்பன்ட் ரொம்ப டென்ஷனாகிட்டார். உங்களுக்கு ஒன்னுமில்ல நீங்க வீட்டுக்குப் போகலாம்” என மலையாளத்தில் பேச்சுக் கொடுத்தார். சிறிது நாட்கள் கேரளாவில் இருந்ததால் அவர் பேசுவதும் நன்றாகவே புரிய அவரிடம் புன்னகையோடு பேசிக் கொண்டிருந்தாள்.

இருவரும் கிளம்பி காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்யப் போனவன் , ஏதோ நினைவு வந்தவனாக…

“நீ கார்ல இருடா , ஒரு நிமிஷம் நான் பேசிட்டு வாறேன்…” என அவளிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். மருத்துவரிடம் தனியாக பேசிவிட்டு வெளியே வந்தவனுக்கு காரைக் காணவில்லை என்றதும் அதிர்ச்சியாக வாசல் அருகே வந்து செக்யூரிட்டியிடம் விசாரித்ததில் ராதிகா தான் காரை எடுத்துக் கொண்டுப் போனதாக தெரிவித்தார்.

அவன் அதிர்ந்து திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகவே அருகில் வந்துக் காரை நிறுத்தியவள் , மலர்ந்த முகத்தோடு இறங்கி , “அத்தான் … நான் கார் ஓட்டப் பழகியிருக்கேனோ , இந்தச் சாவியப் பார்த்ததும் ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தேன் …கையும் காலும் தானா வேலையப் பார்க்க ஆரம்பிச்சுடுச்சு ….அப்புறம் பிடிபட்டுருச்சு ….”

கார் ஓட்டி பழகி முதன்முதலாக தனியாக ஓட்டும்போது இவனைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்த ராதிகாதான் அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தாள்.புன்னகையோடு அவளிடம் ,

“ம்…. நீ ரொம்ப அழகா ஓட்டுவ…. அப்ப அப்ப கொஞ்சம் தூரம் ட்ரைவ் பண்ணு டச் விட்டுப் போகாது … அப்புறம் நீ…..” என்றவன் அவளுடன் பழைய மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தான்.

 ஆம் மருத்துவர் இப்போது அவனிடம் அது தான் சொல்லி அனுப்பி இருந்தார். ராதிகா இப்போது என்ன மனநிலையில் இருக்கிறாளோ அவளை அப்படியே இருக்க விடுங்கள்… பழைய ஞாபகங்கள் அவளுக்காவே நியாபகம் வர வேண்டும் ,என்ன காரணத்தால் அவள் இப்படி ஆனாளோ அதை நினைவுப்படுத்த வேண்டாம்…. மற்றபடி மனைவியை மனைவியாக பாருங்கள் , நோயாளியாக பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

வீட்டில் பதற்றமாகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டே வருவதைக் கண்டு திருப்தியடைந்தனர். உள்ளே வந்தவள் மகனைத் தேட அவன் உறங்குவதாகத் தெரிவிக்கவும் மகனைக் காண அறைக்குச் சென்று விட்டாள்.

தாயம்மாவிடமும் ஜானகியிடமும் மருத்துவர் சொன்னதைச் சொன்னவன் ,

“ம்மா நான்தான் மா தப்பு பண்ணிட்டேன் …. ” என்றவன் அருகே வந்த ஜானகி , அவன் கைப்பிடித்து , ” ராதிகாவுக்கு இப்ப நம்ம அன்பும் அரவணைப்பும் தான் பா தேவை…. பரிதாபம் கிடையாது…. பழைய நிலைமைக்கு வந்தாதான் வாழ்க்கைய ஆரம்பிக்கனும்னு நினைக்கிறது முட்டாள் தனம்.

வாழ்க்கைய சந்தோஷமா ஆரம்பி… அதை அவ சந்தோஷமா அனுபவிச்சு வாழ ஆரம்பிச்சுட்டா என்னக் காரணத்தால அவ நியாபகங்கள் போச்சோ அது நியாபகம் வந்தாக் கூட அவளால இயல்பா ஏத்துக்கிற மனப்பக்குவம் வந்துரும்….. அம்மா அனுபவத்துல சொல்றேன்பா… இதுக்கு மேல உன் விருப்பம் … ” என்றவர் அறைக்குள் சென்று விட்டார் .

மருத்துவரின் அறிவுரை ஜானகியின் பேச்சு எல்லாம் கேட்டவன் … தங்களது அறைக்குள் செல்ல , பின்னாலயே மகனைத் தோளில் போட்டுக் கொண்டு ராதிகாவும் வந்தாள்.

“என்னையத் தேடி அழுதுட்டே தூங்கியிருக்கார் … அதான் இங்கயே தூக்கிட்டு வந்துட்டேன். குழந்தையை அவள் தோளிலிருந்து வாங்கி படுக்கையில் வசதியாகப் படுக்க வைத்துவிட்டு,

அவளை கட்டிலருகே அழைத்துச் சென்றவன் , அவன் அமர்ந்து அவளை மடியில் அமர வைத்து கழுத்து வளைவில் தாடையை வைத்தான். இதை எதிர்பார்க்காத ராதிகா திகைத்து விலகப் பார்க்க , அவளை இன்னும் இறுக்கமாக வயிற்றில் கை வைத்து வளைத்தவனிடமிருந்து திமிறி விலகி பால்கனி சென்று நின்றுக் கொண்டாள். அவள் உடல் ஏனோ நடுங்கிக் கொண்டிருந்தது , கண்களில் இருந்தும் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.

மெல்ல பின்னால் வந்து நின்றவன் அவள் தோள் தொட்டு திருப்பி , ” ஏன் இப்ப ஓடிவந்த… ம் … ” என ஒரு கையால் அவள் கண்களை துடைத்துக் கொண்டே கேட்டான்.

“அது… அது … “

“நம்ம குழந்தைக்கு தாயா ஏற்க முடிஞ்ச உன்னால … என்னைய கணவனா ஏற்க முடியல அப்படித்தானே …..”

தன் மொபைலை எடுத்து அவளிடம் காட்டியவன் , ” இங்கப் பார் என்னோட பெர்சனல் ஃபோல்டர்ல நாம பெர்சனலா எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ் ….. எவ்வளவு நெருக்கமா இருக்கோம் பார்த்தியா ….” என அவளிடம் கேட்க,

விரலால் தள்ளிக் காட்டியஅந்தப்  ஃபோட்டோக்களைப் பார்த்த ராதிகாவுக்கு முகமெல்லாம் குங்கும நிறம் கொள்ள ஆரம்பித்தது , அப்படியே இரு கைககளாலும் முகத்தை மூடிக் கொண்டவள் கரங்களை மெல்லப் பிரித்தவன் ,

” இதையெல்லாம் பார்த்து உன் மனசு என்னைய ஏத்துக்கணும்கிறதுக்காக காட்டல டா .இப்படி இருந்த நம்மள விதி இப்ப எப்படிக் கொண்டு நிறுத்தியிருக்குப் பார்த்தியா …..” பெரிதாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன் , பால்கனி கம்பியை இறுக்கமாக பிடித்துக் கொண்டே ,

“கணவன் மனைவிக்கான இந்த நெருக்கமும் அன்யோன்யமும் சொல்லிப் புரிய வைக்க முடியாது மை டியர்….. அந்த உணர்வுதானா வரணும் ….அத எப்ப நீ உணர ஆரம்பிக்கிறியோ அப்ப நாம  அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கலாம் … இப்படி உன்னையப் பக்கத்துல வச்சுட்டு ஒரு ஹஸ்பன்டா என்னால எப்படி தள்ளி இருக்க முடியும் …. அதுதான் கொஞ்சநாள் வெளியூர்ல இருந்து உனக்கு யோசிக்க டைம் தரலாம்னு பார்த்தேன் …. நீ என்னடானா நான் சொன்னதுக்கே மயங்கி விழுந்துட்ட….. “

அவள் வதனத்தை இருக்கரங்களில் ஏந்தி அவள் விழிகளுக்குள் தன் விழிகளை கலக்க விட்டவன் …..

” பதறிட்டேன்டா ..… இனி தள்ளி இருந்து உன்னை சோதிக்க மாட்டேன்.……உன்னைய எனக்கு நல்லாத் தெரியும் டா:.. அது போல நீயும் என்னைய முழுசா தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு ஒகே … இப்ப நான் ஆஃபிஸ் போய்ட்டு வாறேன். எதையும் போட்டு குழப்பாம நிம்மதியா படுத்து தூங்கி எழுந்து யோசி சரியா….” என்றவன் , அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டுச் சென்றான்.

அரவிந்தின் மீதான காதல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேப் போவது போல் உணர்ந்தாள் ராதிகா …. கணவனை நினைத்துக் கொண்டே கண்ணயர்ந்தவள் , குழந்தையின் அழுகுரல் கேட்டுத்தான் கண் விழித்தாள். எழுந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு வர , அங்கு ஹாலில் அமர்ந்து அனைவரும் டிவியையேப் பார்த்துக் கொண்டிருந்தனர். மொபைல் மூலமாக டிவியில் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் கவனித்தாள் அமுதா சக்திவேலின் வரவேற்பு நிகழ்ச்சியை நேரலையாக அனன்யா தன் மொபைலில் படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கிறாள் என்பதை. அனன்யாவும் ராதிகாவைப் பார்த்ததும் , வெனிஸ்தா மதர் , அமுதா , அனிதா , பார்வதியம்மா .. குப்பம்மா என அவள் அன்புக்குப் பாத்திரமான அனைவரையும் காட்டவும் மகிழ்ந்துப் போன ராதிகா , தன் கணவன் ,குழந்தை ,மாமியார் , தாயாம்மா என அனைவரையும் பெருமையோடு வீடியோவில் அறிமுகப்படுத்திக் கொண்டாள். ராதிகாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்த அனைவருமே மகிழ்ச்சியடைந்தனர்.

அரவிந்துக்கோ மனைவியின் கண்களும் உதடுகளும் செய்யும் ஜாலங்களை ஓரளவுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளிடம் தன்னுடைய மொபைலை கொடுத்து , “ஃபங்க்ஷன்  முடியறவரை பார்த்துட்டு வாங்க” என்றான்.

மகனை வாங்கிக் கொண்டு சென்று விட்டான். அங்கு விருந்தினர்கள் வருகை குறைந்து உணவு உண்ணசெல்லவும் , இங்கும் நேரமானதால் ,

“ராதாம்மா நாங்க சாப்பிட்டுக்கிறோம். நீயும் உனக்கும் அரவிந்துக்கும் மாடிக்கு எடுத்துட்டுப் போ” எனவும் அவளும் எடுத்துக் கொண்டு அறைக்கு செல்ல … மொட்டை மாடி கதவு திறந்திருப்பதைப் பார்த்து பாத்திரங்களை அறையில் வைத்து விட்டு மாடிக்குச்  சென்றாள்.

கணவனும் மகனும் அங்கிருந்த மாடித் தோட்டத்தில் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து கொண்டாள். இவளைக் கண்டதும் ஓடி வந்த குழந்தையை அணைத்து கொஞ்சி தோளில் தட்டி தூங்க வைக்கும் வரை கைகட்டி அவனும் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

“அத்தான் தூங்கிட்டாரு, வாங்க நாம போய் சாப்பிட்டு படுக்கலாம் … “

“ம்” என்றவன் அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு ,

“ஸ்வீட்டி….இந்த மாடித் தோட்டம் ஞாபகமிருக்கா…”

அழகியத் தோட்டத்தை சுற்றிப் பார்த்தவள் ,

“இல்லையே….அங்க திருப்பூர் வீட்லயும் இப்படி அழகா மாடித் தோட்டம் இருக்குனு மட்டும் தெரியும். வேற எதுவும் ஸ்பெஷல் இருக்காத்தான் ….” என கண்கள் விரிய கேட்டவள் அருகில் நெருங்கி , இரு கண்களையும் உதடுகளால் ஒற்றி எடுத்தான்.

“இது தான் ஸ்பெஷல் ….. நான் முதன் முதல்ல உனக்கு இங்க வச்சுதான்….. இந்தக் கண்களுக்குத்தான் முதல் முத்தம் தந்தேன்…. அது எனக்கு ஸ்பெஷல் இல்லையா…..” நாணம் கொண்டவள் ,

” நேரமாகுது சாப்பிடலாம் வாங்க ….” என்றவாறு கீழே இறங்கிச் சென்றாள். வந்தவனிடம் “அத்தான் என்னோட டேப்ளட்ஸ்….. ஒன்னுமே இல்லயே … “

அவள் மூடி வைத்திருந்த தட்டில் இருந்து உணவு எடுத்து அவள் வாயருகே கொண்டு செல்லவும் , அவனைப் பார்த்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.

“இனி உனக்கு எந்த டேப்ளட் ஸ்ம் வேண்டாமாம். ஒரே ஒரு டேப்ளட் தான் … “

“அப்படியா…. ரொம்ப சந்தோஷமாயிருக்கு அத்தான் … ஆனா அந்த ஒன்னையும் காணோமே … “

“இங்க தான் இருக்கு ….அந்த டேப்ளட் பேரு அரவிந்த் ” என கண் சிமிட்டவும் ,

“ஆங் … ” என்று கண்கள் விரித்து , அவன் ஊட்டிய சப்பாத்தி துண்டு வாயில் வைத்துக் கொண்டே “ஆங்” என்றவள் அழகை அதற்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. தட்டைக் கீழே வைத்தவன் , அவனை மயக்கும் கண்களுக்கு அழுத்தமான முத்தத்தை தந்து விட்டு , ராதிகாவின் இதழை முற்றுகையிட்டான்.

காலையில் இருந்த திகைப்பு,நடுக்கமெல்லாம் இப்போது அவளிடம் இல்லை. கணவனது இதழ் செய்யும் மாயத்தை மனைவியாக உணர்ந்துக் கொண்டிருந்தாள்.

மெல்ல அவளை விடுவித்தவன் வாயில் அவன் அவளுக்கு ஊட்டிய சப்பாத்தி துண்டு , அவள் சிவந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே ,

“ஏன் டியர் , சப்பாத்திக்கு குருமா தானே கொண்டு வந்த ….. உப்புக்கு பதிலா சீனி போட்டுட்டியா ….இவ்வளவு ஸ்வீட்டா இருக்கு …..”

பட்டென்று அவனது மீசையைப் பிடித்து இழுத்தவள், “அத்தா….ன்ன்” என சினுங்கிக் கொண்டே ,

“எனக்குக் கூடத்தான் டெய்லி சாப்பிடுற டேப்ளட் கசக்கும் … இன்னைக்கு இப்படி ஸ்வீட்டா இருக்கு…. ” என்றவாறு சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ஆனந்த அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தான் அரவிந்த் …. அவனவள்…. ஆம் என்னவள் திரும்புகிறாள் என்ற நிம்மதி , அவன் குறும்பு பேச்சு பேசும் போதெல்லாம் அவன் மீசையை இழுத்து அவனுக்கு பதில் தரும் அவன் ரதி….. அப்படியே கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டு இருந்தவன் எப்போது உறங்கினானோ , விழிப்பு வந்தவன் அருகில் அவன் ரதியும் உறங்கிக் கொண்டிருந்தாள்.