ஊட்டி தேயிலை தொழிற்சாலை உரிமையை சக்திவேல் பெயருக்கு மாற்றி இருந்தான். தாயம்மா அருகில் வந்தவர் , “என் பேரப் புள்ளைங்க ஒவ்வொருத்தரும் தங்க கட்டிங்க கண்ணு … அம்மு அம்மினி சத்திய நல்லாப் பார்த்துக்க கண்ணு” என அவர்களுக்கு விடை கொடுத்தார்.

அன்று முழுவதும் விளையாடிக் கொண்டே இருந்ததால் அரவிந்தின் மகன் நேரத்தோடே தந்தையின் தோளிலேயே உறங்கி விட்டான். குழந்தையை அறைக்கு தூக்கிச் சென்று , தொட்டில் போன்ற கட்டிலில் வசதியாகப் படுக்க வைத்த அரவிந்த் அவனும் சிறிது நேரம் அறையிலயே படுக்க அப்படியே உறங்கி விட்டான்.

அறையின் தொலைப்பேசி அடிக்கவும் தான் கண் விழித்த அரவிந்த் தொலைப்பேசியை எடுத்துக் காதில் வைக்க ,

” என்ன கண்ணு ரெண்டு பேரும் வந்து சாப்டுட்டு போங்க… சின்னவர் அழுதா பார்த்துக்கலாம்”

அறையை கண்களால் அளந்தவன் “ரதி வந்தது போலவே இல்ல…. தாயம்மா ரெண்டு பேரும் இங்க இருக்கிறப்போல சொல்றாங்க” எண்ணமிட்டவாறே வருவதாக தெரிவித்தான். குளியலறை பால்கனி எல்லாமே பூட்டப்பட்டிருக்க ,

“இன்னைக்கும் தனியா வா படுத்திருக்கா … “எண்ணியவாறேக் கதவைத் திறக்க , வாசலில் தரையில் குழந்தைக்கான பால் புட்டியோடு ராதிகா அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து நின்றவளிடம் ,

“என்னடா இங்க போய் உட்கார்ந்துருக்க, உள்ளவர வேண்டியது தான….”

தலையை சரித்து குறும்பு பார்வைப் பார்த்துக் கொண்டே , “அத்தான் …. நான் முதன் முதல்ல இந்த ரூம் குள்ள வரும் போது எப்படி வந்தேன்….” எனப் புருவம் ஏற்றி இருக்க ,

அதில் கவரப்பட்டவன்… “அது நான் ….”

“என்னைய தூக்கிட்டுப் போனீங்க அப்படித்தானே…. “

சட்டென்று அவள் முகம் பார்த்தவன்’ பழைய நினைவு திரும்பி விட்டதோ என்று எண்ணும் போதே , “அன்னைக்கு கால்ல அடிபட்டுச்சு … அதனால நீங்க தூக்கிட்டு போயிருக்கலாம் …. ஆனா இப்போ அப்படி இல்ல …. முதன் முதலா என் நினைப்பு மனைவிங்கிற உரிமையோட வரப்போ உங்க கைல தான் உள்ள வரணும்னு தோணுது…. இது ஏன்னு எனக்குத் தெரியாது… இப்படி உங்க கிட்ட கேட்கிறதும் எனக்கு தப்பா தெரியல….”

அவள் முன்பு புன்னகைக்க மறந்தவன் போல் இத்தனை நாட்கள் இருந்தவன் … இப்போது அவளது பேச்சில் முகம் மலர்ந்து சிரித்தான்.

பட்டு வேட்டி சட்டையில் இரு கைகளையும் இடுப்பில் வைத்து நின்றவனை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ராதிகாவிற்கு ,

“என்னப் பேச்சு பேசுறா…. தூக்கிட்டு உள்ள வந்தாலே ஆயிரம் கேள்வி கேட்பா… உன்னை ….என் கிட்ட சகஜமா இருக்க முயற்சி பண்ற” என நினைத்துக் கொண்டே

அருகில் வந்தவன்….. அவளை கைகளில் ஏந்த , அதுவரை இலகுவாக இருந்தவளுக்கு இப்பொழுது உடல் நடுங்க ஆரம்பித்தது … கையில் பால் புட்டி வைத்திருந்தவள் ஒற்றைக் கையால் அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டும் , நாணம் கொண்ட முகத்தை அவன் நெஞ்சிலும் புதைத்துக் கொண்டாள்.கட்டிலருகே சென்றவனுக்கோ இறக்கி விட வே மனதில்லை , சிவப்பேறிய கன்னத்தோடு கன்னம் உரசப் போனவன் , தொலைப்பேசி ஒலியில் அவளைக் கட்டிலில் இறக்கி விட்டு ,

“தாயம்மா நம்மள சாப்பிடக் கூப்பிடுறாங்க ….வா போகலாம் … ” என அறையை விட்டு வெளியேறினான்.

அவனுக்கு குழப்பமாக இருந்தது … ராதிகாவுக்கு பழைய ஞாபகங்கள் இல்லாமல்  எப்படி மனைவி என்ற உரிமையை எடுப்பது .… யோசித்துக் கொண்டே படியிறங்கியவனின் தோற்றத்தைக் கண்ட தாயம்மா ,

“கண்ணு ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்றவாறு அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

“என்ன இது தட்டுக் கூட எடுத்து வைக்காம போய்ட்டாங்க….என எழுந்து தட்டு எடுக்கப் போனவனை , ” நான் வைக்கிறேன் அத்தான் ” என்றவள் அவனுக்கு உணவுப் பரிமாற , சாப்பிடப் போனவன் அருகில் அமர்ந்துக் கொண்டாள். அவளுக்கு உணவு இல்லாததைப் பார்த்து ,

“நீயும் சாப்பிடுடா”

“இப்பதான் நிறைய மாத்திரைகள் போட்டேன் , கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுட்டு திரும்பவும் மாத்திரைகள் போடணும்.

முன்னெல்லாம் மதர் மனசு கஷ்டபடக்கூடாதுனு வேண்டா வெறுப்பா மாத்திரை போடுவேன்.

ஆனா இப்போ … நம்ம பிள்ளைக்கூடவும் , உங்கக் கூடவும் ரொம்ப நாள் வாழனும்னு ஆசைப்பட்டு மாத்திரை போடுறேன் அத்தான் …. எனக்கு பழைய ஞாபகங்கள் வருதோ இல்லையோ … இப்ப இருக்கிற இந்த உடல் ஆரோக்யமா இருந்தா போதும் “

“அப்படிலாம் சொல்லாத … சீக்கிரமே எல்லாம் ஞாபகத்துக்கு வரும் ….நாளைக்கு இங்க உள்ள டாக்டர்கிட்டயும் பார்த்து ஒபினியன் வாங்கிக்கலாம்.” என்றவன் தட்டை மூடி வைத்துவிட்டு நீ சாப்பிடும் போது சாப்பிடுறேன் என எழ ,

“அத்தான் ” என்று வேகமாக அழைத்தாள். அவளின் அழைப்பில் என்னவோ ஏதோ எனப் பதறி, “என்ன… என்னடா ” என ,

முகம் சிவந்துக் கொண்டே ” உங்க உங்க ஷர்ட்ல ….” என விரல் நீட்டிக்காட்ட , அப்பொழுதுதான் கவனித்தான் , அவள் நெற்றிக் குங்குமம் அவனது சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்ததை ….

குனிந்துப் பார்த்தவன் “ஐயோ அதான் தாயம்மா அப்படி ஓடினாங்களா…” அவளிடம் “நான் போய் ஷர்ட் மாத்திட்டு வாறேன்.” முன்பாக இருந்திருந்தால் இன்னும் குறும்பாக பேசி அவளை மேலும் சிவக்க வைத்திருப்பான் … ஆனால் இப்பொழுது குழப்பத்தில் இருந்ததால் சிந்தனையோடுதான் மாடியேறினான்.

தள்ளி இருக்கும் போது அவளது சந்தோஷம் முக்கியம் என நினைத்தவன் இப்பொழுது அவளாக நெருங்கிப் பேசினாலும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

என்ன செய்யலாம் எனச் சிந்தித்துக் கொண்டே குளியல் போட்டு வெளியே வர , உணவுப் பாத்திரங்களோடு ராதிகா அமர்ந்திருந்தாள். துண்டுடன் வெளியில் வந்தவன் கண்ணாடி முன்பு நின்று தலை துவட்ட , ராதிகா அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவன் இப்படி குளித்து விட்டு வந்து நின்றாலே முதுகோடு கட்டிக் கொள்ளும் ராதிகாவின் ஞாபகத்தில் கண்ணாடியில் புன்னகைக்க , அவளுக்கோ முகமெல்லாம் சிவந்து எழுந்து சென்று பால்கனியில் போய் நின்றுக்கொண்டாள்.

அவள் அப்படிச் செய்யவும் தான் தனது குழப்பத்தை உணர்ந்தவன் , வேகமாக உடை மாற்றிவிட்டு , ” நீ சாப்பிட்டு மாத்திரைப் போட்டுத் தூங்குடா  , நான் கொஞ்சம் ஆஃபிஸ் வொர்க் முடிச்சுட்டு வாறேன்” என்று அறையை விட்டு வெளியேறி விட்டான்.

கீழே அலுவலக அறை சென்றவன் , அப்படியே அந்த சுழற்நாற்காலியில் அமர்ந்து மேசையில் தலை கவிழ்த்து படுத்துவிட்டான்.

“என்னையப் பார்த்து இப்படி வெட்கப்பட்றா… கடவுளே அவளோடு சந்தோஷமா குடும்பம் நடத்தி குழந்தையும் பெத்து …. ஆனா ஆனா ….அவள் உலகத்தில இன்னைக்குத் தான்  நான் அவள் கணவனா அறியப்படுறேன்…. எப்படி…. எப்படி என்னால அவகிட்ட இயல்பா இருக்க முடியும் …..”

அங்கு அறையிலோ , அரவிந்த் சொன்னது போல சாப்பிட்டு விட்டு காத்திருந்தவள் நேரம் ஆக ஆக மாத்திரைகளின் வீரியத்தில் உறங்க ஆரம்பித்து விட்டாள். ஒருவாறு யோசித்து முடிவெடுத்து இரவு ஒரு மணி போல் அறைக்கு வந்தவன் கட்டிலில் சிறிது இடைவெளி  விட்டுப் படுத்து விட்டான்.

மறுநாள் மணக்க மணக்க காஃபியோடு அவனைத் தொட்டு எழுப்பியவளை விழியகற்றாது பார்க்க , உடலின் ஒவ்வொரு செல்லும் அவளை ஆட்க்கொள்ளத் துடிக்க ….. மூளைக்கு அவன் எடுத்த முடிவு சரியெனவேப்பட்டது.

“அத்தான் நைட் நீங்க சாப்பிடாமலயே படுத்துருக்கீங்க…. காஃபி குடிங்க “அவள் கையால் வாங்கிக் கொண்டவன் முதல் நாள் எடுத்திருந்த முடிவின்படி ….

“ரதி…. நீ என்ன படிச்ச, படிச்சிட்டிருந்தனு அனு சொல்லிருப்பானு நினைக்கிறேன் … நாம டாக்டர்க்கிட்ட ஒபினியன் கேட்டுட்டு உன்னால படிக்க முடிஞ்சா படி…  குழந்தைய கவனிக்கிற நேரம் போக மற்ற நேரங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பிப்பியா ….”

முகம் மலர்ந்தவள், ” கண்டிப்பா ட்ரை பண்றேன் அத்தான். “

“உனக்கு என்ன டவுட்னாலும் ரமேஷ் ,அனுகிட்ட கேளு அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க….”

“ம்… ம் ஓகே…. ஏன் நீங்க ஹெல்ப் பண்ண மாட்டீங்களா…..” என விளையாட்டாக கேட்க ,

கட்டிலை விட்டு இறங்கிக் கொண்டே , ” பண்ணலாம் ….. ஆனா இன்னும் ஒரு வாரத்துல  நம்ம லண்டன் கம்பெனிய பார்க்கிறதுக்காக கிளம்புறேன். வர எப்படியும் மூணு நாலு மாசமாகலாம்…”

அவன் சொல்ல நினைத்ததை எப்படியோ சொல்லி முடிக்க … ராதிகாகதான் தலையைப் பிடித்துக் கொண்டவள்  ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று விட்டாள்.

மூளையில் பதிந்த உணர்வு இதுதான் “அரவிந்த் வெளிநாடு போகிறான்  ….. அவளை விட்டுப் போகிறான்……”

                     காதல் அழகானது…….