அழகு 12

        முகச் சிவப்பினூடே வெளியில் வந்தவள் , மாடியிலிருந்து மெதுவாக இறங்கிக் கொண்டே தந்தையும் மகனும் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டே வந்தாள். ராதிகா இறங்கி வருகிறாள் என்றதும் அவளைப் பார்த்த அரவிந்தும் மனைவியைப் பார்க்க அவன் விழிகளை தொட்டுப் பார்த்த ராதிகாவின் விழிகள் நாணம் கொண்டு சிறகடிக்க ஆரம்பித்தது. உணர்ந்தாள் …..பெண்ணானதை இன்று தான் உணர்ந்தாள்…

‘உன்னாலே நான் பெண்ணானேனே …. உன்

 

  கண்ணாலே நான் பொன்னானேனே…’

அரவிந்துக்கோ சொல்லவே வேண்டாம்….” இது கண்ணா இல்ல என் உயிரை உள்ள இழுக்குற புதை குழியா … இன்னும் இப்படிப் பார்த்த என்னையக் கன்ட்ரோல் பண்றது கஷ்டம்டா”

முகம் சிவந்து விழிகள் அலைப் பாய்ந்தாலும் , புதிதாய் தோன்றிய காதல் என்ற உணர்வு அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னது. இத்தனை நாட்கள் கண்ணில் படாத அவனது தோற்றம்…..

“ம்…… ஹான்ட்ஸம்…. நார்மல் ஜுன்ஸ் டி ஷர்ட்லயே …. அசத்துறிங்களே அத்தான் ….. உங்க நடை உடை பேச்சு அன்பு இது எதுலயுமே நான் கவரப்படலயா…. எப்படி …. அப்ப எப்படியோ இப்ப ….” என்று எண்ணிக் கொண்டே அவனருகில் வந்தவள் , குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு மறுபடியும் அவனைப் பார்க்க ,

“ரதி உன்னைய கல்யாணம் பண்றதுக்கு முன்னாலயே … இந்த கண்கள்ல முத்தம் கொடுக்க நினைச்சவன் நான்….. இப்படிப் பார்த்த …..” என்றவன் பெருமூச்சு விட்டுக் கொண்டே ,

” ரமேஷ் , சக்தி கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் வாங்க” என்று வாசலை நோக்கி நடந்தான்.

“அத்தான்…. ” என்று அழைக்கவும் நின்ற அரவிந்த் , “என்ன” என்பது போல பார்க்க ,

“எனக்கும் பையனுக்கும் சிலது வாங்கணும் எங்களையும் கூட்டிட்டுப் போங்க…”

அனைவரும் ராதிகாவை ஆச்சரியத்தோடுப் பார்த்தனர். இத்தனை நாளாக இருக்கும் இடம் தெரியாது அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டே இருப்பவள், இன்று அரவிந்தை உரிமையோடு சத்தமாக அழைத்துப் பேசவும் ,

“மச்சான் நீ தங்கச்சியக் கூட்டிட்டு கிளம்பு , நான் இங்கப் பார்த்துக்கிறேன்.” என்ற ரமேஷ் அரவிந்த் தோளில் தட்டிவிட்டுச் சென்றான். மனைவி மகன் எனத்  தன் குடும்பமாக முதல் முறையாக காரில் செல்வது அரவிந்துக்கு உற்சாகத்தை அளித்தது.

“ஸ்ரீ குட்டி அம்மாவுக்கு என்ன வாங்கணும் எங்கப் போகணும் கேளுங்க….”

அரவிந்த் முகத்தையேப் பார்த்து , ” நகைக் கடைக்கு கூட்டிட்டுப் போங்கத்தான் “

” நேற்றே வந்திருந்தாங்களே அதுல எந்த டிசைனும் பிடிக்கலயா …சொல்லிருந்தா வீட்டுக்கு கொண்டு வர வச்சுருப்பேனே”

“நேத்து வாங்கணும்னு தோணல , இப்ப வாங்கியே ஆகணும்னு தோணிச்சு ….அப்புறம் உங்கக் கூட தனியா  வெளிய வர ஆசைப்பட்டேன் அதான்…” அதற்கு மேல் என்ன சொல்லுவான் .. ஊரின் மிகப் பெரிய நகைக் கடையில் கொண்டு தான் காரை நிறுத்தினான்.

ஒரு மிகப் பெரிய தொழிலதிபன் தங்கள் கடைக்கு நேரடியாக வரவும் அங்கிருந்த ஊழியர்கள் பரபரப்பாகினர். மோதிரப் பிரிவுக்கு அழைத்துச் செல்லும்படிக் கூறவும் வைர மோதிர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள். குழந்தையைக் கையில் வாங்கிக் கொள்ளவும் , தன் விரலில் போட்டுப் பார்த்து தேர்ந்தெடுத்தவள் , இன்னொன்றை அவன் விரலில் போட்டுப் பார்க்க சொல்லி வாங்கிக் கொண்டாள். அவனுக்கு காரணம் புரிந்தது … எனவே அமைதியாகவே வந்தான்.

காரில் ஏறியவள் “அத்தான் இந்த சர்ச்க்கு கூட்டிட்டுப் போங்களேன் ப்ளீஸ்….” என மொபைலில் திருப்பூரில் உள்ள ஒரு பிரபல கிறிஸ்தவ பேராலயத்தைக் காட்டினாள்.

” ஹேய் ஸ்வீட்டி ஆர்டர்  போடுடா ப்ளீஸ்லாம் கேட்காதடா…” என்றவன் அவள் சொன்ன தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் சென்ற நேரம் அதிக கூட்டமில்லை. உள்ளே சென்று பிரார்தித்தவள் அரவிந்தை திரும்பிப் பார்த்து ,

“அத்தான் நான் அன்னைக்கு கேட்டதுக்கப்புறம் நீங்க ஒன்னுமே சொல்லல….. நீங்க என்ன முடிவுல இருக்கிறீங்கனும் எனக்குத் தெரியல. அம்மு கல்யாணத்துல எந்த உறுத்தலும் இல்லாம உரிமையோட உங்க பக்கத்துல நிக்கனும்னு ஆசைப்படுறேன்.”

திரும்பவும் அங்கிருந்த மாதா சிலையைப் பார்த்து , ” நான் மதர் கிட்ட வந்த நாளிலருந்து மேரி மாதாவ மட்டுமே நம்பி ஜெபிப்பேன். இதற்கு முன்ன இந்துக் கடவுள கும்பிட்டேனா என்னனு தெரியாது…. இப்ப இவங்கதான் என் குடும்பத்துக்கிட்ட என்னை சேர்த்ததா நினைக்கிறேன். அவங்க முன்னாடி நீங்களும் நானும் இதைப் போட்டுக்குவோமா ….. நான்சி கல்யாணம் இப்படி மோதிரம் போட்டு தான் நடந்தது. ” என்றவாறே கண்களில் நீரோடு அவனை ஏறிட்டாள்.

” மை டியர் உன்னை எனக்குத் தெரியாதாடா” என்பதாக குழந்தையை வைத்துக் கொண்டு நின்றவன் , புன்னகையோடு அந்த மோதிரங்களை அவளிடமிருந்து வாங்கி முதலில் அவளைப் போட்டுவிடச் சொன்னவன் , மகனுக்கு முத்தம் தந்து அவளிடம் தந்து விட்டு அவளது வெண்டைப் பிஞ்சு விரலில் போட்டு விட்டான்.

முகத்தில் மலர்ச்சியோடு கடவுளிடம் கரம் குவித்தவள் காதருகில் ,

“இப்போ  போகலாமா ….” என்றான். வீட்டிற்கு வந்தவள் அமுதாவிடம் தன் விரலைக் காண்பித்து விவரம் கூறவும் ,

“ஏன் ஜெனி கிறிஸ்டியன் கல்யாணத்துல மோதிரம் மாத்தினதுக்கு அப்புறம் ‘கிஸ்’ உண்டுனு கேள்விபட்டுருக்கேன் ….வாங்குனியா , கொடுத்தியா…..” என கண் சிமிட்டிக் கேட்கவும் , முகம் சிவக்க “ச்சு… போ அம்மு ” என்று விட்டு நகர்ந்துவிட்டாள்.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சக்திவேல் ” என்ன ” என புருவம் உயர்த்திக் கேட்க … “ஒன்றுமில்லை ” என்பதாக தலையசைத்தவள் , உதடுகள் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை தந்து விட்டு நகர , சக்திவேல்தான் யாரும் பார்த்து விட்டார்களோ என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்து ‘ஊஃப்’ என்று மூச்சு விட்டுக் கொண்டான். ” ராங்கி ரங்கம்மா” என்று புன்னகைத்துக் கொண்டான்.

அருகில் வந்த ரமேஷ் , “ஏன் மாப்ள பிடிச்சிட்டியா” என்றான்.

” என்ன மாமா … “

“ம்… தங்கச்சி பறக்க விட்டத தான் ” எனவும் ,

“ஐயோ மாமா மானத்த வாங்குறா…” என்று வெட்கப்பட்டவனிடம் ,

“டேய் டேய் என்னடா இப்படி வெட்கப்படுற …. உனக்கு தங்கச்சி தான் சரி” என்று தோளில் அடித்துச் சென்றான். இப்படியாக புதுமாப்பிள்ளை பெண்ணை வைத்து நாட்கள் நன்றாக நகர்ந்து , இதோ அதிகாலையில் பெண்ணழைக்க , மாப்பிள்ளை வீட்டு சார்பாக அனன்யா வந்து நின்றாள்.

உறங்கும் குழந்தைகளை ஜானகியிடமும் தாயம்மா விடமும் விட்டுவிட்டு அழகு நிலையப் பெண்களின் கைவண்ணத்தில் இளம்பெண்கள் அனைவரும் ஜொலித்தார்கள்.

” அனு… அம்முவுக்கு மட்டும் போதாதா … எனக்கு எதுக்கு இவ்வளவு மேக் அப் … “

“அண்ணி குழந்தை பெத்துக்கிட்டா மேக் அப் பண்ணக்கூடாதா என்ன … வா வா சீக்கிரம் ” என்றவாறு ராதிகாவும் மணப்பெண் அலங்காரத்தில் ரதியாக ஜொலித்தாள்.

ராதிகாவின் கையைப் பிடித்த அமுதா , ” ஜெனி….. என் வாழ்க்கைல இப்படிலாம் வரும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலடி …. எல்லாம் உன்னால ….” என்று உணர்ச்சி வசப்பட்டவளை தோளோடு அணைத்துக் கொண்டாள்.

கோவை வீட்டின் வளாகத்தில் மேடை அமைத்து திருமணச் சடங்குகள் நடைபெற ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தனர்.

ராணி வந்தவள் ராதிகாவை கைப் பிடித்து மேடைக்கு அழைத்து செல்ல , என்னவென்று புரியாது பார்த்த ராதிகாவை , கணவனோடு வந்திருந்த நான்சியும் , மதர் வெனிஸ்தவும் புன்னகையோடு வரவேற்றனர். கூடவே ஊட்டியில் அவளுக்கு தெரிந்த அனைவரும் அந்த அதிகாலை முகூர்த்தத்திற்கு வந்திருந்தனர்.

மேடையில்  மாலையோடு அமர்ந்திருந்த அரவிந்த் அருகில் ராதிகாவும் அமர , மங்கள வாத்தியங்கள் முழங்க ராதிகாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான்.

அவர்களுக்கு அடுத்து சக்திவேல் அமுதவள்ளியின் திருமணமும் நடைபெற்றது. அருகில் வந்த ஜானகி , ” ராதாம்மா இப்ப உன் மனசு நிறைஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். அம்மா போன தடவை என் இஷ்டத்துக்கு தாலி கட்டினதால தான் இப்படிலாம் ஆச்சோனு பிள்ளை ரொம்ப வருத்தப்பட்டான் மா ….அதுதான் உங்க கல்யாணத்த முறையா நடத்த ஆசை பட்டோம். இப்பதான் எங்க மனசுக்கும் நிறைவா இருக்கு. நீங்க  ரெண்டு பேரும் நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்” என்று வாழ்த்தினார்.

தனக்காக பார்த்து பார்த்து செய்யும்  குடும்பத்தினர் மீது அன்பு பெருகிக் கொண்டே போனது ராதிகாவிற்கு. மதரிடம் தனக்கு தற்போதைய சந்தோஷம் மட்டும் போதும் , முந்தைய ஞாபகங்கள் வரும் போது வரட்டும் என்று விட்டாள்.

மதியம் விருந்திற்கு பின் தான் வந்தவர்கள் அனைவரும் திரும்பினர். மறுநாள் ஊட்டியில் சக்திவேல் பணிபுரியும் தொழிற்சாலை ஊழியர்களுக்காக வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க , ரமேஷும் அனன்யாவும் அவர்களோடு செல்வதாக இருந்தது. சக்திவேலும் அமுதாவும் கிளம்பும் சமயம் ஒரு பார்சலை தந்து பிரிக்கச் சொல்ல , அதனுள் இருந்த கோப்புகளைப் பார்த்த சக்திவேல் உணர்ச்சிவசப்பட்டு ,

“அண்ணா…. இது… இது “

“சக்தி என் உயிர் எனக்கு திரும்ப கிடைக்க காரணமான உனக்கு இது ரொம்ப சின்ன கிஃப்ட்… உங்க ரெண்டு பேரால தான் நான் இப்ப சந்தோஷமா இருக்கேன்.தயங்காம ஏத்துக்கோடா…. இது போல அத்தனை ஃபேக்டரி  இருந்தும் நிம்மதியில்லாம இருந்த எனக்கு நிம்மதிய தந்த உனக்கு எப்படி நன்….” எனக் கரம் கூப்பியவன் கரத்தை இறக்கிவிட்டு ,

“அண்ணா ….” எனக் கத்திய சக்தி அரவிந்தைக் கட்டிக் கொள்ள….

” அண்ணன்னு என்னையக் கூப்பிடுறத வெறும் வார்த்தையாக்காத …..” என சக்தியை இறுகத் தழுவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரின் கண்களும் கலங்க , ராதிகாவிற்கோ கணவனின் மீதான காதல் அதிகரித்துக் கொண்டேப் போனது. அவன் சென்ற திசையையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.