அழகு 8

    காரில் பின்னால் அமர்ந்திருந்த ஜானகி உறங்கிவிட , குழந்தையும் அவள் மடியில் உறக்கத்திலிருந்தான். மலையிலிருந்து இறங்கி மேட்டுப்பாளையம் வரவும் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்த, ரமேஷும் அனன்யாவும் அவர்கள் காரிலிருந்து இறங்கி வந்தனர். அனன்யாவும் , ஜெனியும் குழந்தைகளை அதனதன் தந்தையிடம் தந்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்றனர்.

ரமேஷ் அரவிந்த் அருகில் வந்து , “மச்சான் கேட்டா தப்பா நினைக்க மாட்டியே “

“என்னடா கேள்வி இது “

“இல்ல … தங்கச்சி நம்மக்கூட வர சம்மதிச்சதுல உன் முகத்துல சந்தோஷமே இல்லையே டா”

புன்னகைத்துக் கொண்டவன் , “வர சம்மதிச்சதுல சந்தோஷமா இருந்துச்சுடா , ஆனா வர சம்மதிச்ச விதத்துல மனசு கஷ்டமாயிருக்குடா , பாறேன் நாம ஒருவாரமா மாத்தி மாத்திப் பேசினோம் ” வர்றேன்னு ” ஒரு வார்த்தை சொன்னாளா …… இல்லையே ,முதல்லயே இவரப் பார்த்தா அன்னைக்கே வந்துருப்பா …. ஆனா குழந்தையக் காட்டி கூப்பிட  மனசு வரல….ஆனா நாம பண்ணாதத இவரு ஒரே நாள்ல …ம் … இல்ல ஒரு நிமிஷம் கூட இல்லடா , ஒரு செகன்ட்ல வரலாம்னு முடிவு எடுக்க வச்சுட்டாரே….. அப்ப நம்ம மேலலாம் அவளுக்கு இன்னும் முழு நம்பிக்கை வரலைனு தானே அர்த்தம்…. அதுதான் கொஞ்சம் அப்சட் ஆனேன் …மற்றபடி இந்த நொடி ரொம்ப சந்தோஷமான மனிதன் யார்னு கேட்டா அது நான் தான்னு சொல்வேன்.. ” என்றுப் புன்னகைத்துக் கொண்டான்.

நண்பனை ஆழ்ந்துப் பார்த்த ரமேஷ் , “அரவிந்த் , அத்தைக்கு மாமாவோட இழப்பு தெரியலனாலும் உன்னை ‘அருக்குட்டி அருக்குட்டினு ‘ஞாபகத்துல வச்சிருந்தாங்க …..அது அவங்க பிள்ளைப் பாசம்,அதே போல தான் நீயும் , அவங்க நீ என் பிள்ளையே இல்லனு சொன்னாக்கூட , எங்கம்மா தானே ஒரு நாள் புரிஞ்சுக்குவாங்கனு தான் என்கிட்ட சொல்லுவ, அது உன்னோட தாய்ப்பாசம் ……”

 உறங்கும் மருமகனின் தலையைக் கோதிக் கொண்டே  குரல் கமற, “ஆனா … ஆனா … நானும் என் மருமகனும் தாயில்லாத பிள்ளைங்க டா , எங்க தாய்ப்பாசம் எங்களுக்குத்தான் தெரியும் ….அன்னைக்கு இறக்கப் போற கடைசி நொடிலக் கூட எங்கம்மா என்னைய நினைச்சிருப்பாங்க ….அதுபோல தான் உயிர் உடலவிட்டு போற நிலையிலும் உணர்வு ……… தங்கச்சிக்கும்  அந்த தாய்மை உணர்வுதான் அவளை வர வச்சிருக்கும்.

குழந்தைக்கு சொல்லியாத் தரணும் , தன் தாயைத் தெரியாதா …. நாம பேசிப் பேசி கூப்பிட்டோம் … ஆனா என் மருமகனுக்கு பேசக் கூட வரல , எப்படி கூட்டிட்டுட்டு வந்துட்டான்.அந்தளவுக்கு அம்மாவ தேடிருக்கான் பாரேன்.

பெண் குழந்தைங்க தான் தாய் இல்லாம தவிச்சுப் போவாங்க நினைக்கிறியா …. நான் இப்போ வரை என் அம்மாவதேடுறேன்டா … எங்கம்மா மாதிரியே உன் தங்கச்சி பிறந்துருக்கானு சொன்ன நாள்லருந்து எங்கம்மாவ அவகிட்ட தேடுனேன் டா … அனுவும் …. என்னைப் புரிஞ்சிக்கிட்டா டா …. மனைவி தாயாய் தாங்குறது வரம் மச்சான் ….அந்த வகைல … ஐ ம் லக்கி மச்சான்….”

‘அம்மா அம்மா நீ எங்கே அம்மா…

 உன்னை விட்டா எனக்கு யாரு அம்மா….’

அப்படியே ஒரு வித உணர்வில் பேசிக் கொண்டிருந்தவன் , அவள் வருவதைப் பார்த்துக் கொண்டே , “எங்கம்மா என்னை எப்படியெல்லாம் வளர்க்கணும்னு ஆசைப்பட்டுருப்பாங்க ,  எங்காம்மவ மகளா பெத்து அந்த ஆசையை நான் தீர்த்துக்கணும் , எங்கம்மாவ பொண்ணா பெத்து தாரேன் சொல்லிருக்கா , அவங்கள நான் வளர்க்கணும் ….. பார்ப்போம் இந்த தடவையாது , எங்கம்மா பிறக்கணும்”

    ‘ காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணை சேரும்

      

      மீண்டும் நான் உன் பிள்ளை’ ….(அம்மா.. அம்மா)

நண்பனின் பேச்சில் மனம் நெகிழ்ந்தவன், புன்னகையோடு, “மாப்ள … அப்போ பத்மா அத்தை வரப்போறாங்கனு சொல்லு” எனவும் , ரமேஷிற்கு தான் பேசிக் கொண்டிருந்தது புரிய , நாணத்தோடு

“போடா டேய் ” என்று அவன் தோளில் தட்டியவன் , அவன் காரில் சென்று ஏறிக் கொண்டான். மாலை வீட்டிற்கு வந்து இறங்கியவர்களை சக்திவேல் தான் வரவேற்றான்.

வந்து இறங்கியதுமே அரவிந்தும் ரமேஷும் சக்தி வேலை அழைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டார்கள். ஜெனிஃபருக்குத்தான் தலைவலிப்பது போல் இருந்தது. வீட்டின் பிரமாண்டமும் அழகும் , அவளை சற்று மிரளச் செய்தது எனலாம்.

“அண்ணி வாங்க ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல இவங்க ரெண்டு பேரும் முழிச்சிருவாங்க” என்று அவளை அழைத்துக் கொண்டு அனன்யாவின் அறைக்குத்தான் அழைத்துச் சென்றாள்.

அங்கு சென்றவர்கள் குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு பேசிக் கொண்டிருக்க , ரமேஷ் அனன்யாவை அழைத்திருந்தான். பேசிவிட்டு வந்தவள் ஊட்டிக்கு எடுத்துச் சென்றப்பைகளோடு ,கூட ஒரு பையையும் எடுத்து தேவையான சிலவற்றை எடுத்து வைக்கலானாள்.

அருகில் வந்த ஜெனிஃபர் , ” நானும் ஹெல்ப் பண்ணட்டுமா” எனக் கேட்க ,

“ஊட்டிக்கு எடுத்துட்டு வந்தது அப்படியே எடுத்துட்டுப் போக வேண்டியது தான் , இன்னும் கொஞ்சம் தான் “

தயங்கி தயங்கி , ” இன்னும்…. இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே”

“எனக்கும் ஆசைதான்…. ஆனா உங்கண்ணன்  ஆஃபிஸ் ரொம்ப நாளா பார்க்காம இருக்கு , இப்பவே கிளம்பலாம் சொல்றாங்க…” என்றவாறு எடுத்து வைத்துக் கொண்டிருந்த அனன்யாவிடம் ,

“அண்ணி ஒரு ரெண்டு நாளாவது இவர் கூட இருந்துட்டுப் போகலாமே … என்னமோ தெரியல … காலைல உங்கண்ணன் இவர திரும்ப தூக்கிட்டுப் போனப்போ .. எனக்கு ரொம்ப அழுகை வந்துருச்சு … தாங்க முடியாத தலைவலியும் , அப்புறம் மதரும், அம்முவும் சொல்லி புரிய வச்சு குழந்தைய பார்க்க கூட்டிட்டு வந்தாங்க… இப்ப உடனே அவரவிட்டுட்டு கிளம்புணும்னா….. ” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டேப் பேசிய ஜெனிஃபரைப் பார்த்து திகைத்த அனன்யாவின் கையிலிருந்த குழந்தைகள் விளையாட்டுப் பொருள் கை நழுவி கீழே விழுந்து சத்தம் எழுப்பியது.

அந்த சத்தத்தில் அவளின் மகன் புரண்டு எழ , வேகமாக அவனைத் தூக்கிக் கொண்டவள் , ” நான் போய் பால் ஆத்திக் கொடுக்கிறேன்” என்றுக் கீழே சென்று விட்டாள்.

முதலில் ஜெனி ஏன் அப்படிச் சொல்கிறாள் என்றுப் புரியவில்லை … புரிந்த பிறகோ அனன்யாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை , மகனைத் தூக்கிக் கொண்டு கீழே ஜானகியின் அறைக்கு ஓடியவள், ஜானகியிடமும் , தாயம்மாவிடமும் விஷயத்தைப் பகிர , அவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

அரவிந்தும் ரமேஷும் வீட்டிற்குள் வர , ஜெனியும் குழந்தையோடு கீழே வந்துக் கொண்டிருந்தாள். தந்தையைக் கண்டதும் , ‘ப்பா, ப்பா” என்ற குழந்தையை கீழே இறக்கி விட , அழகு நடை போட்டு தந்தையிடம் சென்றக் குழந்தையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குழந்தையின் ஒவ்வொரு செய்கையும் அவளை ஆச்சரியத்திலும் , மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. குழந்தை வெகுதூரம் நடந்ததைப் பார்த்துப் பூரித்துப் போனவள் , அங்கிருந்த அனைவரையும் மறந்து அரவிந்த் அருகில் சென்ற குழந்தையை ஓடிச் சென்று த் தூக்கி , ” என் செல்லம் எவ்வளவு அழகா நடக்கறீங்க” என்றவாறு முத்தமிட்டுக் கொஞ்சியவள் , அதன் பிறகே அரவிந்த் அருகில் நிற்பதை உணர்ந்து , குழந்தையை அவனிடம் தந்துக் கொண்டே ,

“இவர் நட…நடக்கிறத இப்பதான் பார்த்தேனா அதான் ” என்றவளிடம் , ஒன்றும் பேசாது குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தான்.

அங்கு வந்த அனன்யா , “அண்ணி இந்தாங்க இது ஸ்ரீ குட்டிக்கு, அவருக்கு மாடி தோட்டத்துல விளையாடிட்டே சாப்பிட பிடிக்கும் ” எனவும் ,அரவிந்திடம் குழந்தையை வாங்கிக் கொண்டு மாடியேறினாள். அவள் மேலே சென்றதும் , ரமேஷையும் அரவிந்தையும் அழைத்துக் கொண்டு ஜானகியின் அறைக்குச் சென்றாள்.

ஜானகி அரவிந்தைப் பார்த்து , ” நீ ஆரம்பிச்சத நீ தான் முடிக்கணும், பார் ராதாம்மா அனுக் கூட கிளம்புறதப் பத்திப் பேசியிருக்கா ….அவ பார்வைல அவ நினைக்கிறது தப்பில்ல , இப்ப என்ன செய்ய ….”

“ம்மா போகட்டும் ,அவங்கப்பா வீட்டுக்குப் போறேன்கிறா போகட்டும் … இனி அவளா தான் நம்மளைத் தேடி வரணும் , அவள காதலிச்சு , என் இஷ்டத்துக்கு தாலி கட்டி , என்னைய மட்டுமே நினைக்க வச்சு அவள உயிரோட கொன்னுட்டேன் மா…..” என்றவன் ,தங்கையின் அருகில் சென்று ,

” அனுமா உனக்கு நான் சொல்ல வேண்டாம். இருந்தாலும் சொல்றேன் , அவள நல்லாப் பார்த்துக்கோமா…. அவளா விரும்பி இங்க வந்தா மட்டும் தான் இனி இங்க வரணும் , யாரோட கட்டாயத்திலும் , எந்த கட்டாயத்திலும் அவ இங்க வர வேண்டாம் … என் காலம் முழுதும் அவ சந்தோஷமா என் கண் முன்னாடி நடமாடினாப் போதும்….”

” ண்ணா” என்று அழுதவள் , ” நீங்க எனக்கு அப்பா மாதிரினா , என் அண்ணி எனக்கு அம்மா போல அவங்கள பத்திரமா பார்த்துக்கிறது என் பொறுப்புண்ணா ….அது மட்டுமில்ல அவங்களா உன்னைத் தேடி இங்க வருவாங்க… ண்ணா ஶ்ரீ….”

“அவரையும் கூட்டிட்டுப் போம்மா…” என்றவன் , அறையை விட்டு வெளியேறி மாடியேறினான். அப்பொழுதுதான் இறங்கி வந்துக் கொண்டிருந்த ஜெனியைக் கண்டு நின்றவன் , குழந்தையைப் பார்த்து , “அத்தை வீட்டுக்குப் போறீங்களா … போய்ட்டு வாங்க …. அப்பா நியாபகம் வந்தா சொல்லுங்க அப்பா பறந்து வந்துருவேன்” என்று விட்டு , அவளைக் கடந்து படி ஏறி … அவளைப் பார்க்காமலே ,

“போய்ட்டு வா ர… ரதி ” என்று விட்டு, அவள் திரும்பிப் பார்பதற்குள்  விறுவிறுவென்று நடந்து அவன் அறைக்குள் சென்று விட்டான்.

அவள் வந்ததிலருந்தே அரவிந்த் அவள் முகம் பார்க்காமல் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது. அது மனதிற்கு சங்கடத்தையும் தந்தது. “அவங்க தினமும் வந்து நிற்கும் போது நான் அவங்ககிட்ட வந்து பேசினதும் இல்ல , வாரேன்னும் சொன்னதில்லங்கிற கோபத்துல இருக்கிறாங்களோ…. தப்புதான் … ஆனா … நான் என்ன செய்வேன்….” என கண்ணீர் வரவும் , இடுப்பிலிருந்த குழந்தை ,

“ம்மா நாநா ” என கண் துடைத்து விட்டு அவளை இயல்புக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர்கள் கிளம்பும் வரையிலுமே அவன் கீழே வரவில்லை , அவனிடம் சொல்லாமல் செல்வது என்னவோ போல் இருக்க , அனன்யாவிடம் , “அவங்க கிட்ட சொல்லிட்டு வாறேன்” என்றாள்.

அவள் ‘அவங்க ‘ எனவும் அனன்யா , “எவங்க ” என்றாள்.

“அவங்க …. உங்கண்ணன் கிட்ட “

“ஓ” என்ற அனன்யாவைப் பார்த்த ஜானகி , ” ராதாம்மா … அரவிந்த் உனக்கு அத்தான் முறையாகனும் …அதனால ‘அத்தான்’ சொல்லு என்றார். குழந்தையையும் தூக்கிக் கொண்டு திரும்பியவளை ,

“அண்ணி அவர் அவங்கப்பாவப் பார்த்தா நம்மக் கூட வர மாட்டாரு , நீங்க மட்டும் போய் சொல்லிட்டு வாங்க” என குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

பார்த்த அனைவருக்குமே மனம் கனத்தது.மெல்ல படியேறிச் சென்றவள் , அப்பொழுது அவன் நுழைந்தக் கதவை மெதுவாக தட்ட திறக்கவில்லை , மறுபடியும் தட்ட அப்பொழுதும் திறக்கவில்லை.

அவளைக் கிளம்பச் சொல்லிவிட்டு வந்தவனோக்கோ , இதயம் வலிப்பது போல் இருந்தது. என்ன முயன்றும் மனதை சாந்தப்படுத்த முடியவில்லை. கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவன் காதுகளில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இருந்தாலும் தட்டி விட்டு உள்ளே வருவார்கள் என்று நினைத்து அப்படியே தலையணையில் முகம் புதைத்துப் படுத்திருந்தான்.

யாரும் வரவில்லை என்றதும் எழப்போனவன் காதுகளில் , “அத்தான் …. நான் ஜெனி ” என்ற குரல் கேட்கவும் , இதயம் படபடக்க வேகமாக கதவைத் திறந்தவன் முன் , அடுத்த தட்டலுக்காக கதவை  தட்டுவதாக நினைத்து அரவிந்தின் இதயத்தில் கை வைத்திருந்தாள்.

லப் டப் ,லப்டப் … அவன் டீ ஷர்டின் மேல் கை வைத்தவளுக்கு அந்த இதயத் துடிப்பு அவளுக்கு அதிர்வைக் கொடுத்தது. பட்டென்று கையை எடுத்து விட்டு அவனை நிமிர்ந்துப் பார்க்க , அவன் விழிகளைச் சந்திக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க , விழிகளை தாழ்த்திக் கொண்டே ,

” நான் கதவுனு….” அவளாக தேடி வந்ததும் ,பூங் கரங்களின் மென்மையும் இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரத்தைக் குறைக்க , கைகளை கட்டி வாசல் நிலையில் சாய்ந்துக் கொண்டே மென்னகையுடன்,

“பரவால்ல…. என்ன சொல்ல வந்த ” என்றான்.

“அது … நீங்க ஊட்டில கூப்பிட்டப்போ…. பேச வந்தப்போலாம் அவாய்ட் பண்ணதுக்கு சாரி …. ஒரு மனசு போனு சொல்லிச்சு , ஒரு மனசு வேண்டாம்  அவங்க யாரோ எவரோனு சொல்லிச்சு…. ” அவன் முகத்தை மறுபடியும் பார்த்தவள் , கண்களில் நீரோடு …. “ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க….. என்னவோ குட்டிபையனப் பார்த்ததும் என்னால அவர விட்டுட்டு இருக்க முடியல … உடனே வர முடிவு எடுத்ததுக்கு அவர் தான் காரணம்னாலும் …நீங்க எல்லாரும் அதுவும் நீங்க தினமும் காலையிலயே சர்ச்க்கு வருவீங்க….அன்னைக்கு நீங்க வரலனதும் …. ரொம்ப அப்செட் ஆகிட்டேன் …. இப்படி இங்க வரதுக்கு நீங்களும் தான் காரணம்…..”

அவனுக்குத் தெரியாததா , அவள் தவிப்பைத்தான் பார்த்துக் கொண்டிருந்தானே….

அவள் அழுகையை துடைக்க எழுந்த கைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டே , மனதில் இதத்துடன் ,

“புரியப் போய் தான்….ஸ்ரீய இப்ப உன் கூட தனியா அனுப்புறேன்….அவன் பிறந்ததிலருந்து என்னைய ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்ததில்ல … எதுவும் நினைக்காம சந்தோஷமா போய்ட்டு வா”

முகம் மலர அனைவரிடமும் விடை பெற்றவள் , குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு திருப்பூரை நோக்கிச் சென்றாள்.

அரவிந்தருகில் வந்த ஜானகி , “ஏம்பா , எனக்கு எம் மருமகளையும் , எம்பேரனையும் எத்தனை நாள் பிரிஞ்சு இருக்க முடியும்னு எனக்குத் தெரியல …ஏன் உனக்கும் தான்.மதர் என்னதான் பா சொல்றாங்க இன்னும் எத்தனை நாள் தான் இப்படி இருக்க முடியும். சீக்கிரம் இங்கயே வர வைக்கிற வழியைப்பாரு. நீ செய்யல… நான் வர வச்சுடுவேன்….”

“ம்மா … ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்க … அவளாவே வருவேன்னு சொல்லுவா” .

திருப்பூர் வந்தவர்களை ராதிகாவின் அத்தை வீட்டினர் வரவேற்றனர். அவர்களை யாரோ போல் பார்த்துக் கொண்டு காரை விட்டு இறங்கிய ஜெனியை , அத்தை என்று ஓடி வந்து கால்களை கட்டிக் கொண்டான் சிவாவின் மகன்.

அவன் உயரத்திற்கு முழங்காலிட்டு அமர்ந்தவள் , ஆசையாக வந்த குழந்தைகளிடம் பேசினாள். உண்மையில் அவளுக்கு அந்தக் குழந்தைகளையும் தெரியவில்லை , அவர்களது பெற்றோரையும் தெரியவில்லை. ஆனால் அன்பாக அத்தை என்றழைத்துப் பேசும் குழந்தைகளை கடந்து செல்ல மனமில்லை.

சிவாவும் , அவனது அப்பாவும் அவளை மெளனமாகப் பார்க்க ராணி அருகில் வந்தவள் ஜெனியைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். மனைவியின் தோள் மீது கை வைத்து சமாதானப்படுத்திய  சிவா , ” உங்கண்ணி ராதிகாவா தெரியற உன்னை ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கவும் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டா , நீ நல்லாருக்கியாமா…. ” என்றவன் தாங்கள் அவளுக்கு யார் என்பதை தெரிவித்தான்.

நிறைய சொந்தங்களைக் கண்ட ஜெனிஃபருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பெரியப்பா அருகில் வந்தவர் , “எனக்கும் உன் உருவத்துல ராதிகாவ தான் தெரியும் …அதனால நான் ராதிகானே உன்னைக் கூப்பிடுறேன்…. குழந்தைங்களுக்கும் வெளிய இருக்கிற எல்லாருக்கும் நீ ராதிகா தான் …. அதுனால யாரும் உன்னை ராதிகானு நினைச்சுப் பேசினா அதை சகஜமா எடுத்துக்கோமா…”

மற்ற அனைவரும் திகைத்துப் பார்த்துக் கொண்டிருக்கைலையே, சிவா அவனின் அப்பா அருகில் வந்து , “அப்பா அவ களைச்சுப் போய் வந்துருக்கா , இப்போவே எதுக்குப்பா இதெல்லாம் …. அப்புறம் சொல்லிக்கலாம்”

“எந்த விஷயத்தையும் தள்ளிப் போடறது நல்லது இல்ல…. நாளைக்கு இங்க பார்க்கிறவங்க எல்லாம் ராதிகா ராதிகானு சொல்றப்போ குழம்பிப் போயிரக்கூடாதுல்லயா…. என்னம்மா நான் சொல்றது சரிதானே” என அவளைப் பார்த்துக் கொண்டே கேட்கவும் ,

குழந்தைகளிடம் கவனம் வைத்திருந்தவள், அவர் இப்படிச் சொல்லவும் ,”ம்…. ஆமா அங்…. பெரியப்பா “

சிவா விழிப்பதைப் பார்த்தவர் , “கீதா இப்படித்தான் புருஷன் மேல உயிரையே வச்சிருந்தா , பிள்ளையப் பெத்தவ பிள்ளைக்காகக் கூட இல்லாம புருஷன நினைச்சே உயிரை விட்டுட்டா… அந்த பலகீனமனசு அவ பிள்ளைக்கும் வேண்டாம். வர்றத எதிர்கொள்வோம் .” எனத் தனியாகச் சொல்லிவிட்டு நகர்ந்துக் கொண்டார்.

குழந்தைகள் நால்வரையும் விளையாடவிட்டு, அவர்களுக்கு உணவு ஊட்ட என்று அவர்களை கவனிப்பதிலயே மூழ்கி விட்டாள்.இரவு உணவு முடிந்துச் சென்றவர்களை அனுப்பி விட்ட பிறகு தான் , வீட்டை நிதானமாகப் பார்த்தாள். நிறைய புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்க , அனன்யா வந்து அவர்கள் யார் என்பதை தெரிவித்தாள் .

 ஆனால் என்ன அந்த வீட்டின் சுவற்றில் எல்லாம் ரமேஷ் அனன்யா திருமண போட்டோக்கள் மட்டுமல்லாது ,அரவிந்த் ராதிகாவின் வரவேற்பு போட்டோக்களும் , சில தனியாகவும் , குடும்பத்தாரோடு இருக்கும் போட்டோக்களும் இருந்தன.

அங்கங்கு கடக்கும் போது அவை கண்களில் பட்டு ஜெனிக்கு நாணம் கொள்ளச் செய்தது. அவை எல்லாம் அரவிந்தையும் ராதிகாவையும் மிகவும் நெருக்கமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் … ரமேஷையும் அனன்யாவையும் அப்படி நெருக்கமாக எடுத்திருந்த புகைப்படங்களை ரசனையோடு பார்த்துக் கடக்க முயன்றவளால், அரவிந்த் ராதிகா இருந்ததைப் பார்த்தாலே முகம் சிவந்தது. ஏதோ தானே அவனருகில் நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வு தர , இரவு படுக்க அறைக்குச் செல்லும் வரை சுவற்றைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.

அனன்யா அவளுக்கும் குழந்தைக்கும் தேவையானதை எடுத்து வைத்து விட்டு , அவர்களது படுக்கை அறைச் சென்றாள்.

ரமேஷ் மகனை தோளில் போட்டுத் தட்டிக்கொண்டு இருக்க அவனது அலைபேசி பாட ஆரம்பித்தது. எடுத்து ஸ்பீக்கரில் போட்ட ரமேஷ் , இங்கு அவள் பெரியப்பா பேசிச் சென்றதை சொல்லி ,

“நாங்க ரொம்ப பயந்துட்டோம் டா..” என , அந்தப் புறம் அரவிந்தோ பலமாக சிரிக்க ஆரம்பித்தான்.

“டேய் மச்சான் எங்கள வச்சு காமெடி கீமடி பன்றியா, நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன்…. நீ இப்படி சிரிச்சுட்டு இருக்கிற “

மெல்ல சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் , “ஏன்டா மாப்ள ராதிகாவ ராதிகானு சொல்லாம . வேற எப்படி சொல்றதாம்”

                  காதல் அழகானது … அதுவும் காத்திருக்கும் காதல் அழகோ அழகுதான்.