அங்கு நின்றிருந்த ராமரிடம் , ” ராமண்ணா சூடா காஃபி தாங்க , நான் சர்ச்க்கு போகணும்”
“டேய் நீ சைட் அடிக்க கிளம்புற… என்னமோ பிரேயர் பண்ண போற மாதிரி சர்ச்க்குப் போறேன் , சர்ச்க்குப் போறேன்கிற….” என்றவாறு அருகில் வந்தமர்ந்த ரமேஷை முறைத்தான் அரவிந்த் .
” பின்ன என்னடா … நேத்து நீ பேசுனதக் கேட்டு சும்மா விட்டு வைப்பேன்னு நினைக்கிறியா… சொல்லு என்ன பிளான்ல இருக்க , தங்கச்சிய எப்படிக் கூட்டிட்டுப் போக ….”
” கேளுப்பா… என்னவோ ட்வின்ஸ்கிறான். ராதிகா இல்ல ரதிங்கிறான்… சரி சீக்கிரம் சாப்பிடுங்க , எல்லோரும் கிளம்புவோம்.” என்ற ஜானகியிடம் ,
“ம்மா , முதல்ல நான் போறேன் , அப்புறம் நான் சொல்றது போல தான் நீங்க எல்லாரும் ரதியப் பார்க்க வாரீங்க… ” என்றவன் சில விளக்கங்களை அவர்களுக்கு தந்து விட்டு கிளம்பினான்.
அதிகாலையிலயே கறுப்புக் கண்ணாடி அணிந்து முதல் நாள் அமர்ந்த இடத்திலயே வந்து அமர்ந்துக் கொண்டான் அரவிந்த். அவனுக்கே அவனது நிலை புன்னகையை வரவழைத்தது, பள்ளிக் கல்லூரி நாட்களில் எந்தப் பெண்ணையும் இப்படி ஆர்வமாக பார்த்தில்லை. அந்த அந்த வயதுக்குரிய எண்ணங்கள் இருந்தாலும் அம்மா , தாத்தா , தங்கை என்ற நினைவு வந்ததும் படிக்க வேண்டும் , தொழிலில் தாத்தாவிற்கு உதவ வேண்டும் , அம்மாவின் உடல்நிலையை சரிப்படுத்த வேண்டும், தங்கைக்கு தந்தை இல்லாத குறை தெரியாமல் எல்லாம் செய்ய வேண்டும் , பெற்றோர் , உடன்பிறப்பு இப்படி யாருமில்லாத நண்பனுக்கு துணை நிற்க வேண்டும் , இதுதான் அவனது எண்ணமாக இருந்தது.
என்று ராதிகா அவன் வாழ்க்கையில் வந்தாளோ அன்றிலிருந்து அவளே உலகம் என்றாகிப் போனது. அதற்குள் கடவுள் வேறு விளையாட்டை விளையாடிப் பார்க்க வைத்து விட்டார்.
இப்பொழுது ‘எப்போதடா ஜெனி வருவாள்’ என்று அமர்ந்திருந்தான். ‘ஜெனி’ வாய்க்குள் சொல்லிப் பார்த்து சிரித்துக் கொண்டவன் , அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.அவளும் வந்தாள் , ஆனால் முகத்தில் அத்தனைக் கவலைகளையும் தேக்கிக் கொண்டு. அரவிந்துக்கு அவள் முகத்தில் காணப்பட்ட வாட்டம் மனதை என்னவோ செய்தது.
படியேறி வந்துக் கொண்டிருந்தவள் அரவிந்தைக் கண்டதும் அப்படியே நின்று விட்டாள். அவளைக் கண்டதும் அணைத்துக் கொள்ள தூண்டும் கைகளை குளிருக்கு அணிந்திருந்த ஜெர்கினுக்குள் அடக்கியவன் எழுந்து நின்றான்.அவனருகில் வந்தவள் , “சார்…. சாரி சார்” எனப் பேச ஆரம்பிக்கவும் தேவாலய மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
எப்பொழுதும் மணி அடித்து முடித்ததும் அந்த ஒலிப்பெருக்கியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பைபிள் வசனங்கள் சொல்லப்படும். இப்பொழுதும் ஆறு முறை மணி ஒலித்ததும் ,
“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற வசனம் ஒலிக்கவும் மனதில் மகிழ்ச்சிப் பொங்க அவளைப் பார்த்து , ” நீங்க ப்ரேயர் முடிச்சுட்டு வாங்க , நான் வெய்ட் பண்றேன்” என்றான்.
அவளும் தலையசைத்து விட்டு உள்ளே செல்ல , அவள் பின்னோடேயே சென்று ஆண்கள் இருந்த பகுதியில் அமர்ந்து கொண்டான். கண்களை மூடி , ” கடவுள் எனக்கு சொன்னாரா தெரியாது…. ஆனா ஸ்வீட்டி நான் உனக்கு சொல்றேன்டா, “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை , உன்னைக் கைவிடுவதுமில்லை மை டியர்”
வழிபாடு முடிந்து வெளியே வரவும் , முதல் நாள் நின்றிருந்த இடத்தில் போய் நின்றுக் கொண்டான். வெளியே வந்தவள் அவனருகே சென்று ,
“நீங்க சொன்னதெல்லாம் மதர் சொன்னாங்க…. ஆனா… ஆனா என்னால திடீர்னு இதையெல்லாம் ஏத்துக்க முடியல … ஐ. ம் ரியலி வெரி சாரி சார்…. எனக்கு மதர் தவிர யாரையும் தெரியாது அவங்க மேற்பார்வைல இங்க இப்படி இருக்கிறது ஒரு பாதுகாப்பா உணர்றேன். என்னை மன்னிச்சிடுங்க….. என்னால நீங்க உங்க வேலையெல்லாம் விட்டு கஷ்டப்பட வேண்டாம். நான் … நான் … எங்கயும் வரல” என்று விட்டு திரும்பியவள் பின்னால் ரமேஷும் அனன்யாவும் நின்றுக் கொண்டிருந்தனர்.
அனன்யா கண்கள் கலங்க அவள் கையைப் பிடித்து , “அண்ணி ” என அழ , ரமேஷ் அவள் தோள்களை பற்றி அழுத்தம் கொடுக்க , கண்களை துடைத்துக் கொண்டவள்,
” மன்னிச்சுக்கோங்க மேம் , இப்பதான் சார்கிட்ட சொல்லிட்டு வந்தேன். ப்ளீஸ் எனக்கு புதுசா ஒரு இடத்துல வந்து இருக்கனுங்கிறது …. சாரி … நான் வாறேங்க…” என்று நகர்ந்தவளைப் பார்த்த அனன்யா திகைத்துப் போய்,
கணவன் கையைப் பிடித்துக் கொண்டு , “அத்தான் உங்க தங்கச்சிகிட்ட சொல்லுங்க….அண்ணி ப்ளீஸ் … நாங்க சொல்றத கேளுங்க” என்று ரமேஷைப் பார்த்தாள்.
மனைவியின் பார்வையைப் புரிந்து கொண்டவன், “ர… ரதிமா … அதுதான் மா உன் பெயர் , சித்தி அப்படி தான் சொல்லுவாங்களாம்…” என்று அரவிந்தைப் பார்த்துக் கொண்டே சொல்ல, அரவிந்தோ கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்து இருந்தான்.
“அடப்பாவி நான் சரியா பேசுறனா… இல்லையானு திணறிட்டு இருக்கேன் … இவன் எவ்வளவு கூலா சைட் அடிச்சுட்டு இருக்கான்….டேய் கண்ணாடிய கழட்டுடா” என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான்.
ரமேஷ் பல்லைக் கடித்தது கேட்டதோ என்னவோ , உடனேயே கண்ணாடியை கழட்டி விட்டு தங்கை அருகில் வந்தவன் ,
” அனுமா அவங்க நம்மள நம்ப மாட்டாங்கடா ….. இப்பதான் எங்கிட்ட சொன்னாங்க , அவங்க மதர் கூடத்தான் இருப்பாங்களாம். வேஸ்ட்டா ஊட்டி குளிர்ல இருந்து விறைச்சுப் போக வேண்டாம் உங்க ஊரைப் பார்த்து மூட்டை கட்டுங்கனு சொல்லிட்டு இருந்தாங்க” எனவும் ,
விழிகளில் கண்ணீரைத் தேக்கி அவனைப் பார்த்தவள் எதுவுமே பேச முடியாது திரும்பிப்பாராது சென்றாள்.
ரமேஷிற்கும் அனன்யாவிற்கும் அரவிந்தைக் கண்டு வருத்தமாக இருந்தது.
“ண்ணா…. ” என்று கையைப் பிடித்தவளை தட்டிக் கொடுத்து விட்டு , “மாப்ள நான் டீ பேக்டரி போறேன்… நீ அனுவ வீட்ல விட்டுட்டு வா” என்றுக் கிளம்பி விட்டான்.
அழுத மனைவியிடம் , “அரவிந்த எனக்குத் தெரியும், காரணமில்லாம எதுவும் செய்ய மாட்டான் . வா போகலாம்”
எப்போதவது வரும் எம்.டி.அலுவலகம் வந்திருக்கிறார் என்றதும் அவர்களது தேயிலை தொழிற்சாலைப் பரபரப்பாக காணப்பட்டது. அலுவலக அறையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவன் சிந்தனையை அறையை தட்டிவிட்டு உள்ளே வந்த ரமேஷ் , சக்தியின் வரவு தடுத்தது.
அவர்கள் வந்ததும் , “சக்தி இந்தா , நீ உடனே கிளம்பு” என்றான். வாங்கிப் பார்த்த சக்திக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை ,அரவிந்தை நிமிர்ந்துப் பார்த்து , “அண்ணா…. இது ….இது…. ரொம்ப பெரிய பொறுப்புங்கண்ணா”
“சக்தி நீ என் உயிரையே மீட்டு தந்துருக்க… இது ரொம்ப சின்ன வேலை டா… கிளம்பு … நாங்க வர்ற வரை நம்ம வீட்லதான் இருக்கணும்” என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தான். கோவை நிறுவன பொறுப்பு அனைத்தையும் அரவிந்த் வரும் வரை சக்திவேலுவுக்கு அளித்திருந்தான்.
ரமேஷிடம் திரும்பியவன் , “மாப்ள இங்க இருந்தே எல்லா வேலையும் பாருடா… நான் வந்தே ஆகணும்னா மட்டும் என்னைக் கூப்பிடு …. ப்ளீஸ் அண்ட் சாரிடா … நானே ஆஃபிஸ் பார்க்க வர்ற வரை என்னைக் கூப்பிடாத ” என்றவன் அறையை விட்டுச் சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த அனன்யா ஜானகியிடமும் , தாயம்மாவிடமும் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள். அரவிந்த் தான் சொன்னதை மட்டும் செய்யும்படி கூறியதால் மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரம் அங்கு வந்த சக்தி வேலைக் கண்ட அனன்யா , ” சக்தி அண்ணா என்ன ஆச்சரியம் , ஊட்டிக்கு வரும் போது எல்லாம் காலில் சுடுதண்ணி ஊத்திட்டு ஓடுவீங்க ….இந்நேரம் இங்க வந்துருக்கீங்க “
“அண்ணன் பெரிய பொறுப்பா கொடுத்து என்னை கோயம்புத்தூர் அனுப்புறார். அதான் சொல்லிட்டுப் போக வந்தேன். அங்க நம்ம வீட்லதான் தங்கணும்னு வேற சொல்லிட்டார்”
“வேற இடத்துல தங்க விட்டுருவோமா என்ன”, தாயம்மாவின் நெருங்கிய உறவினன் என்பதால் , அவரைப் பார்த்து , ” பாருங்க அம்மத்தா…. எப்படி மிரட்டுறா என் தங்கச்சி”
“அவ மிரட்டுறது இருக்கட்டும் …நீ ஏன் யா இப்படி மெலிஞ்சிட் டேப் போற, சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிட்டா வர்றவ நேரத்துக்கு சாப்பாடு தந்து கவனிச்சிக்குவா, சீக்கிரம் பொண்ணு பார்ப்போம்”
“அம்மத்தா…….”
“தாயம்மா அண்ணன் பொண்ணு பார்த்து வச்சுட்டாங்க போல ….அம்மத்….. தானு இழுக்குறார்.” என்று அனன்யா கிண்டல் பண்ணவும், அவளைப் பார்த்த சக்திவேல் … ஆச்சரியமாக ,
” எப்படிம்மா கண்டுபிடிச்ச….”
“சக்திண்ணா நாங்களும் காதல் கடல்ல விழுந்து நீச்சலடிச்ச…. இல்ல நீச்சலடிக்கிறவங்க தான்….. குரலை வச்சே கண்டு பிடிச்சிருவோம்ல.”
” ரமேஷ் மாமா லக்கி தான் போ” என்றவனிடம் , ”யாருனு சொல்லுண்ணா பேசி முடிச்சிடலாம்”
“அண்ணி நம்ம வீட்டுக்கு வந்த பிறகு சொல்றேன். நீ தான் பொண்ணு கேட்கணும்” என்றவன் அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினான்.
அமுதவள்ளி ஜெனிஃபரிடம் அவர்களோடு செல்ல எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஜெனிஃபர் மறுத்ததோடு அல்லாமல் அவள் தலையைப் பிடித்துக் கொள்ளவும் அவளை மேலும் வற்புறுத்த மனம் இன்றி , சக்தியிடம் அரவிந்தின் எண்ணை வாங்கிப் பேசினாள்.
வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த அரவிந்த் ஜானகியையும் தாயம்மாவையும் தயாராக சொல்லவும் அவர்களும் அவன் வரும் போது தயாராக இருந்தனர்.
அவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி விடுதி கேண்டீனுக்குச் சென்றவன் அவர்களை அமுதாவிடம் பேசி அனுப்பி விட்டு வெளியில் நின்று கொண்டான்.
அவர்களை உள்ளே கூட்டி வந்து அமர வைத்த அமுதா ஜெனிஃபரை அழைத்து வர சென்றாள்.அமுதாவுடன் வந்த ஜெனிஃபரைப் பார்த்து எழுந்து நின்று அழுத ஜானகியை சமாதானப்படுத்தி அமர வைத்த தாயம்மாவாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
அமுதாவோடு வந்தவள் அவர்கள் அழுவதைப் பார்த்து விழிக்க , ஜானகி ” ராதாம்மா” என்று கட்டிப்பிடித்துக் கொண்டார். மிரண்டு விழித்த ஜெனி அவரை விலக்க முயலாது அப்படியே நிற்க , தாயம்மா அவள் தலைக் கோதி, “கண்ணு எப்படி இருக்க ” என்றுப் பேசவும் ஜெனிஃபருக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
” ராதாம்மா வீட்டுக்குப் போகலாம் வாம்மா …. நீ இல்லாம எல்லாரும் தவிச்சுப் போயிட்டோம்” எனவும் ,
” ராதாவா” என்ற ஜெனிஃபரின் பேச்சில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட ஜானகியும் தாயம்மாவும்,
“அது கண்ணு” என்று தாயம்மா ஆரம்பிக்கவும் , ” நான் உன் அத்தை மா , எங்கண்ணன் எங்கம்மா பேரான ராதாவ தான் ராதிகா , ரதினு உங்க ரெண்டு பேருக்கும் வச்சாங்க … நான் ராதாம்மானு தான் ராதிகாவ கூப்பிடுவேன் … நீயும் அவளைப் போலவே இருக்கவும் அப்படிக் கூப்பிட்டுட்டேன் . பிடிக்கலனா சொல்லுமா அப்படி கூப்பிடல”
“ஐயோ ஆன்ட்டி அப்படிலாம் இல்லை …. எனக்கு யாரையும் தெரியல ஒரே குழப்பம் … ராதிகா, ரதி, ராதா, ஜெனிஃபர் …. இப்படி பல பெயர்கள் சொல்றப்போ…. சாரி ஆன்டி …. எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல இருக்கு ….மதர் சொல்றத நம்பினாலும் ஆயிரம் குழப்பம்.”
“நான் உன் அத்தைமா… ஆன்டினு கூப்பிட்டு என்னை யாரோ மாதிரி பார்க்காத ….” ஜானகி அவளிடம் இப்படியாகப் பேசி வீட்டுக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.
வெளியில் இருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தவனுக்கு அம்மாவும் தாயம்மாவும் அவளிடம் கொஞ்சுவதும் கெஞ்சுவதும் என பேசுவதும் , ஒரு கட்டத்திற்கு மேல் அழுதவள் தலையைப் பிடித்துக் கொண்டு அந்த டேபிளில் கவிழ்ந்து குலுங்குவது தெரிய , அரவிந்தால் அவள் படும்பாட்டை தாங்கவே முடியவில்லை , கண்கள் சிவக்க அதைப் பார்த்தவன் , அமுதாவுக்கு போன் செய்து ஜெனியை உள்ளே அழைத்துச் செல்லும்படிக் கூறிவிட்டு , அவள் உள்ளே சென்றதும் , ஜானகியையும் தாயம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்தான். வரும் வழியில் அமைதியாக வந்தவன் வீட்டிற்குள் வந்ததும் உறங்கி கொண்டிருந்த மகனின் அருகிலேயே சென்றுப் படுத்துக் கொண்டான் .
மற்றவர்கள் வாய் விட்டு புலம்பிக் கொண்டு இருக்க ,அரவிந்த் தன் மனக்குமுறலை குழந்தை அருகில் படுத்து கட்டுக்குள் கொண்டு வந்தான். யாரும் அவனைத் தொந்தரவு செய்யவில்லை.
அடுத்த நாள் காலையிலும் தேவாலய வாசலில் குளிரில் காத்துக் கிடந்தான். அவளருகில் சென்றுப் பேசவில்லை. ஜெனிஃபரும் வந்தவள் அவனருகே சென்று பேசவில்லை. மறுநாள் அனன்யாவும் வந்தாள் , அருகில் வந்தவளிடம் “என்னையக் கூப்பிடுறதைத் தவிர வேற பேசுங்க ப்ளீஸ்” என்ற பிறகு, என்ன பேச என்று அமைதியாக திரும்பி விட்டாள்.
அமுதா விடாது தினமும் இரவில் அவர்களைப் பற்றி பேசி பேசியே அவர்களை மறக்கவிடாது பார்த்துக் கொண்டாள்.
தினமும் காலையில் வந்து வழக்கம் போல் அமர்பவன், அவளைப் பார்த்துக் கொண்டே .அவள் கிளம்பும் வரை இருந்து விட்டுச் சென்றான். இடையில் ஒரு முறை மறுபடியும் அனன்யாவும் , ஜானகி ,தாயம்மா , ரமேஷ் என வந்து பேசிவிட்டுச் சென்றனர். ஜெனி ஒரே பிடிவாதமாக இருந்து விட்டாள்.மதர் கூட அவர்களிடம் சிறிது நாட்கள் கழித்து வாருங்கள் , அவளை பக்குவப்படுத்துகிறோம் என்றார்.
இப்படியாக நாட்கள் நகர இதோ இன்றோடு ஒரு வாரம் சென்று விட்டது . வழக்கம்போல் காலையிலயே தேவாலயத்திற்கு வந்தவள் கண்கள் தானாக அரவிந்த் தினமும் அமரும் இடத்திற்குச் சென்றது .ஆனால் அவன் அங்கு இல்லை. அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் அவன் கண்களில் படவில்லை .திரும்பி வேறுபுறம் பார்க்க தயக்கமாக இருக்க ஆலயத்திற்குள் சென்றவள் அவன் உள்ளே வந்தால் அமரும் இடத்தைப் பார்க்க , அங்கும் இல்லை .மனதிற்கு என்னவோ செய்ய கண்களை இறுக்கமாக மூடி முழங்காலிட்டுக் கொண்டாள்.
வழிபாடு முடிந்து வெளியில் வந்தவளுக்கு என்ன முயன்றும் விழிகளை கட்டுப்படுத்த முடியவில்லை . சுற்றி சுற்றிப் பார்த்தவள் ,அரவிந்த் முதல் நாள் அவளைக் காண வந்த போது அமர்ந்திருந்த பக்கவாட்டில் இருந்த இடத்திற்கு சென்று தேடலானாள்.
“ஏன் தேடுறேன் …ஏன் தேடணும் …. கடவுளே… போங்க போங்கனு சொல்லிட்டு இப்ப அவங்க வரலனதும் ஏன் இப்படி ஆகிறேன்….”அரவிந்த் தினமும் வருபவன் வரவில்லை …. “அவங்க வரலனா நான் ஏன் இப்படி ஆகிறேன்” நினைக்க நினைக்க அந்த குளிரிலும் உடல் வியர்த்து உடல் நடுங்க ஆரம்பிக்கவும் , எல்லோரும் சென்று விட காலியாகக் கிடந்த தேவாலயத்திற்குள் ஒடியவள் , பென்ச் ஒன்றில் அமர்ந்து முன்புறம் இருந்த மேசையில் தலை கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழலானாள்.
தீடீரென்று அவள் உடையை யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்ற , முகம் தூக்கிப் பார்க்க , ” ம்மா” என்ற வார்த்தை அந்த ஆலயம் முழுதும் ஒலிக்க , அழகு பொம்மையாக குழந்தை ஒன்று அவளைத் ” தூக்கு ” என்பது போல் கை நீட்டிக் கொண்டிருந்தது.
அங்கு இருந்த கன்னிமரியின் சிலையைப் பார்த்தவளுக்கு , அவர் கையிலிருந்த குழந்தைதான் தன்னருகில் நிற்கிறதோ என்று குழந்தையையும் கடவுளையும் மாறி மாறிப் பார்த்தவள் , அப்படியே அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
குழந்தை மறுபடியும் “ம்மா” என அவள் முகத்தைத் தொட , தொட்டக் கையெடுத்து முத்தம் பதித்தவள் , அழகு கன்னத்தைப் பற்றி மாறி மாறி முத்தம் பதித்தாள். குழந்தையோ அவள் கன்னத்தைக் கடிப்பதும் , முடியை பிடித்து இழுப்பதுமாக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
சிறிது நேரம் கொஞ்சியவள் பிறகு தான், யார் குழந்தை என்ற எண்ணம் தோன்ற ,சுற்றிலும் பார்க்க , அந்த மிகப் பெரிய ஆலயத்தின் நுழைவாயில் நிலையில் சாய்ந்து கைகளை கட்டி இவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.