“அப்படி எல்லாம் விட்டுருவேனா அண்ணாமலை? என் தம்பி ஒரு ஏமாளி. உன் கிட்ட சொல்றதுக்கு என்ன? நான் கண்ணைக் கசக்குனா எல்லாத்தையும் என் கிட்ட கொடுத்துருவான். இந்த வீடு, நிலம் எல்லாம் எங்க அப்பா பேர்ல தான் இருக்கு. அதை என் தம்பி வெள்ளைப் பேப்பர்ல வேண்டாம்னு எனக்கு எழுதிக் கொடுத்துருக்கான். அதை நான் வித்துக்கலாம். அவன் எல்லாம் வந்து கேக்க மாட்டான். ஆனாலும் விக்குற வரைக்கும் அவன் கிட்ட சொல்லக் கூடாது. சரி நீ என்னைக்கு பத்திரப் பதிவு வச்சிக்கலாம்னு சொல்லு. நான் என் மருமகன் கிட்ட சொல்லி பிளைட் டிக்கட் போடச் சொல்றேன்’
“மாமாவுக்கு இதெல்லாம் தெரியுமாக்கா?”
“இப்படி ஐடியா கொடுத்ததே என் புருஷன் தான் டா?”
“வீடு, நிலம் வித்தா உங்க தம்பிக்கு பங்கு கொடுக்கணும்ல?”
“அவனுக்கா? அவனுக்கு எதுக்கு கொடுக்கணும்? அவன் எல்லாம் ஒரு ஆளு? அவன் இருக்க லட்சணத்துக்கு இது போதும். எங்க அம்மா சாகும் போது நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனேன்னு ஒரு காரணத்துக்காக எல்லாத்தையும் அவனுக்கே கொடுத்துட்டு. அதோட நகையைக் கூட அந்த வசந்தாவுக்கே கொடுத்துட்டு. கடைசில பேங்க்ல இருந்த அஞ்சு லட்சம் பணத்தையும் அவனே எடுத்துக்கிட்டான். அதை என்னால தாங்கவே முடியலை. அதான் கொஞ்சம் கொஞ்சமா அவன் கிட்ட நயமா பேசி வீடு, காடு, நிலம், நகை எல்லாம் வாங்கிட்டேன். அந்த அஞ்சு லட்ச ரூபாய் பணத்தை எப்படி பிடுங்கன்னு பாத்துட்டே இருந்தேன். நம்ம ஷாலு கல்யாணத்தப்ப நைசா வாங்கிட்டேன். எனக்கு ஒண்ணும் இல்லாம பண்ணப் பாத்தான்ல? கடைசி வரை வட்டி கட்டியே சாகட்டும்”
“சரிங்கக்கா, அது உங்க குடும்ப விஷயம். நீங்க வரும் போது தாய் பத்திரம் எல்லாம் எடுத்துட்டு வாங்க”
“எல்லாம் அங்க தான் பீரோல இருக்கு. நீ பார்ட்டிக் கிட்ட தெளிவா கேட்டு சொல்லு. நான் வந்துறேன். வைக்கிறேன்”, என்று சொல்லி புஷ்பா போனை வைக்க வசந்தாவுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.
கனகராஜோ திகைப்பின் உச்சத்தில் அமர்ந்திருந்தார். இருவரையும் பார்க்க அண்ணாமலைக்கு பாவமாக இருந்தது. “நீங்க இவ்வளவு மோசமா ஏமாந்திருக்க வேண்டாம்ணே. இப்ப என்ன பண்ணப் போறீங்க?”, என்று கேட்டான் அண்ணாமலை.
“தெரியலையே? அஞ்சு லட்ச ரூபாய் கடனை எப்படி அடைப்பேன்?”, என்று தளர்ந்து போய் அமர்ந்து விட்டார். அதை விட புஷ்பா ஏமாற்றியது தான் அவரை அதிகம் தாக்கியது.
“என்னது கடனை அடைக்க போறீங்களா? யார் வாங்கின கடனை யார் அடைக்கிறது? இருங்க, இப்ப இதுக்கு நான் வழி பண்ணுறேன். நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க. அண்ணாமலை, அந்த நம்பருக்கு போனைப் போடுப்பா”
“போடுறேன் மதினி. இந்த மாதிரி ஏமாத்துறவங்களுக்கு எல்லாம் நான் துணை போக மாட்டேன். நான் உங்க கூட இருக்கேன்”, என்று சொன்ன அண்ணாமலை மீண்டும் புஷ்பாவை அழைத்தான்.
“ஹலோ சொல்லுப்பா அண்ணாமலை, என்ன விஷயம்?”, என்று கேட்டாள் புஷ்பா.
“அய்யோ, இப்ப போல அவன் வந்துருக்கானா? அவன் கிட்ட என் நம்பர் எல்லாம் கொடுக்காத அண்ணாமலை. ஏதாவது சொல்லி சமாளி, நான் வைக்கிறேன்”
“ஏய் ஒரு நிமிஷம் இரு டி, பொம்பளையா டி நீ?”, என்று வசந்தா குரல் கேட்டதும் அதிர்ந்து போன புஷ்பா “அடடே வசந்தாவா? எப்படி இருக்க வசந்தா? என் தம்பி நல்லா இருகானா? என் கண்ணுக்குள்ளே இருக்கான். பிள்ளைகள் நல்லா இருக்காங்களா?”, என்று நயமாக கேட்டாள்.
“அட பசப்பி, என்னா நடிப்பு நடிக்கிற? உன் வண்டவாளம் எல்லாம் இங்க தண்டவாளம் ஏறிருச்சு டி. தம்பி தொம்பியா? தேனோழுக பேசினா நான் மயங்கிருவேனா?”
“என்ன வசந்தா வா போன்னு பேசுற? அண்ணின்னு மரியாதை வேண்டாம்?”
“அண்ணியா? உன்னை பண்ணின்னு சொல்லாம இருக்கேன்னு சந்தோஸப் படு. நீ இவ்வளவு கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை”
“என்ன டி வாய் ஓவரா நீளுது? உன் கிட்ட என்ன பேச்சு? என் தம்பி கிட்ட போனைக் கொடு. நான் அவன் கிட்ட பேசிக்கிறேன்”
“இன்னும் என்ன உன் தம்பி கிட்ட பேசுறது? தைரியமான பொம்பளையா இருந்தா என் கிட்ட பேசு டி. ஆமா யார் சொத்தை யார் விக்குறது? வித்துருவியோ? உன்னால முடியுமா டி நாடகக்காரி?”
“ஏன் முடியாது? அது என் சொத்து?”
“உன் சொத்தா? குடும்பம் வேண்டாம்னு மாடு மேய்க்கிறவன் கூட ஓடினவ தானே? இதுக்கு உன் புருசனும் கூட்டா? எங்க அந்த திருட்டுப் பய?”
“என் புருஷனை எதாவது சொன்ன?”
“ஆமா ஆமா, உன் புருஷனை நீ தான் மெச்சிக்கணும். மாடு பத்த வந்த உனக்கு பிள்ளையைக் கொடுத்துட்டு போனவன் தானே? அவனைப் பத்தி எனக்கு என்ன பேச்சு? முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு. எங்க சொத்தை விக்க நீ யாரு டி?”
“அது என் சொத்து வசந்தா. அதை என் தம்பி எனக்கு எழுதிக் கொடுத்துட்டான்”
“அது உனக்கு எழுதிக் கொடுக்கலை. என் புருஷன் அது உனக்கு பிச்சையா போட்டது”
“எப்படின்னாலும் அது எனக்கு தானே?”
“அதெப்படி உனக்கு ஆகும்? அதை நான் சுயநினைவு இல்லாம எழுதிக் கொடுத்துட்டேன்னு இப்ப என் வீட்டுக்காரர் உன் மேல கேஸ் போடப் போறார். வக்கீல் மூலமா கோர்ட்ல இருந்து தகவல் வரும். ஒழுங்கா வந்து சேரு டி. சொத்தை ஏமாத்தி வாங்கினதுக்கு ஒரு கேஸ், வட்டிக்கு பணம் வாங்கிட்டு ஏமாத்தினதுக்கு ஒரு கேஸ்ன்னு நீ காலத்துக்கும் வெளிய வர முடியாது”
“கேசா அதெல்லாம் எதுக்கு வசந்தா? இப்ப என்ன? அந்த அஞ்சு லட்சம் பணம் தானே? நான் இப்பவே என் தம்பி அக்கவுண்டுக்கு ஏத்த சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்த புஸ்பா உடனடியாக பணத்தை கனகராஜ் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நேரடியாக கனகராஜ் நம்பருக்கே அழைத்தாள்.
கோபத்துடன் அதை எடுக்க மறுத்தார் கனகராஜ். அதை எடுத்த வசந்தா ஸ்பீக்கரில் போட “தம்பி, எப்படி இருக்க பா? உன் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டேன் பா. நான் வாங்கின அஞ்சு லட்சம், அது போக நீ கட்டின வட்டி ஒரு லட்சம் எல்லாம் உன் அக்கவுண்டுக்கு அனுப்பிட்டேன். என் கிட்ட இதை நீ நேரடியா கேட்டுருக்கலாமே? எதுக்கு உன் பொண்டாட்டியை பேச விட்ட? பொம்பளையா அவ? பஜாரி மாதிரி கத்துறா? நல்ல குடும்பத்துல பொறந்த பொம்பளை இப்படி எல்லாம் செய்வாளா?”, என்று கேட்டாள்.
அதற்கு வசந்தா ஏதோ பேச வர அவளை அமைதியாக இருக்க சொன்னார் கனகராஜ். வசந்தா அவரை எரிச்சலுடன் பார்க்க “அவ நல்ல குடும்பத்து பொம்பளை இல்லைன்னா நீ பிறந்த குடும்பத்தை என்ன சொல்ல?”, என்று கேட்டார் கனகராஜ்.
“தம்பி”
“சி, என்னை இனி அப்படிக் கூப்பிடாதே”
“இங்க ஷாலுவுக்கு உடம்பு சரி இல்லை டா, அதான் பணம் அனுப்பலை”
“ஏன் ஒரு தகவலுமா சொல்ல முடியாது? நீ வெளிநாட்டுக்கு போனதைக் கூட சொல்ல முடியலைல்ல? சரி விடு, கடன் கொடுத்த பணத்தை அனுப்பிட்டல்ல? அது போதும். இனி நீ யாரோ நான் யாரோ”, என்றார் கனகராஜ். புஷ்பாவும் “அப்பாடி சொத்தைப் பத்தி கேக்க மாட்டான்”, என்று நிம்மதி ஆனாள்.
“என்னது போதுமா? அதெப்படி விட முடியும்? ஆமா வீட்டை விக்கப் போறியாமே?”, என்று கேட்டாள் வசந்தா.
“ஏய் அதை என் தம்பியே விட்டுட்டான், நீ என்ன டி கேக்குறது?”, என்று கத்தினாள் புஷ்பா.
“நீ வீடு இல்லைன்னு பிச்சை எடுத்ததுனால தான் உனக்கு அதைக் கொடுத்தார். நீ வித்து திங்க இல்லை”
“அதை என் தம்பி எனக்கு எழுதிக் கொடுத்துட்டான். எப்படின்னாலும் அது எனக்கு தான். நான் என்ன வேணும்னாலும் செய்வேன்”
“அதுல நீ வாழ்ந்தா விட்டுறலாம். விக்க நினைச்சா எப்படி விட முடியும். அது என் மாமியார் வாழ்ந்த வீடு டி. கண்டிப்பா விட முடியாது”
“தம்பி, நீ பக்கத்துல தானே இருக்க? இவளை இதுல தலையிட வேண்டாம்னு சொல்லு”
“அவர் சொல்ல மாட்டார். நான் விட மாட்டேன். எனக்கு அந்த வீடு, இடம் எல்லாம் வேணும். உனக்குன்னு அத்தை எழுதிக் கொடுத்தது மட்டும் தான் உண்டு. நீ வீடு வேண்டாம்னு ஓடிப் போனாலும் உன்னைப் பெத்த பாவத்துக்கு அவங்க நிலம் எழுதி வச்சாங்க தானே? அதை வித்து தின்னீங்க தானே? என் புருஷன் பேர்ல இருக்குற எல்லாமே எனக்கு வேணும். நான் கேப்பேன். வீடு, நிலம் எதையும் நீ விக்க முடியாது. எங்க வீட்டுக்காரர் போட்ட பிச்சைக்கு நீ சரிபட்டு வர மாட்ட. அவர் போடுற பிச்சைக்கு நீ தகுதி இல்லாதவ டி. அதனால அதை நாங்க திரும்ப எடுக்கப் போறோம்”
“அது எப்படி முடியும்? அவன் எழுதிக் கொடுத்தது எல்லாம் என் கிட்ட பத்திரமா இருக்கு “
“பத்திரம் பத்திரமா தான் இருக்கு. நான் இல்லைங்கலை. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க கைல இருக்கும்”
“ஏய் அது திருட்டு வேலை. உன் பரம்பரை புத்தியை காட்டுறியா?’
“நான் உன் பரம்பரையை தப்பு சொல்லமாட்டேன். ஏன்னா அது உன் திருட்டு புத்தி. அப்புறம் திருடி கிட்ட இருந்து தாராளமா திருடலாம். அது தப்பே இல்லை. இனி இந்த வீட்டுக்கும் உனக்கும் சொத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க அம்மா நகை உனக்கு தான் சேரனும். ஆனா எனக்கு அவங்க அதை ஆசையா கொடுத்தாங்க. அதுவும் இங்க தானே இருக்கும்? அதையும் மறந்துரு. உனக்கு தர மாட்டேன். அப்புறம் இந்த ஊரு பக்கம் வந்த விளக்கமாத்தாலே அடிச்சு துரத்துவேன் டி”
“பாத்தியா தம்பி, உன் பொண்டாட்டி எப்படி பேசுறான்னு? நீ கேட்டுட்டு தான் இருக்கியா? என்ன எதுன்னு கேக்க மாட்டியா?”
“அவ பேசுறதை கேட்டுட்டு தான் இருக்கேன். என் பொண்டாட்டி பேசுறதை ரசிக்கிறேன்னு கூட சொல்லலாம்”, என்றார் கனகராஜ்.
“தம்பி அவ என்ன விளக்கமாத்தால அடிப்பேன்னு சொல்றா டா”
“அவ விளக்கமாத்தாலே தான் துரத்துவேன்னு சொன்னா. நீ இங்க வந்த, நான் உன் காலை வெட்டிருவேன். அப்புறம் அந்த மாமா பய, அதான் அடுத்தவங்க சொத்துக்கு அலையுற உன் புருஷன் சங்கை அருத்துருவேன்னு சொல்லு. டவுன்ல வாழ்ந்தாலும் இன்னும் எனக்குள்ள கிராமத்தான் இருக்கான். என் பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாத்த சொத்து இருக்கு. அதனால உங்களை வெட்டிட்டு ஜெயிலுக்கு போக கூட நான் தயங்க மாட்டேன். வை போனை. சோத்த திங்குறவளா இருந்தா வீட்டுப் பக்கம் வந்துறாத”