ஜவுளிக் கடையில் இருந்த பெஞ்சில் சோர்வுடன் அமர்ந்திருந்த வினோத் அருகில் சென்று அமர்ந்த பரணி “என்ன ஆச்சு வினோத்?”, என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லை சார்”
“இந்த சாரை விடவே மாட்டீங்களா? சரி என்ன பிரச்சனை? ஏன் உங்க மனைவிக்கு எதுவும் எடுக்க வேண்டாம்னு சொன்னீங்க?”
“அவளுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்கும்னு ஒண்ணுமே தெரியாது சார்? உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? அவளுக்கு என்னைப் பிடிக்குமான்னே எனக்கு தெரியலை”, என்று சொல்லும் போதே அவன் மனது பாரமானது.
“அப்படிச் சொல்லலை. ஆனா வேலை இல்லைன்னு எண்ணி தள்ளி வச்சா சார். ரெண்டு பேருக்கும் இடையிலே இவ்வளவு நாள் பேச்சு வார்த்தையே இல்லை. இப்ப என்னால அதை மறக்க முடியலை”
“நான் ஒண்ணு கேக்கவா வினோத்?”
“கேளுங்க சார்”
“உங்க தங்கைக்கு நீங்க எப்படிப் பட்ட மாப்பிள்ளை பாப்பீங்க?”, என்று பரணி கேட்டதும் குழப்பத்துடன் அவனைப் பார்த்த வினோத் “நல்ல குணமா, படிச்சு, ஒரு நல்ல வேலைல இருக்குற பையனை பாப்போம் சார்”, என்றான்.
“ஓ, சரி இப்ப வேலை இல்லாத ஒருத்தன் வந்து எனக்கு உங்க தங்கையை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு கட்டி வைங்க, கொஞ்ச நாள் கழிச்சு நான் ஒரு வேலைல சேந்துருவேன்னு சொன்னா நீங்க கட்டி வைப்பீங்களா?”
“அது எப்படி சார்? ஏதாவது வேலைல இருந்தா தானே அவன் அவளை நல்லா பாத்துக்குவான்?”
“அப்ப உங்க மனைவி வீட்லயும் அந்த எதிர்பார்ப்பு இருந்திருக்கும் தானே?”, என்று பரணி கேட்க “சார்”, என்று அதிர்வாக அழைத்தான்.
“இதெல்லாம் மனுசங்களோட இயல்பு வினோத். உங்களோட வேலையும் உங்க சம்பளமும் வேணும்னு ஆசைப் பட்டிருந்தா தாரணி உங்களை கல்யாணமே பண்ணிருக்க மாட்டாங்க வினோத். ஏன்னா உங்களை கல்யாணம் பண்ணினப்ப உங்க கிட்ட வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை. அப்படி இருந்தும் அவங்க உங்களைக் கல்யாணம் பண்ணினதுக்கு காரணம் உங்களை பிடிச்சதுனால தான்”
“சார்”
“ஆமா வினோத், அவங்க வீட்டுக்கு போகும் போதெல்லாம் அவங்க வீட்ல என்ன இன்னும் உன் புருஷன் வேலைக்கு போகலையான்னு கேக்கும் போது தன்னாலே அவங்களுக்கு எரிச்சல் வந்திருக்கும், அதை உங்க கிட்ட காமிச்சிருப்பாங்க. ஆனா தெளிவா கேட்டுப் பாருங்க, அப்படி கேள்வி கேட்ட அவங்களையும் உங்க மனைவி கண்டிப்பா திட்டிருப்பாங்க. அவங்க உங்களை பேசினது சரின்னு நான் சொல்ல வரலை. உங்க மனைவி உங்களுக்கு வேலை இல்லைன்னு உங்களை ஒதுக்கி வச்சது தப்பு தான். ஆனா அவங்க கெட்டவங்க இல்லை. இதெல்லாம் மனுசங்களோட எதிர்பார்ப்பு. அவங்களுக்கும் அவங்க கணவன் நல்ல வேலைல இருந்தா அவங்க குடும்பத்துல மதிப்பா இருக்கலாம்னு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். அந்த ஏமாற்றம் உங்க கிட்ட அப்படி வெறுப்பா வெளிப்பட்டிருக்கும். ஆனா உங்களுக்கு வேலை இல்லைன்னு உங்களை விட்டுப் போகலை தானே? இத்தனை நாள் உங்க கூட ஒரே வீட்ல தானே இருந்தாங்க. உங்களுக்கு வேலை இல்லைன்னு ஆதங்கமா பேசிட்டாலும் நீங்க வேண்டாம்னு முடிவு எடுத்துப் போகலை தானே? இதுலே அவங்க மனசு தெரியலையா? நம்மளை விட சின்னப் பொண்ணு தானே? நீங்க விட்டுக் கொடுத்தா தப்பில்லையே? அவங்க மனசு மாறி மன்னிப்பு கேக்க வரும் போது அவங்க செஞ்ச உதாசீனத்தை நீங்களும் செஞ்சா உங்களுக்கு கிடைச்ச வலி அவங்களுக்கும் கிடைக்கும் தானே? உங்க மனைவி மேல உங்களுக்கு உண்மையிலே அன்பிருந்தா நீங்க அனுபவிச்ச வலி அவங்க அனுபவிக்க கூடாதுன்னு நினைங்க. நீங்களே வலியை அவங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்காதீங்க வினோத். சாரி அட்வைஸ் பண்ணினதுக்கு. எனக்குமே அட்வைஸ் பண்ணுறது பிடிக்காது. இருந்தாலும் சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்”, என்று முடித்தான் பரணி.
அவன் சொன்னதைக் கேட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் வினோத். அவன் யோசிக்கட்டும் என்று எண்ணி யமுனா மற்றும் தங்கையைத் தேடிச் சென்றான் பரணி. வினோத்துக்கும் இப்போது எல்லாம் புரிந்தது.
தாரணி முதல் நாள் அப்படி பேசினாலே தவிர அடுத்து ஒரு நாளும் அவள் அதைப் பற்றி பேசியதே இல்லை. “நான் தான் அவளைப் புரிஞ்சிக்கலையோ?”, என்று எண்ணினான். வாழ்க்கையைப் பற்றி மனைவியைப் பற்றி ஒரு தெளிவு அவனுக்குள் வந்தது.
மூவரும் உடைகளை எடுத்து விட்டு வரும் போது வினோத் நன்றாகவே தெளிந்திருந்தான்.
“கிளம்பலாமா அண்ணா?”, என்று கேட்டாள் யமுனா.
“ஒரு நிமிஷம் மா”, என்று தங்கையிடம் சொன்னவன் பரணி புறம் திரும்பி “சார் நீங்க நிஷாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க. யமுனா நீ இங்கயே வெயிட் பண்ணு. நான் உன் அண்ணிக்கு ஒரு சேலை வாங்கிட்டு வரேன்”, என்று புண்சிரிப்புடன் சொன்னான். அதைச் சொல்லும் போது வினோத் சிறிது வெட்கப் பட்டது போலவே இருந்தது. அதைக் கண்டு பரணி மற்றும் யமுனா முகம் மலர்ந்தது.
“அண்ணிக்கும் சேத்து நான் வாங்கிட்டேன் அண்ணா. உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரு. இல்லைன்னா உன் விருப்பம் போல எடுத்துக்கலாம்”, என்று யமுனா சொல்ல “வேண்டாம் டா, அதுவே இருக்கட்டும்”, என்று சிரித்தான் வினோத்.
பின் வெளியே வந்தார்கள். பரணி மற்றும் நிஷா இருவரும் பரணியின் காரில் ஏற யமுனாவை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டே காரைக் கிளப்பினான் பரணி. பரணிக்கு யமுனாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கான உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. கூடவே இப்போது வாங்கிக் கொடுத்தால் நிஷாவும் வினோத்தும் என்ன நினைப்பார்கள் என்று தோன்றியதால் அந்த ஆசையை கை விட்டான். பரணியின் கார் சென்றதும் வினோத் மற்றும் யமுனா இருவரும் அவளின் ஸ்கூட்டியில் வீட்டுக்குச் சென்றார்கள்.
அவர்கள் வீட்டுக்கு வரும் போது இரவு ஏழு மணி என்பதால் “என்ன பழக்கம் இது யமுனா? ஒரு பொம்பளை பிள்ளை இப்படி தான் ஊர் சுத்திட்டு வருவாங்களா?”, என்று கோபமாக கேட்டாள் காவேரி. அன்னையின் கடுப்பில் இது வரை இருந்த இதமெல்லாம் தொலைந்தது போல இருந்தது யமுனாவுக்கு.
“அம்மா, யமுனாவை நான் தான் கடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். உங்க கிட்டயும் தகவல் சொன்னேன் தானே? பின்ன ஏன் கத்துறீங்க?”, என்று கோபமாக கேட்டான் வினோத்.
அதில் காவேரி அமைதியாக இருக்க “ஏன் மா இப்ப எல்லாம் என்னை ரொம்ப திட்டிட்டே இருக்க? அண்ணா கூட தானே கடைக்கு போனேன்?”, என்று கேட்டாள் யமுனா.
“மன்னிச்சிரு டி, உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்குற வரைக்கும் கொஞ்சம் கவனமா தான் இருக்கணும். உன் அக்கா வாழ்க்கை இப்ப நல்லா இருந்தாலும் எப்ப என்ன ஆகுமோன்னு கொஞ்சம் பயமா தான் இருக்கு. உனக்கும் நல்ல வாழ்க்கை அமையணும். அதை விட உன் வயசை நினைச்சு எனக்கு ரொம்ப பயமா இருக்கு யமுனா. நாம விலகிப் போனாலும் பிரச்சனை நம்மளைத் தேடி வரும். இந்த வயசுல மனசை அலைபாய விட்டா அது வாழ்க்கையை மட்டும் இல்லை நம்ம குடும்பத்தையே சிதைச்சிரும். அக்கம் பக்கத்துல காதல் கத்தரிக்காய்ன்னு எவ்வளவு கேள்விப் படுறோம்?”, என்று காவேரி கேட்க யமுனாவுக்கு திக்கிஎன்று இருந்தது. ஏனோ குற்றம் செய்த உறுத்தல் அவள் தலை முதல் கால் வரை ஓடியது. கூடவே காவேரி சொன்ன காதல் என்ற வார்த்தையும் அவள் மனதில் பதிந்தது.
“நம்ம யமுனா அப்படி எல்லாம் கிடையாது காவேரி. என் பொண்ணு ஒருநாளும் அப்படிப் பட்ட தப்பு எல்லாம் செய்ய மாட்டா. அவ தான் கிளாஸ் டாப்பரா இருக்கா. நல்லா படிச்சு முடிச்சு நல்ல வேலைல உக்காருவா. அவளுக்கு ராஜகுமாரன் மாதிரி நாம மாப்பிள்ளை பாப்போம். அது தான் நடக்கும். நீ சும்மா பயப்படாத”, என்று தாமோதரன் சொல்ல உள்ளுக்குள் வேர்த்தது யமுனாவுக்கு.
இதே வார்த்தைகளை பரணியை சந்திப்பதற்கு முன் தந்தை சொல்லியிருந்தால் யமுனா ஆமாப்பா என்று செல்லம் கொஞ்சியிருப்பாள். ஆனால் இன்று ஒரு அந்நிய ஆணை கட்டிப் பிடித்து அவள் மனதிலும் அவனை நிரப்பிக் கொண்டு வந்திருக்கிறாளே? அவளுடைய தந்தை சொன்ன படி நன்றாக படித்து நல்ல பதவியில் அமர்வாள் தான். ஆனால் பரணியை தவிர்த்து தந்தை பார்க்கும் ராஜகுமாரனை அவளால் நினைக்க முடியுமா?
பரணியிடம் இயல்பாக ஒட்டிக் கொண்டதைப் போல இன்னொரு ஆண்மகனை நெருங்க முடியுமா? முதலில் பரணி அவளுக்கு யார்? எந்த உரிமையில் அவனை ஹோட்டலுக்கு அழைத்தாள்? எந்த உரிமையில் அவனையும் அவன் செய்கையையும் ரசித்தாள்? அதை விட பெரிதாக கட்டிய கணவனைப் போல் அவன் மார்பில் சாய்ந்தது எந்த விதத்தில் நியாயம்?
இப்படி எல்லாம் எண்ணும் போதே அவன் மார்பில் சாய்ந்த நொடி அவள் நினைவில் வந்தது. அவன் வாசனையும் அவன் மார்பின் ரோமங்கள் கொடுத்த குறுகுறுப்பும் நினைவில் வந்து அவள் முகம் சிவந்து போனது. இந்த நிமிடம் அவனை காதலிக்கிறோம் என்று தெளிவாக உணர்ந்து கொண்டாள்.