அத்தியாயம் 18 

மீண்டு செல்ல வழி

இல்லாமல் சிறை பட்டு

விட்டேன் உந்தன் காதலால்!!!

எப்போதும் சரவணன் கிளம்பி வெளியே சென்ற பின்னர் தான் வெண்மதி உடை மாற்றுவாள் என்பதால் இன்றும் தன்னுடைய ஹேன்ட்பேகை வைத்து விட்டு சமையல் அறைக்குள் சென்று இருவருக்கும் காபியை டம்ப்ளரில் ஊற்றினாள். பின் இருவருக்கும் ஒரு தட்டில் வடையை எடுத்து வைத்தாள். அப்போது அவளை பின்னால் இருந்து அணைத்தான் சரவணன்.

“பாலுக்கு காவலா பூனையை வச்சிட்டு போயிருக்காங்க டி”, என்று சொன்னவனின் உதடுகள் அவள் காது மடலை வருடியது.

அவன் நெருக்கத்தில் செயல் இழந்து போனாள். அவன் மேலிருந்து எழுந்த இதமான பெர்பியும் வாசனை அவளை என்னவோ செய்தது. அதே சமயம் அவளிடம் இருந்து வந்த நறுமணமும் வீட்டில் யாருமே இல்லாத தனிமையும் அவனைக் கிளர்ச்சியுறச் செய்தது.

“மதி”, என்று கிசுகிசுப்பாக அழைத்தவனின் உதடுகள் அவளுடைய காது மடலை கடித்தது.

“ஐயோ விடுங்க, காபி ஆறப் போகுது”, என்று சொன்னாள்.

அவள் சொன்னதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஜாக்கெட் மறைக்காத அவளது வெற்றுத் தோளில் முத்தம் வைத்தான். அவன் கைகள் அவளை இடையோடு அணைத்து இறுக்கியது. அவன் தொட்டதும் அவள் உடல் பாகாய் உருக ஆரம்பித்தது.

“காபி ஆறுதுங்க”, என்று அவள் மீண்டும் சொல்ல “அது போனா போகுது. காபியா முக்கியம்?”, என்று கேட்டவன் அவளை தன்னை நோக்கித் திருப்பினான்.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் இமைகள் இரண்டும் பட்டாம் பூச்சி போல படபடத்தது. செதுக்கிய நாசியும் சீரான முகவடிவும் சிவந்த அதரங்களும் நெற்றி வகிட்டில் லேசாக கலைந்திருந்த குங்குமமும் அவளை அழகி என்று பறை சாற்றியது.

“பிளீஸ், அம்மா அப்பா வந்துருவாங்க”, என்று அவள் தயக்கமாக முணுமுணுக்க “அப்படின்னா ரூமுக்கு போயிறலாமா?”, என்று கேட்டான் அவன். அவன் அப்படிச் சொல்லவும் உதட்டை கடித்துக் கொண்டு ஊமையாகி விட்டாள். ரூமுக்குச் செல்வதற்கு இதுவே மேல் என்று அவளுக்கு தோன்றியது.

வெண்மதி சமையல் மேடையில் சாய்ந்து நிற்க அவள் மேல் சாய்ந்த படி அவள் முகம் நோக்கி குனிந்தான். அவளை தன்னோடு இறுக்கி அனைத்து அவள் இதழோடு அவன் இதழ் பதிக்க அவளோ தாள முடியாத இன்ப அவஸ்தையில் சிக்கினாள்.

அவள் கரங்களும் உயர்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டது. ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டிருந்த அந்த கணவன் மனைவி இருவருக்கும் உணர்வுகள் அலையலையாய் பொங்கின.

சரவணனின் கரங்கள் ஆவேசமாக அவளை அணைத்தது. அவன் அருகாமையில் அவள் திணறினாள். அவள் திணறலைக் கண்டவனுக்கு திருப்தியாக இருந்தது.

அவளது முகத்தில் இருந்து விலகி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவளது கைகள் அவன் முதுகில் பரவிப் படர்ந்து அலை பாய்ந்தது. தனக்குள் அடங்கி இருக்கும் அவளின் உடல் நடுங்குவது அவனுக்கு புரிந்தது.

பின் அவளிடம் இருந்து விலகி அவள் முகத்தை தன்னுடைய கைகளில் ஏந்தி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் கிறக்கத்துடன் கண்களை மூடிய படி இருக்க அவளது மூடிய இமைகளில் முத்தமிட்டான். பின் அவன் உதடுகள் அவளுடைய கன்னம் காது மடல் என்று பயணித்து கடைசியில் அவள் உதடுகளில் வந்து இளைப்பாறியது.

அப்போது வெளியே கார் சத்தம் கேட்டது. தங்களுக்குள் மூழ்கி இருந்த இருவரும் அவசரமாக விலகினார்கள். வெண்மதி மூச்சு விட முடியாமல் திணற “அத்தை மாமா வந்துட்டாங்க போல? நான் வெளிய போறேன். முத்தத்துக்கு நன்றி”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் அவளும் தன்நிலைக்கு வந்து விட்டாள், அவள் உதடுகள் சிரிப்பில் மலர்ந்தது. ஆறிப் போயிருந்த காபியை சிங்க்கில் ஊற்றி விட்டு வேறு காபியை டம்ளரில் ஊற்றினாள். பின் அவள் அதை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர சரவணன் குற்றாலம் மற்றும் விசாலத்திடம் நல்ல பிள்ளை போல பேசிக் கொண்டிருந்தான்.

அன்று போய் விட்டு வந்த பங்க்ஸனைப் பற்றி குற்றாலம் சொல்லிக் கொண்டிருக்க சரவணன் கண்களோ மனைவி முகத்திலே நிலைத்தது.

“இப்ப தான் மாப்பிள்ளைக்கு காப்பி கொடுக்குறியா டி? சீக்கிரம் கொடு ஆறிரப் போகுது”, என்று சொன்னாள் விசாலம். அவன் முகம் பார்க்காமல் காபி மற்றும் வடையைக் கொடுத்தாள் வெண்மதி, அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு சங்கடமாக இருந்தது.

அவளது நிலை உணர்ந்த சரவணனின் உதடுகளில் உல்லாசப் புன்னகை உதயமானது. அவள் மனதை வென்று விட்ட கர்வம் வந்தது.

சிறிது நேரத்தில் அவன் கிளம்பிச் செல்ல அவளுக்கு தான் அவன் கூடவே போக வேண்டும் போல இருந்தது. வெகு நாட்கள் கழித்து சந்தோஷமாக இருந்த சரவணனைப் பார்த்த செந்திலுக்கும் நிம்மதியாக இருந்தது. அவன் வாழ்க்கை சரியாகி விடும் என்று பூர்ணிமாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கும் நிம்மதியே.

அன்று இரவு வெண்மதியை போனில் அழைத்த சரவணன் அதிக தாபத்தில் இச் இச் என்று முத்தமிட அவளோ திகைத்துப் போனாள். அவன் அவனுடைய தாபத்தையும் ஆசையையும் வெளிப்படையாக அவளிடம் கொட்ட அவள் தான் அவன் கைக்குள் இருக்க முடியவில்லையே என்று திணறினாள். அன்று அவர்களின் பேச்சு மாலை நடந்ததைப் பற்றியே இருக்க இருவருமே அந்த ஏகாந்த இரவில் மற்றவரைத் தேடினர்.

அடுத்த நாள் அவன் சிரிப்புடன் அவளை எதிர் கொள்ள அவளோ வெட்கத்தால் சிவந்தாள். இப்படியே அவர்களின் நாட்கள் நகர்ந்தது.

அன்று ஆடி மாத கடைசி நாள். அவளை பள்ளியில் இருந்து அழைத்து வந்து அவளது வீட்டில் விட்ட சரவணன் “இன்னைக்கு ஒரு நாள் தான் டி. நாளைக்கு நீ நம்ம வீட்ல இருப்ப? அங்க வா உன்னைக் கவனிச்சிக்கிறேன்”, என்று சொல்லி அவளது எதிர்பார்ப்புகளையும் அதிகரித்து விட்டே சென்றான்.

அன்று இரவு அவளை போனில் அழைத்தான் சரவணன். சிறு சிரிப்புடன் அதை எடுத்தவள் “சாப்பிட்டீங்களா?”, என்று கேட்டாள்.

“இட்லி சாப்பிட்டாச்சு. ஆனா வேற ஒரு பசி மட்டும் போகவே மாட்டிக்குது”, என்று தாபத்துடன் சொன்னான். அவன் சொல்ல வருவது அவளுக்கு புரிந்தது தான். ஆனால் அதைப் பற்றி பேசினால் இருவருக்குமே கஷ்டமாக இருக்கும் என்று எண்ணி அவன் சொன்னது புரியாதது போல காட்டிக் கொண்டு “இட்லிக்கு என்ன சைட் டிஷ்?”, என்று கேட்டாள்.

அவள் பேச்சை மாற்றவும் அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது. “ஏன் டி நான் என்ன சொல்றேன்? நீ என்ன கேக்குற? எனக்கு இருக்குற ஆசை மாதிரி உனக்கு இல்லையா மதி?”, என்று சற்று கடுப்புடன் கேட்டான். அவன் அப்படி கேட்கவும் அவள் ஏங்கி ஏங்கி அழுது விட்டாள்.

“ஐயோ மதி, சாரி டி, பிளீஸ் சாரி. தெரியாம சொல்லிட்டேன்”, என்று மன்னிப்பு கேட்டவன் வேறு ஏதோ பேசி அவளது கண்ணீரை நிறுத்தி விட்டான். அவள் மனது அவனுக்கு புரிந்தது. தனக்கு ஆசை இருப்பது போல தானே அவளுக்கும் இருக்கும் என்று எண்ணியவன் அதன் பிறகு அதைப் பற்றி பேச வில்லை.

அவன் பேசி விட்டு வைத்ததும் அவளுக்கு தூக்கம் வர வில்லை. அடுத்த நாளை நினைத்து மனம் பரபரப்பாக இருந்தது. ஏனென்றால் இன்றோடு இந்த பிரிவு முடிந்து விடுமே? அவனைப் பற்றி எண்ணிக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தாள்.

அவனைப் பற்றிய நினைவுகளோடு உறக்கத்தை தழுவினாள். அடுத்த நாள் அவளுக்கு அழகாக விடிந்தது. அன்று அவளை பள்ளிக்கு லீவ் போடச் சொல்லி இருந்தான் சரவணன். காலையிலே தலைக்கு சீகைக்காய் போட்டு குளித்து விட்டு புது மலர் போல இறங்கி வந்த மகளைக் கண்ட விசாலம் மனம் நிறைந்தது.

ஏனோ இன்று மகளைக் காண பழைய வெண்மதி போலவே தோன்றியது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே “என்ன பாப்பா சீக்கிரம் எழுந்து குளிச்சிட்ட?”, என்று கேட்டாள் விசாலம்.

“மா… அது வந்து… அவங்க.. அவங்க என்னை கூப்பிட வருவாங்கல்ல? அதான்”, என்று வெட்கத்துடன் சொன்னாள்.

“இன்னைக்கா வருவேன்னு சொன்னாங்க? நம்ம வீட்டு பக்கம் இன்னும் ஒரு வாரம் கழிச்சு தானே அனுப்புவோம்? சரி நான் மாப்பிள்ளை கிட்ட அப்பாவை விட்டு பேச வச்சிக்கிறேன்”, என்று சொல்ல அதிர்ந்து போய் அன்னையைப் பார்த்தாள்.